ஆசை
'இந்து தமிழ் திசை’ நாளிதழில் இன்று 9-ம் ஆண்டில் அடியெடுத்துவைக்கிறது. இந்த 8 ஆண்டுகால பயணத்தில் ’இந்து தமிழ் திசை’யின் முதல் நாளிலிருந்தே அதனுடன் நான் இருந்துவருகிறேன். இந்தப் பயணத்தைத் திரும்பிப்பார்க்கும்போது மலைப்பாக இருக்கிறது. அகராதி, பதிப்புத் துறை போன்றவற்றில் பணியாற்றிய எனக்குப் பத்திரிகை அனுபவம் ஏதும் கிடையாது. எனினும் என் மீது நம்பிக்கை கொண்டு ஆசிரியர் அசோகன் அவர்களும் நடுப்பக்கத்தின் முன்னாள் ஆசிரியர் சமஸும் என்னைத் தேர்ந்தெடுத்தார்கள். அன்றிலிருந்து இன்றுவரை விதவிதமான அனுபவங்களுடன் இந்தப் பயணம் தொடர்ந்துகொண்டிருக்கிறது.
மன்னார்குடிக்கு அருகில் உள்ள வடுவூர் புதுக்கோட்டை என்ற குக்கிராமத்தைச் சேர்ந்தவனும் முதல் தலைமுறைப் பட்டதாரியுமான எனக்கு ‘தி இந்து’ குழுமத்தில் பணிபுரிய கிடைத்த வாய்ப்பு என்பது உண்மையிலேயே பெரிய விஷயம். கனவு காண்பதற்கும் அதை நிறைவேற்றிக்கொள்வதற்கும் எனக்கும் உரிமை இருக்கிறது என்று நான் உணர்ந்துகொண்ட தருணம் இந்த வாய்ப்பு. எனது இந்த வாய்ப்பை நான் முடிந்தவரை ஒரு சமூகக் கடமையாகவே பயன்படுத்தியிருக்கிறேன் என்று நம்புகிறேன்.
அநேகமாக, தீவிர எழுத்தாளர்கள் பலரும் வேறெந்த வெகுஜன இதழைவிடவும் இதில் அதிகமாக எழுதியிருக்கிறார்கள் என்று கருதுகிறேன். இந்த விஷயத்தில் நடுப்பக்கத்தின் ஒரு அங்கமான எனக்கும் ஒரு பங்கிருக்கிறது என்பதில் எனக்கு மகிழ்ச்சியும் பெருமையும். இது எனது கடமை என்றே நினைக்கிறேன். நான் எனது ஊட்டச்சத்தை எங்கே பெற்றேனோ, பெற்றுக்கொண்டிருக்கின்றேனோ அந்த இலக்கிய உலகத்துக்கு நன்றிக் கடன் ஆற்றுவது முக்கியம் அல்லவா! இது தவிர, காந்தி, நேரு, பெரியார், அம்பேத்கர், அண்ணா, பாரதியார், வ.உ.சி., உள்ளிட்ட ஏராளமான தலைவர்களின் பிறந்த நாள், நினைவு நாட்களில் அவர்களை ஒரு பக்க அளவிலோ இரண்டு பக்கங்கள் அளவிலோ சிறப்பித்துவருகிறோம். அதே அளவுக்குத் தலைசிறந்த எழுத்தாளர்களின் பிறந்தநாள், நினைவுநாள், அல்லது அவர்களின் மரணத்தின்போது அவர்களைச் சிறப்பித்துவருகிறோம். தமிழ் எழுத்தாளர்களையும் தமிழையும் கொண்டாடும் ‘யாதும் தமிழே’, ‘இந்து தமிழ் லிட்ஃபெஸ்ட்’ உள்ளிட்ட விழாக்களை நடத்தி கி.ராஜநாராயணன், ஐராவதம் மகாதேவன், இந்திரா பார்த்தசாரதி, கோவை ஞானி, விக்ரமாதித்யன், இமையம், பா.வெங்கடேசன், சீனிவாச ராமாநுஜம், கீரனூர் ஜாகீர்ராஜா, தமயந்தி, சயந்தன் உள்ளிட்ட முக்கியமான எழுத்தாளர்கள், அறிஞர்களுக்கு ‘தமிழ் திரு’ விருதை ‘இந்து தமிழ் திசை’ வழங்கியிருக்கிறது. அதிலும் முக்கியப் பங்குவகித்தமை குறித்து எனக்குப் பெருமகிழ்ச்சி!
