Thursday, February 27, 2025

நாளை காப்பாற்றலாம்



மனம் சிதறுண்டு
ஒருவன்
உட்கார்ந்திருக்கிறான்
அவன்
தனது கழிவிரக்கத்தைச்
சிற்பமாகச் செய்து
வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கவில்லை
சிதறலின் இடைவெளிக்கு அப்பால்
கொஞ்சமே கொஞ்சம் தெரியும்
மிச்ச வாழ்க்கை
தன்னைப் போல் இருக்கிறதா
என்று மட்டும் பார்த்துக்கொண்டே
இருக்கிறான்
உங்களுக்கு அவன்
தன் சிதறலுக்கு
மாடலாய்
உட்கார்ந்திருப்பதாகத்
தோன்றலாம்
இந்தக் கிறுக்குத்தனத்திலிருந்து
எப்படியாவது
அவனைக் காப்பாற்ற வேண்டும்
என்று நீங்கள் துடிதுடிக்கலாம்
உங்களிடம்
அவனைக் காப்பாற்றுவதற்கான
எல்லா உபாயங்களும்
ஆயுதங்களும்
கருவிகளும்
இருக்கலாம்
இது அவனுக்கும்
பரிபூரணமாகத் தெரியும்
ஆனால்
உங்கள் அன்பையும் அக்கறையையும்
சிதறல்களை ஒட்டும் பசையையும்
சிதறலின் வேர்களைக்
கண்டுபிடிக்கும் கருவிகளையும்
நாளைக்குக் கொண்டுவாருங்கள் என்றும்
வெளியேறும் வெற்றிடத்தின்
ஓசையை
சிறிது நேரம்
கேட்டுக்கொண்டிருக்க மட்டும்
அவனை அனுமதியுங்கள்
என்றும்
அவன் சொல்லத் தெரியாமல்தான்
உங்கள் முன் சீறி வெடிக்கிறான்
என்பதை
தயவுசெய்து புரிந்துகொள்ளுங்கள்
அவனை
நாளையோ
நாளை மறுதினமோ
நிச்சயம்
நீங்கள் காப்பாற்றிவிடுவீர்கள்

            -ஆசை

No comments:

Post a Comment