Friday, December 18, 2015

மாவட்டமும் சின்னவர் வீட்டு மாடும்


ஆசை

தெருவுக்குள் நுழைவதற்கு முன் இருந்த அந்த வீட்டின் வாசலை நாங்கள் தாண்டிச் செல்ல இருந்தபோது துரைச்சாமி கண்டியர் எங்களை நிறுத்தினார்.
'இருங்கய்யா, செருப்ப இந்த வூட்டு வாசல்லப் போட்டுட்டுப் போவோம்' என்றார்.
'ஏன் மாமா, சின்னவரு வீடு வரைக்கும் செருப்பு இல்லாமயா போவச் சொல்லுற. சித்திர வெயிலு மாமா' என்றேன்.
'நீ ஒருத்தன்டா சின்னவரப் பாக்கப் போற யாராவது செருப்புப் போட்டு நீ பாத்திருக்கியா? சுத்த வெவரங்கெட்டவன்டா நீ' என்று சொல்லிவிட்டு வீட்டு வாசலிலிருந்தபடியே குரல் கொடுத்தார், 'யோவ் ஓந்திரியரே, யோவ் ஓந்திரியரே, வெளியில வாய்யா, என்னய்யா வூட்டுக்குள்ளேருந்து முட்டப் போட்டு அடகாத்துட்டு இருக்கியா'.
இரண்டு குரலுக்குப் பிறகு ஆள் வெளியே வந்தார். 'இவரா, இவரு அம்பலம் ஓந்திரியருல்ல' என்று நினைத்துக்கொண்டேன்.
வெளியே வந்தவர், 'என்னய்யா கண்டியரூட்டு ஆளுங்க ஆர்சுத்திங்க எல்லாம் படை தெறண்டு வந்திருக்கீங்கபோல. சின்னவரு தலமயில கட்சி மாறப் போறீங்களா?' என்று கேட்டார்.
'சும்மாருய்யா, நாங்களே கட்சிக்காரனுவளுக்குத் தெரியாம குந்துனாப்புல வந்துருக்கோம், ஒரு சிபாரிசுக்காவ' என்று சொல்லிவிட்டு 'அது இருக்கட்டும் செருப்பல்லாம் இப்புடி ஓரமாப் போட்டுட்டுப் போறோம்' என்றார்.
'போட்டுட்டுப் போங்க. பேசாம வாடகை செருப்பு கண்காணிப்பு நிலயம் ஆரம்பிச்சிடலாம் போலருக்கு. மாவட்டம் வேற இப்பதான் வண்டிய நிப்பாட்டிட்டுப் போயிருக்காப்புல'ன்னு சொல்லிவிட்டு சற்றுத் தள்ளி நின்றுகொண்டிருந்த டாடா சுமோவைக் காட்டினார். ஆமாம், மாவட்டம் வண்டிதான். தூரத்தில் யார் வூட்டு முன்னாலோ நின்றுகொண்டு மாவட்டம் குனிந்தபடி யாருடனோ செல்ஃபோனில் பேசிக்கொண்டிருந்தார்.
    ஓந்திரியரிடம் சொல்லிவிட்டுப் புறப்பட்டோம். நாலு அடி எடுத்து வைப்பதற்குள் துரைச்சாமி கண்டியரு இழுப்பு வந்ததுபோல் சற்று குனிந்துகொண்டு நடக்க ஆரம்பித்தார்.
'என்ன மாமா?' என்றேன்.
'ஸ்ஸு. இப்புடித்தான் நடக்கணும். எலேய் ஏகாம்பரம் குனிஞ்சுகிட்டு வாடா' என்றார். நானும் சித்தப்பாவும் மாமா சொன்னபடியே சற்றுக் குறுகி, குனிந்துகொண்டு நடக்க ஆரம்பித்தோம். செல்போனில் பேசி முடித்துவிட்டு மாவட்டம் நடக்க ஆரம்பித்தார். மிகவும் சிரமப்பட்டு மலையேறுபவர்போல குனிந்துகொண்டு நடந்துகொண்டிருந்தார். எனக்கோ சூடு தாங்க முடியவில்லை. வெயில் வேறு கொளுத்தி எடுத்தது.
