Tuesday, May 16, 2023

சங்கி சமஸ்!


ஆசை

சமஸை சங்கி என்று குறிப்பிட்டு கவின்மலர் அவர்கள் எழுதிய பதிவைப் படித்தேன். கடந்த பத்தாண்டு காலமாகப் பலரும் செய்துவரும் அவதூறுப் பிரச்சாரத்தின் தொடர்ச்சிதான் இது. இதற்கெல்லாம் எதிராக எழுதினால், ‘சமஸின் சகா என்பதாலேயே சமஸுக்கு வக்கீல் வேலை பார்க்கிறாயா?’ என்று அற்பத்தனமாகக் கேட்பவர்களும் இருப்பார்கள் என்பதாலேயே பல காலம் நான் மௌனம் காத்திருக்கிறேன். அது மட்டுமல்ல; சமஸ் செய்த வேலைகளே அவருக்காகப் பேசும் என்று அறிவேன். 

இருந்தும் ‘இந்து தமிழ்’ நாளிதழின் நடுப்பக்க அணியிலும், ’தெற்கிலிருந்து ஒரு சூரியன்’, ‘மாபெரும் தமிழ்க் கனவு’ உருவாக்க அணிகளிலும் சமஸுடன் பணியாற்றியவன் என்ற முறையில் இந்த அவதூறு என்னையும் அவமானப்படுத்துவதாகவே நான் கருதுகிறேன். ஆகவே இந்த எதிர்வினை.

ஒரு சம்பவத்தை நான் முதலில் சொல்லியாக வேண்டும். ‘இந்து தமிழ்’ சார்பில், எத்தனையோ மாணவர்கள் நிகழ்ச்சிகளில் சமஸ் பேசியிருப்பதைப் பலரும் அறிவார்கள். சென்னையில் ஒரு நிகழ்ச்சி. நாங்கள் நடுப்பக்க அணியினரும் போயிருந்தோம். அந்த நிகழ்வின் சிறப்பு விருந்தினர்கள் இன்றைய தலைமைச் செயலர் வெ. இறையன்பு, தமிழ்நாடு டிஜிபி சைலேந்திரபாபு, சமஸ் மூவரும். 

அதிகாரிகள் இருவரும் பேசிய பிறகு சமஸ் பேச வந்தார். பேச்சின் தொடக்கத்திலேயே அவர் இப்படி கூறினார்: ‘இன்றைக்கு நம்முடைய அரசமைப்புச் சட்டம் ஒன்றிய அரசின் கைகளிலேயே பெரும்பான்மை அதிகாரத்தைக் கொடுத்திருப்பதாக, மையப்படுத்தியிருப்பதாக இருக்கிறது. இந்த நாட்டின் அரசமைப்பையே கூடுதல் குடியரசுத்தன்மை மிக்கதாக, கூட்டாட்சித்தன்மை மிக்கதாக நாம் மாற்ற வேண்டும். நம்முடைய அரசமைப்பைக் கூட்டாட்சியை மையப்படுத்தியதாக நாம் மாற்ற வேண்டும். மாணவர்கள் உங்கள் கைகளிலும் இந்த ஜனநாயகக் கடமை இருக்கிறது.’

சைலேந்திர பாபு பதறிப்போனார். ‘மிஸ்டர், அஜெண்டாபடி பேசுங்கள்; இது என்ன மாணவர்கள் வழிகாட்டி நிகழ்ச்சிதானே!’ என்றார் சத்தமாக. சமஸ், ‘சார், அஜெண்டாபடித்தான் பேசுகிறேன்’ என்றார். ‘அரசமைப்புச் சட்டத்தைத் திருத்துவதுதான் உங்கள் அஜெண்டாவா? நான் இதையெல்லாம் கேட்டுக்கொண்டிருக்க முடியாது’ என்றார். சமஸ் பணிவாகச் சொன்னார், ‘நூறு முறைக்கு மேல் அரசமைப்புச் சட்டத்தைத் திருத்தியிருக்கிறோம். கூட்டாட்சியை மையப்படுத்தி ஏன் திருத்தக் கூடாது? இதைத்தான் பேசப்போகிறேன். சாரி சார், ஒருவேளை இந்தப் பேச்சு நீங்கள் வகிக்கும் பொறுப்புக்கு சங்கடம் தரும் என்றால், நீங்கள் புறப்படுங்கள். நான் உறுதியாக இதைத்தான் பேசப்போகிறேன்.’ சைலேந்திர பாபு உடனடியாக மேடையை விட்டு கீழே இறங்கினார். பக்கத்திலிருந்த இறையன்புவிடம், ‘சார், உங்களுக்குச் சங்கடம் வேண்டாம், நீங்களும் புறப்படுங்கள்’ என்று சமஸ் சொன்னதும் அவரும் புறப்பட்டார். 

