Thursday, August 10, 2017

முரசொலி: திராவிட முரசு!

புகைப்பட உதவி: யோகா

ஆர். கண்ணன்
(முரசொலியின் 75 ஆண்டுகள் நிறைவையொட்டி 'தி இந்து’ நடுப்பக்கத்தில் என் மொழிபெயர்ப்பில் 10-08-2017 அன்று வெளியான கட்டுரை)

திமுகவின் கட்சி இதழான ‘முரசொலி’ தனது 75-வது ஆண்டில் அடியெடுத்துவைத்திருக்கிறது. 60 ஆண்டு காலம் ஒரு நாள் விடாமல் தினசரி இதழாக வெளிவந்துகொண்டிருக்கிறது. கட்சியின் தலைவரான மு.கருணாநிதி தான் இந்தப் பத்திரிகையின் நிறுவனர். அச்சு ஊடகம் வழியாக அரசியல்ரீதியாகக் குரல் கொடுப்பதென்பது நவீன யுகத்தில் அமெரிக்காவில் வெளியான ‘ஃபெடரலிஸ்ட் பேப்பர்ஸ்’ கட்டுரைகளின் மூலம் குறிப்பிடத் தகுந்த விதத்தில் தொடங்கியது. 1861-ல், பிற்பாடு பிரான்ஸின் பிரதமராக ஆகவிருந்த ஜோர்ஜ் க்ளமான்ஸோ தனது இடதுசாரிக் கருத்தியலைப் பரப்புவதற்காக ஒரு பத்திரிகையைத் தொடங்கினார். அவரைத் தொடர்ந்து 1900-ல் லெனின் ‘இஸ்க்ரா’ என்ற பெயரில் கம்யூனிஸ இயக்கத்துக்கான பத்திரிகையைத் தொடங்கினார். இந்தியாவில், தொழிற்சங்கத்திலும் கம்யூனிஸத்திலும் முன்னோடியான சிங்காரவேலர் 1923 வாக்கில் மாதம் இருமுறை வெளியாகும் இதழைத் தொடங்கினார். தனது சுயமரியாதைக் கொள்கைகளைப் பரப்புவதற்காக பெரியார் ‘குடிஅரசு’ இதழை 1925-ல் தொடங்கினார். 1953-ல் திமுக நிறுவனர் அண்ணா ‘நம் நாடு’ என்ற இதழை திமுகவுக்காக நிறுவினார்.

முதல் குழந்தை

மு.கருணாநிதி தனது வழிகாட்டிகளான பெரியார், அண்ணா ஆகியோரின் பாணியை அச்சு ஊடகத்தில் பின்பற்றினார்; ஆழமாக வேரூன்றியிருந்த சமூக நடை முறைகளுக்குச் சவால் விடுப்பதையும், தமிழ் கலாச்சார தேசியத்தை உயர்த்திப் பிடிப்பதையும் முக்கால் நூற்றாண்டாக அவர் செய்துவந்திருக்கிறார். 90 வயதைக் கடந்தவரான கருணாநிதி ‘முரசொலி’யைத் தனது ‘முதல் குழந்தை’ என்று அடிக்கடி குறிப்பிட்டதில் எந்த ஆச்சரிய மும் இல்லை. திராவிட இயக்கம், திமுக ஆகியவற்றின் லட்சியங்களுக்குப் பயன்படும் விதத்திலான தனது எழுத்துவன்மையை கருணாநிதி ‘முரசொலி’யில் பறைசாற்றினார்; இவ்விதத்தில், ‘முரசொலி’யில் கருணாநிதி யின் எழுச்சிமிகு பேனா வெளிப்படுத்திய சாதுரியமான கவர்ச்சியை அவருடைய எதிரிகளால்கூட அவ்வளவு எளிதில் புறம்தள்ளிவிட முடியவில்லை.

