Saturday, December 26, 2015

தோழர் நல்லகண்ணுவுக்குப் பிறந்த நாள் வாழ்த்துக்களும், ஒரு வேண்டுகோளும்…


ஆசை

தோழர் நல்லகண்ணுவின் பிறந்த நாளை முன்னிட்டு தி. நகரில் உள்ள இந்திய கம்யூனிஸ்ட் அலுவலகத்தில் இன்று சந்தித்துப் பிறந்த நாள் வாழ்த்துகளை நானும் தோழர் நீதிராஜனும் தெரிவித்துக்கொண்டோம். கூட, திருமாவளவன் நின்றுகொண்டிருந்தார். அவரிடமும் நம்மை அறிமுகப்படுத்திவைத்தபோது திருமா சொன்னார், ‘நேற்றுகூட உங்களைப் பற்றி நல்லகண்ணு ஐயா சொன்னார்’ என்று. சாதாரணனான நம்மைப் பற்றியெல்லாம் நல்லகண்ணு பேசியிருக்கிறார் என்பது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது. 

முதல்முதலில் தோழர் நல்லகண்ணுவிடம் தொலைபேசியில் பேசியது ஏழெட்டு மாதங்களுக்கு முந்திதான். இதில் ஆச்சர்யம் என்னவென்றால் அவர்தான் என்னுடன் முதலில் பேசினார்.  நண்பர் நீதிராஜனுடன் தொலைபேசியில் அவர் பேசிக்கொண்டிருந்தபோது ‘தி இந்து’வில் சமஸின் எழுத்துகளையும் என்னுடைய எழுத்துகளையும் அவர் சிலாகித்துப் பேசியிருக்கிறார். நீதிராஜன் தொலைபேசியை என்னிடம் கொடுக்க, அப்போதுதான் முதல்முறையாக அவரிடம் பேசினேன். இந்திய மனப்பான்மையா என்னவென்று தெரியவில்லை, அவருடன் பேசியபோது ஒரு சிலிர்ப்புணர்வு எனக்கு ஏற்பட்டது. “காந்தியைப் பத்தி நீங்க எழுதியதெல்லாம் படிக்கிறேன். உங்க ‘அறிவோம் நம் மொழியை’ தொடர்ந்து படிக்கிறேன். நல்லாருக்கு. என்ன, தஞ்சாவூர் தமிழ்தான் கொஞ்சம் அதிகமா ஆக்கிரமிச்சிருக்கு போலிருக்கே!’ என்று கேட்டார். எனக்கு தோழர் என்று கூப்பிடுவதா, சார் என்று கூப்பிடுவதா ஐயா என்று கூப்பிடுவதா என்று புரியவில்லை. எதைக் கூறி அழைத்தாலும் மரியாதைக் குறைவு தொனிக்குமே என்பது போல் ஒரு உணர்வு ஏற்பட்டது. நான் பதில் கூறினேன், ‘ஆமாங்க, நான் மன்னார்குடிகாரன். அதனால, என் எழுத்துல தஞ்சைத் தமிழ் அதிகமாக இருக்கும்’ என்று சொன்னேன். அப்புறம் பி.ஏ. கிருஷ்ணனின் எழுத்துகளையும் சிலாகித்துப் பேசினார். “அவருடைய புலிநகக் கொன்றை புத்தகம் ரொம்ப நல்லா இருக்கும். திருநெல்வேலிக்காரர்தான். அவங்க அப்பாவை எனக்குத் தெரியும்” என்றார். தொலைபேசி உரையாடல் இப்படியாக சற்று வரை நீடித்து நிறைவு பெற்றது.

எனக்கு அவரிடம் பேசினோம் என்பதையே நம்ப முடியவில்லை. அவரிடம் அவரைப் பற்றிப் பேசியதை விட அவர் நம்மிடம் நம்மைப் பற்றித்தான் அதிகமாகப் பேசியிருக்கிறார்! இந்த வயதிலும் எப்படித் தொடர்ந்து வாசித்துக்கொண்டிருக்கிறார், நாமோ ஆடிக்கொரு நாள் அமாவசைக்கு ஒருநாள் என்றரீதியில்தான் புத்தகம் வாசிக்கிறோம் என்று வெட்கம் ஏற்பட்டது.

