ஆசை
(‘தி இந்து’ நாளிதழின் ‘இளமை புதுமை’ இணைப்பிதழில் 25-03-2016 அன்று வெளியானது)
‘பகடி என்று வந்துவிட்டால் எந்தத் தனிமனிதரும் புனிதமானவரல்ல, எந்தச் சித்தாந்தமும் புனிதமானது அல்ல, நகைச்சுவை மட்டுமே புனிதமானது’ என்ற சித்தாந்தத்துடன் இயங்கும் ட்விட்டர் தளம்தான் History of India@RealHistoryPic.
வரலாற்றை உல்டாவாகப் பார்த்து அட்டகாசம் செய்கிறார்கள். ‘இம்சை அரசன்’ படத்தில் வடிவேலுவின் தலையையும் பயில்வான் ஒருவரின் உடலையும் சேர்த்து வரையும் காட்சி உங்கள் எல்லோருக்கும் நினைவிருக்கும். ‘100 வருடங்களுக்குப் பிறகு வரப் போகும் மடையர்களுக்கு நான் எப்படி இருந்தேன் என்பது தெரியவா போகிறது’ என்று வடிவேலு கேட்பார். வடிவேலு வேலையைத்தான் இந்த ட்விட்டர் தளமும் செய்கிறது.
மடாம் துஸோட்ஸ் மெழுகுச் சிலை அருங்காட்சியகத்தில் மோடிக்குச் சிலை வைப்பதற்காக அந்த அருங்காட்சியகத்தைச் சேர்ந்தவர்கள் இந்தியாவுக்கு வந்து மோடியை அளவெடுத்துச் சென்றார்கள் அல்லவா! அப்படி அளவெடுக்கும் புகைப்படத்தை இந்த ட்விட்டர் தளத்தில் போட்டுவிட்டு அதற்குக் கீழே இப்படி ஒரு வாசகத்தைப் போட்டிருக்கிறார்கள்:
“ஐசக் நியூட்டனின் தலையில் ஆப்பிள் விழுந்த பிறகு அவரது அறிவுத்திறனை டாக்டர் ஆலியா பட் அளவெடுக்கிறார் (1665).” இப்படி வரலாற்றில் இரு வேறு காலங்களை முன்னுக்குப் பின் புரட்டிப் போட்டு, இரண்டையும் குழப்பிப் போட்டு கொத்சு செய்திருக்கிறார்கள். யார் கண்டார்கள் இருநூறு, முன்னூறு ஆண்டுகளுக்குப் பிறகு வரும் சந்ததிகள் நியூட்டன் என்று இணையத்தில் தேடினால் இந்தப் புகைப்படம் காணக் கிடைக்கக் கூடும்.
மோடி, அமித் ஷா, ராகுல் காந்தி, அர்விந்த் கேஜ்ரிவால், அனுபம் கெர், சேத்தன் பகத் என்று யாரையும் விட்டுவைக்கவில்லை. இடம் மாறி ஒட்டப்பட்ட இந்த வரலாறு வெறுமனே நகைச்சுவையை மட்டும் தூண்டவில்லை. வரலாறு பற்றிய கேள்விகளையும் நம்முள் எழுப்புகிறது. அதற்கேற்ப ஒரு தாரக மந்திரத்தையும் இந்த ட்விட்டர் தளம் கொண்டிருக்கிறது:
“வரலாறு தன்னைத் தானே இரண்டு முறை நிகழ்த்திக்கொள்கிறது, முதல் தடவை யாரும் கவனிக்காததால்.’ ஏதோ தலைக்குள் மணியடிக்கிறதா? ஆம், ‘வரலாறு தன்னைத் தானே மறுபடியும் நிகழ்த்திக்கொள்கிறது. முதல் முறை துயரச் சம்பவமாகவும் இரண்டாம் முறை கேலிக்கூத்தாகவும்’ என்ற கார்ல் மார்க்ஸ் மேற்கோளின் உல்டாதான் இது. எப்படி இருந்தாலும் வரலாறு முக்கியம் அமைச்சரே!
ஜம்மு காஷ்மீரின் முன்னாள் முதல்வர் ஒமர் அப்துல்லாவும் இந்த ட்விட்டர் தளத்தின் ரசிகர்களுள் ஒருவர். ‘உங்கள் நகைச்சுவை உணர்வு இன்னும் மடிந்துபோகவில்லை என்றால் @RealHistoryPic ட்விட்டர் தளம் உங்களுக்கு நிச்சயம் கிச்சுகிச்சு மூட்டும் & முஃப்தி மெஹ்பூபாவும் சில சமயம் வேடிக்கையாக நடந்துகொள்வார்” என்று இந்த ட்விட்டர் தளத்துக்கு லைக் போடும் சாக்கில், அவரது அரசியல் எதிரியான முஃப்தி மெஹ்பூபாவுக்கு ஒரு நகைச்சுவை இடியும் கொடுத்திருக்கிறார்.








-நன்றி: ‘தி இந்து’, ‘தி இந்து’ இணையதளத்தில் இந்தக் கட்டுரையைப் படிக்க: http://goo.gl/FxlnyN
No comments:
Post a Comment