Tuesday, May 24, 2016

வாசகர் திருவிழா 2016: அறிவுலகக் கொண்டாட்டத்துக்கு நீங்கள் தயாரா?


ஆசை
('சென்னை புத்தகக் காட்சி’ தொடங்கவிருப்பதை முன்னிட்டு ‘தி இந்து’ நாளிதழின் நடுப்பக்கத்தில் 23-05-2016 அன்று வெளியான கட்டுரை)

ஜூன் 1-ல் தொடங்கவிருக்கிறது புத்தகக் காதலர்களுக்கான கொண்டாட்டம் சென்னைப் புத்தகக் காட்சி 2016.
சென்னை பெருமழை வெள்ளத்தின் காரணமாக இந்த ஆண்டு ஜனவரியில் நடக்கவிருந்த ‘சென்னை புத்தகக் காட்சி’ ரத்தானது. தொடர்ந்து தேர்வுகள், தேர்தல் என்று தள்ளிப்போய்க்கொண்டிருந்த இந்தப் புத்தகக் காட்சி, ஜூன் 1-ல் நடக்கிறது. இந்த ஆண்டு புத்தகக் காட்சி நடைபெறவிருக்கும் இடம் தீவுத்திடல்.
சுமார் 700 பதிப்பகங்கள், 15 லட்சம் தலைப்புகள் என்று பிரம்மாண்டமாக நடக்கவிருக்கும் இந்தப் புத்தகக் காட்சி, இந்த முறை ரூ.15 கோடி விற்பனை இலக்கைக் கொண்டிருக்கிறது.
சென்னை பெருவெள்ளத்தில் புத்தகக் காட்சி தள்ளிப்போனது மட்டும் இழப்பல்ல. 60-க்கும் மேற்பட்ட பதிப்பாளர்கள் மற்றும் விற்பனையாளர்களுக்கு வெள்ளத்தால் ரூ.25 கோடிக்கும் மேல் கடுமையான இழப்பு ஏற்பட்டது. ‘தமிழ் மண்’, ‘லியோ புக்ஸ்’, ‘நர்மதா’, ‘இந்து’ போன்ற பதிப்பகங்கள் தலா ஒரு கோடிக்கும் மேல் இழப்பைச் சந்தித்தன. இவை தவிர, சிறு பதிப்பகங்களுக்கும் சிறு விற்பனையாளர்களுக்கும் ஏற்பட்ட பாதிப்பு மிகுந்த வேதனையளிக்கக்கூடியது. அந்தப் பதிப்பாளர்களுக்கெல்லாம் புத்தகக் காட்சிகளையும் வாசகர்களையும்விட அதிக ஆறுதலை யாரால் தர முடியும்? அதற்கான தருணம் இப்போது வந்திருக்கிறது.

