ஷிவ் விஸ்வநாதன்
உண்மைக்கு உண்மையாக
இருப்பதென்பது ஒரு எழுத்தாக்கத்துக்கு அத்தியாவசியமானது என்பதை 88 வயது எழுத்தாளர்
நயன்தாரா ஷாகல் இந்தியாவுக்கு நினைவுபடுத்தியிருக்கிறார். மறுப்பு என்பது
துணிச்சலான ஒரு செயல்; பெரும் போக்குக்கு எதிராக நிற்பது; வம்பர் மனப்பான்மை
கொண்டிருக்கும் பெரும்பான்மையை எதிர்கொள்வது. மறுப்பு என்பது ஒற்றை ஆளாக நிற்பது,
பெரும் கூட்டத்தை எதிர்கொள்வது; அந்த தருணத்தில் ஒற்றைக் குரல் என்பது
சூழ்ந்திருக்கும் மவுனத்தையே ஊடுருவித் துளைத்துவிடும்.
இதில் ஆச்சரியம் என்னவென்றால்,
இந்தியாவில் உள்ள பலரும் ‘மறுப்பின் மீதான பொறாமை’ என்ற வியாதியால்
பாதிக்கப்பட்டிருக்கின்றனர். நயன்தாரா ஷாகல் தனது எதிர்ப்பைத் தெரிவித்த அடுத்த
நொடியே சிலர் அதனை சிறுபிள்ளைத்தனமான குமுறல் என்றோ பணக்காரர் ஒருவரின் குமுறல்
என்றோ சொல்லி நிராகரிக்க விரும்புகிறார்கள். அவர்களின் உத்திகள் நம் கவனத்தை
ஈர்க்கின்றன. சிலர் இதனை ‘தேர்ந்தெடுத்த கோபவெளிப்பாடு’ என்கிறார்கள். நாம்
தொழில்முறை மறுப்பாளராக இருக்க வேண்டும் என்கின்றன இந்த விமர்சனங்கள். அநீதிகள்
விஷயத்திலும் கூட நாம் எதையாவது ஒன்றைத் தேர்ந்தெடுத்துக்கொண்டு அதற்காகப்
போராடலாம் என்பதை அவர்கள் புரிந்துகொள்ளவேயில்லை. நேரு யுகத்தால் பயனடைந்தவர் அவர்
என்கிறார்கள் பலரும். அப்படித்தான் என்றாலும், நேரு தலைமுறையைச் சேர்ந்தவர்களில்
பலரைப் போல அல்லாமல் தனக்கே உரித்தான சாதனைகளுக்குச் சொந்தக்காரர் நயன்தாரா.
தனிக்கவனம் கொடுத்த நாம் ஊன்றிநோக்க வேண்டிய வாழ்க்கைக்குச் சொந்தக்காரர்
நயன்தாரா. அந்த வாழ்க்கைக்குத் தற்போது மேலும் அழகும் துணிவும்
சேர்த்திருக்கிறார்.
நயன்தாராவின் எதிர்ப்பென்பது ஏதோ உணர்ச்சிக் கொதிப்பின் வெளிப்பாடல்ல,
அறிவுபூர்வமான எதிர்ப்புதான். அதே நேரத்தில் அவரின் மனதை மிகவும் பாதித்த
ஒன்றுக்காக அவரிடமிருந்து வெளிப்பட்ட துயரக் கூக்குரலாகவும் அதைக் கருதலாம். சக எழுத்தாளர்களும்
கல்வித்துறையினரும் சுட்டுக்கொல்லப்படுவதை ஏற்றுக்கொள்ளவே முடியாது என்பதை அவர்
வலியுறுத்தியுள்ளார். மவுனம்தான் அரசியல்ரீதியாக சரியான வழிமுறை என்று பாஜகவினர்
இருக்கும்போது இந்த எதிர்ப்பு வெளிப்பட்டிருக்கிறது.
நெருக்கடிநிலையின்போது
நயன்தாரா
கடந்த காலத்திலும் நயன்தாரா
பலமுறை பல விஷயங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்திருக்கிறார். நெருக்கடிநிலையின்போது
அவர் காட்டிய எதிர்ப்பு அவருக்கு மிகுந்த புகழைச் சேர்த்தது. அருண் ஷோரி, குல்தீப்
நய்யார், ஜார்ஜ் ஃபெர்னான்டஸ், ரஜினி கோத்தாரி போன்றோருடன் சேர்ந்து நயன்தாரா,
எதிர்ப்புகளைக் காட்டுவதற்கு வழிகாட்டியான ஒரு வழிமுறையை உருவாக்கினார்கள். அவர்
தற்போது தெரிவித்திருக்கும் எதிர்ப்பையும் நாம் அதே உணர்வோடுதான் அணுக
வேண்டும்.
