Saturday, October 10, 2020

லூயிஸ் க்லூக்: நோபலின் மற்றுமொரு ஆச்சரியம்



ஆசை 

 

கடந்த சில ஆண்டுகளாக இலக்கியத்துக்கான நோபல் பரிசு வெளியுலகால் அதிகம் அறியப்படாதவர்களுக்கு வழங்கப்பட்டுவருகிறது. இதில் விதிவிலக்கு பாப் டிலன் (2016). ஒவ்வொரு ஆண்டும் முராகாமிக்கு வழங்கப்படும், பிலிப் ராத்துக்கு வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படும். எதிர்பார்ப்பிலேயே பிலிப் ராத்தும் காலமாகிவிட்டார். இந்த ஆண்டும் எதிர்பார்ப்புப் பட்டியலில் முராகாமி இருந்தார். கூடவே, அவரைப் போல நீண்ட காலம் காத்திருக்கும் கூகி வா தியாங்கோவும் இருந்தார். மேலும், கனடிய கவிஞர் ஆன் கார்ஸன், ரஷ்ய நாவலாசிரியர் ல்யூட்மிலா உலிட்ஸ்கயா, சீன நாவலாசிரியர் யான் லியான்கே, ஆன்டிகுவா-அமெரிக்க எழுத்தாளர் ஜமைக்கா கின்கைட் போன்றோரும் இருந்தனர். ஆனால், எதிர்பாராதவர்களுக்கு நோபல் பரிசு கொடுக்கும் மரபின் தொடர்ச்சியாக இந்த ஆண்டின் நோபல் பரிசு அமெரிக்கக் கவிஞர் லூயிஸ் க்லூக்குக்கு (77) வழங்கப்பட்டிருக்கிறது. ‘அவரது தனித்துவமான கவிதைக் குரல் அலங்காரமற்ற அழகுடன் தனிநபர் இருப்பை அனைவருக்கும் பொதுவானதாக ஆக்குகிறது’ என்று நோபல் அறிவிப்பு கூறுகிறது. 

 

லூயிஸ் க்லூக் வெளியுலகுக்கு அதிகம் பரிச்சயமில்லாதவர் என்றாலும் அமெரிக்காவுக்குள் மிகவும் பிரபலமானவர். அமெரிக்காவில் கவிதைக்கு வழங்கப்படும் அனைத்து விருதையும் அவர் பெற்றிருக்கிறார். ‘தி வைல்டு ஐரிஸ்’ என்ற கவிதைத் தொகுப்புக்காக 1993-ல் புலிட்சர் பரிசு பெற்றிருக்கிறார். அது மட்டுமல்லாமல் 2015-ல் அப்போதைய அமெரிக்க அதிபர் ஒபாமாவின் கையால் ‘நேஷனல் ஹ்யூமானிட்டீஸ் மெடல்’ பெற்றிருக்கிறார். இவை தவிர, அமெரிக்கப் படைப்பாளிகளுக்கு வழங்கப்படும் மிக உயரிய விருதான ‘தேசிய புத்தக விருது’ (2014), ‘பொலிங்கன் பரிசு’ (2001) போன்றவற்றையும் பெற்றிருக்கிறார். 2003-04 ஆண்டுகளில் அமெரிக்க அரசின் அவைக் கவிஞராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார். பிரபல்யத்தை அதிகம் விரும்பாத லூயிஸ் அந்தக் கௌரவத்தை மிகவும் தயக்கத்துடனேயே ஏற்றுக்கொண்டார். 

 