‘தி கார்டியன்’, ‘தி நியூயார்க் டைம்ஸ்’, ‘தி இந்து’ (ஆங்கிலம்) உள்ளிட்ட நாளிதழ்களிலிருந்து மூத்த சகா சாரி அவர்களும் நானும் நூற்றுக் கணக்கான கட்டுரைகளை மொழிபெயர்த்திருப்பதில் எங்களுக்குப் பெரும் மனமகிழ்வு! இது ஒரு வகையில் உலகக் காற்று மேலதிகமாக என் சிந்தனையில் படுவதற்கான பயிற்சியாகவும் அமைந்தது. காந்தி, நேரு, அம்பேத்கர், அண்ணா போன்றோரின் எழுத்துகளையும் உரைகளையும் மொழிபெயர்த்தது மட்டுமல்லாமல் ஜார்ஜ் ஆர்வெல், ஆலிவர் சாக்ஸ், ஸ்டீவன் ஹாக்கிங், வில்லியம் டால்ரிம்பிள், பால் க்ரூக்மன், ஸ்லேவோஜ் ஜிஜெக், ராமச்சந்திர குஹா என்று பல உலக எழுத்தாளர்கள், அறிவியலர்கள், ஆய்வாளர்களின் கட்டுரைகள் தமிழில் முதன்முதலில் ஒரு வெகுஜனப் பத்திரிகையில் வந்தது என்றால் அது ‘இந்து தமிழ் திசை’யில்தான் இருக்கும். இந்த மொழிபெயர்ப்புகளைச் செய்ய எனக்குக் கிடைத்த வாய்ப்பு பெரும் பேறு! இதன் மூலம் நான் கற்றுக்கொண்டது ஏராளம். கூடவே, நிறைய அறிவியல் கட்டுரைகளை எழுதிப் பார்க்கவும் எனக்கு வாய்ப்பு கிடைத்தது. தமிழுக்காக ‘அறிவோம் நம் மொழியை’ என்ற ஒரு சிறு பத்தியையும் சில காலம் எழுதினேன். இந்தப் பத்தியில் வாசகர்களும் நானும் சேர்ந்து ஏராளமான புதுச் சொற்களை உருவாக்கினோம். ‘இந்து தமிழ் திசை’ இணையதளத்தில் 2017-ல் ஜனவரி 30 தொடங்கி தினமும் ஒரு அத்தியாயம் என்று ‘என்றும் காந்தி’ தொடரை எழுதும் வாய்ப்பை இணையதள ஆசிரியர் திரு பாரதி தமிழன் வழங்கினார். காந்தி 150-ம் ஆண்டை முன்னிட்டு ‘இந்து தமிழ் திசை’யின் நடுப்பக்கத்தில் ‘காந்தியைப் பேசுதல்’ என்ற தொடரை ஓராண்டு எழுதும் வாய்ப்பும் கிடைத்தது. இறுதியில் இரண்டு தொடர்களும் ஒன்றிணைக்கப்பட்டு காந்தி 150-ம் ஆண்டிலேயே ‘என்றும் காந்தி’ என்ற நூலாக வெளியிடப்பட்டது என் வாழ்வில் மறக்க முடியாத நிகழ்வு. ‘பெண் இன்று’ இணைப்பிதழில் உலகப் பெண் கவிஞர்களின் கவிதைகள் மொழிபெயர்ப்போடு ’மொழியின் பெயர் பெண்’ என்று தொடரை எழுத அந்த இணைப்பிதழின் பொறுப்பாசிரியர் சகோதரி பிருந்தா ஒரு வாய்ப்பை வழங்கினார். 17 அத்தியாயங்கள் எழுதினேன். இடையில் சிறிது காலம் ‘இந்து’ குழுமத்திலிருந்து வெளியாகும் ‘காமதேனு’ வார இதழில் இடம்பெற்றிருந்தபோது ‘தாவோ தே ஜிங்’ பற்றி ‘தாவோ-பாதை புதிது’ என்ற தொடரும் காவிரிப் படுகை முழுவதும் பயணித்து ‘நீரோடிய காலம்’ என்ற தொடரும் எழுத வாய்ப்பு கிடைத்தது.
