Wednesday, January 8, 2020

பறவைகள் வெறும் படிமங்களாக இருந்தபோது- ஆசையின் கவிதைகள்



ஷங்கர்ராமசுப்ரமணியன்

(ஆறு ஆண்டுகளுக்கு முன்பு எனக்கு ஒரு விருது வழங்கப்பட்டபோது கவிஞர் ஷங்கர்ராமசுப்ரமணியன் ஆற்றிய உரை இது)

சென்னை இலக்கியத் திருவிழா அமைப்பின் சார்பில் விருதுபெற்ற மூத்த எழுத்தாளர் கி.அ.சச்சிதானந்தன் மற்றும் கவிஞர் ஆசைக்கு எனது வாழ்த்துகள். ரவி சுப்ரமணியன், தமிழச்சி தங்கபாண்டியன், சந்தியா நடராஜனுக்கு எனது வணக்கம்.

புத்தகப் பதிப்பில் நேர்த்தியையும் தொழில்முறை ஒழுங்கையும் கொண்டுவந்த க்ரியா பதிப்பகத்தில் பத்தாண்டுகளுக்கு மேலாகப் பணியாற்றியவர் கவிஞர் ஆசை. க்ரியாவின் புகழ்பெற்ற தற்காலத் தமிழ் அகராதிப் பணியிலும், பதிப்புப் பணிகளிலும் மிகுந்த அனுபவம் பெற்றவர். க்ரியா வெளியிட்ட உமர் கய்யாம் கவிதைகளை தங்க.ஜெயராமனுடன் இணைந்து இவர் மொழிபெயர்த்துள்ளார்.

இவரது முதல் கவிதைத் தொகுதியான சித்து நூலில் உள்ள கவிதைகள், தமிழ் புதுக்கவிதை மரபின் பல்வேறு கூறல்முறைகளை வரித்துக்கொண்டு, நேர்த்தியான மொழியில் தத்துவ விசார நோக்குடன் அமைதியான த்வனியுடன் எழுதப்பட்டவை.  90 களின் இறுதியில் விசாரம் துறந்த, புனைவுத்தன்மை அதிகம் கொண்டு சமகால வாழ்வின் பல்வேறு சித்திரங்கள் கொண்டு வெளிப்பட்ட நவீன கவிதைகளின் புதிய தன்மையையும், உக்கிர உணர்வையும் ஆசையின் கவிதைகளில் பார்க்க முடியவில்லை. ஒரு பழைய மனம், ஒரு பழைய கவிதையோடு உரையாடும் அனுபவம்தான் எனக்கு வாய்த்தது. இப்போது ஒருசேரப் படிக்கும்போதும் அந்த எண்ணப்பதிவு மாறவில்லை.

விதம்விதமான பறவைகளின் புகைப்படங்களுடன், ஒவ்வொரு பறவைக்குமான இயல்போடு ஒட்டி உறவாடும் கவிதைகளுடன் வெளிவந்த கொண்டலாத்தி என்ற கவிதைத் தொகுப்பு என்னை மிகவும் ஈர்த்தது. வெவ்வேறு பறவைகள் பற்றிய வெவ்வேறு விவரணைகள் என்பது எனக்கு மிகுந்த உற்சாகத்தை அளித்ததும் நினைவில் உள்ளது.  கவிஞனைப் பொருத்தவரை பூனையையும், பறவையையும் பாம்பையும் தொட்டுவிட்டால் அது நிச்சயமாக கவிதையாகிவிடும் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது.

பொதுவாக நாம் காணும் காகம், குருவி, தவிட்டுக்குருவி, குயில், ஆந்தை போன்ற பறவைகளைத் தவிர வேறு பறவைகளை அதிகம் பார்த்தறியாத, பார்த்தாலும் அதன் பெயர் சொல்லி உரையாட முடியாத கோடிக்கணக்கான பேர்களில் நானும் ஒருவன். ஆனால் கவிதை என்ற வடிவத்துடன் இயங்குபவனாக எனக்கு நிறைய பறவைகளின் பெயர் தெரியாதது குறித்து வருத்தம் இருக்கிறது. ஆனால் இதற்காக வெட்கப்பட இயலாது. இந்த அறியாமை நமது காலத்தின் பிரதிபலிப்பு. நமக்கு துப்பாக்கிகளின் பல வடிவங்கள் தெரிந்திருக்கின்றன. கொத்து வெடிகுண்டுகள் என்கிறோம். கையெறி குண்டு என்கிறோம். கண்ணிவெடி என்கிறோம்.