சமஸ் பேச்சைத் தொடர்ந்தார். நான் அருகில் இருந்த என் அணி நண்பரிடம்  ‘என்னங்க, இப்படிப் பேசுறார்? நாளைக்கு சமஸுக்கு வேலை இருக்குமா?’ என்று கேட்டேன். சமஸோடு பல நிகழ்ச்சிகளுக்கும் உடன் செல்லும் அண்ணனும் மூத்த இதழியல் சகாவும் இப்படிச் சொன்னார், ‘நீங்க வேற, இந்தக் கூட்டத்துல சமஸ் பேசுனது கம்மி.’

உண்மைதான். சமஸ் பேட்டிகள் யூடியூபில் நிறைய இருக்கின்றன. பார்க்கலாம். சமீபத்தில் திருவாரூர் புத்தகக்காட்சியில் அவர் பேசிய பேச்சு சுருதி டிவி தளத்தில் இருக்கிறது. தான் பிறந்த முக்குலத்தோர் இனம் தலித்துகளுக்கு இழைக்கும் கொடுமைகள் குறித்துக் கடுமையாக விமர்சித்து, மாவட்ட ஆட்சியர் முன்னிலையில் அந்தக் கூட்டத்தில் பேசியிருப்பார்.  திருவாரூர் அவரது சொந்த மாவட்டம், முக்குலத்தோர் கணிசமானோர் வசிக்கும் மாவட்டம். நான்காண்டுகளுக்கு முன்பு கல்கி நிறுவன நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராக அழைக்கப்பட்டிருந்தார், மயிலாப்பூரில் பிராமணர்கள் மத்தியில் இந்துத்துவத்தையும் சிஏஏவையும் கண்டித்துப் பேசினார். ஐஎஃப்டி உட்பட பல இடங்களில் முஸ்லிம்கள் மத்தியில் சென்று வஹாபியஸத்தை எதிர்த்துப் பேசியிருக்கிறார். எந்தத் தரப்பு பேச அழைத்திருக்கிறதோ அந்தத் தரப்பின் தவறுகளை விமர்சித்துப் பேசுவது சமஸுடைய வழக்கம். எழுத்தும் அப்படித்தான்! 

நண்பர் என்பதால் சொல்லவில்லை. உடனிருந்து பார்த்தவன், கூடவே பங்கெடுத்தவன் என்ற வகையில் சொல்கிறேன், கடந்த 15 ஆண்டுகளில் சமஸ் தமிழ் இதழியலில் உருவாக்கிய சமதளத்தை எவரும் சாதித்தது இல்லை. 

இந்து தமிழ் நாளிதழ் தொடங்கப்பட்டதிலிருந்து சமஸ் நடுப்பக்க ஆசிரியராக இருந்தபோது அவர் செய்த பெரும் முன்னெடுப்பு, எல்லாத் தரப்பு கருத்துகளுக்கும் இடம் அளித்ததுதான். மதவாதம் எந்தத் தரப்பில் வெளிப்பட்டாலும் கடுமையாக எதிர்வினையாற்றும் களமாக இந்து தமிழ் நடுப்பக்கங்களை அவர் மாற்றினார். கவின்மலர் சங்கி என்று சமஸைக் குறிப்பிட்டிருந்ததைப் பார்த்தபோது நான் சிரித்துக்கொண்டேன், மாட்டிறைச்சியின் பெயரால் இஸ்லாமியர்கள் படுகொலை செய்யப்பட்டுக்கொண்டிருந்தபோது நடுப்பக்கத்தில், ‘பசுக் காவலர்கள்’ என்று அழைத்துக்கொள்வோரை இனி ‘பசு குண்டர்கள்’ என்றே அழைக்க வேண்டும் என்று தலையங்கம் எழுதியவர் சமஸ். தமிழுக்கு ‘பசு குண்டர்கள்’ என்ற வார்த்தையைத் தந்தவர் அவர். அந்தப் படுகொலைகளை எதிர்த்து ’த வயர்’ இதழில் மனஷ் பட்டாச்சார்ஜி எழுதிய கட்டுரையை ‘கும்பலாட்சி’ என்று என்னை மொழிபெயர்க்கச் செய்து முழுப் பக்கத்துக்கு வெளியிட்டார் சமஸ்.

