Monday, August 13, 2018

கலைஞர்: ஓயாது ஒளிவீசிய சூரியன்!



தே.ஆசைத்தம்பி

(‘இந்து தமிழ்’ நாளிதழில் 07-08-2018 அன்று வெளியான கட்டுரையின் முழு வடிவம் இது.)

ஒரு பெருவாழ்வு தன் மூச்சை நிறுத்திக்கொண்டுவிட்டது! அலுவல்ரீதியாக மு.கருணாநிதி என்றாலும் மக்களுக்கு அவர் கலைஞர்தான். திருக்குவளையில் தொடங்கிய அவரின் நெடும் பயணம் அவருடைய மரணத்தோடு முடிவுக்கு வந்துவிட்டது என்று சொல்வது அவருக்குச் செய்யும் அவமரியாதையே. தனது பெயரையே ஒரு போராட்ட வடிவமாக்கித் தன் பயணத்தை என்றென்றும் தொடரும் வகையில் விட்டுச்சென்றிருப்பவர் கலைஞர். அதனால்தான், அவர் செயல்பாட்டில் இல்லாத கடந்த சில ஆண்டுகளிலும் கூட திமுகவின் தலைவராக அவரையே அதிகாரப்பூர்வமாகவும் இதயப்பூர்வமாகவும் தொண்டர்கள் வைத்திருந்தார்கள். இனிமேலும்கூட அவரைத்தான் தங்கள் முழுமையான தலைவராக திமுக தொண்டர்கள் நினைத்துக்கொண்டிருப்பார்கள்.

12 வயதில் தொடங்கிய பயணம்

கடந்த ஜூன் மாதம் 95-ம் வயதில் அடியெடுத்துவைத்த கருணாநிதி அரசியலில் அடியெடுத்துவைத்து 82 ஆண்டுகள் ஆகின்றன. ஆம்! 1936-ல் 12 வயதுச் சிறுவனாக திருவாரூரில் உள்ள பள்ளியொன்றில் ஐந்தாம் வகுப்பில் அவரைச் சேர்த்துக்கொள்ள முடியாது என்று தலைமையாசிரியர் கஸ்தூரி ஐயங்கார் கூறியபோது, “பள்ளியில் சேர்த்துக்கொள்ளவில்லையென்றால் திருவாரூர் கமலாலயம் குளத்தில் விழுந்து உயிரை மாய்த்துக்கொள்வேன்என்றாரே அப்போதிலிருந்து தொடங்குகிறது அவரது அரசியல் வாழ்க்கை.

10 வயது வரை சாமி கும்பிட்டுக்கொண்டிருந்தவர் பட்டுக்கோட்டை அழகிரி, பெரியார் ஆகியோரின் தீப்பறக்கும் பேச்சுகளைக் கேட்ட பின் சிறு வயதிலேயே நாத்திகர் ஆனாரே, அதுவும் ஓர் அரசியல் செயல்பாடே!

1938-ல் தமிழகம் முழுவதும் இந்தி எதிர்ப்புப் போராட்டம் உச்சமடைந்திருந்த கட்டத்தில் தன் வயதையொத்த சிறுவர்களைத் திரட்டிக்கொண்டுவாருங்கள் எல்லோரும் போருக்குச் சென்றிடுவோம்! வந்திருக்கும் இந்திப் பேயை விரட்டித் திருப்பிடுவோம்என்றெல்லாம் முழக்கமிட்டுச் சென்றது வயதுக்கு மீறிய செயலாக இருந்திருக்கலாம், ஆனால், அந்தச் செயல் கொடுத்த உணர்வுதான் தனது இறுதி மூச்சுவரை தமிழுக்கு ஆதரவாகவும் வடக்கின் ஆதிக்கத்துக்கு எதிராகவும் விடாமல் கொடி பிடிக்கக் கருணாநிதியைத் தூண்டிக்கொண்டிருந்தது.   