'என்ன மாமா? இப்புடி ஓத்திரியம் பண்றீங்க' என்றேன்.
'காரியம் நடக்கணும்னா நாலு பேரு சுண்ணிய ஊம்பனும்னாலும் ஊம்பித்தான் ஆவணும், பேசாமா வாடா'ன்னு அதட்டிவிட்டு நடந்தார்.
    அந்தத் தெருவின் சாலையின் இரு மருங்கிலும் வரிசையாகத் தட்டிகள் வைக்கப்பட்டிருந்தன. முன்னே பார்த்துவிட்டு பின்னாலும் திரும்பிப்பார்த்தேன், கண்ணுக்கெட்டிய தூரம்வரை, ஒன்றை அடுத்து ஒன்று என்று பத்தடி இடைவெளி விட்டு வரிசையாகத் தட்டி வைத்திருந்தார்கள். வேறு யாருக்கு? சின்னவருக்குத்தான். ஒன்றில் 'ஆன்மிகச் செம்மளே' என்று இருந்தது; அதில் சின்னவர் நெற்றியில் பட்டையுடன் கண் மூடி இறைவனை வழிபடும் புகைப்படம், இன்னொன்றில் 'கல்விக் கடவுளே' என்றிருந்தது-நியாயம்தான், அவரே சொந்தமாக ஒரு பெண்கள் கல்லூரி நடத்திக்கொண்டிருக்கிறார், அதுமட்டுமல்லாமல் பினாமிகளின் பேரில் எத்தனையோ கல்லூரிகளும் பள்ளிகளும் நடத்திக்கொண்டிருக்கிறார்; இன்னொன்றில் 'சர்வ மதச் சன்மார்க்கரே' என்று இருந்தது; அதில் சின்னவர் கிறித்தவப் பாதிரியார் வேடத்தில், கையில் பைபிளுடனும் நடுவில் காவி வேட்டி காவி சட்டையுடனும் அந்தப் பக்கத்தில் முஸ்லீம் குல்லா போட்டுக்கொண்டும் என்று மூன்று வேடங்களில் காட்சியளித்தார், சின்னவரா மெனக்கட்டு இந்த போட்டோவுக்கெல்லாம் போஸ் கொடுத்திருக்கப்போகிறார், எதாவது கிராபிக்ஸ் வேலையாக இருக்கும் என்று நினைத்துக்கொண்டேன்; அடுத்த தட்டியில் 'இலக்கிய புரவலரே' என்று இருந்தது; இங்குதான் எனது ஞாபகத் திறனுக்குச் சிக்கல் வந்தது; சின்னவர் தினத்தந்தி பேப்பர் படித்துகூட நான் பார்த்ததில்லையே, ஏதாவது கவிஞர் எழுத்தாளருக்குக் காசு கொடுத்தாரா? ஒன்றும் புரியவில்லையே. ஒருவேளை அவருடைய கல்லூரியில் மாணவிகளுக்கிடையில் பேச்சுப் போட்டி, கட்டுரைப் போட்டி வைத்துப் பரிசு கொடுத்திருப்பாரோ? இருக்கலாம். அப்புறம் 'அரசியல் பிதாமகரே' என்று ஒரு தட்டி; இதில் சந்தேகமே வேண்டாம், வேறு கட்சிக்காரர்கள் நாங்களே சின்னவரைப் பார்க்க வருகிறோம், அதிலும் சின்னவர் பிரதான எதிர்க்கட்சி வேறு. அப்புறம் திரும்பத் திரும்ப இதே தட்டிகள்தான் மாறிமாறி. தட்டி வைத்தவனுக்குக் கற்பனை தீர்ந்துவிட்டதுபோல. தட்டி வைத்தவன் பேரைப் பார்த்தேன், கா. கீ. கலைக்கோவன், Bsc, ஊராட்சித் தலைவர், மூவாநல்லூர் என்றிருந்தது. இந்தத் தட்டிகளை வைத்தே ஒரு ஊராட்சியில் ஒருவர் எவ்வளவு சம்பாதிக்க முடியும் என்பதை எளிதாகக் கணக்குப் போடலாம் போலிருக்கிறதே என்று எண்ணிக்கொண்டேன்.
