Friday, March 7, 2025

ஒரு பொம்மலாட்டம் நடக்குது! - ஒட்டுண்ணிகளின் மர்மக் கதை


ஆசை

ஒருநாள் உங்கள் வீட்டுக் கதவை உடைத்துக்கொண்டு ஒருவர் உள்ளே நுழைகிறார். “ஏன் கதவை உடைத்தாய்?” என்று அவரைக் கேட்பதற்குள் அவர் உங்களை காபி கொண்டுவரச் சொல்கிறார். ஒய்யாரமாக உங்கள் வீட்டு சோபாவில் உட்கார்ந்துகொள்கிறார். உங்களை ஓடிப்போய் சரவணபவனில் நானும் பனீர் பட்டர் மசாலாவும் வாங்கிவரச் சொல்கிறார். நீங்களும் அவர் சொன்னதையெல்லாம் அப்படியே செய்கிறீர்கள். அது எல்லா விஷயங்களிலும் தொடர்கிறது. உங்கள் சம்பளப் பணத்தை அப்படியே அவரிடம் தந்துவிடுகிறீர்கள். உங்கள் வீட்டை அவர் பேருக்கு எழுதித் தந்துவிடுகிறீர்கள். கடைசியில் அந்த வீட்டை அவரிடம் ஒப்படைத்துவிட்டு நீங்களே வெளியேறிவிடுகிறீர்கள். இப்படியெல்லாம் நமக்கு நடந்தால் எப்படி இருக்கும்!

நம்மால் கேள்வி கேட்கவோ எதிர்க்கவோ முடியாத வகையில் நம் சுயவுணர்வும் சுதந்திர இயக்கமும் இன்னொருவர் கட்டுப்பாட்டுக்குள் போனால் எப்படி இருக்கும்! வாழ்தலுக்கான போராட்டத்தில் தங்களைத் தக்கவைத்துக்கொள்வதற்குச் சில ஒட்டுண்ணிகள் பின்பற்றும் உத்தியும் இதுதான்.

ஒட்டுண்ணிகள் என்பவை கிருமிகளாகவோ பூஞ்சைகளாகவோ புழுக்களாகவோ இருக்கலாம். இவை, இன்னொரு உயிரினத்தின் அல்லது தாவரத்தின் உடலுக்குள் சென்று அங்கேயே இருந்து அவற்றின் திரவங்கள், சத்துக்கள் போன்றவற்றை உறிஞ்சி வாழும். இவைதான் வழக்கமாக நாம் அறிந்த ஒட்டுண்ணிகள். ஆனால், சிலவகை ஒட்டுண்ணிகள் இன்னும் மேலே போய் தாங்கள் எந்த உயிரினத்தின் உடலுக்குள் ஊடுருவியிருக்கின்றனவோ அந்த உயிரின் மூளைச் செயல்பாட்டையே மாற்றியமைக்கின்றன. வசியம் செய்யப்பட்டவர் மற்றவரின் கட்டுப்பாட்டுக்கு இணங்கி நடப்பதுபோல் அந்த உயிரினம் இயங்குகிறது. அதற்கென்று சுயவிருப்பம், சுதந்திரமான இயக்கம் ஏதும் கிடையாது. ஒட்டுண்ணி அதன் உடலில் வந்து சேர்ந்த பிறகு அதன் வாழ்க்கை, செயல்பாடுகள் முழுவதும் ஒட்டுண்ணிக்கே சமர்ப்பணம்.

