Friday, February 14, 2020

மறைந்துகிடக்கும் யாழ்



ரூமி

இவ்வுலகின் யாழையெல்லாம்
நீ உடைத்தாலுமென்ன மௌலா?
வேறுவேறு யாழுண்டு
ஆயிரமாயிரமாய் இங்கே.

காதல் யாழின் பிடிக்குள் விழுந்த நமக்கு
என்ன கவலை, நமது யாழும் குழலும் தொலைந்தால்.

இவ்வுலகின் யாழும் துந்தனாவும் எரிந்துபோனாலும்
மறைந்துகிடக்கும் யாழுண்டு பல, நண்பா.

செவிடுகளின் காதை எட்டவில்லையென்றாலும்
மீட்டொலியும் டங்காரமும் விண்ணைத் தொடும்.
இவ்வுலகின் விளக்குகளும் மெழுகுவர்த்திகளும்
அணைந்துபோகட்டுமே,
சிக்கிமுக்கிக் கல்லும் இரும்பும்
இங்கே இருக்கும் வரை என்ன கவலை?

கீதங்கள் யாவும் கடலின் சருமத்தில் நுரைத்துளிகளே
முத்துக்கள் மிதப்பதில்லை கடலின் சருமத்தில்.
ஆயினுமறிவாய் நுரைத்துளிகளின் வனப்பு
முத்துக்களிடமிருந்து வந்ததென்பதை,

அவனது ஜொலிப்பின் பிரதிபிம்பத்தின் பிரதிபிம்பம் நம் மீது.
கூடல் ஏக்கத்தின் கிளைகளே பாடல்கள் யாவும்
எனினும் வேருக்குக் கிளை என்றும் நிகராகுமோ?

உதடுகள் மூடி இதயத்தின் ஜன்னல் திற
ஆன்மாக்களுடன் பேச அதுதான் வழி.
(தமிழில்: ஆசை)

Thursday, February 13, 2020

வெட்டுக்கிளிகள் நடத்தும் உலகப் போர்




ஆசை
(‘இந்து தமிழ் திசை’ நாளிதழில் 13-02-2020 அன்று வெளியான என் கட்டுரை)

பரிதவித்துக்கொண்டிருக்கிறது ஆப்பிரிக்கா. யேமன், ஓமன் உள்ளிட்ட நாடுகளும் அப்படியே. கடந்த 25 ஆண்டுகளில் மோசமான வெட்டுக்கிளி படையெடுப்பு தற்போது ஆப்பிரிக்க நாடுகளிலும் சில ஆசிய நாடுகளிலும் நிகழ்ந்துகொண்டிருக்கிறது. ஏற்கெனவே, உள்நாட்டுப் போர்களாலும் பஞ்சத்தாலும் தள்ளாடிக்கொண்டிருக்கும் ஆப்பிரிக்க நாடுகள் வெட்டுக்கிளிகளால் பேரபாயத்துக்குத் தள்ளப்பட்டிருக்கின்றன.

வெட்டுக்கிளிகள் எல்லா இடத்திலும் பரவியிருக்கும் பூச்சியினத்தைச் சேர்ந்தவையாகும்.
பச்சை நிறம் கொண்ட இந்தப் பூச்சிகளை கிராமப்புறங்களில் உள்ளவர்கள் தினமும் பார்ப்பதுண்டு. தனித்தனிப் பூச்சிகளாக இவற்றால் எந்த ஆபத்தும் ஏற்படுவதில்லை. ஆனால், தனித்தனிப் பூச்சிகள் கூட்டம் சேரும்போதுதான் அவற்றின் படையெடுப்பு நிகழ்கிறது. பெருங்கூட்டமாக அவை பறக்கும்போது வழியிலுள்ள வயல்களில் எந்த தானியமும் மிஞ்சாத வகையில் வயல்களை மொட்டையடித்துவிடுபவை. இதில் பாலைவன வெட்டுக்கிளிகளால்தான் அதிக அளவு சேதம் ஏற்படுகிறது. தற்போது படையெடுத்திருப்பவை இவைதான்.