தொண்டர் படையும் அறிவுஜீவிக் குழுவும்

இந்திய அரசியல் வரலாற்றிலேயே திராவிட இயக்கத் தின் அளவுக்கு மேடைப் பேச்சையும் எழுத்துத் திறனை யும் பயன்படுத்திய கட்சி வேறு எதுவும் இல்லை. மேடை நாடகங்களும் திரைப்படங்களும் பெருவாரியான மக்களைச் சென்றடைவதற்கான களத்தைக் கொடுத்தன என்றால், கட்சிப் பத்திரிகைகள் கொள்கைரீதியிலான அணுகுமுறையைத் தேர்ந்தெடுத்தன. மக்களிடமும் தொண்டர்களிடமும் வாசிப்பை ஒரு இயக்கமாகக் கொண்டுசெல்ல ஆரம்ப நாட்களில் திமுகவின் படிப்பகங்கள் மிகவும் துடிப்புடன் செயல்பட்டன. வேலை நேரம் முடிந்த பிறகு, மாலைப் பொழுதுகளில் தொண்டர்கள் ஒன்றுகூடி பத்திரிகைகளை வாசித்தனர். பத்திரிகைகளில் வெளியாகும் கட்டுரைகள், தலையங்கங்கள், கவிதைகள், நாடகங்கள், அறிக்கைகள், சிறுகதைகள் என்று எல்லாவற்றைப் பற்றியும் விவாதிக்க இந்தப் படிப்பகங்களே களம் அமைத்துக்கொடுத்தன. இயக்கத்தில் இருந்தவர்களே ஏராளமான பத்திரிகைகளையும் கொண்டுவந்தனர். இந்தப் பத்திரிகைகளின் மூலம் தங்களுக்கு விசுவாசமாக இருக்கும் தொண்டர் படைகளையும், கூடவே அறிவுஜீவிகளின் அணியையும் கட்டியெழுப்பி, கட்சிக்கு அமைப்புரீதியான ஒரு அரணை உருவாக்கியது இயக்கம்.

தகவல் தொழில்நுட்ப வளர்ச்சி உள்ளிட்ட வெவ்வேறு காலச் சூழல் மாற்றங்களால் அந்தப் படிப்பகங்களெல்லாம் இன்று கடந்த கால நினைவுகளாக ஆகிவிட்டன; திராவிட இயக்கத்தாரால் கொண்டுவரப்பட்ட ஏராளமான பத்திரிகைகள் நின்றுவிட்டன என்றாலும், சில பத்திரிகைகள் காலத்தில் நங்கூரம் பதித்து நீடித்து நின்றன. அவற்றில் தனித்துயர்ந்து நின்றது ‘முரசொலி’. தனது தொடக்கக் காலத்தில் விசுவாசமிக்க தொண்டர்களைத் தன்னகத்தே ஈர்த்துவைத்துக்கொண்டு, கட்சியின் செயல்திட்டங்கள் குறித்த உறுதிப்பாட்டைப் பல்லாயிரக்கணக்கானோரிடம் ஏற்படுத்தியதன் மூலம் காலம் செல்லச் செல்ல, திமுகவினர் மத்தியில் ‘முரசொலி’ வாசிப்பு ஒரு பழக்கமாக, அதாவது அன்றாடச் சடங்கு போல ஆகிவிட்டது. இன்றும் பல திமுக குடும்பங்களில் ‘முரசொலி’ ஒரு அடையாளமாகவே நீடிக்கிறது.

‘அன்புள்ள உடன்பிறப்பே..’

ஒவ்வொரு பத்திரிகையும் தனக்கே உரித்தான சில பிரத்யேக அடையாளங்களைப் பெற்றிருப்பதுபோல, ‘முரசொலி’யில் வாசகர்கள் முதல் கவனத்தை ஈர்ப்பது சமீப காலம் வரை கருணாநிதி தன்னுடைய உடன்பிறப்புகளுக்கு எழுதிவந்த கடிதங்கள்தான். விவிலியத்தின் புதிய ஏற்பாட்டில் உள்ள புனித பவுலின் கடிதங்கள்போல, முரசொலியின் நீண்ட கடிதங்கள் ஒரே நேரத்தில் போதனை செய்யக்கூடியவையாகவும் விவாதிப்பவையாகவும் இருப்பதால், வாசகரைப் பொறுத்தவரை அந்தக் கடிதங்கள் பிரத்யேகமாக அவர்களுக்கென்றே எழுதப்பட்டவை என்ற உணர்வை ஏற்படுத்துகின்றன.

