Monday, February 17, 2025

கொஞ்சமாய் ஏமாந்துதான் பாரேன்


’அன்னை ஆதரவற்றோர் இல்லத்திலிருந்து
வருகிறோம் சார்’
என்று ஒரு சிறு கண்ணாடிப் பெட்டியை
உன்னிடம் நீட்டுகிறார்கள்
இரண்டு பெண்கள்
அதில் இரண்டு மூன்று பத்து ரூபாய்த் தாள்கள்
ஒரு ஐம்பது ரூபாய் நோட்டு
சில பல சில்லறைகள்
இந்தக் காசெல்லாம் உண்மையில்
ஆதரவற்றோருக்குப் போய்ச்சேருமா
இல்லை அவர்கள் பேரில்
நடக்கும் ஒரு தொழிலா
என்று ஆயிரத்தெட்டு சந்தேகங்கள்
உனக்குள் பூவா தலையா
போட்டுப் பார்த்து நீயே விரும்பித்
தலையைத் தேர்ந்தெடுக்கிறாய்
இதெல்லாம் சில நொடிகளுக்குள்
பிறகு
’இல்லைம்மா’
என்று அனுப்பிவிடுகிறாய்
ஆனாலும்
நீ நிம்மதியாய் இல்லை
நீ கொஞ்சம் ஏமாறுவதற்காகக்
காத்திருக்கின்றன
எத்தனையோ பசித்த வயிறுகள்
கட்டிங்குக்காகத் தவிக்கும் வயிறுகள்
அவற்றின் மேல்
உன் பத்து ரூபாயை
நடக்க விட்டுத்தான் பாரேன்
எத்தனை பூ பூக்கும் என்று
பெரிதுபெரிதாய் ஏமாந்துபோவதால்
சிறிய ஏமாற்றுகளை
வஞ்சம் தீர்க்காதே
கொஞ்சம் ஏமாறுவதில் ஒன்றும்
குறைந்துபோய்விட மாட்டாய்
மேலும்
கொஞ்சம் ஏமாறுவதென்பது
21-ம் நூற்றாண்டின் இனிய ஆன்மிகம்
கொஞ்சம் ஏமாந்துதான் பாரேன்
அது
கொஞ்சம் உடம்புக்கும் நல்லது
-ஆசை

No comments:

Post a Comment