வெட்டுக்கிளிகளின் வாழ்க்கை
பாலைவன வெட்டுக்கிளிகளின் ஆயுட்காலம் மூன்றிலிருந்து ஐந்து மாதங்கள் வரை என்று கணிக்கப்பட்டிருக்கிறது. இவற்றின் வாழ்க்கைச் சுழற்சி மூன்று கட்டங்களால் ஆனது. முட்டை, இளம் பூச்சி, வளர்ந்தது. ஒவ்வொரு பெண் வெட்டுக்கிளியும் ஒரு தடவைக்கு நூறு முட்டைகளுக்கும் மேல் இடும். ஒரு பெண் வெட்டுக்கிளி தன் ஆயுட்காலத்தில் மூன்று முறை முட்டையிடும். இந்தக் கணக்கை வைத்துப் பார்க்கும்போது அவற்றின் இனப்பெருக்கத்துக்கு உகந்த மழைக்காலத்தில் வெட்டுக்கிளிகளின் எண்ணிக்கை பன்மடங்கு பெருகும் என்று கணக்கிடப்பட்டிருக்கிறது.

வெட்டுக்கிளிகள் படையெடுக்காத காலகட்டம் ‘அமைதிக் காலம்’ என்று அழைக்கப்படுகிறது. இந்தக் காலத்தில் ஓரளவு தரிசாகவும், பாலைவனமாகவும் உள்ள ஆப்பிரிக்கப் பகுதிகளிலும் ஆப்பிரிக்காவுக்கு அருகிலுள்ள ஆசியப் பகுதிகளிலும் வெட்டுக்கிளிகள் தங்கிவிடுகின்றன. இது 30 நாடுகளையும்  1.6 கோடி சதுர கி.மீ. பரப்பையும் உள்ளடக்கியது. ஆனால், மழை பெய்து அவற்றுக்கு உகந்த தட்பவெப்ப நிலை ஏற்பட்டால் வெட்டுக்கிளிகள் 2.9 கோடி சதுர கி.மீ. பரப்பளவுக்குப் பரவக்கூடியவையாகும். இது 60 நாடுகளை உள்ளடக்கும். இந்த சமயத்தில் உலக மக்கள்தொகையில் 10%-ன் வாழ்வாதாரத்தை வெட்டுக்கிளிகள் பாதிக்கும் என்று கணிக்கப்பட்டிருக்கிறது.  

நூறு கோடி பூச்சிகள் சுமார் 20 சதுர கிலோமீட்டர் பரப்பளவை ஆக்கிரமிக்கும். இந்தப் படை ஒவ்வொரு நாளும் 20 லட்சம் கிலோ பயிர்களை உட்கொள்ளக்கூடியவை. சிறிய அளவிலான வெட்டுக்கிளிகளின் படை கூட 35 ஆயிரம் பேர் ஒரு நாளைக்கு உட்கொள்ளக்கூடிய அளவு உணவை உட்கொள்கிறது. இதுவரை வடகிழக்குப் பகுதியில் 5,000 சதுர கி.மீ. பரப்பளவில் பயிர்கள் நாசமாகியிருக்கின்றன. கென்யாவில் படையெடுத்த வெட்டுக்கிளிகளின் கூட்டம் 100 சதுர கி.மீ. அளவு கொண்டது.

