காந்தியின் பிறந்தநாளை முன்னிட்டு எனது ‘ஹே... ராவண்!’ (2025, எதிர் வெளியீடு) கவிதைத் தொகுப்பிலிருந்து சில கவிதைகள்:
இன்னொன்று
சீதையின் துயரைத்
தலைநகராகக் கொண்டது
ஒன்றில்
சீதைக்கென்று
எப்போதும் அக்னி
எரிந்துகொண்டிருக்கும்
இன்னொன்றில்
சீதைக்காக ராமனே
எப்போதும் அக்னியில் இறங்குவான்
ஒன்றில்
ஒரே ஒரு ராமன்தான்
மீதமுள்ள எல்லோரும்
அனுமன்கள்
நிமிடந்தோறும்
நெஞ்சைப் பிளந்து
அதன் உள்ளே சீதையற்ற ராமன்
படத்தைக் காட்ட வேண்டியவர்கள்
காட்ட மறுப்போரெல்லாம்
வாலிகள் ராவணன்கள்
கும்பகர்ணன்கள் தாடகைகள்
சூர்ப்பநகைகள்
வதம் செய்ய வேண்டியவர்கள்
இன்னொன்றில்
எல்லோருமே ராமர்கள்
அவர்களாகவே தம் நெஞ்சைப் பிளந்து காட்ட
அதில் அனுமன்கள் சீதைகள்
வாலிகள் இராவணன்கள்
கும்பகர்ணன்கள் தாடகைகள்
சூர்ப்பநகைகள்
தெரிவார்கள்
ஒன்றில்
ஒரே ஒரு சிம்மாசனம் மட்டும்
இருக்க
அதில் வீற்றிருந்து
ஆட்சி செய்யும்
ராமனின் பாதுகைகள்
இன்னொன்றில்
சிம்மாசனமே இருக்காது
இரண்டு ராமராஜ்ஜியங்களும்
சந்தித்துக்கொண்டன
ஒன்று
‘ஜெய்ஸ்ரீராம்’ என்று சொல்லிக்
கையில் வில்லெடுத்து
அம்பெய்தது
இன்னொன்று
‘ஹே ராம்’ என்று சொல்லி
மார்பில் அந்த அம்பை வாங்கி
மண்ணில் வீழ்ந்தது
*
2. துப்பாக்கித்தனத்தை வீழ்த்தும் உடல்
**
அன்றொரு துப்பாக்கி நீண்டது
உலகின் மிகமிக எளிய
இலக்கொன்றை நோக்கி
துப்பாக்கித்தனத்தையும் தாண்டி
தன் இலக்குக்கு
முறையாக மரியாதைகள் செய்துவிட்டே
நீண்ட துப்பாக்கிதான் அது
எவ்வளவு நல்ல துப்பாக்கி அது
என்று இன்றும் சிலாகிக்கப்படுவதுண்டு
இலக்கின் உடல் மீது
தனிப்பட்ட கோபம் ஏதுமில்லை துப்பாக்கிக்கு
ஆனால் அவ்வுடலின்
விரிந்த கைகள்…
'உனக்கு விரிந்த கைகளில்லை’
என்றல்லவா
இடைவிடாமல் சொல்கின்றன
துப்பாக்கியிடம்
எந்த அளவுக்கு முடியுமோ
அந்த அளவுக்குச் சுருங்கி
எந்த அளவுக்கு முடியுமோ
அந்த அளவுக்கு இறுகிப்போய்த்
தன்னைப் பற்றியிருக்கும் கைகளையே
என்றும் விரும்பும் துப்பாக்கி
அதுமட்டுமா
‘துப்பாக்கியை என்றுமே நான் வெறுத்ததில்லை
துப்பாக்கித்தனத்தையே வெறுக்கிறேன்.
வா, துப்பாக்கியே உன்னை அணைத்துக்கொள்கிறேன்’
என்று சொல்லிக்கொண்டு
அணைக்க முயல்கின்றன அந்தக் கைகள்
துப்பாக்கிக்கும் கருணைசெய்வதான
கடவுள் பிம்பத்தை
அந்த எளிய இலக்கின் உடலுக்கு
அதன் விரிந்த கைகள்
எப்போதும் வழங்கிக்கொண்டிருப்பதை
எப்படி ஏற்றுக்கொள்ள முடியும்
ஒரு துப்பாக்கியால்?
இப்படியெல்லாம்
பிரபஞ்சம் அளாவும்
விரிந்த கைகளின் பாசாங்கு
துப்பாக்கிக்கு இல்லை
ஒரே புள்ளி
பிரபஞ்சத்தை இல்லாமலாக்கிவிடும்
இலக்கு நோக்கி நீள
இதற்கு மேலா காரணம் வேண்டும்?
