படம்: கே. ஞானஸ்கந்தன்
ஆசை
நான் ஒரு பறவையியலாளன் அல்ல; பறவைகளைப் பார்ப்பவன் அவ்வளவே. மன்னார்குடியில் என்னுடைய வீட்டருகில் நீங்கள் பறவைகளைப் பார்க்க வேண்டும் என்றால், விசேஷமாக ஏதும் செய்யத் தேவையில்லை. மொட்டை மாடியில் போய் நின்றுகொண்டால் ஒரு மணி நேரத்தில் இருபதுக்கும் மேற்பட்ட பறவைகளைப் பார்க்கலாம். எங்கள் வீட்டு மொட்டை மாடியிலிருந்து பார்க்கக் கிடைக்கும் பறவைகள்: காகம், மைனா, தேன்சிட்டு, தையல்சிட்டு, தவிட்டுக்குருவி (கல்லுக்குருவி என்றும் சொல்வார்கள்), கொண்டைக்குருவி, பருந்து, சோலைப்பாடி, வாலாட்டி, கொண்டலாத்தி, குக்குறுவான், மணிப்புறா, குயில், கரிச்சான், சிட்டுக்குருவி, மரங்கொத்தி போன்றவை. வீட்டிலிருந்து கூப்பிடு தூரத்தில் இருக்கும் குளத்துக்குப் போய்ப் பார்த்தால் சிறகி, நீளவால் இலைக்கோழி, நீர்க்காகம் போன்ற பறவைகளைப் பார்க்க முடியும். அப்படியே வயல்வெளி, புதர்களூடே நடந்துசென்றால் செம்பகம், பஞ்சுருட்டான், ஆள்காட்டி, கொக்கு, மடையான் போன்ற எண்ணற்ற பறவைகளைக் காணலாம்.
இப்படிப் பறவைகளைக் காண்பது எதற்காக என்ற கேள்விக்கு என்னிடம் பதில் இல்லை. ஆனால் பறவைகளைப் பார்ப்பதற்காகச் செல்லும் நாட்களெல்லாம் எனது படைப்புத் திறன் மிகவும் தீவிரமாகச் செயல்பட்டதையும் அந்த நாட்களில் மனதில் இனிமையான உணர்ச்சி நிலவியதையும் என்னால் உணர முடிகிறது. பறவைகளைப் பார்ப்பவர்கள் பலரும் குறிப்பேடு வைத்துக் குறித்துக்கொள்வார்கள். நான் அப்படிச் செய்வதில்லை, எனது குறிப்பேடு மனதுதான், எனது குறிப்புகள் கவிதைகள்தான்.