Tuesday, February 27, 2024

பேசுவதெல்லாம் பெருமாளே! - ஊமைக்கு வாய் கொடுத்த உத்தமராய பெருமாள் பதிகம்


கடந்த சனிக்கிழமை, 24-02-24 அன்று ஆரணி அருகில் அய்யம்பாளையத்தில் உள்ள ஊமைக்கு வாய் கொடுத்த உத்தமராய பெருமாள் கோயிலுக்கு நண்பரும் மொழிபெயர்ப்பாளருமான ஜி. குப்புசாமியுடன் சென்றிருந்தேன். அங்கே பாடிய பதிகங்கள் இவை. சிறிய கோயில்தான். ஆனால், ரஜினி குடும்பத்தால் புகழ்பெற்ற கோயில். பேச்சுக் குறைபாடு உள்ளவர்களுக்கு இங்கே வந்து வேண்டிக்கொண்டால் சரியாகிவிடும் என்று ஒரு நம்பிக்கை. கோயிலுக்குச் சென்று தரிசனம் கண்டு அரை மணி நேரத்தில் எழுதிய பத்துக் கவிதைகள் இவை. அநேகமாக என்னால் பாடல் பெற்ற ஸ்தலமாக அந்தக் கோயில் இப்போது ஆகியிருக்கிறது என்பதில் எனக்குத்தான் மகிழ்ச்சி. 

இந்தக் கோயிலுக்கும் பாடகி சுனந்தாவுக்கும் ஒரு நெருங்கிய தொடர்பு உண்டு. அவர் தொண்டையில் ஒரு பாதிப்பு ஏற்பட்டு இங்கே வேண்டிக்கொண்டு போன பின் சரியானதாகக் கேள்விப்பட்டேன்.  இந்தப் பதிகங்களை நண்பர் ஜி.குப்புசாமி பாடகி சுனந்தாவுக்கு அனுப்பினார். அவர் படித்துப் பார்த்துவிட்டு இப்படியொரு மறுமொழி ஆற்றினார்: ‘Read this a couple of times, really Lord Perumal's grace! Thank you so much for sending this 🙏'. கோயிலுக்கு வழிநடத்திய ஜி.குப்புசாமி அவர்களுக்கும் படித்துவிட்டு நெகிழ்ந்துபோன சுனந்தா அவர்களுக்கும் மனமார்ந்த நன்றி! பதிகம் கீழே:

1.
உலகெலாம் ஓரோசை
உலகின் பெயராய் அமைந்த
பேரோசை
மனதுக்குள் குமைந்து
வாய்க்குள் சுழன்று
வெளிப்பட மறுக்கின்றது
இறுக ஒட்டிக்கொண்ட வாயைத்
துளைக்கும் வண்டே
வருக
குழலோசை இவ்வுடல்
செய்க
*

2.
ஓசை எழுந்து நிற்கிறது
குன்றின் உச்சியில்
வாய்கள் வந்து நிற்கின்றன
கடுந்தவமியற்றி

கோவிந்தா
என்ற கூவலில்
அனைத்து வாயும்
ஒருசேரத் திறக்கின்றன
தனித்தனி வாய்களின்
தனித்தனி வட்டங்கள்
ஒன்றாய் இணைந்து
ஒரே தரிசனம்
எதிரொலித்து வந்து
திரும்பப் புகுந்த குரலாய்

3.
சான்னித்தியம் கமழ்கிறது
அதனுடன் பேச
என் மனம் துடிக்கின்றது
சான்னித்தியம் திறக்கின்றது
அது தானாய் பேசுகின்றது
சான்னித்தியம் கேட்கின்றது
இனி பேச ஏதுமில்லை
இனி கேட்க ஏதுமில்லை
அதனால் ஊமை என்று
யாரும் இல்லை

4.
மாலைகளுக்கு மத்தியிலே
முகம் மட்டும் திறப்பு

ஊமைக்கு வாய் திறக்கும் முகம்
சூடிய மாலையின்
ஒவ்வொரு மலரின் மனதையும்
திறந்துகொண்டிருக்க
சன்னிதி கமழ்ந்தது

5.
நுழையுமுன் திருநங்கை
தலையில் வைத்த கை
உள்ளே ஒளிர்ந்த அமைதி
குங்குமம் திறந்த நெற்றி
யாவும் குளிர்கின்றன
குளிர்ந்தபின் பேசுவதெல்லாம்
பெருமாளே

6.
ஒரு பொட்டுக் குரல் தேடிவந்து
அர்ச்சனை நடக்கிறது
அபிஷேகம் நடக்கிறது
மாவிளக்கு வைக்கிறார்கள்
பொங்கல் வைக்கிறார்கள்

பிள்ளை சிறுதேராய் ஓடுகிறது
கோயில் சுவரில் சாய்கிறது
ஒன்றுக்கு இருக்கிறது

அது பேசவே வேண்டாம்
பின் எதற்காக இதுவெல்லாம்
அதன் வழி பெருமாள்
பேசியாக வேண்டும்
அதற்காக இதுவெல்லாம்


7.
ஒரே ஒரு குரல்
முதல் குரல்
அதுவே பெருமாள் குரல்
அது கேட்டுவிட்டால் போதும்
அதுவே
நித்திய நைவேத்தியம்
மற்றதெல்லாம்
வளரும் தேயும்
விரியும் ஓயும்

8.
என் மனது ரொம்பவும்
பேசிவிட்டது
என் பேச்சை எடுத்துக்கொள்
பெருமாளே
யாரும்
எந்த வேண்டுதலுடனும் வராத
ஒரு குன்றின் உச்சியாய்
என் மனதை ஆக்கு

9.
பெருமாள் குரலுக்குள்
இருக்கிறேன்
எனக்குத் தேவை
வாயல்ல காது
என் உடலைப் பாருங்கள்
அது பெருமாள் காது

10.
நெற்றியில் நிறைவை வைத்து
அனுப்புகிறார் பெருமாள்
அதில் வழிபிடித்துக்
குன்றிலிருந்து
கீழிறங்குகிறேன்
சரியாய்
வாய் வந்துவிட்டது
பேச்சு வந்தும்
அமைதியில் நீடிக்கும்
வாய்
ஏனெனில்
குன்றின் காட்சி அகலவில்லை
இன்னும்
       -ஆசை


கீழ்க்கண்ட கவிதைகளையும் தவற விடாதீர்கள்:


No comments:

Post a Comment