Wednesday, March 19, 2025

மொழிப் பிரச்சினை – ஒரு பார்வை



ஆசை

இந்தித் திணிப்பு எதிர்ப்புப் போராட்டங்களின் வரலாறு?

இந்தித் திணிப்பு எதிர்ப்புப் போராட்டங்களில் கிட்டத்தட்ட தமிழகமே இந்திய அளவில் தனித்து நிற்கிறது. இதுவரை நடந்தவை ஆறு போராட்டங்கள். நடந்த ஆண்டுகள்: 1938, 1948, 1950, 1965, 1968, 1968. இவற்றில் மிகவும் உக்கிரமாகப் போராட்டங்கள் நடந்த ஆண்டுகள் 1938-ம் 1965-ம். நடராசன், தாளமுத்து என்ற இருவர் 1938 இந்தித் திணிப்பு எதிர்ப்புப் போராட்டத்தில் உயிரிழந்தார்கள். ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் அப்போது சிறைசென்றார்கள். 73 பெண்களும் இவர்களில் அடங்குவார்கள். இவர்களுடன் சிறைக்குச் சென்ற 32 கைக்குழந்தைகளும் உண்டு. 1965 போராட்டத்தின்போது சின்னசாமி என்ற இளைஞர் இந்தித் திணிப்பை எதிர்த்துத் தீக்குளித்து இறந்தார். அந்தப் போராட்டத்தின்போது உயிரிழந்தவர்களின் அதிகாரபூர்வ எண்ணிக்கை ஏறத்தாழ 70. எனினும் 500 பேருக்கும் மேல் உயிரிழந்திருக்கக்கூடும் என்று மொழிப்போர் வரலாற்றுப் புத்தகங்கள் கூறுகின்றன.   

போராட்டங்கள் ஏன்?

இந்தப் போராட்டங்கள் மூன்று வகைப்படும். ஒன்று மாகாண, மாநில அரசின் இந்தித் திணிப்புக்கு எதிராக நடந்தவை (1938, 1948). இரண்டாவது, இந்திய அரசு ஆங்கிலத்தை அகற்றிவிட்டு அந்த இடத்தில் இந்தியை அலுவல் மொழியாகக் கொண்டுவர முயன்றதை எதிர்த்து நடந்தவை (1950, 1965, 1968). மூன்றாவது, வேறு வகையிலான இந்தித் திணிப்பு எதிர்ப்புப் போராட்டம். 1985-ல் நவோதயா பள்ளிகளின் மூலம் இந்தித் திணிப்பை மத்திய அரசு மேற்கொள்ள முயன்றபோது நடந்த போராட்டம்.  

தேசிய மொழியும் அலுவல் மொழியும்

இந்தியாவில் தேசிய மொழி என்று அரசியலமைப்புச் சட்டம் எதையும் குறிப்பிடவே இல்லை. அலுவல் மொழியாக இந்தியும் ஆங்கிலமும் இருக்கின்றன. நாடு குடியரசாக ஆனபோது அப்போதிலிருந்து 15 ஆண்டுகள் வரை ஆங்கிலமும் இந்தியோடு சேர்ந்து அலுவல் மொழியாக இருக்கும் என்றும் அதற்குப் பிறகு இந்தி மட்டும் ஒரே அலுவல் மொழியாக இருக்கும் என்றும் அரசியலமைப்புச் சட்டம் கூறியது. அதனால்தான் 1965-ல் ஆங்கிலத்தை நீக்கிவிட்டு இந்தியை ஒரே அலுவல் மொழியாக ஆக்க முயன்றபோது தமிழ்நாட்டில் இந்தித் திணிப்பு எதிர்ப்புப் போராட்டங்கள் வெடித்தன.

மும்மொழிக் கொள்கை என்றால் என்ன?

இந்தி பேசாத மாநிலங்களில் உள்ள மாணவர்கள் தங்கள் தாய்மொழி, ஆங்கிலத்துடன் இந்தியும் கட்டாயமாகப் படிக்க வேண்டும். அதேபோல், இந்தி பேசும் மாநிலத்தின் மாணவர்கள் தங்கள் தாய்மொழியான இந்தி, ஆங்கிலத்துடன் மற்றொரு இந்திய மொழியைக் கற்றாக வேண்டும். 1968-லேயே இப்படித்தான் தேசிய கல்விக் கொள்கை இயற்றப்பட்டது. தமிழ்நாட்டில் நடந்த போராட்டங்களை அடுத்து கட்டாய இந்திக் கல்வியிலிருந்து தமிழ்நாட்டுக்கு மட்டும் விலக்கு அளிக்கப்பட்டது. ஏனைய மாநிலங்களில் இந்தி தொடரவே செய்கிறது. ஆனால், தேசிய கல்விக் கொள்கையின்படி இந்தி பேசும் மாநிலங்களில் ஆங்கிலம் மட்டுமே கூடுதலாகக் கற்பிக்கப்பட்டதே தவிர மற்றொரு இந்திய மொழி என்பது கிட்டத்தட்ட கண்டுகொள்ளப்படவே இல்லை. இந்தியை நாடு முழுவதும் கொண்டுசெல்வதில் காட்டப்பட்ட அக்கறை மற்ற இந்திய மொழிகளின் மேல் காட்டப்படவில்லை. 

இது தொடர்பான தற்போதைய பிரச்சினை என்ன?