    இப்போதுதான் கவனித்தேன், ஒரு சிலர் எங்களைப் போல் குனிந்துகொண்டும் வேறுசிலர் இயல்பாகவும் வந்துகொண்டும் போய்க்கொண்டும் இருந்தார்கள். மாமாவிடம் கேட்டேன்.
அவர் சொன்னார், 'மாப்புள்ள, இந்தத் தெருக்காரங்க மட்டும்தான் அப்புடிப் போவாங்க. சின்னவரு ஒன்னும் எல்லாம் குனிஞ்சிக்கிட்டு வரணும் போவனும்னு சட்டமெல்லாம் போடல. எல்லாம் கட்சிக்காரப் பயலுங்க ஆரம்பிச்சு வச்சது, இப்ப நம்மக் கால வெயிலு பதம்பாக்குது' என்றார். மாவட்டம் சின்னவரு வீட்டு வாசல் கதவை மெதுவாகவும் பவ்வியமாகவும் திறந்துகொண்டு நுழைவதைக் காண முடிந்தது. நாங்களும் வீட்டை நெருங்கிவிட்டோம். வீடு சாதாரண ரெண்டு மாடி வீடுதான். வாசலில் கா.மே. கட்சியின் பச்சை வெள்ளைக் கொடி கம்பத்தில் படபடத்துக்கொண்டிருந்தது. அவர் வீ்ட்டுச் சுவரில் மட்டும் எந்த வாசகங்களையும் சுவரொட்டிகளையும் காண முடியவில்லை. மற்றபடி தெருவிலிருந்த எல்லா வீட்டுச் சுற்றுச்சுவருக்கு வெளியிலும் 'சென்னை சென்று மன்னை திரும்பிய மன்னனே', என்றும் 'இன்று பிறந்த நாள் காணும் எங்கள் சின்னவரை வாழ்த்த வயதில்லை, வணங்குகிறோம்' என்றும் எழுதியோ சுவரொட்டியை ஒட்டியோ வைத்திருந்தார்கள்.
    வீட்டுக்குத் தெற்குப் பக்கத்தில் இருந்த மாட்டுத் தொழுவத்தில் யாரோ மாட்டைக் குளிப்பாட்டிக்கொண்டிருந்தது தெரிந்தது. மாவட்டம்கூட அந்தப் பக்கம்தான் போனார். அட, மாட்டைக் குளிப்பாட்டுவது சின்னவர்தான்.
'என்ன சிம்பிளிசிட்டி பாத்தியா மாப்புள்ள' என்றார் மாமா.
