Saturday, May 18, 2013

பறவைகளைப் பார்த்தல்: என் அனுபவங்கள்

                                                          படம்: கே. ஞானஸ்கந்தன்   

ஆசை
நான் ஒரு பறவையியலாளன் அல்ல; பறவைகளைப் பார்ப்பவன் அவ்வளவே.      மன்னார்குடியில் என்னுடைய வீட்டருகில் நீங்கள் பறவைகளைப் பார்க்க வேண்டும் என்றால், விசேஷமாக ஏதும் செய்யத் தேவையில்லை. மொட்டை மாடியில் போய் நின்றுகொண்டால் ஒரு மணி நேரத்தில் இருபதுக்கும் மேற்பட்ட பறவைகளைப் பார்க்கலாம். எங்கள் வீட்டு மொட்டை மாடியிலிருந்து பார்க்கக் கிடைக்கும் பறவைகள்: காகம், மைனா, தேன்சிட்டு, தையல்சிட்டு, தவிட்டுக்குருவி (கல்லுக்குருவி என்றும் சொல்வார்கள்), கொண்டைக்குருவி, பருந்து, சோலைப்பாடி, வாலாட்டி, கொண்டலாத்தி, குக்குறுவான், மணிப்புறா, குயில், கரிச்சான், சிட்டுக்குருவி, மரங்கொத்தி போன்றவை. வீட்டிலிருந்து கூப்பிடு தூரத்தில் இருக்கும் குளத்துக்குப் போய்ப் பார்த்தால் சிறகி, நீளவால் இலைக்கோழி, நீர்க்காகம்  போன்ற பறவைகளைப் பார்க்க முடியும். அப்படியே வயல்வெளி, புதர்களூடே நடந்துசென்றால் செம்பகம், பஞ்சுருட்டான், ஆள்காட்டி, கொக்கு, மடையான்  போன்ற எண்ணற்ற பறவைகளைக் காணலாம்.
    இப்படிப் பறவைகளைக் காண்பது எதற்காக என்ற கேள்விக்கு என்னிடம் பதில் இல்லை. ஆனால் பறவைகளைப் பார்ப்பதற்காகச் செல்லும் நாட்களெல்லாம் எனது படைப்புத் திறன் மிகவும் தீவிரமாகச் செயல்பட்டதையும் அந்த நாட்களில் மனதில் இனிமையான உணர்ச்சி நிலவியதையும் என்னால் உணர முடிகிறது. பறவைகளைப் பார்ப்பவர்கள் பலரும் குறிப்பேடு வைத்துக் குறித்துக்கொள்வார்கள். நான் அப்படிச் செய்வதில்லை, எனது குறிப்பேடு மனதுதான், எனது குறிப்புகள் கவிதைகள்தான்.