பொதுவாக தமிழ் புதுக்கவிதையில் பறவைகள் சுதந்திரத்தின் படிமமாக, விடுதலை ஏக்கத்திற்கான படிமமாகவே பெரும்பாலும் சென்ற நூற்றாண்டில் எழுதப்பட்டன.  அவை ஆசையின் கவிதைகளைப் போல பல வண்ணச் சிறகுகள், அலகுகள், பழக்கங்கள், குஞ்சுகளுடன் சிறிய, பெரிய, குட்டியான அளவுகளில் இடம்பெறவே இல்லை.

ஒருவகையில் இயற்கையும், பறவைகளும் அருகிவரும் நிலையில்தான் அவற்றை கலையிலும், புகைப்படங்களிலும் ஆவணப்படுத்தும் முயற்சிகள் பதற்றத்துடன் நடைபெறுகின்றன. பறவைகள் வெறும் படிமங்களாக இருந்தபோது வேறு வேறு அளவுகளில் வேறு வேறு பெயருள்ள பறவைகள் அவற்றின் பிரபஞ்சத்தில் மனித இடையூறு இல்லாமல் வாழ்ந்துகொண்டுதான் இருந்தன.
ஒருவகையில் ஆசையின் கொண்டலாத்தியும் பறவைகளைத் தொலைத்து விடுவோம் என்ற பதற்றத்தில் எழுதப்பட்டவைதான். மனிதர்களுக்குதான் இயற்கை வேண்டும். மனிதர்களுக்குத்தான் பறவைகள் வேண்டும் என்ற பணிவிலிருந்தும், ஆதூரத்திலிருந்து எழுதப்பட்ட கவிதைகள் அவை. பறவைகள் வழியாக எனது வாழ்வை  அழகானதாகவும், நீதியுணர்வு கொண்டதாகவும், மகிழ்ச்சியாகவும், ஞானமாகவும் ஆக்கமுடியும் என்ற நம்பிக்கையில் எழுதப்பட்ட கவிதைகளாக இவை இருக்கின்றன. கொண்டலாத்தியின் கவிதைகள் குழந்தைகளை விட பெரியவர்களுக்குத்தான் அதிகம் பயனுள்ளது. ஏனெனில் இயற்கையாகவே குழந்தைகள் பறவைகளுக்கு அருகிலோ, பறவைகளாகவோதான் இருக்கின்றன.

கவிஞர் ஆசை நவீன தமிழ் கவிஞர்களுக்கான மூலவளத்தை, விதை வங்கியை பறவைகளின் பெயர்களாலும், அவை தொடர்பான சித்தரிப்புகள், விசாரணைகளாலும் நிரப்பியுள்ளார். அதற்கு அவருக்கு நாம் முதலில் நன்றி சொல்லவேண்டும்.

கவிஞர்கள் எல்லாருக்குமே அவர்கள் எழுதும் எல்லா கவிதைகளும் தேன்சிட்டைப் போலப் பறக்கவேண்டும் என்ற ஆசை உண்டு. ஆசையின் கொண்டலாத்தியில் பறவைகளுடனேயே பறக்கும் கவிதைகள் நிறைய உண்டு.

சிறிய உடல் கொண்ட ஒரு பறவையின் சுறுசுறுப்பைப் பார்க்கும் போது, ஒரு பட்டாம்பூச்சியின் பறத்தலைப் பார்க்கும்போது, இந்தச் சின்ன உடலுக்குள் எங்கே உயிர் இருக்கிறது, அதன் நிகழ்ச்சி நிரல் எந்தப் புள்ளியில் பதியப்பட்டுள்ளது என்ற ஆச்சரியமே ஆசையின் கவிதைகளுக்கான அடிப்படை. வாழ்வியக்கமும், மகிழ்ச்சியும் தனித்தனியாக இல்லாத நிலையில் உள்ள பறவைகளைப் பார்த்து வியப்பு தீரவில்லை அவருக்கு.

ஒருநிலையில் நமக்கு பரிச்சயமான ஆனால் கிட்டத்தட்ட பரிச்சயமே ஆகாத ஒரு உயிரைக் கடவுளின் இடத்தில் வைத்து வியக்கிறார் ஆசை.

மனிதர்கள் சிறியதைப் பார்த்து, சிறியதை வியந்து, சிறியதாக வாழவேண்டும் என்பதை நினைவுறுத்துகிறது கொண்டலாத்தி.

கவிஞர் ஆசைக்கு இந்த விருது தொடர்ந்து எழுதுவதற்கான ஊக்கத்தைத் தரவேண்டும் என்று கடவுளைப் பிரார்த்திக்கிறேன்.

-ஷங்கர்ராமசுப்ரமணியனின் வலைத்தளத்தில் படிக்க: https://www.shankarwritings.com/2014/01/blog-post_13.html

1 comment:

  1. உங்கள் எழுத்தைப் பற்றி நாங்கள் அறிவோம். அருமையான மதிப்பீடு. மகிழ்ச்சி. வாழ்த்துகள்.

    ReplyDelete