ஜி.குப்புசாமி
கவிதை பிறப்பது பெரும்பாலும் உளத்தூண்டலாலும், மனவெழுச்சியாலும் என்பதால் கவிஞனின் மனதில் அது உருவாகும் கணத்தைத் துல்லியமான சொற்களால் விவரிக்கமுடிவதில்லை. தூண்டல், எழுச்சி இவற்றோடு பீடித்தலும் கவிதையைக் கொண்டுவரும் என்பதற்கு சமீபத்தைய சான்று ஆசையின் ‘அண்டங்காளி’ தொகுப்பின் கவிதைகள்.
தனக்கு சிறுவயதிலிருந்தே கடவுள் நம்பிக்கை இருந்ததில்லை என்று முன்னுரையில் குறிப்பிடும் ஆசை, காளியின் உக்கிரத்துக்கு ஆட்பட்டு, அருள்வயப்பட்ட நிலையில் இக்கவிதைகளை எழுதி முடித்தபின்பும் கடவுள் நம்பிக்கை வரவில்லை என்றே சொல்கிறார். காளியைப் போலவே கண்ணனும். தெய்வ உருக்கள் என்பதைமீறி cultish phenomenon களே. அவர்களால் பீடிக்கப்படுவதற்கு கடவுள் நம்பிக்கை வேண்டுமென்பதில்லை. இத்தாலியின் ராபர்டோ கலாஸ்ஸோவும் ஜெர்மனியின் குந்தர் கிராஸும் உதாரணங்கள்.
தமிழின் மகத்தான கவிஞன் ஒருவனையும் இதற்கு முன்பு காளி ஆக்கிரமித்திருக்கிறாள். ‘யாதுமாகி நின்றாய் காளீ… பூதமைந்தும் ஆனாய்….போதமாகி நின்றாய்…இன்பமாகி நின்றாய்… என்னுள்ளே புகுந்தாய்…பின்பு நின்னையல்லால் பிறிது நானும் உண்டோ காளீ..’ என்று தனக்குள் வியாபித்திருக்கும் ஒரு பெரும் சக்தியை உன்மத்தநிலையில் பாரதி உபாசிக்கிறான். மந்தமாருதத்தில் கரையும்போதும், வானத்தை நோக்கும்போதும், மலையுச்சியில் நிற்கும்போதும், சிந்தை எங்கெங்கோ செல்லும்போதும் அங்கெல்லாம் அவனுக்கு யாதுமாகி நிற்கிறாள் காளி. இது பக்தி என்ற வகைப்பாட்டில் அடங்குமாவென்று சந்தேகமாக இருக்கிறது. மனம் சாதாரண லௌகீக வாழ்வுநிலையிலிருந்து விடுபட்டு தன்னிச்சையாக ஓர் அதீத உயர்நிலைக்கு சென்றுவிடுவது எல்லோருக்கும் வாய்ப்பதில்லை. உன்னதமான கவிமனம் கொண்டிருப்பவர்களுக்குத்தான் அது நிகழ்கிறது. ஆசையின் இக்கவிதைகளில் அந்தக் கவிமனம் புலப்படுகிறது.
’வெறி கொண்ட தாய்’ எனும் கவிதையில் பாரதி, ‘பேயவள் காணெங்கள் அன்னை – பெரும் பித்துடையாள் எங்கள் அன்னை’ என்று தொடங்கி அடுத்து வரும் வரிகளில் வேதங்கள் பாடுவள் காணீர் – ஓதரருஞ் சாத்திரங்கோடி உணர்ந்தோதி உலகெங்கும் விதைப்பாள் .. பாரதப் போரெனில் எளிதோ – விறல் பார்த்தன் கை வில்லிடை ஒளிர்வாள்‘ என்று அவளை பாரத தேவியாகவே உருவகிக்கிறார்.
ஆனால் இங்கு ஆசைக்கு காளி அவரை ஆட்டுவிக்கும் கருவியாகவே இருக்கிறாள். தாவும் மனமேறி தாளமிடும் மந்தியாக, சீறும் ஒளி சொடுக்கி சீழ்க்கை அடிப்பவளாக, ஏறும் ஒலி முடக்கி ஏகாந்தம் செய்பவளாக, ஆடும் நிலை விரித்து அண்டமிடும் அற்புதமாக இருக்கிறாள்:
பேயவள்காண் எங்கள் அன்னை
பிறப்பறுக்கும் பெருஊழி
தாவும் மனமேறி
தாளமிடுமொரு மந்தி
ஊறும்சுவை விரட்டி
முன்சென்று நுகர்பவள்
பாயும்நதி மூடும்
பாழ்வெளிப் போர்வையவள்
சீறுமொளி சொடுக்கி
சீழ்க்கை அடிப்பவள்
நாறும்மலர் தெறிக்கும்
நர்த்தனங்கள் காட்டுபவள்
ஏறுமொலி முடக்கி
ஏகாந்தம் செய்பவள்
தூறும்விதி ஒழுகும்
தூமைதரு பேரெழிலாள்
ஆடும்நிலை விரித்து அண்டமிடும்
அற்புதமே தேடும் விழிகளைத்
தேய்க்கும் ஒளி அருள்வாயே.