1943-ல் நியூயார்க்கில் லூயிஸ் க்லூக் பிறந்தார். இவர் வளர்ந்ததெல்லாம் நியூயார்க் மாநிலத்தில் உள்ள லாங் ஐலேண்டு என்ற தீவில். பதின்பருவத்தில் இவர் பசியின்மை நோயால் பெரும் பாதிப்படைந்தார். இது அவரது கவிதை உலகத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது என்று கருதப்படுகிறது. தனது மேற்படிப்பை கொலம்பியா பல்கலைக்கழகத்தில் முடித்த லூயிஸ் க்லூக் முழு நேரக் கவிஞராக இருக்க வேண்டுமென்று ஆசைப்பட்டார். இது குறித்து அவர் ஒரு பேட்டியில் இப்படிக் கூறியிருக்கிறார்: “நான் இளம் பெண்ணாக இருந்தபோது எழுத்தாளர்கள் எந்த மாதிரி வாழ்க்கை வாழ வேண்டுமென்று சொல்லப்படுகிறதோ அதுபோன்றதொரு வாழ்க்கையை நடத்தினேன். அதாவது, உலகத்தை ஒதுக்கித்தள்ளிவிட்டு நமது எல்லா சக்திகளையும் கலைப் படைப்பை உருவாக்குவதில் குவிப்பது. எனது மேசை முன் உட்கார்ந்துகொண்டு எழுத முயல்வேன். என்னால் எதையும் எழுத முடியவில்லை. நாம் இந்த உலகத்தைப் போதுமான அளவு ஒதுக்கித்தள்ளாததால்தான் என்னால் எழுத முடியவில்லை என்று நினைத்தேன். இதே மாதிரி இரண்டு ஆண்டுகள் இருந்த பிறகுதான் எனக்குப் புரிந்தது இப்படியே இருந்தால் என்னால் எழுத்தாளர் ஆக முடியாது என்று. அதனால், வெர்மான்ட்டில் ஆசிரியர் வேலைக்குச் சேர்ந்தேன்; உண்மையான கவிஞர்கள் ஆசிரியர் பணியில் ஈடுபடுவதில்லை என்று அதுவரை நான் நம்பிவந்தபோதும். ஆனாலும், அந்த வேலையில் சேர்ந்தேன். ஆசிரியர் பணியில் நான் ஈடுபட ஆரம்பித்த தருணத்தில், இந்த உலகத்தில் நான் ஆற்ற வேண்டிய கடமைகளை ஏற்றுக்கொண்ட தருணத்தில், நான் மறுபடியும் எழுத ஆரம்பித்தேன்.” 

 

லூயிஸ் க்லூக்கின் முதல் தொகுப்பான ’ஃப்ர்ஸ்ட்பான்’ 1968-ல் வெளிவந்தது. இதுவரை 12 கவிதைத் தொகுப்புகள் வெளியாகியிருக்கின்றன. இரண்டு கட்டுரைத் தொகுப்புகள் வெளியாகியிருக்கின்றன. லூயிஸ் க்லூக்கின் கவிதை சிறிய உலகத்தைப் பற்றியது, அதாவது தன்னைப் பற்றியது என்றாலும் அது அமெரிக்கர்களை ஈர்த்திருக்கிறது. ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம் போன்ற சமூக ஊடகங்களில் லூயிஸ் க்லூக்கின் கவிதை வரிகள் பதிவிடப்படுவது சகஜம். அமெரிக்காவுக்கு வெளியில் தற்போது நோபல்தான் லூயிஸ் க்லூக்கைக் கொண்டுசென்றிருக்கிறது என்பதால் அவரது கவிதைகளை உலகம் எப்படி அணுகப்போகிறது என்பது இனிமேல்தான் தெரியும்.  

 

தாலாட்டு 

 

ஒரு விஷயத்தில் என் அம்மா கைதேர்ந்தவர்: 

தான் நேசிக்கும் மனிதர்களை 

வேறோர் உலகுக்கு அனுப்புவாள். 

சிறியவர்கள், குழந்தைகள்- அவர்களைத் 

தாலாட்டுவாள், கிசுகிசுப்பதுபோல் பாடுவாள் 

அல்லது மெல்லிய குரலில் பாடுவாள். 

என்னால் சொல்ல இயலாது 

என் தந்தைக்கு அவள் என்ன செய்தாள் என்று: 

எதுவாக இருந்தாலும், 

அது சரியாகத்தான் இருக்கும் என்று நம்புகிறேன். 

 

இரண்டும் ஒன்றுதான், உறக்கத்துக்கும் மரணத்துக்கும் 

ஒருவரைத் தயார்ப்படுத்துவது. 

தாலாட்டுப் பாடல்களைப் பற்றி இப்படிச் சொல்வார்கள்- 

அஞ்ச வேண்டாம், அப்படித்தான் அம்மாவின் 

இதயத் துடிப்பை விளக்க முடியும் என்று. 

 

ஆக, உயிருள்ளவர்கள் மெதுவாக அமைதியாகிறார்கள்; இறந்துகொண்டிருப்போர்தான் 

அமைதியடைய முடியாமல் 

மறுக்கிறார்கள். 