தள்ளாடும் ஆப்பிரிக்கா
தற்போதைய வெட்டுக்கிளி படையெடுப்பு செங்கடலை ஒட்டிய பகுதிகளிலிருந்தும் யேமன், ஓமன் ஆகிய நாடுகளிலிருந்தும் தொடங்கியது. வெட்டுக்கிளிகள் பல்கிப் பெருகுவதற்கு புயலும் அதனால் ஏற்படும் மழையும் பெரும் உதவிபுரிகின்றன. அதுவும் முக்கியமாகப் பாலைவனப் பகுதிகளில் புயலுக்குப் பிந்தைய மழையில் தாவரங்கள் துளிர்க்கத் தொடங்குகின்றன. அந்தப் பிரதேசங்கள்தான் வெட்டுக்கிளிகள் அதிக அளவில் உருவாவதற்குத் துணைபுரிகின்றன. இப்படி 2018-லிருந்து 2019 வரையிலான குளிர்காலத்தில் யேமனிலும் ஓமனிலும் மழைபெய்து வெட்டுக்கிளிகளின் பெருக்கத்துக்கு வழிவகுத்தது. அங்கிருந்து புறப்பட்ட வெட்டுக்கிளிகள் மேற்கே செங்கடலைத் தாண்டி ‘ஆப்பிரிக்காவின் கொம்பு’ என்று அழைக்கப்படும் சோமாலியா, எத்தியோப்பியா ஆகிய நாடுகளை உள்ளடக்கிய பகுதிக்குப் புலம்பெயர்ந்தன. பிறகு, ஜபூடி, எரித்ரியா, தெற்கு சூடான், உகாண்டா, கென்யா பகுதிகளில் ஊடுருவி டான்சானியா வரைக்கும் தற்போது வந்துவிட்டன. மேற்கில் இப்படியென்றால் கிழக்கே, பாகிஸ்தான் வரை வெட்டுக்கிளிகள் படையெடுத்துவிட்டன. இந்தியாவில் ராஜஸ்தான், குஜராத் வரை வந்துவிட்டன.

வெட்டுக்கிளிகளின் படையெடுப்பு என்பது புதிய விஷயம் அல்ல. வரலாற்றுக்கு முற்பட்ட காலத்திலிருந்து நிகழ்ந்துவரும் ஒன்றுதான். ஹோமரின் ‘இலியட்’ காவியத்தில் வெட்டுக்கிளிகள் படையெடுப்பு பற்றிய குறிப்பு வருகிறது. அதேபோல் விவிலியத்திலும் பின்னாளில் குர்ஆனிலும் வெட்டுக்கிளிகள் இடம்பெற்றிருக்கின்றன. வரலாறு நெடுக வெட்டுக்கிளிகளால் பாதிக்கப்பட்ட மக்கள் புலம்பெயர்ந்திருக்கிறார்கள். 1900-க்குப் பிறகு இதுவரை ஆறு முறை மிக மோசமான பாலைவன வெட்டுக்கிளிகள் படையெடுப்பு நிகழ்ந்திருக்கிறது. கடந்த ஒரு நூற்றாண்டில் எடுத்துக்கொண்டால் 1926-1934, 1940-1948, 1949-1963, 1967-1969, 1986-1989 ஆகிய ஆண்டுகளுக்குப் பிறகு தற்போது நிகழ்ந்திருப்பதுதான் மிக மோசமான வெட்டுக்கிளிகள் படையெடுப்பு என்கிறார்கள்.

பாலைவன வெட்டுக்கிளிகள் காற்றின் ஓட்டத்தில் பறக்கக்கூடியவை. ஒரு மணி நேரத்தில் சுமார் 20 கி.மீ. தொலைவைக் கடக்கக் கூடியவை. ஒரு நாளில் ஏறக்குறைய நூறு கிலோ மீட்டர் தூரம் வரை வெட்டுக்கிளியால் கடக்க முடியும். தனி வெட்டுக்கிளியாக இருக்கும்போது அதன் பறக்கும் திறனும் கடக்கும் தொலைவும் மிகக் குறைவாக இருக்கும். கூட்டமாகச் சேர்ந்தால்தான் அது அசுரத்தனமான உத்வேகம் பெறுகிறது. எடுத்துக்காட்டாக,  1988-ல் ஒரு வெட்டுக்கிளி கூட்டம் மேற்கு ஆப்பிரிக்காவுக்கும் கரீபியன் தீவுகளுக்கும் இடையிலான 5,000 கி.மீல் தொலைவை பத்தே நாட்களில் கடந்திருக்கிறது. அது மட்டுமல்ல, தனிப்பட்ட வெட்டுக்கிளி இரவில் பறக்கும் என்றால் கூட்டமாகச் சேர்ந்த வெட்டுக்கிளிகள் பகல் நேரத்தில் பறக்கும்.

என்ன செய்வது?

