நான் இருக்கிறேன் என்று பார்க்காதே அம்மா சரசமாடு உன் காதலனுடன் தயக்கமேதுமின்றி
என் அம்மா
தன் காதலில் எப்படி
வெட்கம் கொள்கிறாள்
என்று
பிள்ளை நான்
பார்க்கக் கூடாதா
வேர்த்துவரும்
மூக்கையும்
நெற்றிவிழும் முடியையும்
வழித்துவிட்டு
திருட்டுத்தனமாய்
நீ அவனைப் பார்த்துப்
படபடப்பதை
நான் பார்க்க வேண்டும்
அம்மா
நான் இருக்கவேண்டும்
ஆனால்
அதை நீ மறக்க வேண்டும்
உங்கள் இருவரையும்
சுற்றிச் சுழன்று
நான் பார்க்க
வேண்டும்
நீயவனைப்
புணரும்
இருட்டறையில்
முற்றிலுமாக
உன் மோகத்தைப் பார்க்கும்
இருளாய் நான்
இருக்க வேண்டும்
என்றால்
பதற்றமேன் அம்மா
இடுப்பில்
எனை சுமந்து
சுவரோரமாய்
நீ ஒன்றுக்கிருக்கையிலே
உன்னையும்
தாரையையும்
மாறிமாறிப்
பார்த்துச் சிரிக்கவில்லையா
நான்
சிரித்துக் குலுங்கிய
என் கன்னத்தில் தட்டிவிட்டு
முத்தம் தரவில்லையா
நீ
கதவைத் திறந்து வைத்துக்
குளிக்கையிலே
வெளியே
விளையாடும்
எனைப் பார்த்தபடி
கொங்கை அழுக்கு தேய்த்தவளே
அல்குல் அழுக்கு தேய்த்தவளே
உன்னில் ஒரு
உறுப்பு நானம்மா
அதில்
புணர் உறுப்பென்ன
உணர் உறுப்பென்ன
காதல் செய்
காதல் செய்
உன் உதடு முத்தம்
கொடுக்கையில்
அருகிருந்துன்
மின்னல்
பார்க்கும்
கண்தானம்மா
நான்
காதல் செய்
காதல் செய்
காதல் செய்
காதல் செய்
அப்பா தவிர்த்த
காதல் செய்
அப்போதுதான்
நீ அழகு
-ஆசை, ‘குவாண்டம் செல்ஃபி’ (2021) கவிதைத் தொகுப்பிலிருந்து...
No comments:
Post a Comment