தமிழ் வெகுஜன தினசரிகளில் ‘கௌரவக் கொலை’ என்ற சொல்லாக்கத்தை ‘ஆணவப் படுகொலை’ என்று எழுதியதும் இந்து தமிழ் நாளிதழ்தான். வெகுஜன நாளிதழ்களில் முதன்முதலில் ‘ஒன்றிய அரசு’ என்று நடுப்பக்கத்தில் எழுதியவர் சமஸ். அவர் நிறுவனத்திலிருந்து வெளியேறிய உடனே அது மத்திய அரசு என்று மாற்றப்பட்டது. எத்தனை பேர் கவனித்தார்கள் என்று தெரியவில்லை. 

திராவிட இயக்கக் குடும்பத்திலிருந்து வந்திருந்தாலும் இடையில் அந்த இயக்கம் மீது வெறுப்புற்று இருந்தேன். மொத்தச் சூழலில் காந்தி மட்டுமே எனக்கு வெளிச்சம் தருபவராக இருந்தார். ‘தெற்கிலிருந்து ஒரு சூரியன்’ புத்தகப் பணியில் சமஸ் என்னை ஈடுபடுத்தியபோதுதான் திராவிட இயக்கத்தின் ஆழ அகலங்களை உணர்ந்தேன். காந்திய வாசிப்பு இப்போது திராவிட இயக்கத்தைப் பார்ப்பதில் எனக்குக் கூடுதல் புரிதலைத் தந்தது. ஆனாலும், இந்தக் காலகட்டத்திலெல்லாம் எனக்கே எரிச்சல் ஏற்படும் அளவுக்கு ‘எவ்வளவு பெரிய லீடர், எவ்வளவு பெரிய லீடர்’ என்று மாய்ந்து மாய்ந்து கலைஞரையும் அண்ணாவையும் பற்றிச் சொல்லிக்கொண்டிருப்பார். அந்த நூலை உருவாக்குவதற்காக அறிவாலயம் நூலகத்தில் அவர் செலவிட்ட நாட்களையும், ‘மாபெரும் தமிழ்க் கனவு’ நூலுக்காக அவர் அலைந்த அலைச்சலையும் அர்ப்பணிப்பையும் கவின்மலர் போன்றவர்களால் கற்பனையிலும் எண்ணிப் பார்க்க முடியாது. அண்ணா இறந்தே 50 ஆண்டுகளுக்குப் பின் வந்த புத்தகம் அது. அண்ணாவைப் பற்றிப் பேட்டி கொடுக்க வேண்டும் என்றால், அண்ணா உயிரோடு இருந்தபோது, 1969இல் 30 வயதேனும் நிரம்பியிருக்கக் கூடிய ஒருவரால்தான் கொஞ்சமேனும் அண்ணாவைப் பற்றிப் பேச முடியும். அப்படிப்பட்டவர் சமஸ் பேட்டி எடுக்கும்போது 80 வயதுக்கு மேல் இருப்பார். முதுமை, நினைவுப் பிழை, தொடர்பற்ற பேச்சு என்று எவ்வளவோ சிக்கல். சமஸ் தமிழ்நாடு முழுக்க அலைந்து திரிந்தார்.

தான் காந்தியராக இருந்தபோதிலும், திராவிட இயக்கத்துக்கும் இடதுசாரி இயக்கத்துக்கும் அம்பேத்கரிய இயக்கத்துக்கும் அவர் இந்து தமிழ் நாளிதழின் நடுப்பக்கத்தில் மிகுந்த முக்கியத்துவம் ஏற்படுத்தினார். இதேபோல, ஜனநாயக அடிப்படையில் வலதுசாரிகளின் குரல்களுக்கும் ஒரு இடமேனும் இருக்க வேண்டும் என்று நினைத்தார். இடதுசாரி, வலதுசாரி என எந்தத் தரப்பில் தவறுகள் நிகழ்ந்தாலும் அதை விமர்சிக்கும் களமாக நடுப்பக்கத்தை அமைத்தார். நல்லகண்ணு அவர்களின் பேட்டி ஒரு முழுப் பக்கத்துக்கு  வெளிவந்தது; தொல்.திருமாவளவன் அவர்களின் பேட்டி ஐந்து நாட்களுக்குத் தொடராக வெளிவந்தது இவையெல்லாம் முதல் முறையாக வெகுஜன ஊடகம் ஒன்றில் நிகழ்ந்தன. அவர் தொகுப்பாசிரியர் பொறுப்பில் அமர்ந்து வெளிக்கொண்டுவந்த புத்தகங்கள் ஏதோ நாலு பேரிடம் கட்டுரைகளைக் கேட்டுப் பெற்று திரட்டி புத்தகமாக்கிய பணி அல்ல. ஆய்வின், அலைச்சலின் அடிப்படையில் மேற்கொள்ளபட்டவை.