ஆப்பிரிக்க நாடுகள் ஏற்கெனவே உள்நாட்டுப் போர்களாலும் பசி, பட்டினியாலும் சிதைந்தும் சீரழிந்தும்போயிருக்கின்றன. இந்த நேரத்தில் வெட்டுக்கிளிகள் படையெடுப்பு நிகழ்ந்திருப்பதால் பல கோடிக் கணக்கானோர் பட்டினிக்குத் தள்ளப்படும் நிலை உருவாகியுள்ளது. போர்களால் செயலிழந்துபோன அரசு நிர்வாகங்கள் வெட்டுக்கிளி படையெடுப்பைத் தடுக்கும் நிலையில் இல்லை.

வெட்டுக்கிளிகளின் படையெடுப்புகளுக்குப் பேசப்படும் தீர்வுகள் பல்வேறு காலங்களிலும் பல விஷயங்களை முன்வைத்தாலும் உள்ளபடி பிரச்சினையைத் தீர்ப்பதற்கு முழுமுற்றான வழிமுறை என்று ஒன்றில்லை. இப்போதும், ‘வெட்டுக்கிளிகள் சிறகு முளைக்காத நிலையில் உள்ளபோதே அவை கூட்டம் கூட்டமாக எங்கு இருக்கின்றன என்பதைக் கண்டுபிடிக்க வேண்டும்; மழை பெய்து தாவரங்கள் முளைக்கத் தொடங்கிய இடங்களை செயற்கைக்கோளின் உதவியுடன் கண்டுபிடித்து அங்கெல்லாம் பூச்சிக்கொல்லிகள் தெளிக்க வேண்டும்’ என்றெல்லாம் பேசப்படுகின்றன. ஆனால், எது ஒன்றும் எளிதல்ல. இப்படிப் பூச்சிக்கொல்லிகள் தெளிப்பதிலும் பெரிய சிக்கல் இருக்கிறது. அதனால் நிலமும் மக்களும் பாதிக்கப்படாமல் இருக்க வேண்டும். ஆகவே, உயிரி பூச்சிக்கொல்லிகளைப் பற்றி யோசிக்க வேண்டிய கட்டாயம் உள்ளது.

இதற்கிடையே ஐநாவுக்கான ‘உணவு மற்றும் விவசாய அமைப்பு’ வெட்டுக்கிளிகளின் படையெடுப்பை சமாளிப்பதற்காக இந்திய மதிப்பில் சுமார் ரூ. 500 கோடியை அமெரிக்காவிடம் கோரியுள்ளது. என்னதான் நடவடிக்கைகள் எடுத்தாலும் படைபடையாகத் திரண்டுவரும் வெட்டுக்கிளிகளை சமாளிப்பது சிரமம்தான் என்கிறார்கள் அறிவியலாளர்கள். அவை தங்கள் வேட்டையை ஆடிவிட்டுத்தான் செல்லும். அப்படி ஆடிவிட்டுச் செல்லும்போது வெட்டுப்பட்டுக் கிடப்பவை பயிர்களும் ஏனைய தாவரங்களும் மட்டுமல்ல பல கோடிக் கணக்கானோரின் வாழ்க்கையும்தான்.

Wednesday, February 5, 2020

அம்பேத்கரின் ‘குரலற்றவர்களின் தலைவருக்கு’ நூற்றாண்டு


ஆசை

(டாக்டர் அம்பேத்கரின் ‘மூக் நாயக்’ இதழின் நூற்றாண்டையொட்டி 05-02-2020 அன்று ‘இந்து தமிழ் திசை’ நாளிதழில் வெளியான எனது கட்டுரை)

சுதந்திரப் போராட்ட காலத்திலிருந்து எந்த ஒரு இயக்கமும் தனக்கான ஒரு ஊடகத்தைக் கொண்டிருப்பதை முக்கியமென்று கருதிவந்திருக்கிறது. அந்த நிலை தற்போதும் தொடர்கிறது. இதில் விளிம்பு நிலையில் இருந்தவர்கள்/ இருப்பவர்கள் தலித் மக்களே! அம்மக்களின் குரல் ஒலிப்பதற்கான அச்சு ஊடகமோ, காட்சி ஊடகமோ இன்றுவரை குறைவாகத்தான் இருக்கின்றன. ஊடகங்களில் பலவும் முற்பட்ட சமூகத்தினரால் நடத்தப்படுவதால், தலித் மக்களுக்கு இழைக்கப்படும் அநீதிகளை அவை பெரிதும் கண்டுகொள்வதில்லை என்ற குற்றச்சாட்டு வெகு காலமாகவே இருந்துவருகிறது. இந்தப் பின்னணியில் வைத்துப் பார்க்கும்போது, 100 ஆண்டுகளுக்கு முன்பு அம்பேத்கர் மேற்கொண்ட முன்னோடி இதழியல் முயற்சிகள் எத்தனை முக்கியத்துவம் வாய்ந்தவை என்பது நமக்குப் புலப்படுகிறது.