சமூகம் முழுமைக்குமான போராட்டம்

பாட்டொலிக்கும் குயில்கள் இல்லை என் பாதையில், படமெடுத்தாடும் பாம்புகள் நெளிந்திருக்கின்றன. தென்றலைத் தீண்டியதில்லை நான். ஆனால் தீயைத் தாண்டியிருக்கிறேன்என்று பராசக்தி படத்தில் சிவாஜி பேசிய வசனத்தைத் தன் வாழ்க்கையிலிருந்துதான் கருணாநிதி தொட்டு எழுதினார். வசனம் எழுதிய காலகட்டத்துக்குப் பிறகு அவர் தென்றலைத் தீண்டியிருக்கிறார். எனினும் இறுதிவரை தனது பாதையில் தீயையும் தாண்டிக்கொண்டுதான் இருந்தார். அந்தப் போராட்டம் அவருக்கான போராட்டமாக மட்டுமல்ல; ஒரு சமூகம் முழுமைக்குமான போராட்டமாகவும் இருந்திருக்கிறது.

வரலாற்றைமீம்ஸ்கள் வழியாக அணுகும் காலம் இது. எவ்வளவு முக்கியமான நிகழ்வுகளும் மீம்ஸ்களாகிப் பரிகசிக்கப்படுகின்றன. இந்தக் காலகட்டத்தின் தொடக்கப் பகுதியில் கருணாநிதியின் இறுதிக்கட்ட வாழ்க்கை அமைந்தது ஒருவகையில் துரதிர்ஷ்டமானது. கல்லக்குடி ரயில் தண்டவாளத்தில் தலைவைத்துப் படுத்த போராட்டம் தொடங்கி ஈழத் தமிழர்கள் படுகொலையைத் தடுத்து நிறுத்துவதற்கான அவரது உண்ணாவிரதப் போராட்டம் வரை அந்தப் போராட்டங்களில் கலைஞர் இருந்த சூழலை அறியாதவர்களால் அவர் எவ்வளவோ பரிகசிக்கப்பட்டிருக்கிறார். வரலாற்றை வரலாறாக அணுகுபவர்களால் மட்டுமே எவ்வளவு உளசுத்தியுடன் கருணாநிதி இந்தப் போராட்டங்களில் ஈடுபட்டார் என்பதைப் புரிந்துகொள்ள முடியும்.

ஒருங்கிணைந்த தஞ்சை வட்டாரத்தில் சாதிரீதியில் கீழ்நிலையில் வைக்கப்பட்டிருந்த சமூகங்களுள் ஒன்றைச் சேர்ந்த கருணாநிதி அரசியலுக்குள் நுழைந்ததே ஒரு அடையாள வெற்றி. அதன் பின் கட்சிக்குள்ளும் முக்கியத் தலைவராக உருவெடுத்து, அண்ணாவுக்குப் பிறகு ஆட்சியதிகாரத்தின் தலைமையில் அமர்ந்தது நம் சமூகத்துக்கு அளிக்கப்பட்ட ஒரு செய்தி. இன்னும், தெற்கிலிருந்து இருந்துகொண்டு இந்திய அரசியலின் போக்கைத் தீர்மானிப்பவராக, வடக்கின் ஆதிக்கத்துக்கு எதிர் எடை வைப்பவராக கருணாநிதி உருவெடுத்தது போன்றவற்றை எல்லாம் கணக்கில் எடுத்துக்கொண்டு பார்க்கும்போது ஒட்டுமொத்த தமிழ்ச் சமூகத்துக்கும் அவர் எப்படிப்பட்ட அரசியல் நம்பிக்கையை விட்டுவிட்டுச் சென்றிருக்கிறார் என்பதை உணர முடிகிறது.


நெருக்கடியில் நீந்தியவர்!

திமுக வரலாற்றை வெளியிலிருந்து பார்ப்பவர்கள், கருணாநிதி மற்றவர்களையெல்லாம் முந்திக்கொண்டு முதல் இடத்துக்குத் தன்னைக் கொண்டுவந்தார் என்ற குற்றச்சாட்டை முன்வைப்பார்கள். பிராமணர் அல்லாத முற்பட்ட வகுப்பினர், மெத்தப் படித்தவர்கள், செல்வாக்கான குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் போன்றோரைத் தாண்டிக்கொண்டு முதல் இடத்துக்குக் கருணாநிதி வந்ததை, கருணாநிதியின் கண்கொண்டு பார்த்தால்தான் தெரியும் அது எவ்வளவு பெரிய சாதனை என்பதை.

