இன்று உலகக் கவிதை தினம். அனைத்துக் கவிஞர்களுக்கும் கவிதை விரும்பிகளுக்கும் வாழ்த்துகள். இந்தத் தினத்தை முன்னிட்டு எங்கள் மகன் மகிழ் ஆதனின் (வயது 12) பிரசுரமாகாத 14 கவிதைகளைப் பகிர்ந்துகொள்கிறேன். மகிழ் ஆதனைப் பற்றிய அறிமுகத்துக்கு இந்தப் பதிவின் இறுதியில் உள்ள லிங்க்குகளுக்குச் செல்லவும்.
1.
ரயில் பூச்சி
நீங்கள்
என் மனசைத் தொட்டால்
என் மனசு
புதிய இடமாக
ஆகும்
16-12-18
2.
நீலத்துக்குள்ளே வட்டம்
வட்டத்துக்குள்ளே நான்
எனக்குள்ளே ரயில் பூச்சி
07-03-19
3.
என் காலில் பூப்பூக்கும்போது
என் கால் மேகத்தில் நடக்கும்
மேகம் சூரியனை அணைத்துவிடும்
சூரியன் காற்றாக மாறிவிடும்
22-10-20
4.
பார்க்கும் பாட்டு
பார்வையாலே கேட்கும்
கேட்கும் நான்
கேட்டுக்கொண்டே
பறப்பேன்.
16-11-20
5.
கற்பனை வானம்
என் தலைக்கு மேல்
சுற்றிக்கொண்டிருக்கும்போது
நிலா அதை முழுங்கிவிடும்
கற்பனை வானம்
நிலா வயிற்றில்
குழந்தையாகப் பிறக்கும்
குழந்தைக் கற்பனை வானம்
இந்த உலகத்தைத்
திருப்பிவைக்கும்
27-04-21
6.
தேன்சிட்டு
தேனை உறிஞ்சி
வானப் பொட்டியில்
கொட்டும்
வானப் பொட்டி
தேனை
தேன்சிலையாய்க் கட்டும்
23-05-21
ஒரு நாள் காலையில்
விக்கலால் இறந்துபோன எலி
இறந்த உடனே
தூரத்தில் இருந்து
கண்காணித்துக்கொண்டு இருக்கும் காகங்கள்
ஆசையால் பறந்துவந்து
இறந்த எலியைக் கொத்திக் கொத்திக்
கனவின் முடிவிற்கு வரவைத்தது
நானும் விக்கிக்கொண்டுதான் இருந்தேன்
இரண்டு நிமிடம்
14-12-21
8. அதிசயங்கள்
இயற்கை நமக்குத் தரும்
அதிசயங்கள்
நம் நினைவைப்
பூட்டுப் போட்டுப் பூட்டும்
அதிசயங்கள் சிட்டுக்குருவியின்
இறகில் வாழ்ந்துகொண்டு
இருக்கட்டுமே
14-12-21
9.
சூரியனின் ஒளி
பூவின் உதிர்ந்த
மனதாய்ப்
பூத்தது
பூவின் அழகு
சிரிக்கும்போது
சூரியனின் ஒளி
இயற்கையின்
புல்லாங்குழலை
வாசிக்கும்
புல்லாங்குழலின்
சத்தத்தைக் கேட்டு
தூங்கிக்கொண்டிருந்த
பறவைகளின் பசி
புல்லாங்குழலின்
பாட்டைத்
தேடிக்கொண்டிருந்தது
அந்தப் புல்லாங்குழலின்
சத்தம்
என் நினைவுக்குள்
வளைந்தது
என் நினைவுதான்
கருந்துளை
04-01-22
10. பூக்களின் வாசனை
பூக்களின் வாசனை
பூத்துக்கொண்டே
காற்றை சிலையாய் கட்டும்
05-0-22
11.
வட்டத்துக்குள் அடங்கிய
ஒளி
வெளிச்சத்துக்குள்
ஒளிந்த
இருளின் வெக்கத்தை
எழுதும்
ஒளி சாவியின் கடந்தகாலம்
27-01-23
12. மின்னலுக்கு அட்டெண்டன்ஸ் போட்ட மரம்
மின்னலுக்கு
அட்டெண்டன்ஸ்
போட்ட
மரம்
மின்னலைத்
திட்டும்
மின்னல்
வட்டத்தில்
வளர்ந்த
வார்த்தை
மின்னல் இருளை
அடைத்து வைக்கும்
மின்னலின் பாதையைக்
கடந்த ஒலி
ஒலி பாதையைத்
தொலைத்துவிட்டது
தொலைந்த பாதை
மரங்களின் மண்டையில்
விழுந்தது
இருளில் ஒளிந்த சிரிப்பு
ஓடியது வானத்திற்கு
22-02-23
13.
காற்றின் குகை
மின்னல் மின்னும் நொடி.
காற்றின் ஓவியம்
கரை கடக்கும் பறவைகள்.
கடல் புத்தகத்தில் கடைசி பக்கத்தில்
காற்று என்ன எழுதும்?
ஐயோ காற்று எழுதும்போது
பென்சில் கூர்பு
உடைந்துவிட்டது
07-03-25
14.
மின்மினிப் பூச்சியின் முத்தம்
கனவில் மிதக்கும் படகின் துடுப்பு
நட்சத்திரத்தின் ஒளி
காலத்தால் செய்த சிலை
சிலந்திவலை
தூங்காத குகையின் கனவு
21-03-25
மகிழ் ஆதன் குறித்த
பதிவுகளில் சில:
ஆசை: https://tinyurl.com/mr9vn367
தமிழ் விக்கி: மகிழ் ஆதன் - Tamil
Wiki
எஸ். ராமகிருஷ்ணன்:
பாலசுப்ரமணியன்
பொன்ராஜ்: https://tinyurl.com/3anudu2f
சுந்தர் சருக்கை: https://tinyurl.com/yrrt7vk3
டாக்டர் கு.கணேசன்: https://tinyurl.com/3bredys2
மு.இராமநாதன்: https://tinyurl.com/bdaavhjj
ந. பெரியசாமி: https://tinyurl.com/yu3y94jk
The New Indian Express: https://tinyurl.com/543wx4zj
இந்து தமிழ் திசையின்
‘மாயாபஜார்’: https://tinyurl.com/5bzpcdts
குங்குமம்: https://tinyurl.com/4ak3pmwh
No comments:
Post a Comment