    கவிதை எழுத வேண்டும் என்பதற்காக இரை தேடி நான் பறவைகளைப் பார்ப்பதில்லை; அவையே தாமாக வந்து கவிதைகளைத் தந்துவிட்டுப் போகும். நமது மனதின், கற்பனைத் திறனின் அலைவரிசை ஏற்கும் கருவியை சரியான விதத்தில் திருகி வைத்திருந்தால் ஒவ்வொரு கணமும் கவிதையாக உருமாறும் என்பதே உண்மை.   
    எல்லாப் பறவைகளும் எனக்குப் பிடிக்கும் என்றாலும் சில பறவைகள் மட்டும் என் மனதை மிகவும் குழைய வைக்கின்றன. தேன்சிட்டுக்கு அதில் முதல் இடம். ஒரு சிறிய உடலில் எவ்வளவு நுட்பங்கள். ஒரு வகைத் தேன்சிட்டு இருக்கிறது, (Purple Sunbird); அதன் ஆண்சிட்டு கருப்பு, ஊதா என்று விதவிதமான நிறங்களின் கலவை; நன்றாக வெயில் அடிக்கும்போது அதைப் பார்த்தால் அப்படியொரு மினுமினுப்பு. இந்த அனுபவத்தில்தான் ஒரு கவிதை எழுதினேன்:
                  கோடிகோடி மைல் நீ
           கடந்து வந்ததெல்லாம் என்
                  குட்டித் தேன்சிட்டின் மூக்கில்
                  பட்டு மிளிரவா ஒளியே சொல்
 தையல்சிட்டும் மிகவும் அழகான, சுறுசுறுப்பான, சிறிய பறவை. மணிப்புறாவை பைனாகுலரில் பார்த்தால்தான் தெரியும் அது எவ்வளவு அழகு என்று. நீளவால் இலைக்கோழி ஒரு விசித்திர சிங்காரி. கொண்டலாத்தியின் பெயரே சொல்லிவிடும் அதன் அழகை. குக்குறுவானும் மரங்கொத்தியும் பார்த்துக்கொண்டே இருக்கலாம். ஆண்குயிலின் குரலும் அதன் சிவந்த கண்ணும் எனக்கு மிகவும் பிடிக்கும். அதன் கண்ணைக் குறித்து என் அக்கா மகன் சைலேஷ் (ஒன்பது வயது) ஒரு கவிதை சொன்னான், 'ஆண்குயிலின் கண்ணைப் பார்த்தால் எனக்கு மரணம் நினைவுக்கு வருகிறது'. மரணம் என்ற சொல்லின் பொருள் அவனுக்குத் தெரியுமா என்றுகூட எனக்குத் தெரியாது (சாவு என்ற சொல்லைக்கூட அப்போது அவன் பயன்படுத்தவில்லை). கரிச்சான் (அதுதான் இரட்டைவால் குருவி) சரியான ரவுடி என்றுதான் சொல்ல வேண்டும். அதைவிட உருவத்தில் பெரிய காக்கையைத் துரத்திக் கொத்தி அதன் வாயிலிருந்து பூச்சியைப் பிடித்துக்கொண்டு வந்துவிடும். புள்ளி மீன்கொத்தி (Pied Kingfisher) மீன் பிடிப்பதற்காகக் குளத்துக்கு நேர்மேலே சிறகடித்தபடி அப்படியே நிலைத்துப் பிறகு மின்னல் வேகத்தில் குளத்தில் முங்கி மீனுடன்  அதே வேகத்தில் வெளிவருவது நிச்சயம் ஒரு சாகசம்தான்.
    பறவைகளின் மீது எனக்கு ஆர்வம் ஏற்பட்ட இந்த ஒரு சில நாட்களுக்குள் எனக்கு மேற்குறிப்பிட்டதுபோல் எண்ணற்ற அனுபவங்கள் கிடைத்தன. எனக்கே இவ்வளவு அனுபவம் கிடைத்ததென்றால் சலிம் அலிக்கு எவ்வளவு அனுபவம் கிடைத்திருக்கும் என்று யோசித்துப் பார்ப்பேன். சலிம் அலி மட்டும் கவிஞராக இருந்திருந்தால் கம்பனையெல்லாம் நிச்சயம் தூக்கிச் சாப்பிட்டிருப்பார், கவிதைக்கான கணங்களை அப்படி வாரித் தருகின்றன பறவைகள்.
    இயற்கையில் எல்லாவற்றின் மீதும் ஈர்ப்பு இருந்தாலும் பறவைகள் மேல் சற்று அதிக ஈர்ப்பு ஏற்படுவதற்குக் காரணத்தை நான் யோசித்துப் பார்ப்பதுண்டு. பறவைகளுடன் நாம் உறவாட முடிவது ஒரு முக்கியக் காரணமாக எனக்குப் படுகிறது. மற்ற உயிரினங்களோடு ஒப்பிடுகையில் பறவைகள் அதிக இயக்கத்தைக் கொண்டவை; சுறுசுறுப்பானவை. பூச்சிகள் சுறுசுறுப்பானவை என்றாலும் அவற்றைவிடவும் பறவைகள் எளிதில் நமக்குத் தென்படுபவை. மரம் செடி கொடிகளும் செயல்படுபவைதான் என்றாலும் அவற்றின் செயல்பாடுகள் நமக்கு அவ்வளவு எளிதில் புலனாவதில்லை. அவையெல்லாம் நகராத அழகு. அவற்றைத் துரத்த முடியாது; கூப்பிட்டுச் சோறு வைக்க முடியாது. (நான் அவற்றைத் தாழ்த்திச் சொல்லவில்லை. இயற்கையில் எல்லாமே சமம்தான். பறவைகள் என்னை மிகவும் அதிகமாகக் கவர்ந்த காரணத்தை ஆராய்கிறேன், அவ்வளவுதான்) அதுமட்டுமல்லாமல் பறவைகளும் குழந்தைகளும் பல விதங்களில் ஒரே மாதிரி. சிறு குழந்தையொன்று தனியாக விளையாடுவதைப் பாருங்கள், அதன் செயல்கள், சத்தங்கள் போன்றவை நமது பார்வையில் அர்த்தமற்றவை; குழந்தைத்தனமானவை; அறிவின் சாயல் படியாதவை. அதனால்தான் குழந்தைகள் நம்மை