அது 1920, ஜனவரி 31. டாக்டர் அம்பேத்கர் தொடங்கிய மாதமிருமுறை மராத்தி இதழான ‘மூக் நாயக்’கின் முதல் இதழ் வெளியான நாள். ‘மூக் நாயக்’ என்றால், மராத்தி மொழியில் ‘குரலற்றவர்களின் தலைவர்’ என்று பொருள். இந்தப் பெயரை 17-ம் நூற்றாண்டைச் சேர்ந்த மராத்திய பக்திக் கவிஞர் துக்காராமின் பாடல் ஒன்றிலிருந்து டாக்டர் அம்பேத்கர் தழுவிப் பயன்படுத்தினார். ‘மூக் நாயக்’ என்ற பெயருக்குக் கீழாக, அந்தப் பாடலும் இடம்பெற்றிருந்தது.

மூக் நாயக்கின் பின்னணி
முன்னதாக அமெரிக்காவில் டாக்டர் பட்டம் பெற்றிருந்த அம்பேத்கர், லண்டனில் உள்ள பொருளாதாரக் கல்லூரியில் பொருளாதாரத்தில் முனைவர் ஆய்வை மேற்கொண்டிருந்த நிலையில், அவருக்கு வழங்கப்பட்ட பரோடா மாகாண கல்வி உதவித்தொகை நிறுத்தப்பட்டதால், அந்த ஆய்வைப் பாதியிலேயே விட்டுவிட்டு, இந்தியாவுக்கு 1917-ல் வந்தார். மீண்டும் தனது ஆய்வைத் தொடரும் கனவோடு அதற்கு ஆகக்கூடிய செலவுக்குத் தொகையைச் சேமிப்பதற்காக ஒரு அரசுக் கல்லூரியில் பேராசிரியராகப் பணியாற்றினார். இந்தக் காலகட்டத்தில் ஏற்பட்ட சில அனுபவங்கள்தான் அவரை சொந்தமாகப் பத்திரிகை நடத்தத் தூண்டின.

1918-19 ஆண்டுகளில் சவுத்பரோ கமிட்டி இந்தியாவுக்கு வந்தது. அது தாழ்த்தப்பட்டவர்கள் சார்பில், டாக்டர் அம்பேத்கரையும் முற்பட்ட பிரிவினர் சார்பில் சமூக சேவகர் வித்தல் ராம்ஜி ஷிண்டேவையும் தங்கள் தரப்புகளின் வாதங்களை எடுத்துவைக்க அழைத்தது. இந்த விஷயத்தில் வித்தல் ராம்ஜியின் தரப்பு வாதங்களுக்குப் பத்திரிகைகள் கொடுத்த முக்கியத்துவத்தைத் தனக்குக் கொடுக்கவில்லை என்று அம்பேத்கரின் மனம் வாடியது. கூடவே, ஒரு முன்னணி ஆங்கில நாளிதழுக்குத் தாழ்த்தப்பட்டவர்களின் நிலையை எடுத்துக்கூறி ஒரு கடிதத்தை அனுப்பினார். அந்தக் கடிதம் பிரசுரிக்கப்படவேயில்லை. இதெல்லாம்தான் தாழ்த்தப்பட்ட மக்களுக்கென்று தனி பத்திரிகை வேண்டும் என்ற திசையை நோக்கி அம்பேத்கரை நகர்த்தின.