டைனோகாம்பஸ் கோச்சினெல்லே என்ற அறிவியல் பெயருடைய குளவி தனது முட்டையை லேடிபேர்டு என்ற வண்டின் உடலுக்குள் இட்டுச்செல்கிறது. அந்த வண்டின் உடலுக்குள் முட்டை பொரிக்கிறது. முட்டையிலிருந்து வெளிவந்த லார்வா, வண்டின் ரத்தத்தையும் இன்னபிற உள்ளுறுப்புகளையும் உணவாக உட்கொள்ள ஆரம்பிக்கிறது. மிகக் கவனமாக, லேடிபேர்டின் ஆதார உறுப்புகளை விட்டுவைக்கிறது. அந்த லார்வா உயிரோடு இருக்க வேண்டுமென்றால் வண்டும் உயிரோடு இருக்க வேண்டுமல்லவா! ஒரு கட்டத்தில் வண்டின் வயிற்றைத் துளைத்துக்கொண்டு வெளியில் வரும் லார்வா தன்னைச் சுற்றி ஒரு கூட்டை உருவாக்கிக்கொள்கிறது. அந்தக் கூட்டுப்புழுவால் தன்னைத் தற்காத்துக்கொள்ள முடியாது என்பதால் தனக்குக் காவலாக வண்டை நிற்க வைக்கிறது. ஏதோ தான் பெற்ற பிள்ளையைப் பாதுகாப்பதுபோல் அன்னந்தண்ணி இல்லாமல் அந்தக் கூட்டைக் கட்டிப்பிடித்துக்கொண்டு அதைக் காவல் காக்கும் அந்த வண்டு. ஏழு நாட்கள் கழித்துக் கூட்டுப்புழு முழு வளர்ச்சி பெற்று, கூட்டிலிருந்து குளவியாக வெளிவரும். அதுவரை அந்த லேடி பக் தாக்குப்பிடிக்குமானால் அதற்குப் பிறகு அது மீளக்கூடும். அதனை ஆட்கொண்ட வசியமும் அகன்றுவிடும். அதன் உள்ளுறுப்புகள் மறுபடியும் வளரும், அவற்றால் இனப்பெருக்கமும் செய்ய இயலும். இப்படி ஒட்டுண்ணியின் வசியத்தில் ஆட்பட்ட நான்கில் ஒரு லேடிபேர்டு பிழைப்பதற்கு வாய்ப்பிருக்கிறது என்று சொல்கிறார்கள். லேடிபேர்டின் மூளையைத் தொடாமலேயே அதைத் தனது இஷ்டத்துக்கு அந்த லார்வா ஆடவைப்பது ஆச்சரியம்தான். அந்த லார்வா சுரக்கும் வேதிப்பொருள்தான் அதற்குக் காரணம் என்று உயிரியலாளர்கள் நம்புகிறார்கள்.

லேடிபேர்டின் கதை இப்படியென்றால் கம்பளிப்புழுக்களின் நிலை இன்னும் பரிதாபம். ப்ராகோனிடே என்ற குளவி  கம்பளிப்புழுக்களைத் துளைத்து சுமார் 60 முட்டைகளை இட்டுச்செல்கிறது. அவை உள்ளே குஞ்சுபொரித்து லார்வாக்களாக வெளிவருகின்றன. அந்த லார்வாக்கள் கம்பளிப்புழுவின் ரத்தத்தையும் இன்னபிற ஊட்டத்தையும் உறிஞ்சிக்கொள்கின்றன. கவனமாக, அவற்றின் ஆதார உறுப்புகளை விட்டுவிடுகின்றன. வளர்ச்சி பெற்றதும் வெளியில் வந்து தங்களைச் சுற்றிக் கூடுகளை உருவாக்கிக்கொள்கின்றன. அந்தக் கூடுகளைச் சுற்றிலும் கூடுதலாக இன்னுமொரு அடுக்குக் கூட்டை கம்பளிப்புழு உருவாக்குகிறது. வழக்கமாக, தன்னைச் சுற்றிலும் உருவாக்கிக்கொள்ளும் அந்தப் புழு தற்போது அந்த லார்வாக்களைச் சுற்றிலும் பாதுகாப்பு அரணை உருவாக்குகிறது. அப்படி பாதுகாப்பை உருவாக்கவில்லையென்றால் அந்த லார்வாக்கள் உடலுக்குள் மற்ற சில ஒட்டுண்ணிகள் தங்களின் முட்டைகளை இட்டுவிட்டுச் சென்றுவிடும். அதாவது ஒட்டுண்ணிக்கே ஒட்டுண்ணி! லார்வாக்களைக் காப்பாற்றும் யுத்தத்தில் ஒரு கட்டத்தில் சக்தியிழந்து உயிரிழக்கின்றன கம்பளிப்புழுக்கள்.