தமிழர்களின் நலன்கள், தமிழ் மொழி - பண்பாடு, சமூகநீதி, இந்தித் திணிப்பு, மாநில சுயாட்சி, விவசாயிகளின், தொழிலாளர்களின் உரிமைகள், பெண்கள் முன்னேற்றம், நிலச் சீர்திருத்தங்கள், சமூக, பொருளாதாரச் சீர்த்திருத்தங்கள், உழைக்கும் வர்க்கம், தேசிய, சர்வதேச நிகழ்வுகள், கட்சியின் நிகழ்ச்சிகள் என்று ஏராளமான விஷயங்களைப் பற்றி அந்தக் கடிதங்கள் விவாதித்தன. திமுக ஆட்சியில் இருந்தபோது, கட்சியின் சாதனைகளை ‘முரசொலி’ பறைசாற்றியது; மதுவிலக்கை நீக்கியது உள்ளிட்ட விஷயங்களில் கட்சியின் நிலைப்பாட்டை அது நியாயப்படுத்தியது; ஆட்சியைக் குறித்தும் திமுகவைக் குறித்தும் எதிர்க் கட்சியினர் செய்த விமர்சனங்களுக்குப் பதிலடி கொடுத்தது. கட்சியை விட்டுப் பிரிந்து சென்ற முன்னாள் பொதுச்செயலாளர் இரா. நெடுஞ்செழியனைக் கட்சிக்குத் திரும்பி அழைத்துகூட 1978-ம் ஆண்டு ‘திறந்த மடல்’களை கருணாநிதி எழுதியதுண்டு.

அரசியல் கனம்மிக்க இதுபோன்ற நீண்ட கடிதங்கள் ‘முரசொலி’யில் 1954 வாக்கிலேயே தொடங்கிவிட்டன. கடிதங்களின் சக்தியைக் கண்டுகொண்டது கருணாநிதி யின் வழிகாட்டியான அண்ணாதான். 1955-ல் அவர் தனது கடிதப் பகுதியைத் தொடங்கினார்; ‘அன்புள்ள தம்பி’ என்று அவரது கடிதங்கள் ஆரம்பிக்கும். அந்தக் கடிதங்களெல்லாம் தொண்டர்களிடையே உத்வேகத்தை ஏற்படுத்தின கூடவே, தொண்டர்களைப் போய்ச்சேர்வதற்கான கட்சியின் மிகப் பிரபலமான வழிமுறை அந்தக் கடிதங்கள்தான். அண்ணாவின் அகால மரணம் அவரது கடிதங்களுக்கு முற்றுப்புள்ளி வைத்தது. கருணாநிதி ஆரம்பத்தில் ‘நண்பா’ என்ற சொல்லைப் பயன்படுத்தினார்; 1971-லிருந்து ‘உடன்பிறப்பு’ என்ற சொல்லைப் பயன்படுத்தினார். அதுநாள்வரை அந்தச் சொல் சபை வழக்கில்கூடப் பெரிய புழக்கத்தில் இல்லை. அதுதான் கருணாநிதியின் புத்திக்கூர்மை.

மூப்பின் காரணமாக கருணாநிதி ஒதுங்கிக்கொண்டபோது, கட்சிக்கு ‘முரசொலி’யும் கடித மரபும் எவ்வளவு முக்கியம் என்பதை உணர்ந்தவராகவே கருணாநிதியின் மகனும் கட்சியின் செயல் தலைவருமான மு.க.ஸ்டாலின் அந்தப் பணியைத் தொடர்பவரானார். அண்ணா, கருணாநிதியின் மரபைப் பின்பற்றிக் கடிதங்கள் எழுதத் தொடங்கியிருக்கும் ஸ்டாலின், தனது கடிதங்களில் தன்னை ‘உங்களில் ஒருவன்’ என்று குறிப்பிட்டுக்கொள்வதன் மூலம், தொண்டர்களுடன் மேலும் நெருக்கமாக்கிக்கொள்ள முனைகிறார்.