(பக். 26)
காளி என்பவள் அசையாமல் சமைந்திருப்பவள் அல்ல. அவளிடம் எப்போதும் துடிப்பும் துடிப்பும் துள்ளலும் குதித்துக் கொண்டிருக்கின்றன. அந்த குதிப்புக்கேற்றவாறு ஆசையின் சொற்கள் தாளகதியில் வந்து விழுகின்றன.
காலைப் பிடித்திழுத்துச்
சுற்றியேறி குறி படரும் கொடியே
யட்சி யட்சி யட்சி
கொவ்வைக் குறுமுலையின்
குமிழ் வெடிப்பே
யட்சி யட்சி யட்சி…………….
(பக் 27)
குறியடியில்
உன் ஆட்ட மேடை
போட்டது யார்
அதுவும் வெட்கங் கெட்டு
நீ ஆடும் ஆட்டத்துக்குக் கூட
மண்டை ஆட்டுது
பார்
எந்தத்தாளம்
கேட்டது
என்ன ஆட்டம்
கண்டது
அதன் நாவில்
எச்சில் ஊறி
படியிறங்கி
ஏன் கோலம்
போட்டது .
(பக்.73)
•••••••••••••••••••••••••••
ஓசை லயம் தேவையற்ற சொற்களைத் தந்துவிடும் என்பது ஒரு நவீன சிந்தனை . யாப்பிலக்கணத்தின் அடிப்படையிலும் ஓசையும் தாளமும் உள்ளன . இன்றைய கவிதைகள் தாள லயத்தைத் துறந்து சொற்சிக்கனத்தோடு வருபவை . ஆனாலும் ஆசையின் இந்த ‘ காளி ‘ கவிதைகள் இப்போது மரபாகியிருக்கும் நவீன கவிதை முறைக்கு அடங்குவதாக இல்லை. பிரக்ஞை மீறி , அருள்வயப்பட்ட அதீத நிலையில் இக்கவிதைகள் அவரிடமிருந்து வெடித்துக் கொண்டு வருகின்றன .
இருமுனை முடிவின்மையின்
நடுவெளி நர்த்தனம் நீ
தொடுஊழி தரையிறக்கும்
தத்தளிப்பு நீ
கடல்புரியும்
தாண்டவத்தின் தெறிப்பும் நீ
எரிஜோதி இடைபறக்கும்
கொடும்பறவை நீ
அனலுமிழும் கனல் மயக்கும்
பேய்சிரிப்பு நீ
நாத்திகனின் கனவில் வரும்
நடனக்காளி நீ
(பக்.38)
என்ற கவிதையை மண்ணில் காலூன்றி ஸ்திரமாக நின்றிருக்கும் போது ஒரு கவிஞனால் எழுதியிருக்க முடியுமா என்று சந்தேகமாக இருக்கிறது .
காலவரையறைகளைத் தாண்டி முதலும் முடிவுமற்ற அண்டப் பெருவெளியிலிருந்து உருவாகி வந்தவை போல ஒரு eternity இக்கவிதைகளில் இருக்கின்றன. முன்பே சொன்னதைப் போல ஒரு அதீத சக்தியின் பீடிப்பில் கட்டுண்டு இருக்கையில் மட்டுமே இத்தகைய வரிகளைக் கவிஞனால் எழுத முடியும் என்று தோன்றுகிறது . அப்படிப் பார்க்கும்போது இக்கவிதைகளுக்கு முழு பிரக்ஞையில் இருக்கின்ற ஆசை சொந்தம் கொண்டாட முடியாதென்றும் தோன்றுகிறது .
நோபல் பரிசு பெற்ற நாவலாசிரியரும் , கவிஞரும் , ஓவியருமான குந்தர் கிராஸ் 1960 களில் கல்கத்தா நகருக்கு முதன் முறையாக வருகிறார் . அந்நகரம் அவருக்கு ஒரு மகத்தான மனத்திறப்பை ஏற்படுத்துகிறது . அந்த நகரத்தில் இருக்கும் ஏதோ ஒரு மாயசக்தி அவரை மீண்டும் மீண்டும் வருகை தர வைக்கிறது . உலகின் மிகவும் செல்வச் செழிப்பான நாட்டிலிருந்து வந்தவரான குந்தர் கிராஸுக்கு கல்கத்தா நகரின் சேரியும், குப்பை மேடுகளும், அழுக்கும் அசூயை அளிப்பதாக இருந்தாலும் அவற்றை எழுத்தில் பதிவு செய்ய முற்படுகிறார் . இவ்வளவு ஏழ்மையிலும் வங்காளிகள் பெரும் கொண்டாட்டத்துடன் வழிபடும் காளி பூஜையைப் பார்த்துவிட்டு வந்தவருக்கு எழுதமுடியாமற் போய்விடுகிறது . எவ்வளவு முயன்றாலும் ஒரு வரிகூட எழுத முடியவில்லை. ஆனால் திடீரென அவர் கை வரையத் தொடங்குகிறது . எழுதவேண்டிய நோட்டுப் புத்தகத்தில் கோட்டுச் சித்திரங்களாக தன்நிலை மறந்து வரைந்து கொண்டேயிருக்கிறார் . பின்னர் அதைப்பற்றிக் குறிப்பிடும்போது ”நானாக யோசித்து வரையவில்லை .ஏதோ எனக்குள்ளிருந்து என் விரல்கள் மூலமாக வரையவைத்தது” என்கிறார் . வரிசையாக பல சித்திரங்களை வரைந்து முடித்ததும் அவர் ‘ விடுபடுகிறார் ‘ . எழுத நினைத்த வரிகளை வரைந்திருந்த படங்களின் மீதே எழுதுகிறார் . படங்களோடு அவர் கையெழுத்திலேயே அந்த நூல் வெளிவந்திருக்கிறது . புத்தகத்தின் பெயர் : SHOW YOUR TONGUE.