நிதி வசதி ஏதும் இல்லை என்றாலும் ஒரு லட்சிய உத்வேகத்துடன்தான் அம்பேத்கர் ‘மூக் நாயக்’ பத்திரிகையைத் தொடங்கினார். அவர் பத்திரிகை தொடங்கும் செய்தியை அறிந்த கோலாப்பூரின் சத்திரபதி ஷாஹு மகாராஜா அம்பேத்கரின் இல்லத்துக்கு வந்து ரூ.2,500 நன்கொடையைத் தந்தார். பத்திரிகையின் தொடக்க நிலையில் இந்தத் தொகை பெரும் ஊக்கமாக இருந்திருக்கும் என்பதில் சந்தேகமில்லை. ‘மூக் நாயக்’ பத்திரிகையை அம்பேத்கர் தொடங்கினாலும் அதன் ஆசிரியர் பொறுப்பில் அவர் எப்போதும் இருந்ததில்லை. அரசுப் பணியில் இருந்ததுவும் இதற்கு ஒரு காரணம். மாதம் இருமுறை இதழாக ஒரு சனிக்கிழமை விட்டு அடுத்த சனிக்கிழமையில் அந்த இதழ் வெளியானது. ஆரம்பத்தில் பாண்டுரங் நந்தராம் பட்கர் அந்த இதழின் அதிகாரபூர்வ, பெயரளவிலான ஆசிரியராக இருந்தார். பிறகு, தின்யந்தேவ் கோலப் ஆசிரியர் பொறுப்பேற்றார். சில காலம் கழித்து அம்பேத்கருக்கும் அவருக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் கோலப் பதவி விலகினார்.

மூக் நாயக் இதழின் முகப்பு

படிகளற்ற கோபுரம்
‘மூக் நாயக்’கின் முதல் இதழில்தான் தற்போது அடிக்கடி மேற்கோள் காட்டப்படும் அம்பேத்கரின் வரிகள் இடம்பெற்றன. “இந்து சமூகம் என்பது ஒரு கோபுரம் போன்றது. அதன் ஒவ்வொரு தளமும் ஒவ்வொரு சாதிக்கென்று ஒதுக்கப்பட்டது. இதில் குறிப்பிடத் தகுந்த விஷயம் என்னவென்றால், இந்தக் கோபுரத்துக்குப் படிக்கட்டுகள் கிடையாது. ஆகவே, ஒரு தளத்திலிருந்து இன்னொரு தளத்துக்கு ஏறவோ இறங்கவோ முடியாது. ஒருவர் எந்தத் தளத்தில் பிறந்தாரோ அந்தத் தளத்திலேயே மடிகிறார். கீழே உள்ள தளத்தைச் சேர்ந்தவருக்கு எவ்வளவு திறமையும் தகுதியும் இருந்தாலும் அவர் மேலே உள்ள தளத்துக்குச் செல்வதற்கு எந்த வழியும் இல்லை. அதேபோல், மேலே உள்ள தளத்தைச் சேர்ந்தவர் எந்தத் தகுதியும் திறமையும் இல்லையென்றாலும் அவரைக் கீழே உள்ள தளத்துக்கு இறக்குவதற்கு எந்த வழிவகையும் இல்லை.” ‘