முரசொலியும் எம்ஜிஆரும்

திமுக தொண்டர்களுடன் உயிரோட்டமாகத் தன் உறவை வைத்துக்கொள்ள கருணாநிதி ‘முரசொலி’யை எப்படிப் பயன்படுத்தினார் என்பது ஒருபுறமிருக்க, மறுபுறம் கீழே தொண்டர்களும் அடுத்தடுத்த கட்டங்களுக்குத் தன்னை உயர்த்திக்கொள்ள விரும்பிய கீழ்நிலைத் தலைவர்களும் ‘முரசொலி’யை எப்படி ஒரு பாலமாகப் பயன்படுத்திக்கொண்டனர் என்பதும் இங்கே கவனிக்கத்தக்கது. தங்கள் பெயர் வராதா என்ற ஏக்கம் எப்போதுமே கட்சிக்குள் இருந்தது. 1954-லிருந்து கட்சிக் குள் எம்ஜிஆரைச் சக்திவாய்ந்த தலைவராக வளர்த்ததில்கூட ‘முரசொலி’க்கும் ஒரு பங்கு இருந்தது என்று சொல்லப்படுவதிலிருந்து ‘முரசொலி’யின் செல்வாக்கு எவ்வளவு பெரியது என்பது புரியும். அந்தக் காலகட்டத்தில் எம்ஜிஆரின் தர்ம காரியங்கள், சமூக, அரசியல் செயல்பாடுகள் ஒவ்வொன்றைப் பற்றியும் ‘முரசொலி’யில் செய்திகள் வெளியாகின.

நீண்ட காலமாகவே திமுகவினரின் நெருக்கமான பத்திரிகையாக இருந்தாலும், 1969 முதலாகவே திமுகவின் அதிகாரபூர்வ ஏடாக ‘முரசொலி’ செயல்படத் தொடங்கியது (அண்ணாவின் மறைவுக்குப் பிறகு அப்போதுதான் கட்சியின் தலைவராகி இருந்தார் கருணாநிதி). கட்சிக்குள் நடைபெறும் நியமனங்கள், கட்சி நிர்வாகிகளுக்கு எதிரான ஒழுங்கு நடவடிக்கைகள் போன்றவற்றை வெளியிடுவதன் மூலம் அரசியல்வாதிகளை உருவாக்குவதிலும் வளர்த்தெடுப்பதிலும் காணாமலடிப்பதிலும் முக்கியப் பங்கு வகிப்பதானது. கட்சியினர் இடைநீக்கமோ நீக்கமோ செய்யப்படும்போது ‘முரசொலி’யில் கட்டம்கட்டி வெளியாகும் செய்தி மரபே பின்னாளில் ‘கட்டம்கட்டு’ என்ற அரசியல் சொல்லாடலுக்கான காரணமாகயிருந்தது என்று சொல்பவர்கள் உண்டு.