எனைப் பாதியிலே
கொண்டுவந்து
பாழ்வெளியில்
தள்ளிவிட்டாய்
முட்டித்திறப்பேனோ நான்
நீ மூடிவிட்ட பெருங்கதவை
(பக்.28)
என்ற வரிகள் குந்தர் கிராஸின் ‘நாக்கை நீட்டு’ புத்தக அனுபவத்தைத்தான் நினைவூட்டுகின்றன.
இக்கவிதைகளில் திரும்பத் திரும்ப வருகின்ற காமமும், யோனியும், குறியும் அவற்றின் நேரான பொருளில் குறிப்பிடப்படுவதாக நினைக்கத் தோன்றவில்லை. இச்சொற்களுக்கு இணையாக – ஏன் அதிகமாகவே , உடலின் மற்ற பாகங்களும் உணர்ச்சிகளும் வந்துகொண்டே இருக்கின்றன. உடலையும் உணர்ச்சிகளையும் முன்னுரையில் சபரிநாதன் குறிப்பிடிவதைப்போல அண்டத்தின் நுண்வடிவ மாதிரிகளாகவே இக்கவிதைகள் முன்வைப்பதாகத் தோன்றுகிறது. உடல் அவயங்கள் சார்ந்த கவிதைகளிலும் அவை கவிஞனுக்குத் தொந்தரவு தருவதாகவே இருக்கின்றன. அது பொறுக்காமல் கவிஞர் காளியிடம் முறையீடு செய்துகொண்டே இருக்கிறார். ஆனால் ஆடும் கூத்தை காளி நிறுத்துவதாகத் தெரியவில்லை. அவஸ்தையின் உச்சத்தில் இதே அவயங்களைக் கொண்டு கவிஞர் காளியை வணங்கவும் செய்கிறார்:
குறியால் நினைக்கிறேன்
உன்னை
குறியால் தொழுகிறேன்
உன்னை
குறியால் உணர்கிறேன்
உன்னை
குறிகோடி படைத்துத்
தறி நெய்பவளே
குறிபிடித்துக் கூட்டிச் செல்லடி
என்னை
உன் குறியாளும்
பெருமேடைக்கு.
(பக்.40)
**********************************************
இந்த உன்மத்த நிலை ஒரு சித்திரவதைதான். அருள்பாலித்த நிலையில் பரவசமும் பரிதவிப்பும் சமமாக வந்துகொண்டே இருக்கின்றன. இந்நிலையிலிருந்து தன்னை விடுவித்துவிடவும் வேண்டிக்கொள்கிறார். அண்டங்காளி இப்போது அண்டங்களவாணியாகிவிடுகிறார்:
அண்டங்களவாணி
எங்கிருந்து எடுத்து வந்தாய்
என்னை
எடுத்த இடத்தில்
வைத்துவிடடி
என்னை.
(பக்.79)
கவிஞரை அண்டப் பெருவெளிக்குக் கூட்டிச்சென்று அலைக்கழித்துவந்த அண்டங்காளி இறுதியில் மலையேறிவிடுகிறாள்:
காளியவள் களிநடனம்
காட்டிவிட்டாள்
ஆழிதனை ஊஞ்சலென
ஆட்டிவிட்டாள்
ஊழிமனக் காட்சிதனை
நாட்டிவிட்டாள்
பாழிருளைப் படம்பிடித்து
மாட்டிவிட்டாள்
(பக்.83)
என்று காளியம்மை ஆடிய கூத்து நிறைவடைகிறது.
கொஞ்சம் திகைப்பையும், சற்று சிலிர்ப்பையும், மிகவும் பயத்தையும் ஒரே நேரத்தில் உண்டாக்கி ஓர் அலாதியான வாசிப்பனுபவத்தைத் தந்திருக்கும் காளியம்மைக்கும், அவள் ஆசிபெற்ற ஆசைக்கும் நமஸ்காரங்கள்.
---------------------------------------------------------------
அண்டங்காளி
ஆசை
விலை: ரூ.100
புத்தகத்தை வாங்க: டிஸ்கவரி புக் பேலஸ் – 8754507070
அமேஸானில் வாங்க: https://amzn.to/3d6QxEb