அரசியலமைப்பு நமக்கு
உறுதியளித்திருக்கும் விஷயங்களைப் பற்றி ஹமீத் அன்சாரி எழுதியிருக்கும் கடிதத்தை
மேற்கோள் காட்டி நயன்தாரா தனது கடிதத்தைத் தொடங்குகிறார். ஒரு எழுத்தாளரைப்
பொறுத்தவரை அவரது ‘வாழ்வதற்கான உரிமை’யின் ஒரு பகுதிதான் ‘மறுப்பு தெரிவிப்பதற்கான
உரிமை’யும். ஒரு அறிவுஜீவியின் வாழ்க்கை என்பது வெறுமனே கருத்துகளை மையமிட்ட
வாழ்க்கை மட்டுமல்ல, நெறிமுறைகளின் வழிமுறையும், கண்ணியமான ஒரு சமுதாயம் எப்படி
இருக்க வேண்டும் என்பது குறித்த சிந்தனையும் சேர்ந்ததுதான் அவர்களுடைய வாழ்க்கை.
நயன்தாரா சொல்வது சரியே. இந்தியாவின் கலாச்சாரமும் பன்மைத்துவமும்
சூறையாடவும் சிதைக்கவும் பட்டுக்கொண்டிருக்கின்றன. நயன்தாராவின் எதிர்ப்பு என்பது தனிப்பட்ட ஒரு சம்பவத்தின் விளைவாக
எழுந்ததல்ல; இந்தியாவின் கலாச்சாரத்தை சூறையாடுவதையும் அதன் அறிவார்த்த வாழ்க்கையின்
உயிர்நாடியை அழிப்பதையும் நோக்கமாகக் கொண்டு ஒரே குடையின் கீழ் இயங்கும் குழுக்கள்
தாக்குதல் நிகழ்த்திக்கொண்டிருக்கும் சூழலில் விளைந்ததுதான் அவருடைய எதிர்ப்பு. மணிப்பாலில்
காவல்துறையின் அத்துமீறலாகட்டும், தேசிய, மாநில அளவில் பாடத்திட்டங்களைத் திருத்தி
எழுதி கல்வித்துறையின் கெடுபிடி கண்காணிப்புடன் ஒழுக்கக் காவலர்களைக் கைகோக்கச்
செய்யும் சூழலாகட்டும், பகுத்தறிவாளர்கள் எம்.எம். கல்பர்கி போன்றோர் கொடூரமான
முறையில் கொல்லப்படுவதாகட்டும். இந்தப் போக்கை, தொடர்ச்சியான செயல்பாடுகளை,
நிகழ்வுகளைத்தான் அவர் சுட்டிக்காட்டுகிறார்.
இந்தச் சூழலின் பெருந்தீமையை இலக்கிய உலகத்தினரே உணரவில்லை என்றால் வேறு
எவர்தான் உணர்வார்கள்? ஒரு எழுத்தாளர் தனது தவறுகளை சமூகத்திடம்தான் எப்போதும்
ஒப்புக்கொண்டு வருந்துவார், குறிப்பாக தான் விமர்சிக்கும் சமூகத்திடம். அறிவுலகின்
மீதான தணிக்கையும் கலாச்சாரத் தணிக்கையும் சேர்ந்துகொள்ளும்போது, புத்தகங்கள்,
திரைப்படங்கள் போன்றவற்றின் தடையுடன் உணவுத் தடைகளும் சேர்ந்துகொள்ளும்போது,
பலவந்தமான கெடுபிடி கண்காணிப்பும், சமூகத்தின் மீது அச்சுறுத்தல்
விடுக்கப்படுவதும் தொடங்கியிருக்கின்றன என்பதைக் கண்கூடாக நம்மால் உணர
முடிகிறது.