இப்படி ஈர்க்கின்றன. பறவைகளும் அப்படித்தான். நம் பார்வையில் அவற்றின் பல செயல்களை விளக்க முடியாது. மணிக்கணக்காக  அப்படியே ஒரு மின்கம்பியில் உட்கார்ந்திருக்கும் மணிப்புறா அவ்வப்போது படபடவென்று சிறகுகளை அடித்துக்கொண்டு மேலெழுந்து ஒரு வட்டமடித்து மறுபடியும் அதே இடத்தில் உட்கார்ந்து கொள்ளும். விமானப் படை வீரர்கள் சாகசம் செய்வதுபோல் கரிச்சான் விருட்டென்று நேராக மேலே சென்று கரணமடித்து செங்குத்தாகக் கீழ் நோக்கி வரும் (சில சமயங்கள் பூச்சிகளைப் பிடிக்கவும் இப்படிச் செய்யும்). இது போன்ற காரணங்களாலும் அவற்றின் குரல், நிறம் போன்றவற்றாலும் அவை பெரிதும் ஈர்க்கின்றன. யாராவது ஒரு ஆடை வடிவமைப்பாளர் பறவைகளின் நிறங்களையும் வடிவங்களையும் உற்று நோக்கி அதன் அடிப்படையில் ஆடைகளை வடிவமைத்தால் எப்படி இருக்கும்! கொண்டலாத்தியின் நிறத்தில் உடையை அணிந்துகொண்டு அதைப் போன்றே விசிறிக்கொண்டையை வைத்துக்கொண்டு ஒரு பெண் சாலையில் சென்றால் எப்படி இருக்கும்!, என்றெல்லாம் நான் யோசித்துப் பார்ப்பதுண்டு.
    பறவைகளைப் பார்ப்பதற்கு பைனாகுலர் மிகவும் அவசியம். (என்னிடம் இருக்கும் பைனாகுலரைப் பற்றிய விவரங்கள்: Olympus, 8 x 40 DPS I, Field 8.2, Rs 4,500.) மிக உயரத்தில் பறக்கும் பருந்தை பைனாகுலரில் பின்தொடர்வது ஒரு அலாதியான அனுபவம். நானும் கூடவே பறப்பது போன்று இருக்கும். v யைக் கவிழ்த்துபோட்டதுபோல் கூட்டமாகக் கொக்குகள் பறந்து செல்வதைத் தூரத்திலிருந்து பைனாகுலரால் பார்க்கும்போது அவை எவ்வளவு அழகாக ஒருங்கிணைந்து செயல்படுகின்றன என்பதை உணர முடியும். மரங்கொத்தியை பைனாகுலரால் ரொம்ப நேரம் பார்ப்பேன். செங்குத்தான கம்பத்தில் அது இலகுவாக ஏறுவதும், அப்படியே ஏதோ யோசிப்பதுபோல் வெகுநேரம் செங்குத்தாக நிற்பதும் அவ்வளவு அழகு.
    பறவைகள் பார்க்கப் போகும்போது பக்கத்திலுள்ள குழந்தைகளையும் அழைத்துச் செல்வேன். அவர்களில் இரண்டு மூன்று பேருக்கு ஐம்பதுக்கும் மேற்பட்ட பறவைகளின் பெயர்கள் தெரியும். அவர்களுக்குப் பறவைகள் மற்றும் இயற்கை மேலும் ஈடுபாட்டை ஏற்படுத்தியது எனக்கு மிகவும் பெருமையாக இருக்கிறது. 'பறவைக்குப் பெயரிடுவது பற்றி' என்ற கவிதையில் ரமேஷ்-பிரேம் இப்படி எழுதியிருப்பார்கள்:
            'பறவைகளுக்குப் பெயரிடுவதிலிருந்துதான்
            ஒரு மொழியில் கவிதைக்கான சொல்தேர்வு
                      பயின்று வந்திருக்கும் என எண்ணுகிறேன்'
எவ்வளவோ பரிணாம மாற்றத்தைச் சந்தித்துதான் மொழியில் ஒரு பறவையின் பெயர் நிலைபெற்று மக்களால் காலங்காலமாக பின்பற்றப்பட்டுவந்திருக்கும். ஆனால், பறவைகளுக்கும் பிற உயிரினங்களுக்கும் ஒரு மொழியில் வழங்கப்பட்டுவந்த பெயர்கள் அந்த மொழியைத் தாய்மொழியாகக் கொண்டவர்களின் பேச்சு, எழுத்து, நினைவிலிருந்து காணாமல் போவது எவ்வளவு பெரிய துரதிர்ஷ்டம்! யோசித்துப் பாருங்கள், கொண்டலாத்தி என்றும் குக்குறுவான் என்றும் பெயர் வைத்தவள்/ன் எவ்வளவு பெரிய கவியாக இருந்திருப்பாள்/ன் என்று. ஆனால் இன்று தமிழ் மொழியும் அதன் கவிதைகளும் அதன் பறவைகளும் பறவைகளின் பெயர்களும் அழிவுக்குள்ளாகியிருக்கின்றன. இவையெல்லாம் ஒன்றுக்கொன்று தொடர்புடையவையே. அதனால்தான் சிறுவர்களைப் பறவை பார்க்க அழைத்துச் சென்று அவர்களிடம் பறவைகளின் பெயர்களைத் திருப்பித் திருப்பிச் சொல்லி அவர்களையும் திருப்பித் திருப்பிச் சொல்ல வைக்கிறேன். கொண்டலாத்தி என்ற சொல் அழிந்துபோவதை ஒரு கவிஞனாக நான் என்றும் விரும்ப மாட்டேன்.
(தமிழ் இன்று இணைய இதழில் 2010ஆம் ஆண்டு வெளிவந்த கட்டுரை)

1 comment:

  1. மிகவும் பிடித்திருக்கிறது,ஆசை. பறவையியலாளரின் பதிவுகளில் அறிவியல் பூர்வத் தகவல்கள் கிடைக்கலாம். பறவைகள் தொடர்பான கவித்துவ அநுபவங்களை உங்கள் கட்டுரைகளில்தான் காணமுடிகிறது. மகிழ்ச்சி.

    ReplyDelete