    வீட்டு வாசலுக்கு வந்துவிட்டோம். யாரையும் கூப்பிடவில்லை. அது மரியாதையாக இருக்காது என்பதால் அப்படியே நின்றுகொண்டிருந்தோம். மாட்டுத் தொழுவத்துக்குச் சென்ற மாவட்டம் சட்டையைக் கழட்டி அழுக்குப் படாமல் ஓரமாக ஒரு இடத்தில் வைத்தார். அவர் வந்ததைச் சின்னவர் கவனித்தாரா இல்லையா என்பது தெரியவில்லை, அவர் பாட்டுக்குத் தன் வேலையில் மும்முரமாக ஈடுபட்டுக்கொண்டிருந்தார். நல்ல முரடான பசுமாடு அது. சின்னவர் அதன் கழுத்துப் பகுதியை வைக்கோலை வைத்துத் தேய்த்துக்கொண்டிருந்தார். வெற்றுடம்போடுதான் இருந்தார், ஒரு அழுக்குக் கைலி கட்டியிருந்தார். என்ன செய்வது என்று தெரியாமல் சற்று நேரம் அப்படியே நின்றுகொண்டிருந்தார் மாவட்டம். தான் வந்திருப்பதைக் காட்டுவதற்காக இருமக் கூட இல்லை. சட்டென்று ஏதோ தோன்றியர்போல மாவட்டம் தான் போட்டிருந்த பனியனையும் கையில் கட்டியிருந்த கடிகாரத்தையும்கூட அவிழ்த்துச் சட்டையோடு வைத்துவிட்டுப் பிறகு தன் பங்குக்கு கைக்குள் கொள்ளும் அளவுக்கு வைக்கோலையும் பக்கத்திலிருந்த டப்பாவில் தண்ணீரையும் எடுத்துக்கொண்டு மாட்டின் சப்பைப் பகுதியைத் தேய்க்க ஆரம்பித்தார். மாடு அலுங்காமல் குலுங்காமல், தேய்ப்பதற்கு அவருக்குக் காலைக் கொடுத்துக்கொண்டு ஒணக்கையாக நின்றுகொண்டிருந்தது. அது மிரளாமல் இருப்பதைப் பார்க்கும்போதே தெரிந்தது, மாவட்டம் மாட்டுக்குப் பலமுறை ஒணக்கையாக அழுக்குத் தேய்த்திருக்கிறார் என்பது.      
    நல்லவேளை சின்னவர் வீட்டு வாசலில் பந்தல் போட்டிருந்தார்கள், நிழலுக்குள் நின்றுகொண்டிருந்தோம். பந்தலுக்குள், நாற்காலி, பெஞ்ச் என்று எல்லாம் கிடந்தது. அநேகமாக அதில் மனிதர்கள் யாரும் உட்கார்ந்தே இருக்க மாட்டார்கள் என்றே தோன்றியது, குறைந்தபட்சம் சின்னவர் வீட்டு வாசலில் கிடக்க ஆரம்பித்ததிலிருந்து. நாங்கள் நின்றுகொண்டிருந்த இடத்திலிருந்து சின்னவரும் மாவட்டமும் மாட்டைக் குளிப்பாட்டிக்கொண்டிருப்பது தெளிவாகத் தெரிந்தது. ஆனால் அவர்கள் இருவரும் நாங்கள் வந்ததை இன்னும் கவனிக்கவே இல்லை என்பதுபோல்தான் தெரிந்தது. சாமிக்குப் பூசாரி தீபாராதனை காட்டுவதுபோல் பயபக்தியுடன் மாட்டைத் தேய்த்துக்கொண்டிருந்தார் மாவட்டம். அந்த நேரம் பார்த்தா மாட்டுக்குச் சாணி வரவேண்டும். மலைப்பாம்பு எட்டிப்பார்ப்பதுபோல் மாட்டின் சூத்திலிருந்து சாணி முதலில் எட்டி எட்டிப் பார்த்தது. பிறகு பொத்தென்று கீழே விழுந்தது. விழுந்தது கெட்டியான சாணிதான், ஆனால் அது ஏற்கனவே கழிந்து வைத்திருந்த தண்ணியான சாணியின் மீது விழுந்ததால் அது தெறித்து