சமூகத்தில் நிலவும்
குறிப்பிட்ட ஒரு அநீதியைக் களையும் முயற்சியில் ஈடுபடுபவர் மட்டும் அல்ல ஒரு
எழுத்தாளர். முடுக்கிவிடும் கருவியும் ஒரு சமூகத்தின் தன்மை குறித்த எச்சரிக்கை
சமிக்ஞையும், தன் காலத்தின் தர்மகர்த்தாவும் எழுத்தாளர்தான். எண்பதுகளில்
இருக்கும் ஒருவரால் சமூகத்தில் நடப்பவற்றைப் பார்த்து கோபப்படவோ தெளிவுகொள்ளவோ
முடியாது என்று சிலர் சொல்கிறார்கள். முப்பத்தெட்டா, எண்பத்தெட்டா என்பதெல்லாம்
பொருட்டே கிடையாது. சமூக அமைப்பே மூப்புநோயால் பீடித்திருக்கும்போது எல்லாருக்குமே
மூப்பு மறதி (அல்சைமர்) இருப்பதுபோல்தான் தோன்றுகிறது.
எனினும், பாஜகவிடம் இரண்டு மாறுபட்ட
பதிவேடுகள் இருக்கின்றன. நெருக்கடிநிலையை எதிர்த்தபோது நயன்தாராவைத் தலையில்
தூக்கிவைத்துக் கொண்டாடினார்கள். இப்போது மோடியை எதிர்க்கும்போது அவர்
தூற்றப்படுகிறார், அவரது செயலுக்கு உள்நோக்கம் கற்பிக்கப்படுகிறது. தனது
புத்தகத்துக்கு விருது கொடுக்கப்பட்டதால் கிடைத்த அனைத்து பலன்களையும் அறுவடை
செய்துவிட்டு அதற்குப் பிறகு அதைத் திருப்பித் தந்திருக்கிறார் என்று அவர் மீது
அவதூறான ஒரு குற்றச்சாட்டை முன்வைக்கிறார் சாகித்ய அகாடமியின் தலைவர். அவரது இந்த
மனப்பான்மைதான் நமக்குப் பல விஷயங்களைச் சொல்லிவிடுகிறது. முதலாவதாக, ஒரு
விருதுக்கு உரித்தான அடையாள மதிப்பை அவர் உணரவில்லை. அடுத்ததாக, விருது என்பது ஏதோ
குத்தகைக்கு விடும் மனைச்சொத்து போன்றது என்ற எண்ணத்தில் அவர் இருக்கிறார். ஆனால்,
இவையெல்லாம் ஒரு முக்கியமான விஷயத்தை நமக்குப் படம்பிடித்துக் காட்டுகின்றன.
பாஜகவின் ஆளுகைக்குக் கீழ் மனப்போக்கு என்பது எப்படி இருக்கும் என்பதுதான் அது.
‘தலைவர்’ என்ற சொல்லுக்கு பதிலாக ‘கமிஸார்’ என்ற சொல்லை வைத்துப் பாருங்கள்,
நிலைமை தெளிவாகப் புரிந்துவிடும்.
நயன்தாராவைப் பொறுத்தவரை
சமீபத்திய கொடூரச் சம்பவங்கள் ஏதோ சாதாரணமானவையோ தனித்தனியானவையோ கிடையாது. அவை
ஒரு போக்கின் அங்கங்களே. வன்முறைச் சூழலில் மவுனம் சாதிப்பது மேலும் நிலைமையை
மோசமாக ஆக்குகிறது என்பதையும் அவர் உணர்கிறார். ‘அகாடமிகள்’ மவுனமாக இருக்கின்றன;
படைப்பாக்கத்துக்கும் கற்பனைத்திறனுக்கும் பாதுகாவலர்களான அவர்கள் கையாலாகாமல்
இருப்பதுபோல் தோன்றுகிறது. அவர் தனது கடிதத்தின் இறுதியில் தெரிவித்திருப்பது
தெள்ளத்தெளிவானது, கண்ணியமிக்கது. “படுகொலை செய்யப்பட்ட இந்தியர்களின்
நினைவாகவும், மறுப்புக்கான உரிமையைத் தூக்கிப்பிடிக்கும் அனைத்து இந்தியர்களுக்கு
ஆதரவாகவும், அச்சத்திலும் நிச்சயமின்மையிலும் வாழ்ந்துகொண்டிருக்கும் அனைத்து
மறுப்பாளர்களுக்கு ஆதரவாகவும் எனது சாகித்ய அகாடமி விருதை நான் திருப்பிக்
கொடுக்கிறேன்.”
