ஓவியம்: அஹ்மது இமாது |
ரமின் ஜஹான்பிக்லூ
(மொழிபெயர்ப்பு: ஆசை)
காந்தியின் லட்சியமான அகிம்சை என்பது உயர்ந்த சிந்தனை, ஆனால் நடைமுறை சாத்தியமற்றது என்று கூறும் போக்கு இன்றைய உலகில் காணப்படுகிறது. இந்த நம்பிக்கையில் காணப்படும் முரண்பாடு என்னவென்றால், காந்தியின் கொள்கைகளைப் புறக்கணித்துவிட்டு, அவருக்குப் புனிதத்துவத்தை இது வழங்குகிறது. எனினும், காந்தி ஒரு துறவி அல்ல; அவர் மதத் தலைவரும் அல்ல. அவர் மிக மிக முக்கியமாக ஓர் அசல் சிந்தனையாளர், மிகக் கூர்மையான அரசியல் ராஜதந்திரி, மனித குலத்துக்கு அகிம்சை என்ற கோட்பாட்டை அறிமுகப்படுத்தும் சாத்தியம் குறித்து ஆழமாக நம்பிக்கை கொண்டிருந்தவர் அவர்.
அகிம்சை பற்றிய காந்தியின் கருத்தாக்கம் ஒரு கனவு அல்ல; அது யதார்த்தமான நம்பிக்கை, நடைமுறை லட்சியவாதத்தின் சிறு கூறை அது தரித்துக்கொண்டிருந்தது; அதாவது, அன்பின் விதியை உலக அளவில் வரவேற்கும் லட்சியவாதம் அது. இவ்வாறாக, தன்னை இந்து, சமணம், பௌத்தம் போன்ற மதங்களால் தாக்கம் பெற்ற ஆசியராகத் தன்னை முன்னிறுத்திக்கொண்டார்; அதே நேரத்தில் இயேசு கிறிஸ்து, சாக்ரடீஸ், டால்ஸ்டாய், ரஸ்கின், தொரோ ஆகியோரால் பெரிதும் தாக்கம் பெற்றவராகவும் இருந்தார். காந்தி ‘ஓர் அந்நியப்பட்ட ஆசியர்’ என்று தாமஸ் மெர்ட்டன் ஒருமுறை எழுதினார். அப்படியும் இருக்கலாம்; ஆனால், காந்தி தன் கலாச்சாரத்துக்கும் கிழக்கின் மரபுகளுக்கும் அந்நியரானது மேற்கிலிருந்து நிறைய விஷயங்களைக் கற்றுக்கொண்டதால் அல்ல. மாறாக கிழக்கு, மேற்கு இரண்டுடனான அவரது நெருக்கம் மிகவும் பலனுள்ளதாக ஆக்கியதுடன் அவரை ‘பன்மைக் கலாச்சார இந்திய’ராக ஆக்கியது. காந்திக்கு அறிவுபூர்வமான திறந்த மனது இருந்தது. பிறரிடமிருந்து கற்றுக்கொள்வதற்கும், அதன் விளைவாக அவரது லட்சியங்களுக்கு ஏற்ப வாழ்வதற்கும் அது உதவியது. இப்படியாக, அவர் இந்திய அரசியல், தார்மீகத் தலைவர் மட்டுமல்ல; கடந்த நூறு ஆண்டுகளாக உலக அளவில் பின்பற்றப்படும் நவீன அகிம்சையின் தந்தையாகவும் அவர் இருக்கிறார்.
