Tuesday, December 22, 2015

சார்வாகனுக்கு (டாக்டர் ஹரி ஸ்ரீனிவாசனுக்கு) அஞ்சலி!ஆசை

டாக்டர் ஹரி ஸ்ரீனிவாசன், சார்வாகன் (1929-2015) என்ற புனைபெயரில் சிறுகதைகள் எழுதியவர். தொழுநோய் மருத்துவத்தில் அவரது சேவைகளும் ஆராய்ச்சிகளும் கண்டுபிடிப்புகளும் மிகவும் முக்கியமானவை. நேற்று (திங்கள்கிழமை) திருவான்மியூரில் உள்ள அவரது இல்லத்தில் சார்வாகன் காலமானார். அவருக்கு வயது 86. எங்கள் வீட்டிலிருந்து நான்கு தெரு தாண்டி அவர் இருந்ததுகூட தெரியாமல் இருந்திருக்கிறேன். அவரை விரைவில் ஒரு பேட்டி எடுக்க்க வேண்டும் என்ற எண்ணத்தில் இருந்தேன், அது நிறைவேறாமல் போய்விட்டது. இன்று காலை 8.00 மணிக்கு அவரது இல்லத்துக்கு சென்று இறுதி மரியாதை செலுத்திவிட்டு வந்தேன். க்ரியா ராமகிருஷ்ணன், கவிஞர் வைதீஸ்வரன் ஆகியோரும் அங்கே வந்திருந்தார்கள்.

க்ரியாவில் நான் பணிபுரிந்தபோது அங்கே சிலமுறை அவர் வந்திருக்கிறார். க்ரியா அகராதியின் முதல் பதிப்பில் அவர் கண்ட பிழைகள், தேவையான சேர்க்கைகள் போன்றவற்றை அவ்வப்போது சிறு துண்டுச் சீட்டுகளில் எழுதிச் சேர்த்துக்கொண்டுவந்து கொடுத்தார். க்ரியா அகராதியில் விரிவாக்கிய இரண்டாம் பதிப்பில் அவரது திருத்தங்களில் பலவற்றைக் கணக்கில் எடுத்துக்கொண்டோம். அதை என் கைப்படவே செய்திருக்கிறேன். க்ரியா வெளியிட்டிருந்த ‘எதுக்குச் சொல்றேன்னா...’ என்ற தொகுப்பில் சில கதைகளை மட்டும் படித்திருந்தேன். ஆழமாக ஊன்றிப் படிக்காததால் அந்தக் கதைகளைப் பற்றி எனக்குப் பெரிதும் அபிப்பிராயம் இல்லை. ‘ரப்பர் மாமா’ என்று நினைக்கிறேன், அந்தக் கதை மட்டும் திகிலாக மனத்தில் பதிந்தது.

க்ரியாவில் அவரைச் சந்தித்தபோதே தொழுநோய் மருத்துவத்தில் அவர் ஆற்றியிருக்கும் பணிகளை க்ரியா ராமகிருஷ்ணன் சொல்லியிருக்கிறார். சமீபத்திய சில மாதங்களாகவும் அவரைப் பற்றிக் கேள்விப்பட்டிருந்ததெல்லாம் அவர் மீது பெரும் மதிப்பை ஏற்படுத்தியிருந்தது. சமூகத்தால் முற்றிலும் புறக்கணிக்கப்பட்ட, விளிம்பு நிலையின் விளிம்பில் இருக்கும் தொழுநோயாளிகளுக்காக 60 ஆண்டுகளுக்கும் மேலாகத் தன்னை ஒப்படைத்திருந்த டாக்டர் ஹரி ஸ்ரீனிவாசனை நாம் பெரிதும் அறிந்திருக்கவில்லை என்றாலும் இந்திய அளவிலும் சர்வதேச அளவிலும் அவருக்கு முக்கியமான அங்கீகாரங்கள் வழங்கப்பட்டிருந்தன. இந்திய அரசு அவருக்கு பத்மஸ்ரீ விருது (1984-ல்) வழங்கியது. சர்வதேச காந்தி விருதும் அவர் பெற்றிருக்கிறார். நாற்பதுகளில் லண்டனில் மருத்துவம் (FRCS) பயின்றபோதே அங்கிருந்த இளைஞர் கம்யூனிச அமைப்பொன்றில் உறுப்பினராக அவர் இருந்தார் என்றும், அதன் தாக்கம் இந்தியாவுக்கு அவர் திரும்பிய பிறகும் ஆயுள் முழுவதும் அவருக்கு நீடித்தது என்றும் ‘தளம்’ இதழின் ஆசிரியர் பா.ரவி தெரிவித்தார். சொத்து சேர்ப்பதில் சற்றும் ஈடுபாடு இல்லாமல் சேவையில் மட்டுமே அவரது எண்ணம் ஈடுபட்டிருந்தது. சுயநலமற்ற, தொண்டுள்ளம் கொண்ட ஒரு தலைமுறையின் இறுதிப் பிரதிநிதிகளில் ஒருவர் டாக்டர் ஹரி ஸ்ரீனிவாசன். அவருக்கு அஞ்சலி!

‘தி இந்து’ தமிழ் நாளிதழில் நான் எழுதிய அவரது இரங்கல் செய்தி: 

http://goo.gl/bZ6pYl

1 comment:

  1. உங்களுடன் சேர்ந்து நாங்களும் அஞ்சலி செலுத்துகிறோம்.

    ReplyDelete