வெளியே என்ன நினைத்துக்கொண்டிருக்கிறார்கள் என்று தெரியவில்லை. இந்த நூல்களுக்கெல்லாம் அடையாள நிமித்தமான சில ஆயிரங்களைத் தவிர சமஸோ, எங்களுடைய நடுப்பக்க அணியினரோ நிறுவனத்திடமிருந்து பெரிய தொகை எதையும் பெற்றுக்கொள்ளவில்லை. அன்றாடப் பணியினூடாக, கூடுதல் நேரம் ஒதுக்கித்தான் இந்த வேலைகளைப் பார்த்தோம். பல இரவுகள் ஒட்டுமொத்த இந்து அலுவலகத்திலும் சமஸ் ஒருவர் தனியாக அதிகாலை வரை வேலை பார்த்துக்கொண்டிருப்பார். அவருக்கு உடல்நலக் குறைவு அடிக்கடி ஏற்பட வேறு எந்தக் காரணமும் இல்லை, அவரது அயராத உழைப்பைத் தவிர. ஒரு ‘சங்கி’ புத்தக விற்பனைக்காக அல்லது நிறுவன வளர்ச்சிக்காகத் தன் உயிரையே பணயம் வைத்துக்கொள்வார் என்று என்னால் நம்ப முடியவில்லை அல்லது அந்த அளவுக்கு நான் முட்டாளாக இல்லை. 


இந்திய வரலாற்றில் முக்கியமான தேர்தல், 2014 நாடாளுமன்றத் தேர்தல். இந்தியா முழுவதும் அப்போது சமஸ் சுற்றி வந்தார்.  இந்துத்துவத்துக்கு எதிராகவும் இந்தியாவின் பன்மைத்துவத்தையும் அப்போது அவர் எழுதிய ‘இந்தியாவின் வண்ணங்கள்’ தொடரை ஏற்கெனவே உடல் நலம் பாதிக்கப்பட்டிருந்த நிலையில்தான் செய்தார். ‘இது நாட்டையே புரட்டிப்போட்டுவிடக் கூடிய தேர்தல்; நாம் சும்மா இருக்க முடியாது’ என்று சொல்லிவிட்டுப் புறப்பட்டார். குஜராத்தில் வீதிகளுக்கு இரும்புக் கதவு போட்டுக்கொண்டு இருக்க வேண்டிய நிலை இருக்கிறது என்பதை இந்திய இதழியலில் முதல் முறையாகப் புகைப்படத்துடன் பதிவுசெய்தது அவர்தான். கலவரத்துக்குப் பின் கடுமையாகப் பாதிக்கப்பட்டு, தலைமறைவாக இருந்த குதுபுதீன் அன்சாரியின் பேட்டியைத் தமிழில் கொண்டுவந்ததும் சமஸ்தான். அதேபோல் ‘கடல்’ தொடரின் மூலம் தமிழ்நாட்டில் அதுவரை ஊடகங்கள் செல்லாத கடல் பகுதிகளை வெளிச்சப்படுத்தினார். அதைப் பின் தொடர்ந்து காட்சி ஊடகங்கள் அங்கெல்லாம் சென்றன. 

இந்தப் பயணங்களெல்லாம் முடித்துவிட்டு ஊர் திரும்பியதும் மீண்டும் சமஸ் உடல் நலம் பாதிக்கப்பட்டார். உடல் நலப் பாதிப்பு என்றால், சும்மா இல்லை. மூன்று முறை மாதக் கணக்கில் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் இருந்தார் சமஸ். உயிர் பிழைத்துத் திரும்புவார் என்று நாங்கள் நம்பவில்லை.