இந்தப் பயணத்தில் குறிப்பிட வேண்டிய விஷயங்களுள் முக்கியமானவை கலைஞர் பற்றி உருவாக்கிய ‘தெற்கிலிருந்து ஒரு சூரியன்’ நூல், அறிஞர் அண்ணா பற்றி உருவாக்கிய ‘மாபெரும் தமிழ்க் கனவு’ பெருநூல் ஆகியவற்றில் நானும் இடம்பெற்றதுதான். அறிஞர் அண்ணாவின் ஆங்கில உரைகளைத் தமிழில் மொழிபெயர்த்தபோதுதான் அவரைப் பற்றி இளம் வயதிலிருந்து மேம்போக்காக நானும் பலரும் அறிந்துவைத்திருக்கிறோம் என்று தெரிந்தது. அண்ணா என்ற ஆளுமையை மறுகண்டுபிடிப்பு செய்துகொள்ள எனக்குக் கிடைத்த மகத்தான வாய்ப்பு அது!
மதச்சார்பின்மை, மனிதநேயம், ஒருமைப்பாடு, சமூகநீதி, ஜனநாயகம், கூட்டாட்சி போன்ற அடிப்படையான விழுமியங்களை எனது இதழியல் அனுபவத்தில் நான் கூடுமானவரை கடைப்பிடித்துவந்திருக்கிறேன் என்றே நினைக்கிறேன். இதற்கு காந்தி, பெரியார், அம்பேத்கர், அண்ணா என்ற முன்னோடிகள் முக்கியக் காரணம். இந்த விழுமியங்களைக் கூட இருந்து கற்றுக்கொடுத்தவர் சமஸ். அவருக்குப் பெரும் நன்றி!
‘இந்து தமிழ் திசை’யுடனான பயணம் இன்னும் எனக்கு நிறைய கற்றுத்தரும் என்ற நம்பிக்கையுடன் அதனுடன் இணைந்து சென்றுகொண்டிருக்கிறேன். எனக்கு இதுவரை ஆதரவு தந்திருக்கும் ஆசிரியர் அசோகன், சமஸ் இருவருக்கும் மனமார்ந்த நன்றி! எனது நடுப்பக்க சகாக்கள், இணைப்பிதழ், செய்திப்பிரிவு, இணையதளம், காமதேனு போன்ற அனைத்துப் பிரிவுகளிலும் பணிபுரியும் சகாக்களுக்கு நன்றியும் அன்பும்!
எல்லோருக்குமான மந்திரத் தாயத்து ஒன்றை காந்தி அளித்திருக்கிறார்: "நான் உங்களுக்கெல்லாம் ஓர் மந்திரத் தாயத்து அளிக்கிறேன். முடிவெடுக்கையில் அது சரியா, தவறா என்கிற ஐயப்பாடு எழும்போதோ, அல்லது உமது அகந்தையோ சுயநலமோ தலைதூக்கும்போதோ இந்தச் சோதனையைப் பயன்படுத்துங்கள். நீங்கள் பார்த்துள்ள, ஏழ்மைமிக்க, மிக மிக நலிவுற்ற முகத்தை ஞாபகப்படுத்திக் கொள்ளுங்கள். நீங்கள் செய்யவிருக்கும் காரியம், எடுக்கவிருக்கும் நடவடிக்கை, தீட்டவிருக்கும் திட்டம், அந்தப் பரம ஏழைக்கு எவ்விதத்திலாவது பயன்படுமா? அவன் தன் அன்றாட வாழ்க்கையையும், வருங்கால வாழ்வையும் வளமாக்கி அவனது கட்டுப்பாட்டில் இருத்திக்கொள்ள வகைசெய்யுமா? இதையே வேறுவிதமாகச் சொல்லப்போனால், பசிப்பிணியாலும் ஆன்மிக வறட்சியாலும் வாடும் லட்சக்கணக்கான மக்களுக்கு உண்மையில் சுயராஜ்யம் (சுயதேவை பூர்த்தி) கிடைக்கச் செய்யுமா என்று உங்களையே கேட்டுக்கொள்ளுங்கள். அதன்பின் உங்களது ஐயங்களும் சுயநலமும் கரைந்து மறைந்து போவதைக் காண்பீர்கள்.''
இதழியலிலும் இதை நான் பின்பற்ற வேண்டும் என்று உளமார ஆசைப்படுகிறேன்.