உச்சபட்ச அதிகாரத்தையும் பதவிகளையும் அவர் தன் வாழ்க்கையில் அடைந்திருந்தாலும் இறுதிக் காலம் வரை அவர் ஏதோ ஒருவிதத்தில் போராடிக்கொண்டுதான் இருந்தார். பெரும்பான்மை இந்தியாவும் நெருக்கடி நிலையின்போது மண்டியிட்டுக்கொண்டிருந்தபோது தன் ஆட்சி கலைக்கப்பட்ட சூழலிலும் அதைப் பற்றிக் கவலைப்படாமல் துணிச்சலாக எதிர்வினையாற்றிக்கொண்டிருந்தவர் கருணாநிதி. பிற்காலத்தில் குடும்ப அரசியல் என்ற குற்றச்சாட்டை எதிர்கொண்ட கருணாநிதி தனது குடும்பத்தினர் பலரும் நெருக்கடி நிலையின் கோரப்பிடிக்குச் சிக்கிச் சிறைக்குச் செல்வதைக் கண்டவர். இந்திரா காந்தி, திமுக என்ற கட்சியையே இல்லாமல் ஆக்கிவிடுவார் என்று அஞ்சப்பட்ட காலகட்டத்தில் பலரும் கட்சியைக் கலைத்துவிட்டு, கலாச்சார இயக்கம் போல் அதை மாற்றிவிடலாம் என்று யோசனை கூறியபோது, ‘கப்பல் மூழ்கிக்கொண்டிருக்கும்போது அதை விட்டுச்செல்வது கப்பல் தளபதிக்கு அழகல்லஎன்று சொன்னவர் கருணாநிதி.

அதிகாரங்கள் பிடுங்கப்பட்டு, கண்காணிப்பும் கிடுக்குப்பிடியும் தணிக்கையும் தீவிரப்படுத்தப்பட்டிருந்தாலும் தனது பேனாவால் புத்திசாலித்தனமாக எதிர்வினையாற்றிக்கொண்டிருந்தார் கருணாநிதி. நெருக்கடி நிலையின்போது ஏராளமான திமுகவினர் சிறையில் அடைக்கப்பட்டனர். ‘திமுகவைச் சேர்ந்த இன்னின்ன நபர்கள் சிறையில் அடைக்கப்பட்டனர்என்று முரசொலியில் செய்தி வெளியிட்டால் அது தணிக்கை செய்யப்படும் என்பதால் அண்ணா பிறந்த நாள் அன்று இப்படி ஒரு செய்தியை வெளியிட்டார்: “அண்ணா சதுக்கத்திற்கு மலர் வளையம் வைக்க வர இயலாதோர் பட்டியல்”! மேலும், ‘வெண்டைக்காய் வழவழப்பாய் இருக்கும்’, ‘விளக்கெண்ணெய் சூட்டைத் தணிக்கும்என்றெல்லாம் முரசொலியில் தலைப்புச் செய்தி போட்டு தணிக்கை அதிகாரிகளையும், அரசையும் நக்கலடித்துக்கொண்டிருந்தார் கருணாநிதி.


சோதனைக்காலத்திலும் சோர்வில்லாத பயணம்!

நெருக்கடி நிலை காலகட்டம் தந்த நெருக்கடிக்கு அடுத்ததாக எம்.ஜி.ஆர். ஆட்சியைச் சொல்ல வேண்டும். 1976-ல் திமுக ஆட்சி கலைக்கப்பட்டதில் தொடங்கி கிட்டத்தட்ட 13 ஆண்டுகள் திமுக ஆட்சியதிகாரத்தில் இல்லாமல் இருந்திருக்கிறது. அத்தனை ஆண்டுகள் தானும் நம்பிக்கை இழக்காமல் தனது தொண்டர்களும் நம்பிக்கை இழக்க நேரிடாமல் திமுகவை கருணாநிதி வழிநடத்தியது பெரும் சாதனைதான். இதுவே வேறொரு தலைவராக இருந்திருந்தால் கட்சியைக் கலைத்துவிட்டு அரசியல் வனவாசம் போயிருப்பார்; அல்லது கட்சி சுக்குநூறாக உடைந்திருக்கும். கட்சியைக் கட்டுக்கோப்பாக நடத்தியது மட்டுமல்லாமல் ஆளுங்கட்சிக்கும் அழுத்தம் கொடுத்து மக்கள் நலனிலிருந்து அது திசைதிரும்பிவிடாமல் பார்த்துக்கொண்டவர் கருணாநிதி.

