Thursday, March 6, 2025

தான்தான் கடவுள்



தன் வாழ்நாள் முழுவதும்
சிரமப்பட்டு
இந்த ஒரே ஒரு தேன்சிட்டைப்
படைத்தார் கடவுள்
பிறகு தேன்சிட்டுக்கென்று
தேனையும்
தேனுக்கென்று பூவையும்
பூவுக்கென்று செடியையும்
செடியிருக்கத் தரையையும்
தரைக்கென பூமியையும்
பூமிக்காக வானம்
நட்சத்திரங்களென்று
யாவற்றையும் படைத்தார் கடவுள்
எல்லாம் தனக்காகப்
படைக்கப்பட்டிருந்தாலும்
எதைப் பற்றியும்
கவலைகொள்வதில்லை
இந்தத் தேன்சிட்டு
பிரபஞ்சத்தின் எந்த விதிகளையும்
மதிப்பதில்லை
கடவுள் இருக்கிறாரா
இல்லையா என்றுகூட
எண்ணிப் பார்ப்பதில்லை
பாருங்கள்
போகிறபோக்கில்
காலத்தின் உள்ளங்கையில்
எப்படி அது எச்சமிட்டுப் போகிறது
என்பதை
என்னவோ தான்தான்
கடவுள் என்பதைப் போல

-ஆசை, கொண்டலாத்தி (2010, க்ரியா) கவிதைத் தொகுப்பிலிருந்து 

No comments:

Post a Comment