இப்படியாக, காந்தியிடம் அகிம்சைத் தத்துவமானது பொது மக்களின் எதிர்ப்புக்கான கருவியாகவும், அதிகாரம் மிக்கவர்களுக்கு எதிராக அதிகாரமற்றவர்கள் செயல்படுவதற்கான நடைமுறை ஆயுதமாகவும் ஆனது. எனினும், காந்தியைப் பொறுத்தவரை அகிம்சையானது அடிப்படையில் ஒரு தார்மீகச் செயல்பாடும்கூட. ‘ஆத்ம சக்தி’ என்று காந்தி குறிப்பிடுவது, உண்மையில் அறவியல் சார்ந்த நடத்தை நெறிமுறையாகும். சொல்லப்போனால், அவர் அகிம்சையை அடிப்படையில் அறம் சார்ந்த ஓர் அக்கறையாகவும் ஆக்கபூர்வமான அரசியல் நடவடிக்கையாகவும் பார்த்தார். காந்திக்கு அறவியல் செயல்பாடுகளும் அரசியல் செயல்பாடுகளும் ஒன்றே. ஆகவே, அவரைப் பொறுத்தவரை வன்முறைக்கும் வெறித்தனத்துக்கும் எதிரான போராட்டம் என்பது நியாயமற்ற சட்டங்களுக்கு அடிபணியாத செயல்பாட்டின் தளத்திலேயே வைத்துப் பார்க்க வேண்டியது: அது ஆத்ம சக்தியாலும் பிறருக்கு ஏற்றம் தருவதற்காக உண்மையைத் தேடுவதாலும் வெளிப்படுத்தப்படுகிறது.
வாழ்க்கையைப் பொறுத்தவரை காந்தி ஆழமான அறவியல் பார்வை கொண்டிருந்தார்: புனிதப் பிரதிகளின் இறுக்கமான அதிகாரத்தையோ மத மரபுகளின் புனிதத்தையோ அவர் அங்கீகரிக்கவில்லை. ஆனால், நவீன அரசியல், அதன் எதேச்சாதிகாரப் போக்கு ஆகியவற்றின் முதன்மையான விமர்சகராக அவர் இருந்தார். ஆகவேதான், காந்தியை இன்று படிப்பதென்பது நவீன அரசியலை அதிகாரத்துக்கும் வன்முறைக்கும் இடையிலான புதிய உறவாகவும், குடிமக்களுக்கும் அரசுக்கும் இடையிலான மரபான வேறுபாட்டைக் கடக்கும் வழியாகவும் தவிர்க்க முடியாத வகையில் மறுஆய்வுக்கு உட்படுத்துவதாகும். அது கலாச்சாரங்களுக்கு இடையிலான ஜனநாயகத்தை நோக்கிய நகர்வுமாகும். அங்கே வேற்றுமைகளில் ஒருமைப்பாடு என்பதில் வெறும் தேசியவாதம் காரணமாகச் சமரசம் ஏதும் செய்யப்படுவதில்லை, அங்கே ஜனநாயகச் செயல்பாடு என்பது வெறுமனே அரசமைப்புச் சட்டத்துடனும் பிரதிநிதித்துவத்துடனும் நின்றுவிடுவதில்லை. இந்தக் கண்ணோட்டத்தில், அகிம்சை பற்றிய காந்தியத் தத்துவமானது அரசியலின் மரபான அர்த்தத்தை முழுமையற்றதாகக் காண்கிறது. அதே நேரத்தில், அரசின் அதிகாரம் செய்யும் அத்துமீறல்களுக்கு எதிராக விழிப்புணர்வுடன் இருக்கவும், நமது தற்காலச் சமூகங்களில் அரசியல் அதிகாரம் சுல்தான்மயமாவதற்கு எதிராகப் போராடுவதற்கும் குடிமக்களைக் கடப்பாடு உடையவர்களாக ஆக்குகிறது.
