சுகுமாரன்
‘காதல் அல்லது காமத்தின் தீவிர நிலையே இந்தக் கவிதைகளில் பிரதானம்’ என்று தொகுப்பின் முன்னுரையில் ஆசை குறிப்பிடுகிறார். தமிழில் இன்றுவரை எழுதப்பட்ட கவிதைகளில் கணிசமானவை காதலையும் காமத்தையும் சொல்பவைதாம். அகத்திணை என்ற பிரிவைக் கொண்டிருப்பதும் இந்த மொழிதான். இந்த நோக்கில் ஆசையின் காதல் அல்லது காமநிலைக் கவிதைகள் ஒரு நெடிய மரபின் இன்றைய கண்ணிகள்.
அகத்துறைக் கவிதைகள் வெறும் காதலைப் பேசுவதில்லை. மாறாகக் காமத்தையே அதிகம் பேசுகின்றன. களவொழுக்கத்தை முதலிலும் கற்பொழுக்கத்தை இரண்டாவதாகவுமே கருதுகின்றன. உடலின்பத்தைத் தயக்கமின்றி வெளிப்படுத்துகின்றன. காலப் போக்கில் உருவாக்கப்பட்ட ஒழுக்க மதிப்பீடுகள் காமம் என்பதைக் கூடாச் சொல்லாகவும் உடல் திளைப்பைப் பேசக் கூடா ரகசியமாகவும் மாற்றின. பாரதியின் கண்ணன் பாடல்களில் ‘சாரீரகமான காதலையே கவிஞர் அதிகம் வர்ணித்திருக்கிறார்’ என்ற வ.வே.சு ஐயரின் விமர்சனம் இந்த விலக்கின் உதாரணம். இன்றைய கவிதைச் சூழலிலும் இந்த மனப்போக்கைப் பார்க்க முடிந்திருக்கிறது. தமிழில் பெண்கள் எழுதிய கவிதைகளை வெறும் உடல் துய்ப்பின் வெளிப்பாடாகவும் ஒழுக்கக் கேட்டின் பிரதிபலிப்பாகவும் கருதி பண்பாட்டுக் காவலர்கள் கொந்தளித்தது நினைவுக்கு வருகிறது. எனினும் கவிதை விலக்கையும் விழுமியத்தையும் கடந்தே செயல்படுகிறது.
புதிய கவிதையில் இவை இயல்பாகவே மீறப்படுகின்றன. காமத்தைப் பேசுபொருளாகக் கொண்ட கவிதைகளைக் கலாப்ரியா உள்ளிட்ட சில கவிஞர்கள் எழுதியிருக்கிறார்கள். ஆனால் அவை உதிரியான கவிதைகள். ஒரு தொகுப்பு அளவுக்கான காமக் கவிதைகளை ‘எழுத்து’ காலக் கவிஞர் மா. தக்ஷிணாமூர்த்தியின் ‘திவ்ய தர்சனம்’ தொகுப்பு கொண்டிருந்தது. அதன் பின்னரும் சில தொகுப்புகள் வெளியாயின. காமத்தின் தீவிர நிலையைப் பேசும் தொகுப்பாக ஆசையின் ‘குவாண்டம் செல்ஃபியைச் சொல்லலாம். திவ்ய தர்சனத்திலுள்ள கவிதைகள் காமத்தின் உச்சமாக ஆன்மீக நிலையைக் கண்டடைகின்றன. ஆசையின் கவிதைகள் பிரபஞ்சத்தின் இயல்பான அசைவுகளில் ஒன்றாக, தவிர்க்க இயலாத இயக்கமாகக் காமத்தைப் போற்றுகிறது. குவாண்டம் என்ற அறிவியற் கலைச்சொல் குறிப்பிடும் பேரளவான ஆற்றலைக் காமத்துக்கு வழங்குகிறது.