ஒன்று
இரண்டு
மூன்று…
உலகின் துப்பாக்கித்தனத்தைக் குறிவைத்து
வீழ்ந்துகொண்டிருக்கின்றன அன்றிலிருந்து
உலகின் மிகமிக எளிய இலக்கின்
விரிந்த கரங்கள்
*
3. தோட்டாவுடன் ஒரு ஒப்பந்தம்
காந்தியை
அவர் இதயத்தில் போய்
நேருக்கு நேர்
சந்தித்த தோட்டா
இனி தன் பயணத்தை
நிறுத்திக்கொள்வதாக
அவரிடம் உறுதியளித்தது
அந்த ஒப்பந்தத்தை
உலகறியத்
தன்முகத்தில்
படிய விட்டுப்
படிக்கக் கொடுத்தபடி
படுத்திருந்தார்
காந்தி
தோட்டா நின்ற
நிச்சலனம்தான்
அவர் முகச் சாந்தம்
முழுமையை எட்டியதற்கு
இப்போது வரை
முழுமுதற் காரணம்
*
4. இலக்கு அட்டையின் இதயம்
இலக்கு அட்டையின்
இதயத்தை
வேறெவரையும் விட
வேறெதனையும் விட
துல்லியமாய்ப் பார்த்தது
துல்லியமாய்ப் பாய்ந்தது
அந்தத் தோட்டாதான்
என்றும் சொல்லியிருக்கிறார்
ஆஷிஸ் நந்தி
அப்படியொரு தோட்டா வந்து
ஆரத்தழுவும்போது
எப்படிப்பட்ட இதயமும்
ஒரு கணமோ
ஒரு யுகமோ
ஸ்தம்பித்துதானே
ஆக வேண்டும்
இது தோட்டாவின் நினைப்பு
இதயத்தில் பாய்ந்தாலும்
ஒருபோதும்
தான்
இதயத்தின் உறுப்பாய்
ஆகிவிட முடியாது
என்பதை யறியுமந்தத்
தோட்டா
ஆவதற்கும்
முயல்வ தில்லையந்தத்
தோட்டா
இங்கேதான்
இதயத்தின் பிரச்சினை
தன்னொரு உறுப்பாய்த்
தோட்டாவைத் தடவிக்கொடுக்க
ஆரம்பித்துவிடுகிறது
அதுவும்
துயில்கொண்டுவிடுகிறது
நிரந்தரமாய் அங்கே
எந்த இதயத்துள்
துயில்கின்றோம்
என்ற நினைவழிந்து
*
5. ராமர் நடந்த தொலைவு
கதைகளிலும்
உங்கள் கற்பனை ராஜ்யத்திலும்
நீங்கள் கண்டுவந்த
ராமனை
நேரில் கண்டால்
என்ன கேட்பீர்கள்
காந்தி மகாத்மா
ஹே ராம்
என் வலுவிழந்த
கால்களுடனும்
உடலுடனும்
மனதுடனும்
இந்த கல்கத்தா வீதிகளிலும்
நவகாளியிலும்
பிஹாரிலும்
இந்தக் கிழவன்
நடந்து தளர்ந்துவிட்டேன்
நடந்த தொலைவையெல்லாம்
நடக்க வேண்டிய தொலைவு
விழுங்கிவிடுகிறது
அத்தொலைவையொரு வில்லாய்
எடுத்தது கண்டார்
இற்றது கேட்டாரென்று
முறித்துப் போட
மாட்டாயோ
என்று கேட்பேன்
கவிஞர்ஜீ
ஹே ராம்
அதுவும் முடியாதெனின்
மிச்சமுள்ள
தொலைவை
எனக்காய்
நடந்து கடக்க முடியாதோ
என்று கேட்பேன்
கவிஞர்ஜீ
முதல் வில்லால்
சரம்சரமாய்
ராமர் எடுத்த
வில்லெல்லாம்
எண்ணிலடங்காதவை
அவை எடுத்த உயிரெல்லாம்
கம்பன்
பண்ணிலடங்காதவை
காந்தி மகாத்மா
மேலும்
ராமர்
நடந்து கடந்த தொலைவெல்லாம்
இன்னும் நம்முன்
கிடந்து தொலைக்கிறது
இதயத்துள் நெடுவலி
குடைந்து தொலைக்கிறது
காந்தி மகாத்மா
உங்கள்
கால்களுக்கும்
ராமர் கால்களுக்கும்
நீங்கள்
எவ்வளவு முயன்றாலும்
ஓய்வே கிடையாது
நடந்து தீருங்கள்
காந்தி மகாத்மா
ஆனால்
ஒன்று அறிந்துகொள்ளுங்கள்
வில்லெடுத்தவன்
வில்லால் மடிவான்
நடை எடுத்தவன்
நடையால் மடிவான்
காந்தி மகாத்மா
*