ஒற்றைத்தன்மையை இந்துத்துவம் இறுக்கமாகக் கட்டியெழுப்பிக்கொண்டிருந்தபோது அதை வலுவாக எதிர்ப்பதற்கு மாநில உரிமைகள், மாநில சுயாட்சி, கூட்டாட்சி (Federalism) போன்றவற்றைத் தீவிரமாகக் கையில் எடுக்க வேண்டும் என்று இந்து தமிழ் ஆரம்பித்தபோதே உறுதியாகச் சொன்னவர் சமஸ். கடந்த பத்தாண்டுகளில் கூட்டாட்சி (Federalism) தொடர்பாக வெகுஜன இதழ்களில் சமஸ் அளவுக்கு எழுதிய பத்திரிகையாளர் எவரும் இந்தியாவிலேயே இல்லை என்று உறுதியாகச் சொல்வேன். காந்தி கூறிய அதிகாரப் பரவலாக்கலை அண்ணா பேசிய கூட்டாட்சி வழியாகவே சாதிக்க முடியும் என்று ஆழமாக நம்புபவர் சமஸ்.

சமஸின் ‘அரசியல் பழகு’, ‘லண்டன்’ நூல்களைக் கவின்மலர் வாசிக்க வேண்டும். இந்தியாவில் கூட்டாட்சியைப் பற்றி எழுதப்பட்டிருக்கும் முக்கியமான நூல்களின் வரிசையில் அவை அமரக் கூடியவை.

சமஸ் எல்லாத் தலைவர்களிடமிருந்தும் நாம் கற்க முடியும் என்று சொல்வார். பிராமணியம் சார்ந்து ராஜாஜியை விமர்சிக்கும் அவர்,  மறுபக்கம் பிற்காலத்தில் இருமொழிக் கொள்கை வழியாக இந்திக்கு ராஜாஜி வெளிப்படுத்திய எதிர்ப்பு, காஷ்மீர் விவகாரத்தில் ராஜாஜி பேசிய சுயாட்சி உரிமை, பிரிவினைக் காலத்தில் முஸ்லிம்களிடம் அவர் காட்டிய நெருக்கம் போன்றவை மிக முக்கியமானவை என்பார். ராஜாஜியைப் பாரட்டுவதோடு வெளிப்படையாகவும் அதை எழுதுவார். இதேபோல, கூட்டாட்சித் தளத்தில் ஜெயலலிதாவின் இடம் முக்கியமானது என்றும் சொல்வார். ஜெயலலிதாவின் 25-வது ஆண்டுகால அரசியல் வாழ்வைப் பிரதிபலிக்கும் சிறப்புப் பக்கங்களை நாங்கள் வெளியிட்டோம். ஜெயலலிதாவின் கூட்டாட்சிப் பங்களிப்பைப் பாராட்டி ‘இந்து தமிழ் ‘ நாளிதழில் எழுதிய கட்டுரை ‘முரசொலி’யில் மறுபிரசுரமானதெல்லாம் முன்னுதாரணமே இல்லாத நிகழ்வு! எப்போதும் தேசியவாதத்தைக் கடுமையாக எதிர்த்து சமஸ் நிறைய எழுதியிருக்கிறார். அந்த விஷயத்தில் காந்தி, நேருவை கூட விமர்சித்து தாகூரைப் பற்றி உயர்வாகச் சொல்வார் சமஸ்.

தன்னுடைய தவறுகளை ஒப்புக்கொள்ள சமஸ் தயங்கியதே இல்லை. திமுகவைக் கடுமையாக விமர்சித்த ‘ஒரு பேரியக்கத்தின் அஸ்தமனம்’, மன்மோகன் சிங் ஆட்சியைக் கடுமையாக விமர்சித்த ‘சி.மு.-சி.பி.’ கட்டுரைகளுக்காக, ‘இவ்வளவு காட்டமாகவும் முதிர்ச்சியற்றும் நான் எழுதியிருக்கக் கூடாது’ என்று வெளிப்படையாக முகநூலில் வருத்தம் தெரிவித்தவர் அடுத்து வந்த தன்னுடைய புத்தகத்தின் பதிப்புகளில் அந்தக் கட்டுரைகளை நீக்கவும் செய்தார். எத்தனை பத்திரிகையாளர்கள் தமிழ்நாட்டில் ஒரு பெரிய நிறுவனத்தில் வேலை பார்த்தபடி இப்படி வெளிப்படையாக இருந்திருக்கிறார்கள்?

