ரகசியமே கிடையாது
உனக்கு
கைபேசி கேமராவுக்கு முன்னால்
நீ எடுக்காத தருணங்களிலும்
எடுத்திருக்கப்படக்கூடிய
ஆனால்
எடுக்காமல் விடப்பட்டிருக்கக்கூடிய
அல்லது
எடுக்கப்பட்டிருக்க வேண்டிய
எல்லாப் படங்களும்
எடுத்ததில்
வந்து குவிகின்றன
ஆகவேதான் சொல்கிறேன்
உன் தற்படம் ஒவ்வொன்றும்
தற்கணத்தின் படம் மட்டுமல்ல
முற்கணத்தின்
பிற்கணத்தின் படமும்கூட
இப்படியாக
ஒரு க்ளிக்கின் வழி
உன்னொவ்வொரு உறைபடமும்
அசைபடமாகிறது
நீ எடுத்துக்கொண்ட இடம்
என்னவாகுமோ
கணம் என்னவாகுமோ
கைபேசி என்னவாகுமோ
உன் சிரிப்பு
எங்கே போகுமோ
மென்தலை சாய்த்தல்
ஏதாய் மாறுமோ
என்ற எல்லாமும்
சேர்ந்துதான் க்ளிக்கிக்கொள்கின்றன
நீயாய் எடுக்காத கணத்தில்
உன்னை எடுக்க
வாய்க்கப்பெற்ற
கைகள்
அமுத்தும் அமுத்து
பிரிய மனமில்லாத
பட்டுப்பூச்சிகளாய் மாறி
உன் சிவப்புப் பட்டுப்புடவைமேல்
படிந்துகொள்கிறது
எப்பேர்ப்பட்ட உன்னையும்
புள்ளியாய்ப் படித்துப்
புள்ளியாய் உறைய வைத்து
காணாக் கணத்தில்
அலையாய் வைத்திருந்து
காணும் கணத்தில் மட்டும்
நீயாய் அறிவிக்கிறது
குவாண்டம் செல்ஃபி
ஷ்ரோடிங்கரின் பூனையே*
உன் செல்ஃபியிலிருந்து
வெளியே வா
வெளியே
உன் உயிருள்ள நீ
காத்திருக்கிறாய்
அதனிடம் மூக்குரசி
கால்குலுக்கி
ஒரு ஹாய் சொல்லிவிட்டுப் போ
-ஆசை, ‘குவாண்டம் செல்ஃபி’ (2021) கவிதைத் தொகுப்பிலிருந்து...
*நோபல் பரிசு பெற்ற இயற்பியலாளர் எர்வின் ஷ்ரோடிங்கரின் (Erwin Schrödinger) புகழ்பெற்ற சிந்தனைப் பரிசோதனையில் இடம்பெற்ற பூனை
No comments:
Post a Comment