அடுத்ததாக சுவர்க்கோழிகளின் (cricket) தற்கொலைப் பயணம்! குதிரைமுடிப் புழுக்களின் லார்வாக்களைக் கொசுக்களின் லார்வாக்கள் உண்கின்றன. கொசு லார்வா கொசுவாக உருமாற்றம் பெற்ற நிலையில் அவற்றைச் சுவர்க்கோழிகள் உண்கின்றன. இப்படியாகக் குதிரைமுடிப் புழுக்களின் லார்வாக்கள் சுவர்க்கோழிகளின் வயிற்றுக்குள் தஞ்சம் புகுகின்றன. அவற்றின் உடலுக்குள் பல அடி நீளத்துக்கு அந்தப் புழுக்கள் வளர்கின்றன. அவற்றின் பரிணாமத்தில் சுவர்க்கோழியின் உடல் ஒரு பகுதி மட்டுமே. வளர்ச்சி பெற்ற நிலையில் அந்தப் புழுக்கள் நீர்நிலைகளை அடைந்தாக வேண்டும். அந்தக் கட்டத்தில் சுவர்க்கோழிகள் கூட்டம் கூட்டமாக நீர்நிலைகளுக்குச் செல்கின்றன. அங்கு குதித்துத் தற்கொலை செய்துகொள்கின்றன. அதாவது, அவற்றை அங்கு குதிக்கும்படி குதிரைமுடிப் புழுக்கள் தூண்டுகின்றன. அங்கு சுவர்க்கோழியின் உடலிலிருந்து சுமார் ஒரு மீட்டர் நீளம் வரை உள்ள குதிரைமுடிப் புழு வெளிவருகிறது. நீர்நிலையில் இனப்பெருக்கம் செய்து முட்டையிடுகிறது. அந்த முட்டையிலிருந்து வெளிவரும் லார்வாவைக் கொசுக்களின் லார்வா உண்ண, மறுபடியும் அதே நிகழ்வுகள்!

மரகதக் கரப்பான் குளவி இன்னும் பல படிகள் மேலே செல்கிறது. முதலில் கரப்பான் பூச்சியைத் தேடி அதன் தலைப்பகுதியில் ஊசி போடுகிறது. குளவியின் கொட்டும் உறுப்பே அதன் உணர்கொம்பாகச் செயல்பட்டுக் கரப்பான் பூச்சியின் மூளையின் பரப்பைத் துழாவுகிறது. கரப்பான் பூச்சியின் சுதந்திர இயக்கத்துக்குப் பொறுப்பான பகுதியைக் கண்டுபிடித்து அங்கே ஒரு ஊசி! அவ்வளவுதான், இனி அந்தக் கரப்பான் பூச்சி குளவிக்கு அடிமை. அப்புறம், நாயை அதன் உரிமையாளர் இழுத்துச்செல்வதுபோல் கரப்பான் பூச்சியின் உணர் இழையைப் பிடித்து இழுத்துக்கொண்டு தன்னுடைய இடத்துக்குச் செல்கிறது அந்தக் குளவி. அங்கே வைத்துத் தன்னுடைய முட்டைகளைக் கரப்பான் பூச்சியின் உடலுக்குள் செலுத்துகிறது. கரப்பானின் உடலுக்குள் செலுத்தப்படும் முட்டைகள் குஞ்சுபொரித்து லார்வாக்கள் உருவாகின்றன. அந்த லார்வாக்கள் கொஞ்சம் கொஞ்சமாகக் கரப்பானை அரித்துத் தின்கின்றன. இவையும் கரப்பானின் முக்கியமான உறுப்புகளை விட்டுவிடுகின்றன. கரப்பானை யாரும் கட்டிப்போடவில்லை என்றாலும் எங்கும் செல்லாமல் தன்னை அந்த லார்வாக்களுக்கு ஒப்புக்கொடுக்கிறது கரப்பான். கடைசியில் அவற்றின் வயிற்றைத் துளைத்துக்கொண்டு லார்வாக்கள் முழு வளர்ச்சி பெற்று வெளியில் வருகின்றன. தனக்கு என்ன நடந்தது என்று தெரியாமலேயே கரப்பான் செத்துப்போகிறது.

இவையெல்லாம் பூச்சிகள்! இவற்றுக்குப் பூஞ்சைகள் எந்த விதத்திலும் சளைத்தவை கிடையாது. ஸோம்பி எறும்புப் பூஞ்சை பெயருக்கேற்றபடி காரியமும் பயங்கரம். எறும்புகளின் உடலில் ஊடுருவும் அந்தப் பூஞ்சை ஒரு ஏழெட்டு நாட்கள் சத்தமில்லாமல் வளர்ந்துகொண்டிருக்கும். வளர்ச்சியின் ஒரு கட்டத்தை எட்டியவுடன் அந்த எறும்பை அருகில் உள்ள செடியிலோ மரத்திலோ அவை ஏறத் தூண்டும். தரையிலிருந்து சரியாக 25 செ.மீ. உயரத்தில் ஒரு காம்பை இறுக்கமாக அந்த எறும்புக்கள் பிடித்தபடி உயிரைவிட, அவற்றின் உடலின் அனைத்துப் பகுதிகளிலிருந்தும் பூஞ்சை வெளிப்படுகிறதுஎறும்பு எது பூஞ்சை எது என்று நம்மால் அடையாளம் காண முடியாத அளவுக்கு இருக்கும். எறும்பின் தலையிலிருந்து பூஞ்சையின் இனப்பெருக்கத் தூவிகள் முளைத்துத் தரையில் விழுந்து மற்ற எறும்புகளுக்கும் பரவி அவற்றையும் ஸோம்பிகளாக்கும். அதற்காகத்தான் எறும்புப் புற்று இருக்கும் இடத்துக்கு நேர் மேலே உள்ள செடியின் காம்பை அந்த எறும்புகளைப் பூஞ்சை தேர்ந்தெடுக்க வைக்கிறது.