சமஸ் திமுகவைப் பாராட்டிய வேண்டிய தருணத்தில் பாராட்டவும் விமர்சிக்க வேண்டிய சமயத்தில் விமர்சிக்கவும் செய்கிறார். அதனால்தான் கலைஞர் விரும்பிப் படித்த பத்திரிகையாளாராகவும் முதல்வர் மு.க.ஸ்டாலின் முதல்வராவதற்கு முன்பிருந்தே மதிக்கும் பத்திரிகையாளராகவும் சமஸ் இருக்கிறார். அந்தத் தார்மிகத்தால் சமஸ் செய்த பங்களிப்புகள் பற்றி வெளியில் பலருக்கும் தெரியாது. காலை உணவுத் திட்டத்துக்காக பத்தாண்டுகளுக்கு மேல் சமஸ் எவ்வளவு பாடுபட்டிருப்பார் என்று பலருக்கும் தெரியும். ஆனால், அந்தத் திட்டம் நடைமுறைக்கு வந்ததில் அவருக்குள்ள பங்கு பலருக்கும் தெரியாது. ‘ஒரு பள்ளி வாழ்க்கை’ புத்தக வெளியீட்டின்போது காலை உணவுத் திட்டத்துக்காக சமஸ் ஜெயரஞ்சன் அவர்களைப் புகழ்ந்து பேசினார். ஜெயரஞ்சன் பேச வந்தபோது இப்படி ஆரம்பித்தார்: ‘காலை உணவுத் திட்டத்தில் எனது பங்கையும் உதயச்சந்திரன் பங்கையும் பற்றி சமஸ் பேசினார். ஆனா அதுக்கு முன்னாடி ஒரு கதை இருக்கு. அதைச் சொல்ல மாட்டார், தன்னடக்கம் காரணமாக’ என்று ஆரம்பித்து சமஸின் பங்கைப் பற்றிப் பேசினார். நான் அந்த நிகழ்வில் இருந்தேன். அந்த வீடியோவும் வெளியானது. ஆனால், வழக்கம்போல அனைவரும் அமைதி காத்தனர். காலை உணவுத் திட்டத்தை நடைமுறைக்கும் கொண்டுவந்தது முதல்வருக்கு சமூகத்தின் மீது இருக்கும் பெரும் அக்கறையின் வெளிப்பாடு என்றால் அதன் பின் பலரின் பங்களிப்பும் இருக்கிறது என்பதும் உண்மை. சான்றுக்குக் கீழே கொடுத்திருக்கும் வீடியோவில் 15.50-லிருந்து பாருங்கள்.


சமஸ் எல்லோரோடும் உரையாடுகிறார் என்பது பலருக்கும் பிடிக்கவில்லை. ஜெயமோகனைக் கடுமையாக விமர்சித்துவிட்டு ஜெயமோகனுடன் பேசுவார். ஜக்கி வாசுதேவை விமர்சித்துவிட்டு அவரையும் பேட்டி எடுப்பார்; ‘தமிழ்நாட்டின் அடுத்த அர்னாப் யார்’ என்ற பட்டியலில் சமஸையும் பட்டியலிட்ட மகஇக முகாமிலிருந்து அவரைச் சந்தித்துச் செல்லும் நண்பர்களையும் பார்த்திருக்கிறேன். ஒரு பத்திரிகையாளர் எல்லோரிடமும் உரையாட வேண்டும் என்றும் அதற்காகத் தன் கருத்தை விட்டுக்கொடுக்க வேண்டியதில்லை என்றும் எப்போதும் கூறுவார்.

சமஸுடைய ‘அருஞ்சொல்’ அலுவலகம் அவருடைய அரசியலை அப்பட்டமாக வெளிப்படுத்தும் வகையிலேயே இருக்கும். ஒரு சுவரில் காந்தி தொங்குவார், இன்னொரு சுவரில் அயோத்திதாசர், ராஜாஜி, பெரியார், காமராஜர் சுற்றிலும் இருக்கும் நடுவே அண்ணா சிரித்தபடி இருப்பார். அதில் ஒரு வாசகம் இருக்கும்: ‘தமிழர்கள் யாருக்கும் தாழாமல், யாரையும் தாழ்த்தாமல் நல்வாழ்வு வாழ வேண்டும்.’  இவைதான் சங்கிகளுக்கு அடிப்படை என்றால் சமஸ் நிச்சயம் சங்கிதான் கவின்மலர்.

சித்தாந்த அடிப்படைவாதமும் காழ்ப்புணர்வும் இன்றி  சமஸின் கடந்த 15 ஆண்டுகால இதழியல் பணியைப் பார்ப்பவர்கள் அவர் பெரும் சாதனை புரிந்திருக்கிறார் என்று மனமார ஒப்புக்கொள்வார்கள். அதற்கு தன் உயிரைப் பணயம் வைத்தே செயலாற்றியிருக்கிறார். இன்று காலை சமஸின் கைபேசிக்கு அழைத்தேன். அவருடைய மனைவி எடுத்தார். சமஸ் தனது வீட்டு வாசலிலேயே மயங்கி விழுந்துவிட்டார் என்றும் ஒவ்வொரு முறையும் இப்படித்தான் ஆகிவிடுகிறது, எவ்வளவு சொல்லியும் கேட்பதில்லை என்றும் வருத்தப்பட்டுக்கொண்டார். அதன் பிறகுதான் நான் இந்தக் கட்டுரையை எழுத முடிவுசெய்தேன். 