திராவிட இயக்கம் தனது நூற்றாண்டைச் சமீபத்தில்தான் கொண்டாடியது. கூடவே, சட்டப்பேரவையில் கருணாநிதி 60 ஆண்டுகளை நிறைவுசெய்தது, திமுக ஆட்சிக்கு வந்து 50 ஆண்டுகள் நிறைவுசெய்தது போன்ற வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வுகளும் நினைவுகூரப்பட்டன.  அடுத்த ஆண்டு வரை கருணாநிதி உயிரோடு இருந்தால் அவர் முதல்வராகப் பொறுப்பேற்ற தினத்தின் 50 ஆண்டுகள் நிறைவையும் கொண்டாட வாய்ப்பிருந்திருக்கும்.


ஆட்சியில் இல்லாமல் கொடுத்த அழுத்தம்

கருணாநிதி ஆட்சிக்கு வந்து 49 ஆண்டுகள் நிறைவடைந்தாலும் கணக்கிட்டுப் பார்த்தால் சுமார் 18 ஆண்டுகள் மட்டுமே அவர் முதல்வராக இருந்திருக்கிறார். கிட்டத்தட்ட 30 ஆண்டுகள் அதிமுக ஆட்சியில் இருந்திருக்கிறது. என்றாலும், கடந்த 50 ஆண்டுகளில் தமிழகம் அடைந்த வளர்ச்சியில் கருணாநிதிக்குப் பெரும் பங்கிருக்கிறது என்றால் அவர் முதல்வராக ஆற்றிய பணிகளால் மட்டுமல்ல பொறுப்பான எதிர்க்கட்சித் தலைவராக அவர் ஆற்றிய பணிகளாலும்தான்.

எம்.ஜி.ஆரோ, ஜெயலலிதாவோ இருவரும் கருணாநிதியை எதிர்த்து அரசியல் செய்தாலும் கருணாநிதி போட்டுவைத்த பாதையை நிராகரித்துவிட்டு அரசியல் செய்துவிட முடியாது என்ற நிலையை அவர் ஏற்படுத்திவைத்திருந்தார். கருணாநிதி அளவுக்கு சமூக நீதியிலும் மதச்சார்பின்மையிலும் அக்கறை கொண்டவர்கள் என்று எம்.ஜி.ஆரையும் ஜெயலலிதாவையும் கூறிவிட முடியாது. ஆனால், இடஒதுக்கீடு உள்ளிட்ட சமூகநீதி அம்சங்களில் மேற்கண்ட இருவரும் செய்த நல்ல காரியங்களில் கருணாநிதியின் பங்கும் இருக்கிறது. சமூகநீதியைப் புறக்கணித்துவிட்டுத் தமிழகத்தில் மக்கள் ஆதரவைப் பெற முடியாது என்று கருணாநிதி ஏற்படுத்திவைத்திருந்த அழுத்தமே அவர்களையும் அதே பாதையில் பயணிக்க வைத்திருக்கிறது.



தலைசிறந்த ஜனநாயகவாதி!

ஊடகங்களை ஒரு முதல்வர் அணுகும் விதத்தை வைத்தே அவர் எவ்வளவு ஜனநாயகவாதி என்பதைச் சொல்லிவிடலாம். அந்த வகையில் கருணாநிதி மிகப் பெரிய ஜனநாயகவாதி! அவருக்கு உவப்பான கேள்விகளையல்ல, காட்டமான கேள்விகளையே ஊடகங்களிடமிருந்து எதிர்கொண்டார். அந்தக் கேள்விகளுக்குப் புன்சிரிப்பு மாறாமல் பதிலளித்தார். முதல்வராக ஏற்பாடு செய்த ஊடக சந்திப்பாக இல்லாமல் விமான நிலையத்தில், ரயில் நிலையங்களில், பொது நிகழ்ச்சிகளில் என்று வாய்ப்பு கிடைக்குமிடங்களிலெல்லாம் ஊடகங்கள் தன்னைச் சந்திக்க அவர் அனுமதித்தார். அடிப்படையில் அவரும் ஒரு பத்திரிகையாளர் என்பதும் இதற்கு ஒரு காரணம்! இப்படி ஊடகங்களால் எளிதில் அணுகும்படியாக இருந்த அவரைத்தான் ஊடகங்கள் அதிகம் விமர்சித்தன என்பது ஒரு நகைமுரண்!


