ஆசை
2010-ல் எனது பிறந்த நாளன்று நான் காலையில் செய்த உருப்படியான காரியம் உமா சங்கருக்குக் கடிதம் எழுதியதுதான். திமுக ஆட்சியால் அவர் பழிவாங்கப்பட்டிருந்த தருணம். எனது தார்மிக ஆதரவை அவருக்குக் கொடுக்க வேண்டும் என்று முடிவெடுத்து அந்தக் கடிதத்தை எழுதி ‘தமிழ் இன்று’ என்ற வலைப்பதிவு இதழில் வெளியிட்டேன். அந்த லிங்கை உமா சங்கருக்கும் அனுப்பிவைத்தேன். ’கோடி நன்றிகள்! என்னைப் புரிந்துகொண்ட சிலராவது இருக்கிறார்களே. எனக்கு காந்திஜி மீது பெரிய மரியாதை இருக்கிறது’ என்று ஆங்கிலத்தில் பதில் அனுப்பினார்.
இன்று அவர் மதப்பிரச்சாரங்களில் ஈடுபடுவது குறித்து வீடியோ பதிவுகள் இணையத்தில் வலம்வருகின்றன, தொடர்ந்து கிண்டலடிக்கப்படுகிறார். இப்போதும் எனக்கு அவர்மீது கோபம் இல்லை, நாம்தான் அவரை இப்படி ஆக்கிவிட்டோம் என்ற வருத்தம்தான் மிஞ்சுகிறது.
அதிகார வட்டாரங்களைப் பற்றித் தெரிந்த ஒருவர் சொன்ன தகவல் ஒன்றை இப்போது பகிர்ந்துகொள்ள ஆசைப்படுகிறேன். நேர்மைக்காகப் பாராட்டப்படும் இரண்டு அரசு உயர் அதிகாரிகள் ஒரு காரில் பயணித்துக்கொண்டிருக்கிறார்கள். ஒருவர் முன்னாள் தேர்தல் ஆணையர், இன்னொருவர் ஐஏஎஸ் அதிகாரி. ஐஏஎஸ் அதிகாரியிடம் அந்த முன்னாள் தேர்தல் அதிகாரி கேட்கிறார், ‘நம்ம ஊராச்சே தம்பி, நீங்க என்ன ஜாதி?’ தான் தலித் இனத்தைச் சேர்ந்தவர் என்பதை அந்த ஐஏஎஸ் அதிகாரி தெரிவிக்கிறார். முன்னாள் தேர்தல் அதிகாரி அதிர்ந்துபோய் அத்துடன் பேச்சை நிறுத்திக்கொண்டுவிடுகிறார். அவர் பிராமணர் என்பதைச் சொல்லித் தெரியவேண்டியதில்லை.
புட்டபர்த்தி சாய்பாபாவைப் பற்றிய உண்மைகளைத் தோலுரித்து பிபிசி எடுத்த ஆவணப் படத்தில் அந்த முன்னாள் தேர்தல் அதிகாரி சாய்பாபாவுக்கு ஆதரவாகப் பேசுகிறார் இப்படி: “நான் ஒரு ஃபிஸிக்ஸ் மாணவன். ஆனால், சாய்பாபா எனக்கே தங்கச் செயினை வரவழைத்துத் தந்திருக்கிறார். இதற்கு என்ன சொல்கிறீர்கள்?’
அந்த காரில் இருந்த நேர்மையாளர்களில் ஒருவர் சேஷன், இன்னொருவர் உமாசங்கர். இன்று உமாசங்கரை மட்டும் கழுவிக்கழுவி ஊற்றிக்கொண்டிருக்கிறோம் நாம்.
காரில் நடந்த சம்பவத்தின் உண்மைத்தன்மையை என்னால் உறுதிப்படுத்த முடியாது. ஆனால், சேஷனின் பிபிசி பேட்டியை நான் பார்த்திருக்கிறேன்.
எனக்கு உமா சங்கரை நினைத்து வருத்தமாகத்தான் இருக்கிறது. நேர்மையாக இருந்ததற்காகவும் ஒடுக்கப்பட்ட சமூகத்தில் பிறந்ததாலும்தான் இந்த நிலைக்கு அவர் தள்ளப்பட்டிருக்கிறார் என்பதே உண்மை. அவரைக் கிண்டல் செய்வதற்கு முன், அவர் நேர்மையாக இருந்ததால் தண்டிக்கப்பட்டபோது இந்த சமூகம் தன் உதவிக்கரங்களை நீட்டியிருக்கிறதா என்பதை நாம் யோசித்துப்பார்க்க வேண்டும்.
உமா சங்கருக்கு நான் எழுதிய கடிதத்தை எனது வலைப்பூவில் படிக்க:
No comments:
Post a Comment