காஸ்ட்ரேட்டர் பார்னக்கில் என்ற பூச்சிகளின் கதை இன்னும் பயங்கரம். நண்டுகளின் உடம்பில் ஒட்டிக்கொள்ளும் இந்தப் பூச்சி, நண்டுகளை உறிஞ்சி வாழ்வது மட்டுமல்லாமல் அவற்றை வாடகைத்தாயாகவும் மாற்றிவிடுகின்றன. ஆண் நண்டுகளாக இருந்தால் அவற்றைப் பெண்ணாக ஆக்கி, தனது லட்சக் கணக்கான லார்வாக்களை சுமக்கும் கருப்பை போன்ற உறுப்பை நண்டின் உடலில் அந்தப் பூச்சி வளரச் செய்கிறது. அது மட்டுமல்லாமல், ‘தான் ஒரு பெண் நண்டுஎன்ற எண்ணம் அந்த நண்டுக்கு ஏற்படவும் அந்தப் பூச்சி செய்கிறது.

இவையெல்லாம் சிறிய உயிரினங்களின் உலகத்தில்தானே என்று நிம்மதிப் பெருமூச்சுவிட வேண்டாம். வெறிநாய்க் கடியின்போது மனித உடலில் பரவும் ரேபிஸ் வைரஸ் மனிதர்களை முழுக்கத் தன் கட்டுப்பாட்டில் வைத்துக்கொள்கிறது என்பதை மறக்க வேண்டாம். அதேபோல் டோக்ஸோப்ளாமோஸிஸ் என்ற ஒருசெல் உயிரியும். எலிக்களின் உடலில் இவை ஊடுருவுகின்றன. என்றாலும் இவற்றின் இறுதிப் புகலிடம் பூனையின் வயிறு ஆகவே. அதுவரை பூனையைக் கண்டால் மிரண்டு ஓடும் எலிக்கள் இந்த ஒட்டுண்ணியின் ஊடுருவலுக்குப் பிறகு பூனையின் வாசனை மூக்கில் பட்டாலே அழகான பெண்ணைப் பார்த்ததும் தலையைச் சீவிக்கொண்டு அவள் எதிரே சென்று அவள் கவனத்தை ஈர்க்க முயலும் இளைஞன் போல் ஆகிவிடுகிறது. நேரே பூனையை நோக்கி ஓடுகிறது. அதன் பிறகு பூனையின் வயிற்றுக்குள் அந்த ஒட்டுண்ணி சாவதானமாக இனப்பெருக்கம் செய்கிறது. உலகில் 30% முதல் 60% வரையிலான மனிதர்கள் உடலில் டோக்ஸோப்ளாமோஸிஸ் இருப்பதாகக் கணிக்கப்படுகிறது. மனிதர்களின் நடத்தையில் சிறிய அளவில் இந்த உயிரிகள் பாதிப்பு ஏற்படுவதாகவும் கண்டறியப்பட்டுள்ளது.

இன்றைய நவீன அரசுகள், பெருநிறுவனங்கள் பலவும் இப்படிப்பட்ட ஒட்டுண்ணிகளின் உத்தியைப் பின்பற்றுகின்றன. நாம் என்ன உணவைச் சாப்பிட வேண்டும், என்ன உடையை உடுத்த வேண்டும், எந்த பானத்தை அருந்த வேண்டும், எந்தெந்தப் பொருட்களை வாங்க வேண்டும் என்று எல்லாமுமே யாரோ சிலரால் தீர்மானிக்கப்படுகிறது. அவர்களின் விருப்பம் நம் ஆழ்மனதில் நம் விருப்பம் போன்ற வேடத்துடன் விதைக்கப்படுகிறது. இன்றைய உலகப் பொருளாதாரமே இப்படிப்பட்ட ஒட்டுண்ணிப் பொருளாதாரம்தான். இதனுடன் ஒப்பிடும்போது நிஜ ஒட்டுண்ணிகள் அவ்வளவு பயங்கரமானவை இல்லைதான்!

          -நன்றி: இந்து தமிழ் திசை

No comments:

Post a Comment