மாநில சுயாட்சி

கீழிருந்து யோசிக்க வேண்டும் என்ற காந்தியின் கருத்துக்கு மிகவும் நெருக்கமானதுமத்தியில் கூட்டாட்சி, மாநிலத்தில் சுயாட்சிஎன்ற அண்ணாவின் சிந்தனை. அதையே கருணாநிதியும் ஆரத்தழுவிக்கொண்டிருந்தார். சமூகநீதி விஷயங்களுக்காகத் தன் அரசியல் வாழ்க்கையில் கருணாநிதி காட்டிய ஈடுபாடுகளுக்குச் சற்றும் குறையாதது மாநிலங்களின் சுயாட்சிக்காக அவர் போராடியது. மத்தியில் அதிகாரக் குவிப்பு என்பது பிராந்தியக் கட்சிகள், பிற்படுத்தப்பட்ட, ஒடுக்கப்பட்ட சமூகங்கள் போன்றவற்றை முற்றிலும் புறந்தள்ளிவிடும் என்று கருணாநிதி தொடர்ந்து குரல் கொடுத்துக்கொண்டிருந்தார். ‘எந்தக் கட்சி ஆட்சியில் இருந்தாலும் திமுக கூட்டணி வைத்துவிடும்என்று சில ஆண்டுகளுக்கு முன்பு நக்கலாகச் சொல்லப்பட்டதுண்டு. எந்த வகையிலும் தமிழ்நாட்டின் அதிகாரத்தைத் தக்கவைப்பதற்கான ஒரு வழிமுறையாகவும் இதைக் காணலாம். இதனால்தான், திமுகவின் சித்தாந்தத்துக்கு நேரெதிரான பாஜகவுடனான கூட்டணி ஏற்பட்டது. வாஜ்பாய் தலைமையிலான பாஜக அரசு சற்று மென்போக்கைக் கடைப்பிடித்ததற்கு, திமுக போன்ற கட்சிகள் கூட்டணியில் இருந்ததும் ஒரு காரணம்.

இன்று மகாராஷ்டிரம், கர்நாடகம், கேரளம், ஆந்திரம், தெலங்கானா, மேற்கு வங்கம் போன்ற மாநிலங்கள் தங்கள் சுய அடையாளத்தைத் தக்கவைத்துக்கொள்வதற்காகமாநில சுயாட்சிமுழக்கத்தைக் கையில் எடுத்திருக்கின்றன. ஆனால், 50 ஆண்டுகளுக்கும் மேலாக இந்த முழக்கத்தைத் தீவிரமான அரசியல் செயல்பாடாக கருணாநிதி மேற்கொண்டுவருகிறார். அண்ணா காலமான பிறகு பதவியேற்ற கருணாநிதி மத்திய-மாநில அரசுகளின் அதிகாரங்கள் குறித்து ஆராய்வதற்காக 1969-ல் ராஜமன்னார் கமிட்டியை நியமித்தார். இந்த கமிட்டி 1971-ல் தனது அறிக்கையைச் சமர்ப்பித்தது. மாநிலங்களுக்கும் சட்டமியற்றும் அதிகாரம் அளிக்கும் வகையில் அரசியலமைப்புச் சட்டத்தைத் திருத்தியமைக்க வேண்டும், மாநிலங்களுக்கான வருவாயை அதிகப்படுத்த வேண்டும், மாநிலங்களவையில் அனைத்து மாநிலங்களுக்கும் சமமான பிரதிநிதித்துவம் வழங்க வேண்டும் போன்ற மிக முக்கியமான பரிந்துரைகளை அந்த கமிட்டி வழங்கியிருந்தது. இன்று இந்தியாவில்  மாநில சுயாட்சி பற்றி பேசுமிடங்களிலெல்லாம் ராஜமன்னார் கமிட்டியின் அறிக்கையே துணைநிற்கிறது. இதுபோன்ற பல்வேறு காரணங்களால்தான் கருணாநிதியைத் தமிழகத்துக்கு மட்டும் சொந்தமான தலைவராக அல்லாமல் இந்தியா முழுமைக்குமான தலைவராகவும் பார்க்க வேண்டியிருக்கிறது.