இலக்கிய நிறுவனங்களின்
கோழைத்தனம்
நயன்தாராவைப் போலவே விருதைத்
திருப்பித் தந்த அஷோக் வாஜ்பேயி என்ற இந்திக் கவிஞர் அந்த செயலுக்குத்
திட்டவட்டமான ஒரு சட்டகத்தைத் தந்திருக்கிறார். நயன்தாராவின் செயலை ஏதோ
மேல்தட்டினரான ஆங்கில எழுத்தாளர் ஒருவரின் மேல்தட்டுச் செயலாகப் பார்த்துவிடக்
கூடாது. இதுபோன்ற விஷயங்களை பெரும் சட்டகம் ஒன்றுக்குள் வைத்துப் பார்க்கும்
முயற்சியாகத்தான் கருத வேண்டும் என்கிறார் அஷோக் வாஜ்பேயி. அவர்களுடைய ஆதங்கம் ஒரே
நேரத்தில் இரண்டு இலக்குகளை நோக்கி செலுத்தப்பட்டிருக்கிறது. வாயை இறுகப்
பொத்திக்கொண்டிருக்கும் இந்தி-ஆங்கில எழுத்தாளர்கள் மீதும், கோழைத்தனமாக
இருப்பதுடன் நடக்கும் அட்டூழியத்தின் பங்கேற்பாளர்களாகவும் இருக்கும் இலக்கிய
நிறுவனங்கள் மீதும். வெறுமனே விருதை மட்டுமே அவர்கள் திருப்பித் தரவில்லை,
உண்மையில் மவுனம் என்ற குற்றத்துக்கு எதிராகக் கண்ணியத்துடன் போராடுகிறார்கள். அது
நம்மை நெகிழச்செய்கிறது, தாக்கம் ஏற்படுத்துகிறது.
எழுத்தாளர்களும் சாதாரண
மக்களும் கொல்லப்பட்டுக்கொண்டிருக்கும்போது வெளிநாடு வாழ் இந்தியர் மத்தியில்
படாடோபமான பேருரை ஆற்றிக்கொண்டிருக்கும் பிரதமர் நரேந்திர மோடியை
நேருக்கு நேர் எதிர்கொள்ளும் முயற்சிதான் அஷோக் வாஜ்பேயியின் கடிதமும். பதில் கேட்கிறது அந்தக்
கடிதம். இரண்டு சமூக ஒப்பந்தங்களை பிரதமர் உதாசீனப்படுத்திக்கொண்டிருப்பதை அது
நினைவுறுத்துகிறது. முதல் ஒப்பந்தம், வாழ்வதற்கான தனது உரிமையைத்
தக்கவைத்துக்கொள்வது குறித்து ஒரு பிரஜைக்கும் அரசுக்கும் இடையிலானது. அடுத்தது,
ஒரு எழுத்தாளர் அகாடமி விருது பெறும்போது அந்த எழுத்தாளரின் படைப்பாக்க உணர்வையும்
அவருடைய சுதந்திரத்தையும் அரசு அங்கீகரிக்கிறது என்பது குறித்த
நினைவுறுத்தல்.
மறுப்பாளர்கள்
கொல்லப்படும்போதும், மாட்டுக்கறி சாப்பிட்டார்கள் என்ற சந்தேகத்தின்பேரில்
குடிமக்கள் கொல்லப்படும்போதும் மேற்கண்ட இரண்டு ஒப்பந்தங்களுக்கும் அரசு பாராமுகம்
காட்டுகிறது. இந்த இரண்டு பொறுப்புகள்மீது அரசு காட்டும் தீங்கான உதாசீனத்தையே
நயன்தாராவும் அஷோக் வாஜ்பேயியும் அரசுக்கு நினைவுறுத்துகிறார்கள்.
இதுபோன்ற தருணத்தில்
பிரதமரின் மவுனம் என்பது பிரச்சினைக்குரியதாகிறது. அது ஒப்புதல் வழங்குகிறதா,
கொடும் செயலில் பங்கெடுக்கிறதா, அலட்சியம் காட்டுகிறதா, உதாசீனப்படுத்துகிறதா,
ரகசியக் கூட்டு வைக்கிறதா, குழப்பத்தை வெளிப்படுத்துகிறதா, தாமதமாக்குகிறதா?
இதுபோன்ற மவுனம் ஜனநாயகத்தின் மீது ஐயத்தின் ராட்சச நிழலைப் பரப்புகிறது என்பதைத்
தவிர நமக்கு வேறெதுவும் தெரியவில்லை.