மாவட்டம் முகமெல்லாம் சாணி. இருந்தும் மாவட்டம் ஒரு துரும்பு நகர்ந்ததுபோல்கூடக் காட்டிக்கொள்ளாமல் தன் வேலையில் தீவிரமாக இருந்தார்். பிறகு என்ன தோன்றியது என்று தெரியவில்லை, சப்பையைத் தேய்ப்பதை நிறுத்திவிட்டு மாட்டுக்குப் பின்னாடி வந்து பார்த்தார். மாடு சாணி போட்டிருந்ததால் கடைசியாக துக்குணிச் சாணி சூத்தில் ஒட்டிக்கொண்டு விழுவேனா விழ மாட்டேனா என்று இருந்தது. அது மட்டுமல்லாமல் முன்பு கழிந்த சாணியால் அங்கங்கே அடைஅடையாக இருந்தது. மாவட்டம் டப்பா தண்ணியை அதன் மேல் அடிக்கலாமா என்று யோசிப்பதுபோல் தெரிந்தது. சின்னவர் மேல் தண்ணீர் தெளித்தாலும் தெளிக்கக் கூடும் என்று எண்ணியவர்போல் தன் கையாலே அந்தச் சாணியை அவர் எடுத்துவிட்டார். அப்போது மாட்டின் குதப்பகுதி சிலிர்த்துக்கொண்டதுபோல் விரிந்துமூடியது. கையால் எடுத்த சாணியைக் கீழே உதறிவிட்டு டப்பாவிலிருந்து கொஞ்சம் தண்ணீரைக் கையாலே எடுத்து குதப்பகுதியையும் சாணி அடைஅடையாக ஓட்டிக்கொண்டிருக்கும் பிற பகுதிகளையும் கழுவிவிட்டார். மாடு அப்போதுதான் சற்று, சற்றுதான், திமிறியது. சின்னவர் கொஞ்சம் தலை நிமிர்ந்து பார்த்துவிட்டு அடுத்த மாட்டிடம் சென்றார். மாவட்டம் பயந்துபோய், பதற்றத்தில் டப்பாவைக் கீழே போட்டுவிட்டார். டப்பாவை எடுத்துவிட்டு நிமிரும்போது இதையெல்லாம் நாங்கள் கவனித்துக்கொண்டிருந்ததை மாவட்டம் பார்த்துவிட்டார். மாவட்டத்துக்கு முகமெல்லாம் செத்துச் சுண்ணாம்பாகி, மோசமாகக் கோண ஆரம்பித்துவிட்டது.
    இதற்கு மேலும் மாவட்டத்தைச் சங்கடப்படுத்த வேண்டாம் என்று நாங்கள் திரும்பிக்கொண்டோம். எங்களுக்கு ஒரு பக்கம் சிரிப்பை அடக்க முடியவில்லை என்றாலும் இன்னொரு பக்கம் சங்கடமாகவும் இருந்தது. மாவட்டம் நமக்குத் தூரத்து உறவுமுறை; அதுமட்டுமல்லாமல் ஏதாவது வேலை ஆக வேண்டும் என்றால் எங்கள் கட்சிக்காரர்களிடம் ஓடுவதைவிட மாவட்டத்திடம்தான் அதிகம் ஓடியிருப்போம். இனிமேல் என்ன செய்வாரோ என்று எங்கள் எல்லாருக்குமே பதட்டம் ஏற்பட்டது. அதை விட நாங்கள் இப்போது வந்திருக்கும் வேலையில் ஏதாவது குதாப்பு பண்ணிவிடுவாரோ என்று வேறு கவலை ஏற்பட்டது. எனக்கு என்ன ஆச்சர்யம் என்றால், மாவட்டத்தைப் பார்க்க அவர் வீட்டுக்கு வரும் எல்லாரும் இங்கே மாவட்டம் நடந்துவந்ததைப் போல்தான் நடந்து வருவார்கள். அதுமட்டுமல்லாமல் வேண்டுமென்றே மணிக்கணக்கில் காத்திருக்க வைப்பார். அதுவும் சொந்தக்காரன் என்றால் காலையில் வந்தால் சாயங்காலம்தான் அவரைப் பார்க்க முடியும்; ஆனால் காரியத்தைக் கச்சிதமாக முடித்துக் கொடுத்துவிடுவார்.
