Tuesday, March 5, 2024

மூர்த்தி கிளாசிக்கல் லைப்ரரியில் என்ன நடக்கிறது?

இன்ஃபோஸிஸ் நாராயண மூர்த்தியின் மகன் ரோஹன் மூர்த்தி பெரும் கனவுடன் ஆரம்பித்தது மூர்த்தி கிளாசிக்கல் லைப்ரரி ஆஃப் இந்தியா (MCLI). இதற்காகவே நாராயண மூர்த்தியை மன்னித்துவிடலாம் என்று தோன்றும். அந்த வெளியீட்டின் புத்தகங்களையெல்லாம் இன்றுவரை கொத்துக்கொத்தாக வாங்கிக்கொண்டிருக்கிறேன். இப்போது பெரும் குழப்பத்தையும் தடுமாற்றத்தையும் மூர்த்தி லைப்ரரி எதிர்கொண்டிருக்கிறது என்பதை நேற்று அர்ச்சனா வெங்கடேசனின் பதிவின் மூலம் அறிந்துகொள்ள முடிந்தது.

பதவிநீக்கம் செய்யப்பட்டோரின் அறிக்கை மேலே கொடுக்கப்பட்டிருக்கிறது


முன்பு இந்த லைப்ரரியின் முதன்மை ஆசிரியராக இருந்த ஷெல்டன் போலக் பதவிக் காலம் முடிவதற்கு இரண்டு ஆண்டுகளுக்கு முன்பாகவே ஓரங்கட்டப்பட்டிருக்கிறார். புதிய முதன்மை ஆசிரியராகப் பதவியேற்றிருக்கும் பேராசிரியர் பரிமள் பட்டீல் மற்ற மொழிபெயர்ப்பாளர்கள், ஆசிரியர்களுடன் எந்தத் தொடர்பிலும் இருப்பதில்லை என்று குற்றம்சாட்டப்படுகிறது. தற்போது எந்தக் காரணமும் மூர்த்தி கிளாசிக்கல் லைப்ரரியின் ஏனைய எடிட்டர்கள் நீக்கப்பட்டிருக்கிறார்கள்.

2016ல் நம் சக்கவர்த்தியின் படையினர் மூர்த்தி கிளாசிக்கல் லைப்ரரிக்கு எதிராகவும் அதன் அப்போதைய தலைவர் ஷெல்டன் போலக்குக்கும் எதிராகவும் போர்தொடுத்தபோது ஷெல்டன் போலக்குக்குத் துணைநின்ற ரோஹன் மூர்த்தியின் நிலைப்பாடு இப்போது என்ன என்பது தெரியவில்லை. தற்போது மூர்த்தி லைப்ரரிக்கு முதன்மை ஆசிரியராக ஒரு இந்தியர் ஆகியிருக்கிறார். அவருக்கு என்ன நெருக்கடியோ தெரியவில்லை. இனி இந்த லைப்ரரிக்கு என்னவாகும், பாதிவரை மொழிபெயர்த்த நூல்களுக்கு என்னவாகும் என்பதெல்லாமும் தெரியவில்லை.

2016ல் ஷெல்டன் போலக்குக்கும் மூர்த்தி கிளாசிக்கல் லைப்ரரிக்கும் நம் சக்கரவர்த்தியின் அறிஞர்கள் நெருக்கடி கொடுத்தபோது இந்து தமிழ் நாளிதழில் நான் ஒரு கட்டுரை எழுதினேன். அநேகமாக தமிழ் வெகுஜன ஊடகத்தில் அப்போது அந்த விவகாரம் குறித்து எழுதப்பட்ட ஒரே கட்டுரையாக இது இருக்கலாம். அதே போல் இந்த லைப்ரரி வெளியிட்ட முதல் தொகுப்புகளுக்கு இந்து நாளிதழில் 2015லேயே சுருக்கமான ஒரு அறிமுகம் எழுதினேன். தமிழில் வேறெந்த பெரும் பத்திரிகையிலோ சிறுபத்திரிகைகளிலோ எனக்குத் தெரிந்து இந்த நூல்களுக்கு விமர்சனங்கள் வெளியானதில்லை (சுட்டிக்காட்டினால் திருத்திக்கொள்கிறேன்). ஷெல்டன் போலக் விவகாரம் குறித்த என் கட்டுரையின் சுட்டியும் இந்தத் திட்டத்தின் கீழ் வெளியான முதல் புத்தகங்கள் குறித்த என் அறிமுகமும் கீழே கொடுக்கப்பட்டிருக்கின்றன.


No comments:

Post a Comment