ஒன்று மட்டும் உறுதியாகச் சொல்லிக்கொள்வேன். திராவிட இயக்கம் உள்ளவரை ‘தெற்கிலிருந்து ஒரு சூரியன்’, ‘மாபெரும் தமிழ்க் கனவு’ இரண்டும் வாழும். அதன் மூலம் சங்கி சமஸும் நினைவுகூரப்படுவார். ஏனெனில், உண்மையான பணிக்கு ஆயுள் அதிகம். அவதூறுகளுக்கு ஆயுள் குறைவு!

31 comments:

  1. ..கி என்ற அந்த முகநூல் பதிவை நானும் ரசிக்கவில்லை

    ReplyDelete
  2. மிகச்சிறப்பான பதிவு

    ReplyDelete
  3. மிகச் சிறப்பு

    ReplyDelete
  4. காலத்திற்கு ஏற்ற சிறப்பான பதிவு
    (உண்மை தான் ஆசிரியர் நிரம்பி வழியும் கூட்டத்தில் ஆசிரியர்களை வசை பாடினார் மன்னார்குடியில்)
    ஒரு பள்ளி வாழ்க்கை புத்தக தயாரிப்பு பணியின் போது அவருடைய உழைப்பு பிரமிக்க வைத்தது

    ReplyDelete
  5. காலத்திற்கேற்ற எதிர்வினை ❤️

    ReplyDelete
  6. சிறப்பு தோழர்

    ReplyDelete
  7. அருமையான பதிவு

    ReplyDelete
  8. சமஸின் உழைப்பு அவர் யார் என எப்போதும் பேசும்... ஆனால் ஒருவரை பற்றி விமர்சனம் கூற வருபவர்கள் அதைச் செய்ய சிறிய அளவு உழைப்பையாவது போட முடியுமா?...

    ReplyDelete
  9. சிறப்பான பதிவு தோழர்.இதை எழுத ஏன் தயங்கவேண்டும். வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  10. நற்பதிவு

    ReplyDelete
  11. தெளிவான விளக்கம், அருமை

    ReplyDelete
  12. அருமை சார்

    ReplyDelete
  13. சிறப்பான எதிர்வினை...

    ReplyDelete
  14. இந்து தமிழ் நாளிதழுக்கு சமஸ் ஆற்றிய சேவை, தமிழ் மக்களுக்கு ஆற்றிய சேவை என்றுதான் கொள்ள வேண்டும். மக்களின் அற உணர்வு மேம்பட இன்று வரையில் மிகச் சிறந்த பங்களிப்பை அளிப்பவர் சமஸ். அவர் பார்ப்பனர் என பலரும் நம்பிக் கொண்டிருப்பதால் தான் அவரைப் பற்றிய சரியான புரிதல் இல்லாமல் எதிர்வினை ஆற்றுகிறார்கள். மக்களுக்கான அவர் சேவை தொடரட்டும்.

    ReplyDelete
  15. சிறந்த பதிவு

    ReplyDelete
  16. நுனிப்புல் மேயும் மனநிலைக்காரர்களுக்கு 'சமஸ் யார்?' என்றறிய ஒப்பற்ற விளக்கக் கட்டுரை. அருமை தோழர்.
    - பி.ரியாஸ் அகமது,
    குமுதம் ஹெல்த் ஸ்பெஷல்

    ReplyDelete

  17. அவர் சங்கியோ.. பங்கியோ.. ஆனால், நூலக ஆணைக்குழுவில் இருந்ததாகவும், அவர்தான் துறைசார்ந்த இதழ்களை குப்பை என்று சொன்னதாகவும் செய்தி உள்ளது. ஒரு நல்ல பத்திரிகையாளர் எந்தப் பத்திரிகையையும் ‘குப்பை’ என்ற சொல்லை பயன்படுத்த மாட்டார். அப்படி பயன்படுத்துபவர் அறத்தின் பக்கமோ... அல்லது நீங்கள் சொல்லும் சூப்பர் மேனாகவோ இருக்க முடியாது.

    ReplyDelete
  18. நன்றி

    ReplyDelete
  19. தினமலர் & கோ. நம்ப முடியவில்லை.... வில்லை.