நல்லகண்ணு என்ற ஆளுமையைப் பெயரளவில் மட்டுமே சிறிய வயதிலிருந்து அறிந்துவைத்திருந்தேன். கம்யூனிஸ இயக்கச் செயல்பாடுகளின் கேந்திரங்களுள் ஒன்றான மன்னார்குடியில் பிறந்த ஒருவருக்கு அவரைப் பற்றி எளிதில் தெரிந்துகொண்டிருந்திருக்க முடியும். ஆனால், சிறு வயதிலிருந்தே தி.மு.க கூட்டங்களுக்கு மட்டும் அழைத்துப் போய் என்னை ஒரு தி.மு.ககாரனாகவே எனது அப்பா வளர்த்துவந்ததால் பெரியார், அண்ணா, கலைஞர் என்று ஆரம்பித்து மன்னை நாராயணசாமி, நன்னிலம் நடராஜன் என்று இவர்களைத் தாண்டி என் அரசியல் ஆர்வம் வளரவில்லை. சென்னை வந்து கட்சி சார்பற்றவனாக ஆன பிறகுதான் எனக்குள் காந்தி, நேரு, அம்பேத்கர் என்று எல்லோரும் கொஞ்சம் கொஞ்சமாக நுழைய ஆரம்பித்தார்கள். நல்லகண்ணுவும் அப்படித்தான்.

நல்லகண்ணுவைப் பற்றித் தெரிந்துகொள்ள ஆரம்பித்த பிறகு எனக்கு அவர்மீது கோபம்தான் ஏற்பட்டது. அண்ணா ஹசாரே போன்ற சித்தாந்த குழப்பவாதிகளெல்லாம் ஒரு இயக்கம் ஆரம்பித்து இந்தியாவில் பெரும் செல்வாக்கை ஏற்படுத்திக்கொண்டிருக்கும்போது, இவ்வளவு பெரிய போராளி, நேர்மையாளர், எளிமையான மனிதர், ஊழலை மட்டுமல்லாமல் சாதிக்கொடுமையையும் எதிர்த்துப் போராடுபவர் ஏன் தன்னைத் தானே மிகவும் ஒதுக்கிவைத்துக்கொள்கிறார்? நல்லகண்ணு என்ற மனிதர் இன்று கட்சிகளைக் கடந்து சமூகத்தின் பொதுச்சொத்து, ஆனால் இன்னும் கட்சியின் மனிதராகவே தோற்றம் அளித்துக்கொண்டிருப்பது ஏன்? முற்போக்கு சக்திகளையும் இளைஞர்களையும் நோக்கி அவர் அறைகூவல் விடுத்தால் எப்பேர்ப்பட்ட மாற்றத்தின் சக்தியாய் அவர் மாறலாம், ஆனால் ‘low profile’லிலேயே அவர் இன்னும் இருக்கிறாரே? என்றெல்லாம் எனக்கு கோபம் ஏற்பட்டது.

பல ஊர்களுக்கும் சென்று பல போராட்டங்களிலும் கலந்துகொண்டு தமிழகத்தின் முதன்மையான களப்போராளியாக இருப்பவர் அவர்தான். ஆனால், அவர் தனது சக்தியை எப்படி இன்னும் உணரவில்லையோ, அதேபோல் அவருக்கு உரிய மரியாதையை சமூகமும் ஊடகங்களும் இன்னும் செலுத்தவில்லை என்பதுதான் உண்மை. அண்ணா ஹசாரேக்களைதான் ஊடகங்களுக்குப் பிடிக்கும். நல்லகண்ணுகளை அல்ல என்பதும் உண்மைதான். ஆனாலும், நல்லகண்ணு விஸ்வரூபம் எடுத்திருக்க வேண்டும் என்ற கோபம் கலந்த ஆதங்கம் எனக்கு ஏற்பட்டது.