 

இறந்துகொண்டிருப்பவர்கள் பம்பரங்களைப் போல, 

சுழல்மானிகளைப் போல – 

நிச்சலனமாகத் தோன்றுமளவுக்கு 

வேகமாகச் சுழல்கிறார்கள். 

அப்புறம் அவர்கள் திசையெங்கும் சிதறிப்போகிறார்கள்: 

என் அம்மாவின் கைகளில், என் தங்கை 

அணுக்களின், அணுத்துகள்களின் மேகமாக இருந்தாள் – 

அதுதான் வித்தியாசம். 

 

ஒரு குழந்தை உறக்கத்தில் இருக்கும்போது, 

அது இன்னும் முழுமையாக இருக்கிறது.  

 

என் அம்மா மரணத்தைக் கண்டிருக்கிறாள்; 

ஆன்மாவின் முழுமை பற்றி அவள் பேசுவதில்லை. 

ஒரு குழந்தையை, ஒரு முதியவரை 

அவள் கைகளில் ஏந்தியிருக்கிறாள் 

ஒப்பிட்டுப் பேசினால், அவர்களைச் சுற்றிலும் 

இருள் பரவிற்று, 

இறுதியில் அவர்களை மண்ணாக ஆக்கியவாறு. 

 

எல்லாப் பருப்பொருளையும் போன்றதுதான் ஆன்மா: 

அது ஏன் மாறாமல் இருக்க வேண்டும், 

அதன் ஒரு வடிவத்துக்கு ஏன் அது 

விசுவாசமாக இருக்க வேண்டும், 

அதனால் சுதந்திரமாக இருக்க முடியும்போது? 

 

 

பின்வாங்கும் காற்று 

 

உங்களை நான் உருவாக்கியபோது, 

உங்களை நான் நேசித்தேன். 

இப்போது உங்களுக்காக நான் பரிதாபப்படுகிறேன். 

 

உங்களுக்குத் தேவையான எல்லாம் நான் தந்தேன்: 

படுக்கையாக பூமியை, நீல வானப் போர்வையை – 

 

உங்களிடமிருந்து விலகிச் செல்லச் செல்ல 

உங்களை நான் தெளிவாகப் பார்க்கிறேன். 

 

உங்களின் ஆன்மாக்கள் இப்போது 

பிரம்மாண்டமாக ஆகியிருந்திருக்க வேண்டும், 

தற்போது உள்ள மாதிரி அல்ல, 

அதாவது வெற்றுப்பேச்சு பேசும் 

சின்னஞ்சிறு விஷயங்களாக அல்ல – 

 

உங்களுக்கு ஒவ்வொரு பரிசையும் தந்தேன், 

வசந்தகாலக் காலைப்பொழுதின் நீலத்தை, 

எப்படிப் பயன்படுத்துவதென்று நீங்கள் அறியாத காலத்தை—இன்னும் வேண்டுமென்றீர் நீங்கள், 

இன்னொரு படைப்புக்கென்று ஒதுக்கிவைக்கப்பட்ட 

அந்த ஒரு பரிசை. 

 

நீங்கள் நம்பிக்கையோடு எதிர்பார்த்திருந்தது 

எவையெவையோ அவற்றை 

வளரும் தாவரங்களிடையே 

தோட்டத்தில் தேடிக் காண உங்களால் முடியாது, 

அவற்றுடையதைப் போன்று உங்கள் வாழ்க்கை 

வட்டச்சுற்றானதில்லை: 

 

நிச்சலனத்தில் தொடங்கி நிச்சலனத்தில் முடியும் 

பறவையின் பறத்தலைப் போன்றது உங்கள் வாழ்க்கை – 

அது வெள்ளை பர்ச் மரத்திலிருந்து 

ஆப்பிள் மரத்துக்குச் செல்லும் 

வில்வளைவை வடிவத்தில் ஒத்திருப்பதுபோல் 

தொடங்கி முடிகிறது. 

 

(கவிதைகள் தமிழில்: ஆசை) 

(‘இந்து தமிழ்’ நாளிதழில் 10-10-20 அன்று வெளியான கட்டுரை)

1 comment:

  1. அலங்காரமற்ற அழகுடன் தனிநபர் இருப்பே அவரை மற்றவர்களிடமிருந்து வேறுபடுத்தியுள்ளது போலுள்ளது.

    ReplyDelete