Saturday, May 18, 2013

நானும் என் கொண்டலாத்தியும்

 ஆசை
பறவைகள் மீதான எனது ஈடுபாடு சிறிது காலத்துக்கு முன்தான் ஆரம்பித்தது. இருபத்தைந்து வயது வரை எனது பிரக்ஞையில் பறவைகளுக்குப் பெரிய இடம் இருக்கவில்லை. எல்லாரையும் போலவே அப்போது எனக்கும் காகம், பருந்து, கிளி, மயில் போன்ற ஒரு சில பறவைகள் மட்டுமே தெரியும்; அவ்வளவுதான். என்னைப் பறவைகள் உலகத்தை நோக்கித் திருப்பியது என் நண்பரும் விரிவாக்கப்பட்ட 'க்ரியாவின் தற்காலத் தமிழ் அகராதி'யின் ஆசிரியருமான எஸ். ராமகிருஷ்ணன்தான். அலுவலகத்தில் வேலை பார்த்துக்கொண்டிருக்கும்போதே திடீரென்று என்னிடம் கேட்பார்: ''ஒரு குக்குறுவான் கத்துறது கேக்குதா?''. நான் காதை எவ்வளவோ கூர்தீட்டிக்கொண்டு கேட்டாலும் எனக்கு அந்தச் சத்தம் கேட்கவே கேட்காது; அப்புறம் அலுவலகத்தின் வாயில்புறத்திலுள்ள அடர்ந்த பூச்செடியைக் காட்டி ''அதோ ஒரு தேன்சிட்டு!'' என்பார்; நான் எவ்வளவோ தேடிப்பார்த்தும் அது எனக்குத் தெரியாது. பிறகுதான் தெரிந்துகொண்டேன். பறவைகளை அணுக பார்வையும் கேட்புத் திறனும் மட்டும் போதாது; நுண்ணுணர்வும் வேண்டும் என்று.