சில நாட்களிலேயே நல்லகண்ணுவை அவர் வீட்டில் சந்திக்கும் வாய்ப்பை நீதிராஜன் ஏற்படுத்திக்கொடுத்தார். தி. நகரில் உள்ள நல்லகண்ணுவின் வீட்டுக்கு முன்னால் வண்டியை நிறுத்தும்போது அதுவரை செவிவழிச் செய்தியாகக் கேட்டுவந்த ஒரு விஷயம் எனக்கு உறுதிப்பட்டது. எவ்வளவு எளிமையான வீடு. அதுவும் வாடகை வீடு என்று நீதிராஜன் சொன்னார். வீட்டுக்கு முன்னால் தனியாக இருந்த ஒரு அறையில் தோழர் நல்லகண்ணு இருந்தார். வணக்கம் செலுத்திவிட்டு உள்ளே நுழைந்தோம். அறை முழுக்க புத்தகங்கள்; ஒரு சின்ன ஓரத்தில் தோழர் நல்லகண்ணுவின் கட்டிலும் மேசையும். அறையில் ஏ.சி கிடையாது. ஒரு மின்விசிறி மட்டும்தான். மேசையில் இரண்டு தாடிக்காரர்களின் படம்: காரல் மார்க்ஸ், பாரதி. பேச்சு பாரதியிலிருந்தே ஆரம்பித்தது. கம்யூனிஸ்டுகள் பலரும் பாரதியை ஏன் தங்கள் சொத்தாகக் கருதுகிறார்கள் என்பது அவருடைய பேச்சில் புலப்பட்டது. ‘முப்பது கோடி ஜனங்களின் சங்கம் முழுமைக்கும் பொதுவுடைமை/ ஒப்பிலாத சமுதாயம் உலகத்துக்கொரு புதுமை’ என்று இந்தியாவில் பொதுவுடமைச் சமூகத்துக்குக் கட்டியம் கூறியவன் பாரதி என்று பெருமிதத்துடன் குறிப்பிட்டார். பேசிக்கொண்டிருந்தபோதே அறையில் உள்ள நூல்களையும் கண்களால் நோட்டமிட்டுக்கொண்டேன். சமீபத்திய முக்கியமான புத்தகங்களைக்கூட வாசித்துவிட்டிருக்கிறார். இத்தனைக்கும் ஏதோ ஓய்வுபெற்று வீட்டில் இருப்பவர் அல்ல அவர்; களச்செயல்பாடுகளுடன்தான் வாசிப்பும். நாமோ, ஏதும் செய்யாமலே, வாசிக்க நேரமில்லை என்று குறைபட்டுக்கொண்டிருக்கிறோம்!


                        அவரது (வாடகை) வீட்டில் சந்தித்தபோது 
பேச்சு காந்தியைப் பற்றி நகர்ந்தது. ஏழை, எளியோர், ஒடுக்கப்பட்ட மக்கள் என்று ஒட்டுமொத்த இந்தியர்களையும் அரசியல்படுத்தியவர், சுதந்திரப் போராட்டத்தின் மையத்தை நோக்கி சாதாரண மக்களையும் ஈர்த்தவர் என்ற வகையில் காந்தியின் மீது தனக்குப் பெரும் மரியாதை இருக்கிறது என்று சொன்னார். கூடவே, பொதுவாழ்க்கையில் அவர் கடைப்பிடித்த நேர்மையும் எளிமையும் இன்று யாரிடம் இருக்கிறது என்றார். ஆனால், காந்தி ஒரு முதலாளித்துவவாதிதானே என்றார். காந்தியின் தர்மகர்த்தா முதலாளித்துவத்தை அவர் குறிப்பிட்டார். ஆனால், ‘இந்தியா சுதந்திரம் பெற்றால் பணக்காரர்கள் அவர்களுடைய உடமைகள் அனைத்தையும் ஏழைகளுக்கும் விவசாயிகளுக்கும் கொடுத்துவிட வேண்டும். இல்லையென்றால், மக்களே எடுத்துக்கொள்வார்கள். அதற்காக, நான் வருத்தப்பட மாட்டேன்’ என்று காந்தி சொன்னதை அவரிடம் குறிப்பிட்டேன்.  ‘உண்மைதான், இறுதிக் காலத்தில் அவரிடம் புரட்சிகர மாற்றங்கள் நிறைய ஏற்பட்டன’ என்று தோழர் நல்லகண்ணு ஒப்புக்கொண்டார். மிகவும் தாழ்வான குரலில், மெதுவாக அவர் பேசியதால் அவர் பேசியதில் பாதிக்கும் மேல் புரிந்துகொள்ள முடியவில்லை. எனினும், அவரை உரக்கப் பேசச் சொல்லி சிரமப்படுத்தவும் விரும்பவில்லை. ஆனால், ஒட்டுமொத்தப் பேச்சிலும் எனக்குத் தென்பட்ட உண்மை ஒன்று அவர்  ‘இயக்கத்தை சார்ந்த ஒரு மனிதராக’ இருக்கிறார் என்பதுதான். எல்லாவற்றுக்கும் மேல் நின்றுகொண்டிருக்கும் பெருந்தலைவரான அவரை, குறிப்பிட்ட ஒரு கட்சியோடு மட்டும் தொடர்புபடுத்திப் பார்க்க எனக்கு மனம்வராததால் அப்படிப்பட்ட உணர்வு ஏற்பட்டிருக்கலாம்.