புத்தகங்கள் என்பவை ஒரு சமூகத்தின் முதன்மையான வளங்கள், ஆதாரங்கள். தொடர்ந்து தன்னை மேம்படுத்திக் கொண்டே செல்லும் சமூகத்தின் அறிவுச் செயல்பாடுகளுக்கு அடிப்படையே புத்தகங்களும் வாசிப்பும்தான். அந்த அறிவுச் செயல்பாடு தொடர்ந்து நடைபெறுவதற்கு அடிப்படை புத்தகங்களை வாங்கும் பழக்கம்தான். புத்தகங்கள் என்பவை லாபம், வியாபாரம் என்பதையெல்லாம் தாண்டிப் பார்க்கப்பட்டாலும் அவற்றை உருவாக்குவதற்கென்றே எண்ணற்ற தொழிலாளர்களைக் கொண்ட பெரும் தொழில்துறை ஒன்று இயங்கிக்கொண்டிருக்கிறது என்பதை நாம் மறந்துவிடலாகாது. சற்றே தாமதமானாலும் தற்போது புத்தகக் காட்சி தொடங்கவிருக்கிறது என்பது புத்தகக் காதலர்களுக்கு மட்டும் அல்லாமல், அத்துறையினருக்கும் உத்வேகத்தை அளித்திருக்கிறது.
சோர்வுறாத பதிப்பாளர்கள்
கடந்த டிசம்பரில் ஏற்பட்ட பின்னடைவால் பதிப்பாளர்கள் நஷ்டமடைந்திருக்கலாம். ஆனால், அவர்கள் சோர்ந்துவிடவில்லை. கடந்த டிசம்பருக்காக விறுவிறுப்புடன் உருவாக்கப்பட்டுவந்த புத்தகங்களில் சில அடுத்தடுத்த மாதங்களில் வந்துவிட்டன. சில புத்தகங்களின் வெளியீடு தள்ளிவைக்கப்பட்டுள்ளது. ஜூனில் நடக்கவிருக்கும் புத்தகக் காட்சிக்குப் பெரும் எண்ணிக்கையிலான நூல்களுடன் பதிப்பகங்கள் தயாராகிவருகின்றன. புத்தகக் காட்சியை ஒட்டிப் புத்தக வெளியீட்டு விழாக்கள் இப்போதே களைகட்ட ஆரம்பித்துவிட்டன. இந்த வாரத்தில் மட்டும் ஐந்துக்கும் மேற்பட்ட கூட்டங்கள் நடக்கின்றன. இவற்றில் சுமார் 30 நூல்கள் வெளியிடப்படுகின்றன. சென்னைக்கு வெளியில் வசிக்கும் பல்வேறு எழுத்தாளர்களும் வாசகர்களும் தமிழகத்தின் மாபெரும் புத்தகத் திருவிழாவில் பங்கேற்பதற்காகத் தலைநகருக்கு வரவிருக்கிறார்கள்.
தென்னிந்திய பதிப்பாளர்கள் மற்றும் விற்பனையாளர்கள் சங்கத்தின் செயலாளர் புகழேந்தியிடம் பேசியபோது, இந்த ஆண்டு புத்தகக் காட்சியின் சிறப்பம்சங்களைப் பட்டியலிட்டார்.
“முன்பைவிடப் பிரமாதமாகவும் பிரம்மாண்டமாகவும் தற்போது ஏற்பாடுகள் செய்திருக்கிறோம். இடவசதி, உணவுவசதி, பார்க்கிங், கழிப்பிட வசதி, ஏ.டி.எம், போன்ற வசதிகள் முன்பைவிட இப்போது மேம்படுத்தப்படும். தீவுத்திடல் என்பது மக்கள் அனைவரும் அறிந்த இடம் என்பதால், சிரமம் இருக்காது என்றாலும் புத்தகக் காட்சிக்கு அருகே பேருந்துகளை நிறுத்துவது குறித்து அரசிடம் கேட்டிருக்கிறோம்.
இதுவரை நடந்த புத்தகக் காட்சிகளைப் பற்றிய ஒரு விமர்சனத்தைப் பலரிடமிருந்தும், குறிப்பாக ‘தி இந்து’ தமிழ் நாளிதழிடமிருந்து நாங்கள் எதிர்கொண்டோம். மேடைப் பேச்சுக்களைத் தவிர்க்கலாமே என்பதுதான் அந்த விமர்சனம். இந்த முறை மேடைப் பேச்சுக்களைத் தவிர்த்துவிட்டு, அதற்குப் பதிலாகப் பல்வேறு புதுமையான, அறிவுபூர்வமான ஏற்பாடுகளைச் செய்திருக்கிறோம்.
புத்தகக் காட்சியின் ஒவ்வொரு நாளையும் ஒவ்வொரு கருப்பொருளில் பாரம்பரிய தினம், சென்னை தினம், எழுத்தாளர்கள் சந்திப்பு தினம், குழந்தைகளுக்கான தினம், ஊடக தினம், குறும்படங்கள் தினம் என்றெல்லாம் கொண்டாடவிருக்கிறோம். வாசகர்களுக்கு ரொம்பவும் புதுமையான அனுபவமாக இது இருக்கும். இதில் எழுத்தாளர்களுடனான சந்திப்பு, கலந்துரையாடல், குழந்தைகள் வாசிப்பு, குழந்தைகளின் கலந்துரையாடல், குழந்தைகள் எடுத்த குறும்படங்கள் திரையிடல், அவர்களின் பல்வேறு திறமைகளை வெளிப்படுத்தும் நிகழ்வுகள் என்று பிரமாதப்படுத்தவிருக்கிறோம்.
டெல்லி புத்தகக் காட்சியில் இருப்பதுபோல் ‘கெஸ்ட் ஆஃப் ஆனர்’ என்ற முறையில் ஒவ்வொரு ஆண்டும் ஒரு நாட்டைக் கவுரவப்படுத்தவிருக்கிறோம். இந்த ஆண்டு சிங்கப்பூரைத் தேர்ந்தெடுத்திருக்கிறோம். சிங்கப்பூர் தமிழ் நூல்களுக்காக இலவசமாக ஒரு அரங்கை ஒதுக்கி அங்கே எழுத்தாளர்-வாசகர் சந்திப்புகளுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மற்ற மொழி அரங்குகளுக்கு வழக்கமான வாடகையைவிடக் குறைந்த வாடகையில் அரங்குகள் ஒதுக்கப்படுவதால் மலையாளம், தெலுங்கு, கன்னடம், இந்தி, சம்ஸ்கிருதம் போன்ற மொழிகளைச் சேர்ந்த பதிப்பகங்களும் இந்த முறை இடம்பெறுகின்றன.
இந்தப் புத்தகக் காட்சியில் சலுகைக் கட்டணத்தில் பிரெய்ல் புத்தகங்களுக்கு அரங்கு ஒதுக்கப்படுகிறது. வானியல் மீதான குழந்தைகளின் ஆர்வத்துக்கு உத்வேகம் கொடுக்கும் விதத்தில் ‘ஸ்பேஸ் கிட்ஸ்’ என்ற அரங்கும் அமைக்கப்படவிருக்கிறது” என்றார் புகழேந்தி.
அறிவுத் திருவிழா நம்மைக் கொண்டாடவைக்கக்கூடியது மட்டுமல்ல; நம் வாழ்வை மேம்படுத்தக்கூடியதுமாகும். கொண்டாட்டத்துக்கு நீங்கள் தயாரா?
- நன்றி: ‘தி இந்து’
- ‘தி இந்து’ இணையதளத்தில் இந்தக் கட்டுரையைப் படிக்க: http://goo.gl/G5ktup  

No comments:

Post a Comment