     க்ரியா அகராதியில் அறிவியல் தொடர்பான சொற்களுக்கும் பறவைகள், விலங்குகள் தொடர்பான சொற்களுக்கும் பொருள் எழுதும் பொறுப்பும் ஏற்கனவே இருந்த பொருளைச் சரிபார்க்கும் பொறுப்பும் என்னிடம் ஒப்படைக்கப்பட்டது. இந்தப் பணியில் ஈடுபட்டிருந்தபோது இயற்கையியலாளரான டாக்டர் ஆர். பானுமதியைச் சந்திக்கும் வாய்ப்பு எனக்குக் கிட்டியது. அவர் பறவைகளின் சத்தத்தை அப்படியே எழுப்பி அவற்றை நம் கண் முன்னே கொண்டுவந்துவிடுவார். இப்படியாகப் பறவைகளின் அற்புத உலகத்தை நோக்கிய பயணத்தை ஆரம்பித்தேன். இதற்கிடையே சென்னை வாழ்க்கை என்னை மிகவும் வாட்டி வதைத்துக்கொண்டிருந்தது. சென்னையில் தொடர்ந்து இருந்தால் எனது நுண்ணுணர்வையும் மனிதத் தன்மையையும் கவிதை எழுதும் திறனையும் நான் இழந்துவிடுவேனோ என்று பயந்தேன். பொறுத்துப்பொறுத்துப் பார்த்து ஒருநாள் இந்த முடிவை எடுத்தேன்: இனியும் என்னால் சென்னையில் இருக்க முடியாது. ராமகிருஷ்ணனிடம் நான் இந்த முடிவைச் சொன்னதும் அவர் சற்றுத் தயங்கினாலும் என்னுடைய நிலையை நன்கு அறிந்தவராகக் கடைசியில் ஒப்புதல் அளித்தார். நான் ஊரை நோக்கிப் புறப்பட்டேன். அங்கே என்னை முதலில் வரவேற்றது பறவைகள்தான். பழைய நண்பர்கள் யாரும் இல்லாத இந்த ஊரில் இனி என் நண்பர்கள் எல்லாம் இந்தப் பறவைகள்தான் என்பது வீடு திரும்பிய ஒரு சில நாட்களிலேயே எனக்குத் தெரிந்துவிட்டது. எவ்வளவோ பறவைகள் என் கண்ணுக்குத் தென்பட ஆரம்பித்தன. இருபத்தோரு வருடங்கள் மன்னார்குடியில் அதற்கு முன் இருந்திருக்கிறேன்; இந்தப் பறவைகளும் காலங்காலமாக இங்கே இருந்துகொண்டிருக்கின்றன. ஆனால் தற்போதுதான் அவை என் கண்ணுக்குத் தெரிகின்றன.
    ஒவ்வொரு பறவையும் ஒரு அற்புதம். கைக்குள் அடங்கும் தேன்சிட்டைப் போல ஒரு அற்புதத்தை எங்கும் பார்க்க முடியுமா? சிறுசிறு பூக்களில் அது தேன் குடிப்பதைச் சத்தமெழுப்பாமல் ஜன்னல் ஓரத்தில் ஒளிந்து நின்றுகொண்டு வேடிக்கை பார்க்கும்போது நான் என்னும் உணர்வு அழிந்து எவ்வளவு சிறியவனாக நான் ஆகிவிடுகிறேன் என்பதையும் இவ்வுலகின் தத்துவங்கள், சட்டதிட்டங்கள், போர்கள், பிரிவினைகள், குற்றங்கள் எல்லாவற்றுக்கும் எந்தவொரு தொடர்பும் இல்லாமல் இங்கு ஒரு தேன்சிட்டு தேன் குடிக்கிறதே இது எப்படிப்பட்ட அற்புதம் என்பதையும் நான் உணர்ந்தேன். தேன்சிட்டு மட்டுமல்ல எல்லாப் பறவைகளும் அற்புதமே, பறவைகள் மட்டுமல்ல இயற்கையில் எல்லாம் அற்புதமே என்பதை உணர ஆரம்பித்தேன். இந்த உணர்தலுக்கு அடிப்படையை என்னுள் ஏற்படுத்தியது பறவைகள்தான். கொஞ்ச நாட்களிலேயே பைனாகுலர் ஒன்றும் வாங்கினேன். இயற்கையை ரசிக்கும் விதத்திலும் உடற்பயிற்சிக்காகவும் தினமும் ஒரு மணி நேரம் அதிகாலையில் நடக்க ஆரம்பித்தேன். அப்படி நடக்கும்போது எனது அக்காவின் குழந்தைகளையும் அண்ணன் குழந்தைகளையும் எதிர் வீட்டுக் குழந்தைகளையும் அழைத்துச் செல்வேன். உண்மையில் குழந்தைகள்தான் இயற்கைக்கு மிகவும் நெருக்கமானவர்கள்; அளப்பரிய ஆர்வம் கொண்டவர்கள் என்பதை அப்போது நான் கண்டுகொண்டேன். நமக்கு அபத்தமாகப் படும்படியான கேள்விகளைக் கேட்பார்கள்; ஆனால் அந்தக் கேள்விகள் ஒவ்வொன்றும் கவிதை போன்று இருக்கும். பைனாகுலரை எடுத்துக்கொண்டு சில நாட்கள் காலையிலேயே சைக்கிளில் பறவை பார்ப்பதற்காக பக்கத்துக் கிரமங்கள் வழியாகச் செல்வோம். அப்படிப் போகும்போது