அவரிடம் ஒரு மணி நேரத்துக்கும் மேல் பேசிவிட்டு கூட நின்று புகைப்படம் எடுத்துக்கொண்டேன். அவர் போன்ற ஒருவருடன் புகைப்படம் எடுத்துக்கொள்ளாமல் வேறு யாருடன்தான் எடுத்துக்கொள்வது. அவரிடம் விடைபெற்றுக்கொண்டு புறப்பட்டோம்.

அதற்குப் பிறகு, மன்னார்குடிக்குப் போவதற்காக எழும்பூர் சென்றபோது அங்கே அவரைப் பார்த்தேன். மன்னை எக்ஸ்பிரஸில் என் மகனையும் மனைவியையும் உட்கார வைத்துவிட்டு மருந்துக் கடையைத் தேடிக்கொண்டு வந்தபோது கையில் ஒரு சிறு பெட்டியை எடுத்துக்கொண்டு மன்னை எக்ஸ்பிரஸ் நோக்கி தோழர் நல்லகண்ணு நடந்துபோவது தெரிந்தது. அவரை வழிமறித்துப் பேசினேன். மன்னார்குடி பகுதியில் ஒரு போராட்டத்துக்காகச் சென்றுகொண்டிருப்பதாகச் சொன்னார். ரயில் ஏறச் சென்றுகொண்டிருப்பவருக்கு அதிகம் தொந்தரவு கொடுக்கக் கூடாது என்பதால் ‘உங்களை மன்னையில் சந்திக்கிறேன்’ என்று கூறிவிட்டு அகன்றேன். மன்னார்குடி ரயில் நிலையத்தில் வந்து இறங்கியதும் தோழர் நல்லகண்ணு தென்படுவாரா என்று நின்று பார்த்தேன். கடைசிவரை வரவில்லை. முந்தைய ஸ்டேஷன்களில் எங்காவது இறங்கியிருக்க வேண்டும் என்று நினைத்துக்கொண்டு அங்கிருந்து மகன், மனைவியுடன் புறப்பட்டேன்.

அதற்குப் பிறகு நேற்றுதான் மறுபடியும் பேசினேன். ‘தி இந்து’வில் சமஸ் எழுதிய ‘ஏன் உங்கள் கண்களுக்கு நல்லகண்ணு தெரியவில்லை?’ என்ற கட்டுரை பயங்கர விவாதத்தைக் கிளப்பிவிட்டிருக்கிறது. அந்தச் சூழலில் தோழர் நல்லகண்ணுவின் மனநிலை எப்படி இருக்கிறது என்று அறிந்துகொள்ள விரும்பினேன். நீதிராஜன் நேற்றுக் காலையிலிருந்து அவரைக் கைபேசியில் அழைக்க முயன்றுகொண்டிருந்தார். அவருடைய எண் பிஸியாக இருந்தது. மதியம் தொடர்பு கிடைத்தது. பேசிவிட்டு என்னிடம் கொடுத்தார். ‘வணக்கம், நான் ஆசை பேசுறேன்’ என்று சொல்லிவிட்டு நேரடியாக விஷயத்துக்கு வந்தேன். ‘எங்கள் எல்லோருடைய விருப்பத்தைதான் சமஸ் எழுதியிருக்கிறார். தமிழகம் இவ்வளவு தாழ்ந்த நிலைக்கு வந்துவிட்டது. இந்த நிலையில் உங்களைப் போன்ற ஒருசிலர்தான் எங்களைக் காப்பாற்ற முடியும். என்னைப் போன்ற இளைஞர்கள் எதிர்காலத்துக்காகவும், எங்கள் பிள்ளைகளின் எதிர்காலத்துக்காகவும் தயவுசெய்து நீங்கள் ஒரு நல்ல முடிவு எடுத்தாக வேண்டும்’ என்று படபடவென்று பொரிந்து தள்ளினேன். அவரோ, உணர்ச்சிவசப்படாத தொனியில், பெரிதும் பிடிகொடுக்காமல்தான் பேசினார். ‘ரொம்ப ரொம்ப மோசமான நிலையில்தான் தமிழகம் இருக்கிறது. என்ன செய்யுறது’ என்று கவலையும் இடையிடையே வெளிப்பட்டது. நான் திரும்பத் திரும்ப என் கருத்தை வலியுறுத்திச் சொன்னேன். அரசியலில் உள்ள நடைமுறை சிக்கல்கள் பற்றி சூசகமாக ஏதேதோ அவர் சொன்னதுபோல் தெரிந்தது. (வழக்கம்போல தாழ்ந்த குரலிலும் நிதானமாகவும் பேசியதால் அவர் பேசியதில் பாதியைத்தான் புரிந்துகொள்ள முடிந்தது.)