சமூக அளவில், ஒரு லட்சியச் சமூகத்தை காந்தி கனவு கண்டார். அந்தச் சமூகத்தில் கடையருக்கும் சமூக நீதி வழங்கப்படும் என்பது அவரது கனவு. தனிநபரிடமிருந்து எந்த அளவுக்கு முடியுமோ அந்த அளவுக்கு அவர்களுடைய திறமைகளைக் கறக்கும் உலகு இது. குடிமைத்துவம், ஜனநாயகம் போன்ற தளங்களில் காந்தியச் சிந்தனை முழுவதுமே ஒரு நியாயமான சமூகத்தைக் கட்டமைக்கும் நோக்கத்தைச் சுற்றிச் சுழல்கிறது. இப்படியாக, ஜனநாயகம் தொடர்பிலான காந்தியின் கருத்தாக்கம் முழுவதுமாக மனித குல தார்மீகத்தின் வளர்ச்சியைச் சார்ந்து இருக்கிறது. அதில் பண்படாததும் வரன்முறையற்றதுமான தனிநபர்வாதமானது பரிவுகொண்ட மனிதத்துவத்துக்கு வழிவிடுகிறது. மேலும் அகிம்சை, ஜனநாயகம் குறித்துப் பேசும்போது அச்சமின்மை, பொருள் மீது பற்றின்மை, பணிவு போன்ற குணங்களை மனித குலம் வளர்த்துக்கொள்ள வேண்டும் என்று காந்தி நம்பினார். முதன்மையான நோக்கம் எதுவென்றால் பல்வேறு கலாச்சாரங்களையும் பல்வேறு பரிமாணங்களையும் கொண்ட சமூகத்துக்குப் பொருந்தும்படி மனிதர்களை மறுகட்டமைப்பு செய்வதுதான். எல்லா சிந்தனை மரபுகளைச் சேர்ந்த மனிதர்களுக்கும் சேவை செய்வதைத் தொடர்ந்து வலியுறுத்தியதே அவரது அகிம்சை ஜனநாயகக் கோட்பாட்டின் அடிப்படைப் பண்பு.
கலாச்சாரங்கள், நம்பிக்கைகளுடனான உரையாடலில் மேற்கொள்ளும் இந்தப் பன்மைத்துவ அணுகுமுறையில் காந்தி தனது காலத்தை வெகுவாக முந்தியவராக இருந்தார். உண்மையில், கலாச்சாரங்களுக்கு இடையிலான உரையாடலின் தத்துவமாக அவரது அகிம்சை ஜனநாயகக் கோட்பாட்டை அவரது மரணத்துக்குப் பல தலைமுறைகளைத் தாண்டி தற்போது பார்க்கும்போது தெரிகிறது. காந்தி வறட்டுத்தனமான தேசியராக இல்லை; வேறுபட்ட கலாச்சாரங்கள், பல்வேறு மனப்போக்குகள் போன்றவற்றுக்குப் பொதுவான ஒரு தளத்தைக் கண்டுபிடிக்கும் புதிய பாதை வகுப்பவராக இருந்தார். ஜனநாயகம் தொடர்பிலான அவரது கோட்பாடு ஒற்றைக் கலாச்சாரம் அடிப்படையிலானதாகவோ கருத்துமுதல்வாத அடிப்படையிலானதாகவோ இல்லை. அது முதன்மையாகப் பன்மைத்துவம் கொண்டதாகவும் பரிவு கொண்டதாகவும் இருக்கிறது. இதன் விளைவாக, மதத்தை அவர் இறையியல் அடிப்படையில் அணுகாமல், அறத்தின் அடிப்படையில் அணுகுகிறார். ஆகவே, ஜனநாயகம் பற்றிய அவரது கோட்பாடும், சத்தியாகிரகம், சுயராஜ்ஜியம் உள்ளிட்ட அதை அடைவதற்கான வழிமுறைகளும் இறையியல் கோட்பாடுகள் அல்ல. இறையியல் சாராத உண்மையை நோக்கியே மனித விதி தொடர்ந்து முன்னேறிக்கொண்டிருக்கிறது என்று காந்தி நம்பினார். ஆன்மிகத்தில் மட்டுமல்ல, வாழ்க்கையின் அனைத்து அம்சங்களிலும் உண்மையைத் தேடியவர் அவர். இந்தத் தேடலில் இணைந்துகொள்ளும்படி பிறருக்கும் ஊக்கமளித்தார்.
