Saturday, May 18, 2013

பேயோன் 1000


ஆசை  
        20ஆம் நூற்றாண்டில் போர்ச்சுகீசிய மொழியின் பெரும் கவிஞன் பெர்னாண்டோ பெஸ்ஸோவா வெவ்வேறு ஆளுமைகளைச் சிருஷ்டித்து அந்த ஆளுமைகளுக்கென்று கற்பனை வரலாறுகளையும் சிருஷ்டித்து அந்தந்தப் பெயரில் தனித்தனிப் பாணியில் கவிதைகளும் எழுதிக் குவித்தார். (இந்த விமர்சனத்தை இப்படித்தான் தொடங்க வேண்டும்).



         அந்த மாதிரி தமிழ் இலக்கியத்தில் யாராவது ஏதாவது செய்வார்களா என்று நான் வெகு நாட்களாக எதிர்பார்த்துக்கொண்டிருந்தேன். அந்த எதிர்பார்ப்பைச் சிறிதளவு ஈடுசெய்ய இதோ பேயோன் வந்துவிட்டார்.
       யார் இந்தப் பேயோன் என்று வலைப் பதிவர் உலகத்தில் ஒரே சலசலப்பு. பெரும்பாலும் ஜெயமோகன் அல்லது எஸ். ராமகிருஷ்ணன் இவர்கள் இரண்டு பேரில் ஒருவராகத்தான் இருக்கும் என்று நிறைய பேர் தலையைப் போட்டுப் பிய்த்துக்கொண்டு இருக்கிறார்கள். பேயோன் வலைப்பூ ஆரம்பித்துத் துண்டிலக்கிய பிரதிகளில் ஒரு கலக்கு கலக்கியதோடு மட்டுமல்லாமல் ட்விட்டரிலும் பெரிய கலகத்தையே நிகழ்த்திக்கொண்டிருக்கிறார். இவர் தன்னை யாரென்று வெளிப்படையாகச் சொல்லாதபோதும் தன்னை எஸ். ராமகிருஷ்ணனாகக் காட்டிக்கொள்வதற்காகப் பொய்யான தடயங்களைத் தருகிறார். என்றாலும் என்னால் நம்ப முடியவில்லை. எஸ். ராமகிருஷ்ணனே வந்து நான்தான் பேயோன் என்று ஆதாரத்தோடு சொன்னாலும் நான் நம்ப மாட்டேன். ராமகிருஷ்ணனாவது நகைச்சுவை உணர்வாவது, என்பது அவரது வாசகர்களுக்குத் தெளிவாகத் தெரியும். டவுன்லோட் செய்தாலும் அவருக்கு வராத ஒரே விஷயம் நகைச்சுவைதான். எனவே பேயோன் நிச்சயமாக ராமகிருஷ்ணன் அல்ல. ஜெயமோகனுக்கும் பேயோனுக்கும் நிறைய ஒற்றுமைகளைப் பார்க்க முடியும். ஜெயமோகன் தனது இணையதளத்தில் முன்பு எழுதிய நகைச்சுவைக் கட்டுரைகளையும் பேயோனின் ட்விட்டுகளையும் ஒப்பிட்டுப் பார்த்தால் இந்த ஒற்றுமைகள் தெரியும்.
           சீட்டுக்கவி, சாற்றுக்கவி, சித்திரக்கவி என்ற விதவிதமான வகைகளை அனுபவித்த தமிழ் இலக்கியத்துக்கு இந்த ட்விட்டர் கவி மிகவும் வித்தியாசமான வரவு. உலக சினிமாவையும் உலக இலக்கியத்தையும் கரைத்துக் குடித்த எழுத்தாளர்களைத் தன்னுடைய சுயஎள்ளல் என்ற போர்வையில் வேப்பிலை அடித்திருக்கிறார் பேயோன். வேண்டுமென்றே செய்யப்பட்ட எழுத்துப் பிழைகள், தகவல் பிழைகள், வலைத்தள சுட்டிகள், (போலி) பாஷோ கவிதை மொழிபெயர்ப்புகள் என்று எக்கச்சக்கமாக ட்விட்டியிருக்கிறார் பேயோன். இந்தப் புத்தகத்தின் வடிவமைப்பும் வடிவமும் நன்றாயிருந்தாலும் புத்தகத்தில் பயன்படுத்தப்பட்ட எழுத்துரு (font) சரியில்லை. போயோனின் கலகம் தொடர வாழ்த்துக்கள்.