    யாரும் எதுவும் பேசாமலேயே வெகு நேரம் நின்றுகொண்டிருந்தோம். ஒரு மணி நேரமாவது நின்றிருந்திருப்போம். அப்புறம் உள்ளிருந்து குரல் வந்தது 'வாங்கய்யா' என்று. சின்னவருடைய குரல்தான் அது. எத்தனை திருமணங்களில் தலைமை தாங்கி பேசியிருக்கிறார். அவருடைய குரல் எனக்கு நன்றாக அடையாளம் தெரிந்தது.
    நாங்கள் மூவரும் முன்பை விட பவ்யமாகவும் பணிவாகவும், நடக்கிறோம் என்று தெரிய வேண்டும் ஆனால் விழுந்துவிடக் கூடாது என்பதில் கவனமாகவும் ஒவ்வொரு அடியாய் முன்னால் வைத்து வீட்டுக்குள் நுழைந்தோம். ஒரே வரியில் நுழைந்தோம் என்று சொல்லி விட முடியாது. நான் முன்பு காதலிக்காகக் காத்துக்கொண்டிருந்தபோதுகூட நேரம் இந்த அளவு யுகம்யுகமாக எனக்குத் தோன்றியதில்லை. உள்ளுக்குள் போவதற்கு ஜந்து வினாடிகள்தான் ஆகியிருக்கும், ஆனால் அதற்குள் பூமி பத்துத் தடவை சுற்றி ஓய்ந்ததுபோல் இருந்தது. எங்களுக்கு நாடி நரம்பெல்லாம் முடுக்கிவிட்டதுபோல் இறுக்கமாக ஆகிவிட்டிருந்தது. என்னால் சின்னவருக்கு முன்னால் பேச முடியுமா என்று தோன்றவில்லை, பெவிகால் வைத்து ஒட்டியதைப் போல பயத்தில் நாக்கு அண்ணத்தில் ஒட்டிக்கொண்டுவிட்டது.        
    வரவேற்பறைக்குள் நாலைந்து நாற்காலிகள் கிடந்தன. சின்னவர் அதில் ஒன்றில், நெற்றியில் பட்டையுடன் வெள்ளை வேட்டியைக் கட்டிக்கொண்டு மேலே துண்டு மட்டும் போட்டுக்கொண்டு, உட்கார்ந்திருந்தார். அவருக்குப் பக்கத்தில் மாவட்டம், இன்னமும் அவருடைய முகத்துக்கு உயிர் வரவே இல்லை.
'அய்யா வணக்கம்' என்று மாமா சொன்னவுடனே நாங்களும் கோரஸாக 'அய்யா வணக்கம்' என்று அனர்த்தமாகக் கத்தினோம்.
    எங்கள் வணக்கத்தை ஏற்றுக்கொண்டதுபோல் தலையாட்டிய சின்னவர் அப்புறம் சிரித்துக்கொண்டே 'என்னய்யா கண்டியரே, நம்மள பாக்க வர்றப்ப மட்டும்தான்யா ஒன்னோட கரை வேட்டிக்கு நீ லீவு கொடுப்ப. இடைத் தேர்தல்ல செயிச்சிட்டிங்க போலருக்கு. அதுக்கு ஸ்வீட்டு கொடுக்க வந்தீங்களா?' என்றார்.

மாமா வராத சிரிப்பை மல்லுக்கட்டி வரவழைத்தபடி, 'நமக்குக் கச்சியா முக்கியம் சின்னவரே, சாதி சனங்கதான் முக்கியம். அதான் ஒரு விஷயமா ஒங்களப் பாத்துச் சொல்லிட்டுப் போவலாம்ன்னு' என்று மாமா இழுத்தார்.