நாங்கள் அதிகம் பார்த்திராத ஒரு சில அழகான பறவைகளை (உதாரணமாக நீலமுகச் செண்பகம்: Blue-faced Malkoha) பார்த்திருக்கிறோம். ஒவ்வொரு குழந்தைகளும் ஏதாவது சொல்லிக்கொண்டே வருவார்கள். அப்படி ஒரு நாள் போகிறபோக்கில் என் அக்காள் பெண் தரணி (வயது 13) ஒரு வரி சொன்னாள், 'ஒளியின் பெண்தான் பறவை'. எனக்கு மிகவும் வியப்பேற்படுத்திய வரி அது. எதிர் வீட்டுப் பையன் பாலா (வயது 10) ஒருநாள் என்னிடம் சொன்னான்: மாமா இந்த உலகத்திலேயே எனக்கு ஒரே ஒரு ஆசைதான், ஒரே ஒரு பறவையையாவது நான் தொட்டுப்பார்க்க வேண்டும். எவ்வளவு அற்புதமான ஆசை. இதைவிட அழகான பேராசை வேறு எதுவும் இருக்கிறதா? அது மட்டுமல்லாமல் இந்தக் குழந்தைகள் கற்பனைப் பறவைகளை கண்டுபிடிப்பார்கள், காற்றுக்கொத்தி, மழைக்கொத்தி, மழைப்பாடி என்றெல்லாம். இந்த அனுபவங்களை எல்லாம் அவ்வப்போது கவிதைக்குள் கொண்டுவந்தேன். 2006இல் எனது 'சித்து' கவிதைத் தொகுப்பு வெளியான பிறகு நான்கு வருடங்களாக ஏதும் எழுதாமல் இருந்த எனக்கு இந்த ஆண்டு பறவைகள் மூலம் மறுவாழ்வு கிடைத்தது. நூற்றுக்கும் மேற்பட்ட கவிதைகளை எழுதினேன், பெரும்பாலும் பறவைகளைப் பற்றிய கவிதைகள். எழுதியதை எல்லாம் உடனுக்குடன் ராமகிருஷ்ணனுக்கு அனுப்பிவிடுவேன். அவர் படித்துவிட்டு 'தற்காலத் தமிழ்க் கவிதையில் யாரும் நுழையாத ஒரு முக்கியமான பிராந்தியத்துக்குள் நுழைந்திருக்கிறீர்கள். தொடர்ந்து எழுதுங்கள், பறவைகளைப் பற்றிய கவிதைகளை மட்டும் தொகுத்து ஒரு தொகுப்பு கொண்டுவந்துவிடுவோம்' என்று ஊக்கப்படுத்தினார். நாற்பது கவிதைகளுக்கு மேல் சேர்ந்ததும் புத்தக வேலை ஆரம்பித்தது. கவிதைகளில் இடம்பெற்றுள்ள முப்பதுக்கும் மேற்பட்ட பறவைகளின் புகைப்படத்துடன் புத்தகத்தைப் போடலாம் என்று அவர் முடிவெடுத்தார். சாதாரணமாக இருந்தாலே கவிதைப் புத்தகம் விற்பதில்லை, இதில் வண்ணப் புகைப்படங்களுடன் வெளியிட்டால் விலை மிகவும் அதிகமாகிவிடும், யாரும் வாங்க மாட்டார்கள் என்றேன். ஆனால் ராமகிருஷ்ணன் தான் நம்பும் விஷயங்களின் முக்கியத்துவத்துக்காக எவ்வளவோ இழந்திருப்பவர், இழந்துகொண்டிருப்பவர். செலவைப் பற்றி நீங்கள் கவலைப்பட வேண்டாம், நல்ல புத்தகத்தை நல்ல முறையில் கொண்டுவருவது நம் கடமை. அது விற்குமா விற்காதா என்றெல்லாம் யோசித்துக்கொண்டிருக்கக் கூடாது என்று சொல்லிவிட்டு இந்தப் புத்தகத்தின் தயாரிப்பில் ஆழ்ந்துவிட்டார். பறவைகளின் புகைப்படங்களையெல்லாம் இணையத்திலிருந்து எடுத்துப் போட மறுத்துவிட்டு Madras Naturalist Societyயைச் சேர்ந்த ஞானஸ்கந்தனைக் கேட்டுக்கொண்டு அவருடைய பல புகைப்படங்களை இந்தப் புத்தகத்தில் பயன்படுத்திக்கொண்டார். கிடைக்காத புகைப்படங்களை மட்டும் விக்கிபீடியாவில் இருந்து (காப்புரிமை அனுமதி உள்ளவை) எடுத்துக்கொண்டோம். இப்படியாகக் கவிதையும் புகைப்படங்களுமாக அற்புதமான தயாரிப்பில் 'கொண்டலாத்தி' வெளிவந்திருக்கிறது. பறவைகளுடன் பரிச்சயம் உடைய எந்தக் கவிஞரும் என்னைப் போலவோ அல்லது பிரமாதமாகவோ பறவைக் கவிதைகளை எழுதிவிட முடியும்; ஆனால், 'க்ரியா' கொண்டுவந்ததைவிட அழகாக இந்தத் தொகுப்பை வேறு யாராலும் கொண்டுவந்திருக்க முடியாது என்பதில் எனக்குச் சந்தேகமே இல்லை.
(தமிழ் இன்று இணையப் பத்திரிகையில் 2010ஆம் ஆண்டு வெளிவந்த கட்டுரை)

No comments:

Post a Comment