இந்தியா முழுமைக்குமான தலைவர்!

நமக்கு கருணாநிதியின் அருமை தெரியவில்லை. ஆனால், மேற்கு வங்கத்தைச் சேர்ந்த இளம் அறிஞர் கர்க சட்டர்ஜிக்கு கருணாநிதியின் அருமை தெரிந்திருக்கிறது. அதனால்தான் இப்படி எழுதுகிறார்: “...அண்ணா, கருணாநிதியின் போராட்டங்களை இன்று தமிழ் மக்களுக்கான போராட்டங்களாக மட்டும் பார்க்க முடியவில்லை. நாட்டின் கூட்டாட்சி அமைப்பை வலுப்படுத்துவதற்கான, இந்தி பேசாத ஒவ்வொரு மாநிலத்துக்குமான போராட்டங்களாகவே பார்க்கிறோம். நான் தமிழனாக இல்லாமல் இருக்கலாம்; இப்போது மேற்கு வங்க அரசுக்கென்று சில தனி உரிமைகள் இருக்கின்றன என்றால், அதற்கு கருணாநிதி தமிழ்நாட்டுக்காகப் போராடிப் பெற்ற உரிமைகள்தான் காரணம் என்பதை உணர்கிறேன். இந்தியைத் தாய்மொழியாகக் கொண்டவர்களுக்கு இணையான மரியாதையும் கண்ணியமும் எங்களுக்கும் வேண்டும் என்று கருதும் கோடிக்கணக்கான பிறமொழி பேசும் இந்தியர்கள் ஒவ்வொருவராலும் கருணாநிதி ஒரு போராளியாக நெடுங்காலத்துக்கு நினைவுகூரப்படுவார்!”

உண்மையில் இந்தியா முழுமைக்குமான தலைவர் கருணாநிதி என்றாலும் இந்தியா முழுவதும் அவர் அப்படிப் பார்க்கப்படுகிறாரா என்றால் இல்லை என்பதுதான் உண்மை. அவருக்கு மட்டுமல்ல, பாரதியார், ..சி., பெரியார், அண்ணா உள்ளிட்ட பலருக்கும் இதே நிலைதான். இந்தியர்கள் அனைவராலும் அங்கீகரிக்கப்பட ஒருவர் விந்திய மலைக்கு மேலே பிறந்திருக்க வேண்டும்! இந்த நிலைமையை எதிர்த்துதான் கருணாநிதி போராடினார். வடக்கைக் கீழிறக்க அல்ல, வடக்குக்கு இணையாகத் தெற்கும் கருதப்பட வேண்டும் என்பதற்காகத்தான் இந்தப் போராட்டம். இனவெறி, சாதிவெறிப் போன்றவற்றுக்கு எதிராக நடத்தப்படுவதைப் போன்றே சமத்துவத்துக்கான போராட்டம்தான் இது. பெரியார் அளித்த சுயமரியாதை என்ற சொல்லில் கருணாநிதிக்குக் கிடைத்த உத்வேகம்தான் இறுதிவரை இந்தப் போராட்டத்தை நடத்தும் துணிவை அளித்திருக்கிறது.

ஒரு பேட்டியில், “கருணாநிதி சிறுகுறிப்பு வரைகஎன்று அவரிடமே கேட்கிறார்கள். அதற்கு அவர் பதில் சொல்கிறார்: “மானமிகு சுயமரியாதைக்காரன்”. இந்தச் சுயமரியாதைக்காரர் நம் அனைவருக்காகவும் போராடிவிட்டு இப்போது மரணமெனும் நித்திய ஓய்வுக்குள் மூழ்கிவிட்டார். சமத்துவத்துக்கான எல்லாப் போராட்டங்களும் சுயமரியாதைக்கான போராட்டங்களே. அந்த வகையில் கருணாநிதி, நாம் என்றென்றும் கடமைப்பட்டிருக்கும் சமத்துவப் போராளியும் கூட!