யாரோ ஒரு வட்டச் செயலாளரை ‘நீங்கள்தான் வருங்கால முதல்வர்’ என்று சொன்னால் அவர் எவ்வளவு எகிறிக் குதித்து ஆட்டம் போட ஆரம்பித்திருப்பார்! ஆனால், இவ்வளவு உயர்ந்த நிலையில் இருக்கும் நல்லகண்ணு, தான் முதல்வர் பதவிக்கு முன்வைக்கப்படுவது தெரிந்தும் அசுவாரசியமாய், பற்றற்றுப் பேசுவது அவருடைய இயல்பைத் தெரிந்தவர்களுக்கு ஆச்சர்யத்தை ஏற்படுத்தாது. ஆனால், ஒரு ஆட்சியாளர் எப்படிப் பற்றற்று இருக்க வேண்டும், எப்படி சிறிய அளவிலேயே தன்னை முன்வைக்க வேண்டும் என்றெல்லாம் சீனத்தின் லாவோ ட்சுவும் நமது காந்தியும் சொல்லும் இயல்புகளல்லவா இவையெல்லாம். இப்படிப்பட்ட ஒருவர் ஆட்சியாளராக வராமல் வேறு யார்தான் வருவது!

இன்று நல்லகண்ணுவின் பிறந்த நாள் என்பது காலையில்தான் நினைவுக்கு வந்தது. உடனே, நீதிராஜனைத் தொலைபேசியில் அழைத்து, ‘தோழர் நல்லகண்ணுக்கு இன்று பிறந்த நாள் அல்லவா, அவரை சந்திக்க வேண்டுமென்று ஆசைப்படுகிறேன்’ என்று சொன்னேன். ‘சரி, அவர் எங்கே இருக்கிறார் என்று கேட்கிறேன். மழை வெள்ளத்தில் அவர் வீடு பெரிதும் பாதிக்கப்பட்டதால் இப்போது திருமங்கலத்தில் இருக்கிறார். இன்று அங்கே இருக்கிறாரா, இல்லை தி. நகரில் உள்ள கட்சி அலுவலகத்துக்குச் செல்கிறாரா என்று கேட்டுவிட்டுச் சொல்கிறேன்’ என்றார். தி. நகரில் இருப்பதாகச் சிறிது நேரத்தில் உறுதிபடுத்தினார். வீட்டை விட்டுப் புறப்பட்டு க்ரியா பதிப்பகத்துக்குச் சென்று எனது ‘கொண்டலாத்தி’ கவிதைத் தொகுப்பையும், ஒமர் கய்யாமின் ‘ருபாயியத்’ நூலையும் வாங்கிக்கொண்டேன் (முதல் முறை அவரைச் சந்தித்தபோது கய்யாமின் பாடல்களைக் குறித்து என்னிடம் சிலாகித்திருக்க்கிறார்.) வேளச்சேரியில் நீதிராஜனை அழைத்துக்கொண்டு தி. நகர் சென்றேன்.