'என்ன விஷயம்யா, வக்காலி கண்டியரு வூட்டு ஆளுங்களுக்கு ஏதாவது விஷயம்ன்னாதான் நம்ம நெனப்பு வரும். அது சரி ஒங்க ஊரு ஆளுங்கயல்லாம் ஏன் இ்வ்வளவு புடிவாதமா இருக்காங்க. நான்தான் லட்சலட்சமாப் பணம் தர்றேன்னு சொல்றன்ல. நீங்க எந்தக் கச்சியில வேணும்னா இருந்துக்குங்க, நான் காசு தர்றேன், எலக்சன் வர்றப்ப ஓட்ட மட்டும் நம்மாளுங்களுக்குப் போட்டுக்குங்க. அது கெடக்கட்டும் என்ன வெஷயமா வந்தீங்க' என்றார் சின்னவர்.
'இந்தா நிக்குதுல்ல தம்பி' என்று மாமா என்னைக் காட்டியபோது அதுவரை ஏதேதோ சிந்தனை ஓட்டத்தில் ஆழ்ந்திருந்த நான் சட்டென்று உயிர்பெற்று மறுபடியும் கூனிக் குறுகி வணக்கம் போன்ற ஒன்றை அவருக்குத் தெரிவித்தேன்.
'இந்தத் தம்பியோட அம்மா எனக்குத் தங்கச்சி மொற வேணும். அது கண்டியரு வூட்டுப் புள்ள, வாக்கப்பட்டது ஆர்சுத்தியாரு வூட்டுல. அதோட பையன் இவன். எம்பில்லு' என்று ஆரம்பித்தவர் வாயில் சரியாக வராததால் 'அது என்னடா தம்பி?' என்று என்னைப் பார்த்துக் கேட்டார். 'எம்ஃபில். இங்கிலீஷ் லிட்டரேச்சர்' என்று அவருக்கு எடுத்துக்கொடுத்தேன். தொடர்ந்து அவர் 'ஆங் அந்தப் படிப்புப் படிச்சிருக்கு. அதுவும் மெட்ராசுலேயே பெரிய காலேசுல. படிச்சு முடிச்சிட்டு அங்கயோ ஏதோ இஞ்சினியரிங் காலேசுல டெம்பரரியா வேலை பாத்துட்டு இருந்தது இப்ப நம்ம ஊரோடவே வந்துடிச்சு. சின்னவரு நீங்க நெனச்சா இங்க உள்ள ஏதாச்சும் ஒரு காலேசுல தம்பிக்கு ஒரு வேல பர்மனன்டா வாங்கித் தர முடியும். வயசு வேற முப்பத்தொன்னு ஆச்சு. கல்யாணம் பண்ணனுன்னா எதாச்சும் நல்ல வேலையில இருந்தாத்தான் பொண்ணு கொடுப்பாங்க' என்று ஒவ்வொரு வார்த்தையையும் மெதுவாகவும் நிறுத்திநிறுத்தியும் பேசினார் மாமா.
'அப்புடியா தம்பி, நம்ம பயல்ல ஒருத்தன் நல்லா படிச்சிட்டு வந்தா சந்தோஷப்படற மொத ஆளு நான்தான். என்னோட காலேஜு வந்து பொட்டப்புள்ளங்களோடது. அதுல ஆம்பள டீச்சரு யாரும் போடறது இல்ல. நீ ஒண்ணும் கவலப்படாத தம்பி. சண்முகத்தோட காலேஜுலேயே ஒண்ண சேத்துவுடறன். அடுத்த வாரம் என்ன வந்து பாரு' என்று சொல்லிவிட்டு 'நீ ஆர்சுத்தியாரு வூடா தம்பி? என்னோட மச்சினன் பொண்ணு எடுத்ததும் ஆர்சுத்தி வூட்லருந்துதான். ஒரு வகயில நாம பங்காளிதான் தம்பி, நீயொன்னும் கவலப்படாத' என்று சொல்லிவிட்டுக் கலகலவென்று சிரித்தார் சின்னவர்.
