அவர்களெல்லாம்
மனிதர்கள் விதவிதமாகச் செய்த
உண்டியல்கள்
கிராமத்து மரத்தடிகளில்
சின்ன உண்டியல்களில் ஆரம்பித்து
பெரியகோயில்களில்
கர்ப்பகிரகத்தின் உள்ளே இருக்கும்
பெரிய உண்டியல்கள் வரை
ஏராளமான உண்டியல்கள்
அந்த உண்டியல்களில்
புவியின் அத்தனை நம்பிக்கைகளும்
வேண்டுதல்களும்
பாவங்களும்
சாபங்களும்
ஆசைகளும்
தேர்வு எண்களும்
கொட்டப்படுகின்றன
அந்த நம்பிக்கைகள்
வேண்டுதல்கள்
பாவங்கள்
சாபங்கள்
ஆசைகள்
மிக அழகியவை
அவற்றுக்கான ஒரே உண்டியல்
என்பதால்
கடவுளர்களை
எனக்கு மிகவும் பிடிக்கும்
சிறுவர்களாய் இருக்கும்போது
சிறிய மாரியம்மன் கோயிலில்
மாரியம்மன் கண்முன்னே
வேப்பங்குச்சியில் தாரை ஒட்டி
உண்டியலில் விட்டுக்
காசு திருடினோம்
நானும் கூட்டாளிகளும்
பாவமாகப் பார்த்துக்கொண்டிருந்தாள்
மாரியம்மன்
எப்போதோதான் அங்கே ஆட்கள் வருவார்கள்
எப்போதோதான் உண்டியலில் காசு விழும்
கடவுளர்களைப் படைத்துவிட்டு
அவர்களுக்குள் எல்லாவற்றையும் கொட்டும்வரை
பிரச்சினை இல்லை
அவர்களுக்குள் குச்சி விட்டு
நோண்டிக்கொண்டிருப்பதுதான் விபரீதம்
அப்படி நோண்டவும்
குழந்தைகளுக்கு மட்டுமே
அனுமதிக்கப்பட்டிருக்கிறது
குழந்தைகள் தங்கள்
பொம்மை உண்டியலை
எத்தனை முறை வேண்டுமானாலும்
தூக்கிப்போட்டு
உடைக்கட்டும்
மற்றவர்கள்
உண்டியலில் போட வேண்டியதைப்
போட்டுவிட்டுத்
திரும்பிப் பார்க்காமல்
போய்விட வேண்டியதுதான்
தங்களுக்குள் வந்து விழுவதைக்
கடவுளர்கள் கூட ஏறெடுத்துப் பார்ப்பதில்லை
-ஆசை
No comments:
Post a Comment