புத்தகத்தில் எனக்குப் பிடித்த ட்விட்டுகளில் சில:   

            ***
இரானிய சினிமா மட்டும் இல்லை என்றால் நாமெல்லோரும் எங்கே இருப்போம்? நினைக்கவே பதறுகிறது.

***
வில்லனாக நடிப்பீர்களா என ஒரு இயக்குனர் கேட்டார். நடிக்க வராது என்றேன். மார்க்வெஸ் பற்றி பேசுங்கள், நாங்கள் டப்பிங் செய்துகொள்கிறோம் என்றார்.

***
இந்த பிளாஸ்டிக் ஸ்டூல் மீது ஒரு ஈ அமர்ந்து என்னையே பார்த்துக்கொண்டிருக்கிறது. எழுதும்போது வண்ணத்துப் பூச்சி என்றுதான் எழுத வேண்டியிருக்கும்.

***
இயக்குநர் பியரி பலர்டியு இறந்துவிட்டார். பாவம் யார் பெற்ற பிள்ளையோ. அவரைப் பற்றி அறிந்த பின் 2002லேயே அவர் படங்களை பார்த்ததுபோல் எழுத வேண்டும்.

***
காலை வணக்கம். விஜயதசமி நாள். நம் வீட்டு குழந்தைகள் மார்க்வெஸ் படிக்க துவங்க நல்ல நாள்.

***
பெண்களைக் கவர ஆசை என்றாலும் அதற்காக சமகால தமிழ் கவிதை எழுதும் நிலைக்கு ஆளாவதை நான் விரும்பவில்லை. இதற்கு நிச்சயம் ஆக்கபூர்வமான தீர்வு இருக்கும்.

***
எனக்கு ஜெயமோகன் அளவுக்கு வரலாறு தெரியாதோ என்கிற சந்தேகம் நேற்று தூங்கும் நேரம் வாட்ட துவங்கியது...

***
விகடன் என் பத்தியை திரும்ப அனுப்பிவிட்டது. தகவல் பிழை ஒன்றுகூட இல்லையாம். எப்படி நடந்தது இந்த தவறு?

***
எனது புத்தகம் ஒன்றை ஒரு இந்தி பேராசிரியரிடம் மொழிபெயர்க்கக் கொடுத்தேன். படித்துவிட்டு 'பஹூத் போர் ஹே' என்றார். போர்ஹேவுடன் ஒப்பிடுகிறார்.

***
என் மகன் எனக்கு சரியான இலக்கிய வாரிசாக வருவான் என தோன்றுகிறது. 'அர்த்தம்னா என்னப்பா அர்த்தம்?' என்று கேட்கிறான்.

***
மைக்ரோனீஷிய மொழி என ஒரு மொழி இருக்கிறதா? அந்த மொழி சினிமாவை பார்த்தாக வேண்டுமே...

***
இன்று எதைத் தெரிந்தாற்போல காட்டிக்கொள்வது?  யோசிக்கிறேன்...


பேயோன் 1000, பேயோன், 128 பக்கங்கள். விலை ரூ. 60.
ஆழி பதிப்பகம். சென்னை.
(தமிழ் இன்று இணைய இதழுக்காக 2010இல் எழுதிய மதிப்புரை)

2 comments:

  1. இப்போது பா.ராகவன்தான் பேயோன் என்று உறுதியாகச் சொல்கிறார்கள்!

    ReplyDelete
    Replies
    1. நண்பரே பா. ராகவன் இல்லை. பேயோன் யார் என்று எனக்கு இப்போது மிகத் தெளிவாகத் தெரிந்துவிட்டது. அவர் தன் ரகசியத்தைக் காத்துக்கொண்டிருப்பதால் எனக்கு அதை உடைப்பதில் விருப்பமில்லை.

      Delete