கெப்பல்ஸ்தனமான கோமாளித்தனம்
இந்த மவுனத்தின் ஆபாசத்தை
மேலும் அருவருப்பூட்டுவது எதுவென்றால் இதுபோன்ற கொலைகளையும் வன்முறைச்
செயல்களையும் நியாயப்படுத்தி மோடியின் அமைச்சர்கள் செய்யும் கோமாளித்தனங்கள்தான்.
இதையெல்லாம் பார்க்கும்போது இவர்களெல்லாம் மதிப்புக்குரிய அரசியல்வாதிகளா, இல்லை
தெருவோர
வம்பர்களா என்ற கேள்வி நமக்கெல்லாம் தோன்றுவதைத் தவிர்க்க முடியவில்லை. வழக்கமாக
நயத்துடன் பேசும் அஷோக் வாஜ்பேயியே கடுமையாக இப்படித் தாக்குகிறார், “அவர்களை வாயை
மூடும்படி பிரதமர் ஏன் சொல்ல மாட்டேன் என்கிறார்?” பாஜகவின் அரசியல்வாதிகள்
கோரஸாக, ஹிட்லரின் பொய்ப் பிரச்சார பீரங்கியான கெப்பல்ஸ்போல கோமாளித்தனம்
செய்துகொண்டிருப்பது மென்மேலும் கவலையளிக்கிறது. வன்முறையோடு கைகோக்கும் அடுத்த
கட்ட நடவடிக்கைகள்போல்தான் இது தோன்றுகிறது. வெந்த புண்ணில் வேலைப் பாய்ச்சும்
இந்த செயல் கிட்டத்தட்ட திட்டமிடப்பட்ட ஒன்றுபோலவே தோன்றுகிறது.
மோடியின் மவுனத்துடனும் அவரது
அமைச்சரவை சகாக்களின் கோமாளித்தனத்துடனும் கூட்டணி வைக்கும் விதத்தில்தான்
இருக்கிறது அகாடமிகளின் போக்கும். நெருப்புக்கோழியைப் போல ஒரு அகாடமி தலையைப்
புதைத்துக்கொள்ளும்போது கலாச்சாரத்தின்
புதிய கமிஸார்களின் பகுதியாக அதுவும் உருவெடுத்து, தன் ஒவ்வொரு செயல்பாட்டிலும்
அரசாங்கத்துடன் ஒத்திசைந்துபோகிறது. மவுனம், பார்த்தும் பாராமல் இருப்பது,
அட்டூழியத்தின் பங்கேற்பாளராக இருப்பது என்று இந்த மூன்றும் சேர்ந்த செயல்பாடு
நமது சமூகத்தின் சகிப்புத்தன்மை குறித்து அச்சத்தையும் ஐயத்தையும்
ஏற்படுத்துகிறது. ஏற்றுக்கொள்ளவே முடியாத இந்தச் சூழலைப் பற்றித்தான் நயன்தாராவும்
அஷோக் வாஜ்பேயியும் பேசுகிறார்கள். ஒரு சமூகத்தின்மீது ஒரு எழுத்தாளர்
கொண்டிருக்கும் பொறுப்புணர்வையும், சுதந்திரச் செயல்பாட்டைத் தனது படைப்பு
சக்தியின் ஒரு பாகமாக ஒரு எழுத்தாளர் கொண்டிருக்க வேண்டிய நிலையையும்தான் நயன்தாராவும்
அஷோக் வாஜ்பாயியும் நிலைநாட்டுகிறார்கள்.
ஒரு எழுத்தாளரின் அரசியலின்
அர்ப்பணிப்புணர்வையும் அதன் படைப்பாக்கத்திறனையும் நயன்தாரா புரிந்துகொண்டே இருக்கிறார். தனது
மேல்தட்டு சமூகப் பின்னணியால் தான் ஊட்டி வளர்க்கப்படவில்லை என்று மட்டும்
நயன்தாரா சொல்லவில்லை. அப்படி நினைப்பது தட்டையான ஒன்று. சாதாரண குடிமக்களைப்
போன்றே
மேல்தட்டுப் பிரிவினராலும் ஜனநாயகத்தின் அருமையை உணர்ந்துகொள்ள முடியும் என்பதை
நாம் எளிதில் புரிந்துகொள்ள முடியும். ‘த பொலிட்டிகல் இமாஜினேஷன்’ என்ற அவருடைய
கட்டுரைத் தொகுப்பில் அரசியல் நிலைப்பாடு எடுப்பதென்பது தவிர்க்க முடியாதது என்று
நயன்தாரா எழுதுகிறார். எல்லாவற்றிலிருந்தும் ஒதுங்கியிருக்கும் கலைஞர்களின்
வாழ்க்கையில் கூட அவர்கள் ஒரு நிலைப்பாட்டை எடுக்க வேண்டிய கட்டம் வரும்.
