உன் தொடுதலின்
பரப்பில் எதிர்பட்ட
என் உடலின் பரப்பெல்லாம்
புலனெல்லாம்
தத்தமது உணவுக்கான
ஒளிச்சேர்க்கையை
நடத்திக்கொள்ளும்
உன் உடல்
என்னுடலில்
தனக்கான
இன்பத்தின் கனிகளைக்
கொய்து
எனக்கான கனிகளைக்
கொட்டிவிட்டுச்செல்லும்
அதில் எடுத்து
நான் கொறிக்கும்
கனியொன்று
யோனிக்கருப்பில்
கனிந்திருக்கும்
இன்னொன்று
முலைத்திரட்சியில்
திரண்டிருக்கும்
மற்றொன்று
உதட்டுச் சிவப்பில்
சிவந்திருக்கும்
நாம் நீக்கமற
ஒருவரையொருவர்
புசித்துக்கொள்வதற்கான இடமே
இவ்வுடல்கள்
என்றறி
நீ உண்ணும் கனி
எனக்கான கனியாய்
மாறும் விளையாட்டு
இது என்றறி
ஒவ்வொரு அங்குலமாக
என் உடலில் நீ ஏறும்போது
அவ்வவ்விடங்களின்
ஆன்மாவைத் தேடாதே
ஆன்மா என்பது
உடலின் சிறையென்றறி*
ஆன்மாவிலிருந்து
உடலை விடுவிக்கவே
நம்
ஒட்டுமொத்த இன்பத்தையும்
கொண்டு
தாக்குதல் செய்துகொள்கிறோம்
ஏதோ எப்போதோ
உடலின் ரூபத்தை
ஆன்மா எடுத்துக்கொண்டுவிட்டது
அதனிடம் நீ உடலில்லை எனவும்
உடலிடம் நீதான் உடல்
உடல்தான் இறுதி எனவும்
சொல்ல நாம்
கடமைப்பட்டுள்ளோம்
நம் ஒவ்வொரு
அங்குலத்துக்கும்
நாவிருக்கிறது
அதைக் கொண்டு
ஒரு இடம் விடாமல்
சுவைப்போம்
நம் ஒவ்வொரு அங்குலத்துக்கும்
குறியுண்டு
அதைக் கொண்டு
ஒரு இடம் விடாமல்
புணர்வோம்
ஆன்மாவைத்
துரத்திவிட்டு
அந்த இடத்தில்
குடிபுகும்போது
நாம் இருவரும்
குறிகளாய் மட்டும்
எஞ்சுவது
எவ்வளவு பேரானந்தம்
நம் குறிகள்
பிரபஞ்சத்தின்
இரட்டை விண்மீன்களாய்
பதிந்துவிட
வீழ்ந்த தேவதையான
ஆன்மா தூரத்திலிருந்து
தன் கப்பல் திசைக்கு
நம்மை விண்மீன் பார்ப்பது கண்டு
ஒருவரையொருவர் பார்த்து
நாம் சிரித்துக்கொள்வோம்
-ஆசை, குவாண்டம் செல்ஃபி (2021) தொகுப்பில் இடம்பெற்ற கவிதை
*ஆன்மா என்பது உடலின் சிறை: மிஷேல் ஃபூக்கோ
No comments:
Post a Comment