காதலுக்கும் காமத்துக்குமான வித்தியாச இழை எங்கே மறைகிறது என்பது இந்த லீலையின் விளங்காப் புதிர். அந்தப் புதிரை விளங்கிக்கொள்ள முனையும் வேட்கையாகவே ஆசையின் கவிதைகள் திகழ்கின்றன. காதலின் நீட்சிதான் காமமா அல்லது காமத்தின் கௌரவச் சுருக்கம்தான் காதலா என்ற கேள்விக்கு விடையைத் தேடுகின்றன. காதல் நெருக்கமும் சரீர முயக்கமும் தேடலுக்கு முகாந்திரங்களாகின்றன.
அதுவரை
உரக்கச் சொல்கிறேனடி
உன்னை நான் பிரபஞ்சக்காதல் செய்கிறேன் என்று
இன்னும் சொல்லப்போனால்
பிரபஞ்சம் கொள்ளாத காதல் செய்கிறேன் என்று – என சாத்வீகமாகச் சொல்லப்படும் கவிதையும்
உன் யோனிக்குள்ளிருந்தே
பார்க்க விரும்புகிறேன்
ஒட்டு மொத்தப் பேரண்டத்தையும் – எனத் தீரா வேட்கையுடன் சொல்லப்படும் கவிதையும் ஒப்புநோக்கில் ஒரே தீவிரத்தின் வெவ்வேறு வடிவங்களாகின்றன.
இந்தத் தீவிர உணர்வை ஆசை பல தளங்களில் விரிக்கிறார். அறிவியல் உண்மைகள், சிறார் கதைகள், காட்சியனுபவங்கள், இலக்கியப் பின்புலங்கள் ஆகியவற்றின் துணையால் பெருக்கிக் காட்டுகிறார். இந்த ரசவாதத்தால் கவிதைகள் மேலும் ஆழமான பொருளைக் கொள்கின்றன. சில கவிதைகள் தரைதட்டி வெறும் காமக் கூற்றுகளாக நின்று விடவும் செய்கின்றன.
ஆசையின் குவாண்டம் செல்ஃபி தொகுப்பிலுள்ள பெரும்பான்மைக் கவிதைகளும் ஒரே குரலின் பலவிதத் தொனிகளில் வெளிப்படுவது குறிப்பிடத் தக்கது. பெண்ணை வியக்கும் காதலனின் குரலாகவோ பெண்ணுடலில் தன்னைத் தேடும் காமுகனின் குரலாகவோதான் அது வெளிப்படுகிறது. காதலுக்கு ஆட்படும் பெண்ணி்ன் உணர்வோ காமத்தில் ஆழ்ந்த பெண்ணின் உணர்ச்சியோ ஏன் இடம்பெறவில்லை என்ற கேள்வியும் எழுகிறது. ஓர் ஆணின் வெளிப்பாடு அப்படித்தானே இருக்கும் என்ற பதில் அவ்வளவு பொருத்தமானதாக இல்லை என்று தோன்றுகிறது. காதலிலும் காமத்திலும் பெண்ணும் சம பங்காளி அல்லவா? அந்தப் பங்களிப்பு இந்தக் கவிதைகளில் இடம்பெறாததைக் குறையாகச் சொல்லலாம். காதலுக்கும் காமத்துக்குமுள்ளான பெண் மனநிலையை ஒரு கவிஞன் அனுமானிக்க முடியும் இல்லையா?
தீவிரநிலையை வித்தியாசமாகவும் செறிவுடனும் பெரும் எண்ணிக்கையிலும் ஆசை கவிதைகளாக்கி இருக்கிறார். கூர்வாளின்மேல் பயிலும் நடை இந்தச் செயல். அந்தத் துணிச்சலுக்குப் பாராட்டுகள். கவிதைகள் பெறவிருக்கும் புகழ்மொழிகளுக்கும் கண்டனங்களுக்கும் வாழ்த்துக்கள்.
குவாண்டம் செல்ஃபி
(கவிதைகள்)
ஆசை
விலை: ரூ.160
புத்தகத்தை வாங்க: டிஸ்கவரி புக் பேலஸ் – 8754507070
அமேஸானில் வாங்க: https://amzn.to/3qlMQyu
No comments:
Post a Comment