‘படைப்புச் சுதந்திரம் தடுக்கப்படும்போது வாழ்க்கை, இலக்கியம் இரண்டின்
நிர்ப்பந்தங்களுக்கும் இடையில் எந்த வேறுபாடும் இல்லாமல் போய்விடுகிறது’ என்று
நயன்தாரா சொல்கிறார். உண்மையுடன் செய்துகொள்ளும் இந்த ஒப்பந்தம் எழுத்துக் கலையின்
பிரிக்க முடியாத ஒரு பாகம் என்பதை நயன்தாரா அடையாளம் காண்கிறார்.
சொல்லப்போனால், இது ஒரு
தொடர்ச்சியான செயல்பாடு போலத்தான். ஆம், இறப்பதற்குச் சில வாரங்களுக்கு முன்பு
யூ.ஆர். அனந்தமூர்த்தி எழுதியதைத்தான் இப்போது நயன்தாராவும் எதிரொலிக்கிறார். அவசர
அவசரமாகவும் கவித்துவத்துடனும் ஒரு புத்தகம் எழுதினார் அனந்தமூர்த்தி. மோடியின்
இந்தியாவில் தான் வாழ விரும்பவில்லை என்று அதில் எழுதியிருந்தார். பிரகடனம்,
துண்டறிக்கை, நினைவோட்டம் ஆகியவற்றின் கலவைதான் சில நூறு பக்கங்கள் கொண்ட அந்தப்
புத்தகம். அதில் தேசிய அரசு என்ற திட்டத்தின் கொடூரத்தை சாவர்க்கரிலிருந்து மோடி
வரை அவர் அடையாளம் கண்டிருப்பார். சக்திவாய்ந்த இந்தப் புத்தகம் கன்னடத்தில்
எழுதப்பட்டிருக்கிறது, இன்னும் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்படவில்லை.
அனந்தமூர்த்தி அப்படி
எழுதியதும் திரு. மோடியின் தொண்டரான கிரிராஜ் சிங் உடனடியாக ஒரு பதிலடி
கொடுத்தார். மோடியின் இந்தியாவில் இருக்க விரும்பாதவர்கள் ரயில் பிடித்து
பாகிஸ்தானுக்குச் செல்லுங்கள் என்றார். அவர் பேசியதில் முரட்டுத்தனமான சகிப்பின்மை
அப்பட்டமாகத் தெரிந்தது. இன்று, அதையே சிறுசிறு வேறுபாடுகளுடன் ஆயிரமாயிரம் விதமாக நிகழ்த்திக்கொண்டிருக்கிறார்கள்.
அரசியல்ரீதியாக வெளிப்படையான ஒன்றையே நயன்தாரா கூறுகிறார். இந்தியாவின் ஜனநாயகம்,
கலாச்சாரப் பன்மைத்துவம், மதச்சார்பின்மை போன்றவையெல்லாம் நல்ல நிலையில் இருக்கின்றன
என்று நிம்மதியாக இருந்துவிட முடியாத கட்டத்தை இந்தியா இன்று அடைந்திருக்கிறது.
இதுபோன்ற தருணங்களில் ஒரு எழுத்தாளரின் மவுனம் என்பது மன்னிக்கவே முடியாதது.
-ஷிவ் விஸ்வநாதன்,
ஜிண்டால் கல்லூரியின்
பேராசிரியர், 'The Hindu' ஆங்கில நாளிதழில் வெளியான கட்டுரையின் தமிழாக்கம்: ஆசை
ஆங்கிலக் கட்டுரையைப் படிக்க இந்த இணைப்புக்குச் செல்லவும்: http://goo.gl/g4OOhJ
தி இந்து ஆங்கில இதழில் படித்தேன். தமிழில் படித்தபோது நயன்தாராவுடன் மிகவும் அணுக்கமாக இருப்பதைப் போன்ற உணர்வு ஏற்பட்டது. அருமையான மொழிபெயர்ப்பு. தாங்கள் கூறுவதுபோல நயன்தாரா விஷயத்திலும் அரசியல்தான் முதன்மைப்பங்கு வகிக்கிறது என்பது வேதனையே.
ReplyDelete