நெருக்கடிநிலையின் நெருப்பாற்றில்…

பொதுச் சமூகத்தில் ‘முரசொலி’ பெரிய கவனத்தை ஈர்த்ததும் அதன் நெடிய வரலாற்றில் மிக காத்திரமான பங்களிப்புமானது நெருக்கடிநிலைக் காலகட்டத்தின்போது, அடக்குமுறைக்கு எதிராக ‘முரசொலி’ காட்டிய தீவிர எதிர்ப்புநிலை! அதன் 75 ஆண்டு கால வரலாற்றின் உச்சம் அது. இந்த எதிர்ப்பையும் சாதுர்யமாகவே அது மேற்கொள்ள வேண்டியிருந்தது. ஏனென்றால், நெருக்கடிநிலையின் மூர்க்கத்தனமான தணிக்கை எல்லாவற்றிலும் கத்தரியை வைத்தது. பத்திரிகையை மூடுவதற்கான சாத்தியங்களைத் தேடிக்கொண்டிருந்தது. அரசியல்ரீதியிலான எழுத்துகளை நோக்கி நெருக்கடிகால இந்திரா அரசு கோபப் பார்வை வீசியதால், ‘வெண்டைக்காய் வழவழப்பாய் இருக்கும்’, ‘விளக்கெண்ணெய் சூட்டைத் தணிக்கும்’ என்றெல்லாம் தலைப்பிட்டு கடிதங்களை வெளியிட்டார் கருணாநிதி. அப்போது மிசா சட்டத்தின் கீழ் திமுகவினர் கைதுசெய்யப்பட்டனர். இந்தச் செய்தியை நேரடியாக வெளியிட்டால் தணிக்கையில் சிக்கிவிடும் என்பதற்காக பிப்ரவரி 3, 1976 அன்று, அதாவது அண்ணா வின் நினைவு நாள் அன்று, வெளியிட்ட செய்தியின் தலைப்பு இதுதான்: ‘அண்ணா நினைவிடம் சென்று மலர் வளையம் வைக்க வர இயலாதோர் பட்டியல்’.

இடர் கால ஆபத்பாந்தவன்

ஆட்சியிலிருந்தாலும் சரி, எதிர்க்கட்சி வரிசையில் இருந்தாலும் சரி; ஒரு பேரிடரை நாடு எதிர்கொள்ளும்போது நிவாரணத்தில் தன்னை உடனடியாக ஈடுபடுத்திக்கொள்வது ‘முரசொலி’யின் மரபு. வாசகர்களிடம் நிதி திரட்டி அரசுக்கு அளித்துவிடும். ‘முரசொலி’ மீதான விமர்சகர்களின் விமர்சனங்களில் முதன்மையானதும் தொடர்ச்சியானதும் எதுவென்றால், எதிராளிகள் மீதான கொச்சையான விமர்சனங்களை வெளியிடுவதும் தரக்குறைவான மொழியைத் தேர்ந்தெடுப்பதும்.

தனது 75-வது ஆண்டிலும், தொழில்நுட்பத்தின், தகவல் தொடர்பின் யுகத்திலும் காலத்திற்கேற்ப ‘முரசொலி’ மாற்றமடைந்திருப்பதுபோல் தோன்றுகிறது. சுற்றுச்சூழல், நீர்நிலைகள் பராமரிப்பு சார்ந்தும், மரம் நடுதல், மாசுபாடு போன்றவை சார்ந்தும் கட்சியினரின் செயல்பாடுகளைப் பற்றி ‘முரசொலி’ தனது பக்கங்களில் கவனப்படுத்துகிறது. மேலும், தமிழ்க் கலாச்சார தேசியம் தொடர் பான தனது அடிப்படைக் கொள்கைகளில் சமரசம் செய்துகொள்ளாமல் இந்த நவீன காலத்துச் சவால்களை எதிர்கொள்வது குறித்தும் ‘முரசொலி’ தனது பக்கங்களில் கவனப்படுத்துகிறது. தமிழ்ப் பெருமிதத்தின் மீதும் தமிழின மேன்மையின் மீதும் தீவிரமான பிடிப்பு கொண்டிருப்பதுபோல் சிறப்பான அரசு நிர்வாகம், சேவைகள் மக்களைச் சென்றடைதல், வளர்ச்சி, வேலைவாய்ப்புகள், பசுமையான எதிர்காலம், வளம் போன்றவற்றின் மீதும் பிடிப்பு கொண்டிருப்பதால், வருங்காலத்திலும் ‘முரசொலி’ மிக முக்கியமான கட்சி இதழாக நீடிக்கும் என்பதில் சந்தேகமில்லை.

- ஆர்.கண்ணன், இராக்குக்கு உதவுவதற்கான ஐ.நா.வின் குழுவின் தலைவர், அண்ணா, எம்.ஜி.ஆர், ஆகியோரின் வாழ்க்கை வரலாற்று நூல்களை எழுதியவர்.

தமிழில்: ஆசை
- நன்றி: ‘தி இந்து’

No comments:

Post a Comment