இஸ்ரோ விஞ்ஞானி தலைமையிலான குழுவொன்று தேசிய கல்விக் கொள்கையின் வரைவை சமீபத்தில் முன்வைத்தது.  இதன்படி, இந்தி பேசாத மாநிலங்களின் மாணவர்கள் பத்தாம் வகுப்பு வரை தங்கள் தாய்மொழியையும் ஆங்கிலத்தையும் கூடவே இந்தியையும் கட்டாயமாகப் படிக்க வேண்டும். இந்தி பேசும் மாநிலங்களின் மாணவர்கள் இந்தி, ஆங்கிலத்துடன் மற்றொரு இந்திய மொழியைப் படிக்க வேண்டும். இது அப்பட்டமான இந்தித் திணிப்பு என்று தமிழ்நாடு, கர்நாடகம், மேற்கு வங்கம் எதிர்த்ததையொட்டி மூன்றாவது மொழியாக மாணவர்கள் விரும்பிய மொழியைத் தேர்ந்தெடுக்கலாம் என்று வரைவு திருத்தப்பட்டது. ஆக, மூன்றாவது மொழி என்ற ஒன்று கட்டாயம் இருக்கிறது. அப்படி இருந்தாலே அந்த இடத்தில் இந்தி தானாக வந்துவிடும் என்பது இந்தித் திணிப்பு எதிர்ப்பாளர்களின் குரல்.

மொழி விவகாரத்தில் மற்ற மாநிலங்களிலிருந்து தமிழ்நாடு எப்படி மாறுபடுகிறது?

தமிழ்நாட்டினர் பல மொழிகளையும் கற்றுக்கொள்வதில் இந்தியாவுக்கே முன்னோடியாக இருந்திருக்கிறார்கள். தொல்காப்பியர் காலத்திலேயே சம்ஸ்கிருதத்துக்குக்கும் தமிழுக்கும் நல்லுறவு நிலவியிருக்கிறது. முக்கியமான பல சம்ஸ்கிருத இலக்கணகர்த்தார்கள், புலவர்கள் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள். வடமொழி இலக்கணத்தை எழுதிய தண்டி தமிழர்தான். இன்னும் பாலி, பிராகிருதம், அரபி, பாரசிகம் என்றும் பின்னாளில் தெலுங்கு, கன்னடம், இந்தி, வங்க மொழி உள்ளிட்ட பல மொழிகளையும் கற்றுத்தேர்ந்தவர்கள் தமிழ் இலக்கிய வரலாற்றில் உண்டு. அதைப் போல், நவீன காலத்தில் ஆங்கிலத்தை எளிதாக உள்வாங்கிக்கொண்டவர்களின் தமிழர்கள் முன்வரிசையில் இருக்கிறார்கள். விரும்பிய  மொழிகளைக் கற்றுக்கொள்வதற்கு தமிழர்கள் எப்போதும்   எதிரானவர்கள் அல்ல. ஒரு மொழியை இன்னொரு மொழியினரின் மீது திணிப்பதைத்தான் தமிழர்கள் எதிர்க்கிறார்கள். யாரும் தமிழகத்தில் இந்தி பிரச்சார சபா வேண்டாம் என்று சொல்வதில்லை. தமிழ்நாட்டுக்குள் கட்டாய இந்தித் திணிப்பு வேண்டாம் என்றுதான் எதிர்ப்பாளர்கள் கூறுகிறார்கள்.

உலகெங்கும் என்ன செய்கிறார்கள்?

இந்தியா அளவுக்கு பல மொழிகளைக் கொண்ட நாடுகள் குறைவு. பெரும்பாலான நாடுகள் தங்கள் நாட்டின் பிரதான மொழியையும் உலக மொழியான ஆங்கிலத்தையும் சேர்த்து இரு மொழிக் கொள்கையையே பின்பற்றுகிறார்கள். அந்த நாடுகளில் மற்ற மொழிகளைக் கல்லூரி அளவில் மாணவர்கள் தங்கள் விருப்பப் பாடமாகத் தேர்ந்தெடுத்துக் கற்றுக்கொள்ளலாம். இஸ்ரேலில் ஹீப்ரு அலுவல் மொழியாக இருந்தாலும் அரபிக்கும் அலுவல் மொழியாகப் பாதியளவு அங்கீகாரம் இருக்கிறது. இங்கிலாந்து, ஜெர்மனி போன்ற நாடுகளில் தொடக்கக் கல்வியில் ஒரு மொழியைப் படித்தால் மட்டும் போதும் நடுநிலைப் பள்ளியில் மாணவர்கள் தங்கள் விருப்பத் தேர்வாக இன்னொரு மொழியைத் தேர்ந்தெடுத்துக்கொள்ளலாம். அமெரிக்காவில் ஆங்கிலமும் ஸ்பானிஷும் அல்லது ஸ்பானிஷுக்குப் பதிலாக வேறொரு மொழியைத் தொடக்கப் பள்ளியில் பயிற்றுவிக்கிறார்கள். ஜப்பானியில் தொடக்கப் பள்ளியில் ஜப்பானிய மொழியும் ஆங்கிலமும் கற்றுத்தரப்படுகிறது. எகிப்தில் அரபிதான் பயிற்றுமொழி.    

               - நன்றி: இந்து தமிழ் திசை        





 

No comments:

Post a Comment