நிக்கோலா செந்த் ஃப்ளர்
('தி இந்து’ நாளிதழின் ‘வெற்றிக்கொடி’ இணைப்பிதழில் 03-05-2016 அன்று எனது மொழிபெயர்ப்பில் வெளியான கட்டுரை)
பூமி மிகவும் பழமையானது. சூரியன் மிகவும் பழமையானது. ஆனால், இந்த இரண்டையும் விடப் பழமையானதாக இருக்கக்கூடிய ஒன்று.
இந்த உலகம் எப்படி நீர்சூழ் உலகானது என்பது ஒரு புதிரே. ஆனால், இது குறித்து அதிகம் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒரு கோட்பாடு உள்ளது. அண்டவெளி மேகமொன்றில் மிதந்துகொண்டிருந்த பனித் துகள்களிலிருந்துதான் நமது பூமியில் உள்ள நீர் வந்திருக்கிறது என்கிறது அந்தக் கோட்பாடு. இது நடந்தது நமது சூரியன் உருவாவதற்கு முன்னால், அதாவது 460 கோடி ஆண்டுகளுக்கும் முன்னால்.
ஹைட்ரஜனின் குண்டான சகோதரி
வானியலாளர்களின் கணக்கீடுகளின்படி பார்த்தால் பூமியில் இருப்பதில் பாதியளவு நீர் அந்த அண்டவெளி மேகத்திலிருந்து வந்திருக்கலாம் என்று தெரிகிறது. அப்படியென்றால் நாம் குடிக்கும் நீரும், பூமியின் பெருங்கடல்களை நிரப்பியிருக்கும் நீரும் சூரியக் குடும்பத்தைவிட கோடிக் கணக்கான ஆண்டுகள் பழமையானவை என்று அர்த்தமாகிறது.
சூரியக் குடும்பத்தின் மூர்க்கமான உருவாக்கத் தையும் கடந்து அந்தத் தொன்மையான பனிக்கட்டிகள் பூமிக்கு வந்திருக்கின்றன என்று கருதப்படுகிறது. இதை நிரூபிப்பதற்காக ஆராய்ச்சியாளர்கள் பெருங்கடல்களில் உள்ள நீர் மூலக்கூறுகளை ஆராய்ந்து பார்த்தார்கள். நீரின் தொன்மையை உணர்த்தும் அறிகுறிகளைத் தேடிய ஆய்வு அது.
‘கனநீர்’ என்ற நீரின் வடிவத்தில்தான் இந்தக் கேட்பாட்டை நிரூபிப்பதற்கான துப்பு கிடைத்தது. இரண்டு ஹைட்ரஜன் அணுக்களும் ஒரு ஆக்ஸிஜன் அணுவும் சேர்ந்ததுதான் நீர் மூலக்கூறு என்பது நமக்குத் தெரியும். ஆனால், சில நீர் மூலக்கூறுகள் ஹைட்ரஜனின் குண்டான சகோதரியான டியூட்டியரியத்தைக் கொண்டிருக்கும். (டியூட்டியரியத்தின் அணுக்கருவில் ஒரு நியூட்ரான் இருக்கும். வழக்கமான ஹைட்ரஜன் அணுக்கருவிலோ நியூட்ரான் இருக்காது. இதுதான் இரண்டுக்குமிடையிலான வேறுபாடு.)
டியூட்டியரியம் செறிந்திருக்கும் நீர் மற்ற கோள்களிலும் நிலவுகளிலும் கண்டறியப்பட்டிருக்கிறது, பூமியிலும்தான். ஆனால் இந்த நீர் எங்கிருந்து வந்ததென்பதை ஆராய்ச்சியாளர்களால் உறுதியாகச் சொல்ல முடியவில்லை. பெரும்பாலான அளவு கனநீர் அண்டவெளி மேகத்தில் உருவாகி அங்கிருந்து பயணித்து சூரிய குடும்பத்துக்கு வந்திருக்கக் கூடும் என்று ஒரு கருதுகோள் சொல்கிறது.
பூமியைக் குளிப்பாட்டிய பனி
அறிவியல் ஆராய்ச்சி யாளர்கள் ஒரு கணினி மாதிரியைப் பயன்படுத்திப் பார்த்தபோது ஒன்று புலப்பட்டது. நூறு கோடிக்கணக்கான ஆண்டு தொன்மையான பனி மூலக்கூறுகள் சூரியனின் மூர்க்கமான கதிர்வீச்சு வெடிப்புகளிடமிருந்து தப்பிவந்து, அப்போதுதான் உருவாகிக்கொண்டிருந்த பூமியையும் அதன் சகோதரக் கோள்களையும் குளிப்பாட்டியிருக்கிறது என்பதுதான் அந்தக் கண்டுபிடிப்பு. இந்தக் கண்டுபிடிப்பை முன்வைத்து 2014-ல் அறிவியலாளர்கள் ஓர் ஆய்வுக் கட்டுரையை வெளியிட்டனர்.
அந்தத் தொன்மையான பனிக்கட்டியின் மிச்சங்களெல்லாம் சூரியக் குடும்பம் நெடுக, அதாவது நிலவு, வால்நட்சத்திரம், புதன் கோளின் துருவங்கள், செவ்வாயில் உருகிய உலோகங்களின் எச்சங்கள், வியாழனின் நிலவுகளுள் ஒன்றான யூரோப்பா, ஏன் நாம் குடிக்கும் நீரைக் கொண்டிருக்கும் பாட்டில் ஆகிய எங்கும் விரவியிருக்கின்றன என்று அந்தக் ஆய்வுக் கட்டுரையில் அவர்கள் ஒரு முடிவுக்கு வந்தனர்.
- நிக்கோலா செந்த் ஃப்ளர் (Nicholas St. Fleur), அறிவியல் எழுத்தாளர்.
நியூயார்க் டைம்ஸ், தமிழில்: ஆசை
- நன்றி: ‘தி இந்து’, ‘தி இந்து’ இணையதளத்தில் இந்தக் கட்டுரையைப் படிக்க: http://goo.gl/CfiOlG
கட்டுரை அருமை. ஹைட்ரஜனின் குண்டான சகோதரி என்ற சொற்றொடரை ரசித்தேன்.
ReplyDelete