மனித நாகரிகம் அறரீதியிலான பாதையில் செல்வதில் ஜனநாயகமானது துடிப்பு மிக்க ஓர் அம்சம் என்று காந்தி கருதினார். வாழ்க்கை பற்றிய பல்வேறு கண்ணோட்டங்களுக்கு இடையில் அவர் பாலம் அமைக்க முயன்றதை உண்மையின் பல பரிமாணங்களை அவர் அணுக முயன்றதோடு பல வகையிலும் ஒப்பிட்டுப் பார்க்கலாம். அதனால்தான், சமூக வாழ்வின் பல்வேறு மரபுகளை அவர் நிராகரிக்கவில்லை; அவற்றில் உண்மையானது எது என்று அவர் நம்புகிறாரோ அதை உறுதியாக ஏற்றுக்கொண்டார்; அறம் சார்ந்த பொதுவான ஒரு தளத்தை உருவாக்குவதற்காக அவற்றை ஒன்றுசேர்ப்பதைப் பற்றி அவர் சிந்தித்தார். காந்தி இவ்வாறாக, ஜனநாயகத்தையும் அகிம்சையையும் ஒரே உண்மையின் இரண்டு பக்கங்களாகக் கருதிப் பேசினார்.
வெறுப்பு, ஒதுக்கிவைத்தல், சந்தேகம், போர் போன்றவற்றின் எல்லா அரசியல், தத்துவ ஆதாரங்களுக்கும் அப்பால் அகிம்சையையும் ஜனநாயகத்தையும் இந்தியாவில் மேம்படுத்துவதே தனது திட்டமாக அவர் வரையறுத்துக்கொண்டார். அரசியல் என்பது பலவீனமான கருத்தாக்கம் என்பதையும் தேசியவாத அடிப்படையில் ஏற்படும் வன்முறை, போர் போன்றவற்றுக்கு இலக்காகக் கூடியது என்பதையும் அவர் நன்கு உணர்ந்திருந்தார். அதனால்தான், அவர் இந்தியாவை இனம் சார்ந்த தூய்மை அல்லது மொழி ஒற்றுமை அல்லது ஒன்றிணைக்கக் கூடிய மதம் சார்ந்த பிற அம்சங்கள் போன்றவற்றைக் கொண்டு வரையறுக்கவில்லை. காந்தியின் ஜனநாயகத் தத்துவமானது பல்வேறுபட்ட ‘பிறருக்கு’ எதிராகப் போரிடுமாறு இந்தியர்களுக்கு அறைகூவல் விடுக்கவில்லை; தன் நிலப்பரப்பு சார்ந்த பிடிமானம் கொண்டிருக்கும் இந்தியத்துவத்துக்கு துவைதத்தையும் பன்மைத்துவ பரிமாணத்தையும் அறிமுகப்படுத்தியது. இந்த அர்த்தத்தில், காந்தியைப் பொறுத்தவரை பிறரின் கலாச்சாரத்தை நேசிக்காமல் தன் நாட்டை (அதாவது, இந்தியாவை) நேசிப்பதில் அர்த்தம் இல்லை. உலகளாவிய சகோதரத்துவம் நோக்கி காந்தி விடுத்த அறைகூவலானது தேசிய, மதரீதியிலான எல்லா சுயநலத்தையும் ஒதுக்கித்தள்ளிய, எல்லோரும் ஒன்றுசேர்ந்து வாழ்தல் எனும் கருத்தாக்கத்தின் அடிப்படையில் அமைந்தது. அவர் கூறியதுபோல், “உலகத்தினருடன் நட்புறவோடு இருப்பதென்பதும் ஒட்டுமொத்த மனிதக் குடும்பத்தையும் ஒன்றாகக் கருதுவதென்பதும்தான் மகத்தான வழிமுறையாகும். தனது மதத்தைப் பின்பற்றுபவர்களையும் பிற மதங்களைப் பின்பற்றுபவர்களையும் பாகுபடுத்திப் பார்ப்பவர்கள் தமது மதத்தினருக்குத் தவறான வழியைக் காட்டுவதோடு மட்டுமல்லாமல், பேதத்துக்கும் மத வெறுப்புக்கும் கதவைத் திறந்துவிடுகிறார்கள்.”
- ரமின் ஜஹான்பிக்லூ, இயக்குநர், அகிம்சைக்கும் அமைதி குறித்த ஆய்வுகளுக்குமான மகாத்மா காந்தி மையம், ஓ.பி. ஜிண்டால் குளோபல் பல்கலைக்கழகம், சோனிப்பட், ஹரியாணா.
No comments:
Post a Comment