கட்சி அலுவலகம் இருக்கும் தெருவில் கொஞ்சம் போக்குவரத்து நெரிசலே ஏற்பட்டுவிட்டதென்றால் பார்த்துக்கொள்ளுங்கள்! நல்லகண்ணுவுக்காக ஏற்பட்ட நெரிசல் என்பது தெரிந்து மகிழ்ச்சி ஏற்பட்டது. கட்சி அலுவலகம் இருந்த கட்டிடத்தில் ஊடகங்கள் மொய்த்துக்கொண்டிருந்தன. நல்லகண்ணுவுடன் திருமாவளவன், முத்தரசன் போன்றோர் நின்றுகொண்டு எல்லா ஊடகங்களுக்கும் வரிசையாக ‘மறுபடியும் முதல்லேர்ந்து’ நல்லகண்ணுவைப் பற்றிப் பேசினார்கள். ‘வெயிலில் அவரை இவ்வளவு நேரம் நிற்கவைத்து மீடியாக்காரகள் ஏன் வதைக்கிறார்கள்?’ என்று நீதிராஜனிடன் நான் கோபப்பட்டபோது அவர் சொன்னார், ‘இது கரிசல் காட்டுக் கட்டைங்க. இந்த வெயிலெல்லாம் உங்களுக்குத்தான், அவருக்கில்லை’ என்று பெருமிதமாகச் சொன்னார். திருமாவளவன் ஊடகங்களுக்குப் பேட்டியளித்துக்கொண்டிருக்க பக்கத்தில் நின்றிருக்கும் அந்த ஆறடி மனிதரைப் பார்த்துக்கொண்டிருந்தேன் (ஆறு அடிக்கும் மேல்தான் இருப்பார் போல). கொஞ்சம் கூடக் கூனல் இல்லை, நேர்கோட்டில் நின்றிருந்தார். எப்போதும்போல, கண்கள் சற்றே சுருங்கியிருந்தன. 91 வயதுக்குரிய சுருக்கம் உடலில் இல்லை. ஏதோ வலியை அடக்கிக்கொண்டிருப்பது போல்தான் அவருடைய முகம் எனக்குத் தோன்றும். நீதிராஜன் சொன்னதுபோல் வெயில் தாங்காமல் நான்தான் கொஞ்சம் நிழல் வாகில் நின்றுகொண்டேன்.
                        பிறந்த நாள் வாழ்த்துகள் சொல்வதற்காக சந்தித்தபோது

‘நீங்களும் ஒரு காந்தியவாதி மாதிரிதான்’ என்று நீதிராஜன் ஒருமுறை நல்லகண்ணுவிடம் கூறியபோது அவர் அதை அவ்வளவாக விரும்பியதுபோல் தெரியவில்லை என்று நீதிராஜன் கூறினார். அவர் விரும்பாவிட்டால் என்ன, இவரை விட வேறு யாரை காந்தியவாதியாக நம்மால் இப்போது கருதிவிட முடியும்? காந்தியை ஏற்றுக்கொண்டவர்கள்தான் காந்தியவாதிகள் என்றல்ல, அவரை ஏற்றுக்கொள்ளாதவர்களும் காந்தியவாதிகளாக இருக்க முடியுமல்லவா? அவர்களில் ஒருவர்தான் நல்லகண்ணு என்று எனக்குத் தோன்றியது. அதிலும், விமர்சனங்களுடன் காந்தி மேல் மதிப்பு வைத்திருப்பவர் அவர். இதுதான் காந்தியத்தின் விசித்திரம்.

பேட்டிகள் முடிந்தபிறகு அங்கே வந்திருந்த ஊடக இளைஞர்கள் மாறிமாறி அவருடன் செல்பியும் புகைப்படமும் எடுத்துக்கொள்ளப் போட்டிப்போட்டார்கள் (என்னையும் சேர்த்துதான்). பார்க்கவே சந்தோஷமான காட்சி! அவரும் சளைக்காமல் எல்லோருடனும் நின்று ஃபோட்டோ எடுத்துக்கொண்டார். நல்லகண்ணுவிடம் ஆசிர்வாதம் வாங்குவதற்காக அவருடைய காலில் விழுந்தார் ஒரு பெண்மணி. கம்யூனிஸ்டுகள் காலில் விழுவதை ஏற்பதில்லை என்றாலும் நல்லகண்ணு அந்தப் பெண்மணியின் உணர்வைப் புறந்தள்ளிவிடவில்லை. சட்டென்று நிகழ்ந்துவிட்ட விஷயம். இந்தியர்களின் இயல்பே அதுதான். இப்படிப்பட்ட மனிதர்களிடம் சித்தாந்தங்களையும் தாண்டி மக்கள் விழுந்துகிடப்பார்கள். அவரிடம் விடைபெற்றுக்கொண்டோம். நல்லகண்ணுக்கு என்னுடைய கையெழுத்தைப் போட்டு நான் கொடுத்த எனது புத்தகத்தில் இப்படி எழுதியிருந்தேன்: ‘பெருமதிப்புக்கும் அன்புக்கும் உரிய தோழர் நல்லகண்ணுவுக்குப் பிறந்த நாள் வாழ்த்துக்களையும், இளைஞர்களின் எதிர்பார்ப்பை நிறைவேற்ற வேண்டும் என்ற ஆசையையும் தெரிவிக்கும்… ஆசை, 26-12-2015’
          


    

1 comment:

  1. இவ்வாறான ஒரு மாமனிதர் நாம் வாழும் காலத்தில் வாழ்கிறார் என்பது நமக்குப் பெருமையே.

    ReplyDelete