    ReplyDelete
  20. கிளப் அரசில் சிலர் "பச்சை சங்கிகள்" என்று ஒரு ரூம் பாடுவார். எதற்கென்று கேட்டபோது அவர் "சங்கிகள் பல நிறங்கள்" அவற்றில் ஒன்று பச்சை சங்கி என்றார். சில ஆண்டுகளுக்கு முன் இப்போது உங்களை இந்த பதிவு எழுத வைத்த "பச்சை சங்கி"யின் உண்மை முகத்தை பலமுறை அவரது சீற்ற்றமான எழுத்துக்களில் பார்த்திருக்கிறேன். எப்படியென்றால் யாராவது இஸ்லாமியரது செயல்களை விமர்சித்து விட்டால் அவரது பச்சை சங்கி முகம் கருப்பு முகமூடி அல்லது சிகப்பு முகமூடியை கிழித்துக்கொண்டு வெளிவரும். நீங்கள் அவருக்கெல்லாம் பதில் சொல்வது அவசியமற்றது. ஆனால் சமஸ் பற்றி அறியாத பலருக்கு சிறந்த தகவல்.

    ReplyDelete

  21. கிளப் அவுசில் சிலர் "பச்சை சங்கிகள்" என்று ஒரு ரூம் போடுவார். எதற்கென்று கேட்டபோது அவர் "சங்கிகள் பல நிறங்கள்" அவற்றில் ஒன்று பச்சை சங்கி என்றார். சில ஆண்டுகளுக்கு முன் இப்போது உங்களை இந்த பதிவு எழுத வைத்த "பச்சை சங்கி"யின் உண்மை முகத்தை பலமுறை அவரது சீற்றமான எழுத்துக்களில் பார்த்திருக்கிறேன். எப்படியென்றால் யாராவது இஸ்லாமியரது செயல்களை விமர்சித்து பதிவு செய்துவிட்டால் அவரது பச்சை சங்கி முகம் கருப்பு முகமூடி அல்லது சிகப்பு முகமூடியை கிழித்துக்கொண்டு வெளிவரும். நீங்கள் அவருக்கெல்லாம் பதில் சொல்வது அவசியமற்றது. ஆனால் சமஸ் பற்றி அறியாத பல செய்திகளை பதிவு செய்திருப்பது பலருக்கு சிறந்த தகவல்.

    ReplyDelete
  22. தமிழ் இந்து நாளிதழில் ஒன்றிய அரசு - மத்திய அரசானதை நான் கவனித்தேன்,( பசு குண்டர்களையும் காணோம்) அதோடு மேலும் ஒரு செய்தி வாசகர்களை மதித்து அவர்கள் எழுதும் கடிதம் (இப்படிக்கு)பகுதியும் சமஸ்ஸூக்குப் பிறகு காணாமல் போய்விட்டது. இந்நாளிதழை வளர்த்தபின் அவர்களின் பங்களிப்பில்லாமல் உப்பில்லா பண்டமாகவிட்டது இந்து நாளிதழ்

    ReplyDelete
  23. ஒரே பக்கமாக சார்ந்து இருப்பவர்களுக்கு எப்போதும் கவலை இல்லை. நடுநிலை என்றால் நாலாப்பக்கமும் இடிதான். தூக்கி எறிந்துவிட்டு தொடர்ந்து செல்லவேண்டியதுதான்.

    ReplyDelete
  24. நீண்டகாலமாக சமஸை அறிவேன். அவரின் எழுத்துகளையும், அவரின் பார்வையையும் அறிவேன். என்றாலும் இக்கட்டுரையால் மட்டுமே, சமஸை மிக நெருக்கமாக அறிந்துகொள்ள முடிகிறது.

    ReplyDelete
  25. சரியாக எழுதி உள்ளீர்கள் தோழா சமஸ் சங்கியாகவே இருக்கட்டும்

    ReplyDelete
  26. சமஸ் என்னும் ஆளுமை தமிழ் உலகிற்கான இயற்கையின் கொடை. அவர் தன் உடல்நலத்தில் கவனம் செலுத்த வேண்டும் என்பது நமது வேண்டுகோள். அருள்கூர்ந்து அவர் சிந்திக்கவேண்டும். நிந்திப்பவர்களைக் காலம் பார்த்துக் கொள்ளும்.

    ReplyDelete
  27. Excellent 👌 Mr geniune

    ReplyDelete
  28. People who tag him as "Sanghi" doesn't know how to read or choose not to read.

    ReplyDelete