'ரொம்ப நன்றீங்க' என்று நாங்கள் கையெடுத்துக் கும்பிட்டோம். 'இருக்கட்டும்' என்பதுபோல கையைக் காட்டினார் சின்னவர். சட்டென்று மாமா என் முதுகில் கைவைத்து அழுத்தினார். புரிந்துகொண்டு நான் சின்னவரின் காலில் விழுந்தேன்.
சின்னவரு என்னைத் தன் கைகளால் பிடித்துத் தூக்கிவிட்டு, என் தலையில் கைவைத்து தேவாரம் திருவாசகம் போன்று ஏதோ முணுமுணுத்துவிட்டுக் கண்ணைத் திறந்தார்.
'எந்த விக்கினமும் இருக்காது தம்பி, நீங்க போய்ட்டு வாங்க' என்றார்.
எழுந்து நின்றேன். சின்னவர் தலைக்குப் பின்னால் பெரிய படம் மாட்டியிருந்தது. முன்னாள் முதல்வரும் இந்நாள் எதிர்க்கட்சித் தலைவருமான குமாரி குந்தவையுடன் சின்னவருடைய அண்ணன் கூனிக் குறுகி இருப்பதுபோல் எடுக்கப்பட்ட புகைப்படம் அது. நாங்கள் எந்தப் பணிவுடனும் பயபக்தியுனும் வேகத்துடனும் வந்தோமா அதே பணிவுடனும் பயபக்தியுனும் வேகத்துடனும் வெளியேறினோம்.
    சின்னவர் பெரிய மனசு பண்ணி தெரு முழுக்கப் பந்தல் போட்டிருந்தால் நன்றாக இருந்திருக்கும். தார்ச் சாலையில் காலை வைக்கவே முடியவில்லை. மெதுவாக நடந்துகொண்டிருந்தோம். எங்கள் பின்னால் யாரோ ஒடிவருவதுபோல் தெரிந்தது. திரும்பிப் பார்த்தோம். மாவட்டம்தான்.
'துரைச்சாமி அண்ணே, ஒரு நிமிஷம்' என்றார் மாவட்டம்.
நாங்கள் மூவரும் அப்படியே நின்றோம்.
'என்ன தம்பி?' என்று கேட்டார் மாமா.
மூச்சிரைக்க எங்களை நெருங்கி வந்துகொண்டிருந்தார் மாவட்டம். கூனாமல் குனியாமல் வருகிறார் என்றால் ஏதாவது முக்கியமான விஷயமாகத்தான் இருக்கும்.
பக்கத்தில் வந்ததும் நின்று, ஓரிரு மூச்சு வாங்கிவிட்டு அப்புறம் பேசினார் மாவட்டம் 'யாருட்டயும் சொல்லாதீங்க அண்ணே'
'எதத் தம்பி' என்று நெற்றியைச் சுருக்கிக்கொண்டு கேட்டார் மாமா.
'அங்க நடந்ததத்தான்' என்று மென்று விழுங்கினார் மாவட்டம்.
இன்னமும் புரிபடாதவராக மாமா 'அதான் எதத் தம்பி' என்று கேட்டார் மாமா. மாமா ஈவிரக்கம் கொஞ்சம்கூட இல்லாதவர்போன்று எனக்குத் தோன்றினார்.
'அதான் பாத்தீங்கல்ல' என்று திணறிக்கொண்டு சொன்னார் மாவட்டம்.
'புரியல தம்பி' என்றார் மாமா.
வெறி வந்ததைப் போல் சற்று உரக்கவே கத்திவிட்டார் மாவட்டம், 'கண்டார ஓலி மவன! நான் மாட்டுக்கு சூத்து கழுவுனததான்டா சொல்றன்.'               

                         -2010

No comments:

Post a Comment