மூக் நாயக்’ அதன் பெயருக்கு ஏற்ப குரலற்றவர்களின் துயரத்தை வெளிப்படுத்தும் ஊடகமாக விளங்கியது. தாழ்த்தப்பட்ட மக்கள் தாங்கள் எதிர்கொண்ட சாதிக் கொடுமைகளைப் பற்றி அந்த இதழுக்குக் கடிதம் எழுதினார்கள். அது சுதந்திரப் போராட்டம் சூடுபிடித்துக்கொண்டிருந்த காலம். ‘மூக் நாயக்’ பத்திரிகை இந்திய தேசியவாதத்தைக் கேள்விக்குள்ளாக்கியது. இதனால் அம்பேத்கரோ ‘மூக் நாயக்’ பத்திரிகையோ இந்திய சுதந்திரத்துக்கு எதிரானவர்கள் என்று அர்த்தம் இல்லை. அந்நியரின் கொடுமைகளை, ஆக்கிரமிப்பை எதிர்க்கும் இந்திய தேசியவாதம் நமக்குள்ளே நிகழ்த்தப்படும் கொடுமைகளைக் கணக்கில் எடுத்துக்கொள்வதில்லை என்பதால்தான் அது அம்பேத்கரால் தாக்குதலுக்கு உள்ளானது. இன்னொரு இதழில் அம்பேத்கர் இப்படி எழுதுகிறார்: “இந்தியா ஒரு சுதந்திர நாடாக மட்டும் இருந்துவிட்டால் போதாது. ஒரு நல்ல அரசாகவும் உருவாக வேண்டும். அதில் எல்லா வகுப்பு மக்களுக்கும் மதம், சமூகம், பொருளாதாரம், அரசியல் தொடர்பானவற்றில் சம உரிமை என்பது உறுதிசெய்யப்பட்டதாக இருக்க வேண்டும். ஒவ்வொரு தனிமனிதனுக்கும் வாழ்வின் படிகளில் உயர்வதற்கான வாய்ப்பும், இவ்வாறு முன்னேறுவதற்கு ஏற்ற நல்ல சூழ்நிலையும் அளிக்கப்பட வேண்டும். பிரிட்டிஷ் அரசின் அநீதியான அதிகாரத்தை எதிர்ப்பது சரி என்று பிராமணர்கள் சொல்வதில் எந்த அளவுக்கு நியாயம் இருக்கிறதோ, அதைவிட நூறு மடங்கு நியாயம், ஆட்சி அதிகாரம் ஆங்கிலேயரிடமிருந்து பிராமணர் கைகளுக்கு மட்டும் மாற்றப்படக் கூடாது என்று ஒடுக்கப்பட்ட வகுப்பு மக்கள் எதிர்ப்பதில் அடங்கியிருக்கிறது.”

புறக்கணிப்பு
‘மூக் நாயக்’ இதழ் தொடங்கப்பட்டபோது, பால கங்காதர திலகரின் ‘கேசரி’ பத்திரிகைக்கு மூன்று ரூபாய் பணத்துடன் விளம்பரம் அனுப்பப்பட்டது. விளம்பரம் செய்ய மறுத்துவிட்டு பணத்தைத் திருப்பி அனுப்பியது அந்தப் பத்திரிகை. இப்படியாக, தொடக்கத்திலேயே அம்பேத்கரின் ‘மூக் நாயக்’ புறக்கணிப்பை எதிர்கொண்டது. 1920-ல் 700 சந்தாதாரர்களைக் கொண்டிருந்த அந்தப் பத்திரிகை, 1922-ல் ஆயிரத்தைத் தொட்டது. இதற்கிடையில் பாதியிலேயே நின்றுபோன தனது பொருளாதார முனைவர் பட்ட ஆய்வை மேற்கொள்வதற்காக அம்பேத்கர் லண்டன் சென்றுவிட ‘மூக் நாயக்’ பத்திரிகை தள்ளாடியது. அதற்கு முன்னதாக ஆறு மாதங்களில் 12 இதழ்களின் பெயர் குறிப்பிடப்படாத ஆசிரியராக இருந்து அம்பேத்கரே எல்லா வேலைகளையும் கவனித்துக்கொண்டார்.
சில ஆண்டுகளில் ‘மூக் நாயக்’ நின்றுபோனது. ஆனாலும், பின்னாளில் பஹிஷ்க்ரிட் பாரத், ஈக்குவாலிட்டி ஜன்ட்டா ஆகிய இதழ்களை டாக்டர் அம்பேத்கர் தொடங்கி நடத்தினார். அம்பேத்கரின் ‘மூக் நாயக்’ தொடங்கி நூறு ஆண்டுகள் முடிவுக்கு வந்தாலும் அந்தக் காலத்தைப் போலவே ஒடுக்கப்பட்ட மக்களுக்கென்று வலுவான ஊடகம் இல்லாதது இன்றும் தொடர்கிறது. அப்படிப்பட்ட ஊடகம் அமையும்போது அது ‘மூக் நாயக்’ இட்ட அடித்தளத்தின்மீதுதான் அமையும் என்பது டாக்டர் அம்பேத்கரின் தியாகத்துக்கும் துணிவுக்கும் சான்று!