Friday, October 2, 2020

காந்தியின் ஓருலகம் நோக்கிப் பயணப்படுவோம்!

கோட்டோவியம்: கே.எம். ஆதிமூலம்


மனித குலத்தின் உயர்வுக்காக உழைத்தவர்களின், அதற்காக உயிர்த் தியாகம் செய்தவர்களின் பிறந்த நாள், நினைவு நாள்களில் அவர்களை நினைவுகூர்வது வெறும் சடங்கல்ல. அது அவர்களின் பங்களிப்புக்காக ஒரு சமூகம் செலுத்தும் நன்றிக்கடன். எனினும், அந்தத் தலைவர்களின் பொருத்தப்பாட்டை என்றும் தக்கவைத்துக்கொள்வதுதான் சமூகம் அவர்களுக்குச் செலுத்தும் உண்மையான நன்றிக்கடன் ஆகும்.

கடந்த ஆண்டு காந்தியின் 150-ம் ஆண்டைக் கொண்டாடியபோது 2020-ம் ஆண்டு இப்படிப்பட்ட பேரிடரில் சிக்கிக்கொள்ளும் என்று யாரும் எதிர்பார்த்திருக்கவில்லை. கரோனா பெருந்தொற்று உலகையே முடக்கிப்போட்டது. அது ஏற்படுத்திக்கொண்டிருக்கும் சுகாதார, பொருளாதாரரீதியிலான இழப்பிலிருந்து வெளிவர முடியாமல் பெரும்பாலான நாடுகள் திணறிக்கொண்டிருக்கின்றன. இதில் கீழை நாடுகள்-மேலை நாடுகள், செல்வந்த நாடுகள்-வறிய நாடுகள் என்று எந்த வித்தியாசமும் இல்லை. இந்த பாதிப்பின்போது நாம் உணர்ந்திருக்கும் உண்மை என்னவென்றால் நமது நகர்ப்புறங்களின் வளர்ச்சி மனித குலத்தை மேம்படுத்தும்  என்று நாம் நம்பியது பொய் என்பதுதான். நம்பிவந்த நகரங்களை விட்டுவிட்டுக் கூட்டம் கூட்டமாக மக்கள் உயிர் பிழைப்பதற்காகத் தங்கள் கிராமங்களைத்  தேடி ஓடியதை நாம் என்றும் மறக்க முடியாது. எந்த அளவுக்கு எல்லா வேலைவாய்ப்புகளும் அதிகாரங்களும் நகரங்களில் குவிந்துகிடந்திருக்கின்றன என்பதை இந்தப் பெருந்தொற்று நமக்கு நினைவுபடுத்திவிட்டது. கிராமப்புறங்கள்தான் இந்தியாவின் அடிப்படை அலகுகள் என்றும் அவைதான் நம் நாட்டின் உயிர்நாடி என்றும் காந்தி கூறியது இப்போது பலருக்கும் நினைவுக்கு வருகிறது. இதற்கு அர்த்தம் கிராமங்கள்தான் பூலோக சொர்க்கம் என்பதல்ல. கிராமங்கள் கொண்டிருந்த தன்னிறைவு வாழ்க்கைதான் நம் எல்லோருக்குமான பொருளாதார, வாழ்க்கை முறையின் சட்டகமாக இருக்க வேண்டும் என்பதுதான். இந்தத் தன்னிறைவு வாழ்க்கை நகரங்களுக்கும் பொருத்தமானதாக இருக்க வேண்டும். கிராமங்கள் சாதிய அடுக்குகளின் கேந்திரம் என்ற விமர்சனத்தையும் தவிர்க்க முடியாது. எல்லோருக்கும் சமமான வாய்ப்பு, சமமான அதிகாரம் என்பதை உறுதிப்படுத்தும் வகையில் நம் பொருளாதாரத் திட்டங்கள் அமையும்போது மேற்கண்ட பிரச்சினையைக் களைவதற்கும் வழி பிறக்கலாம்.

கரோனா பெருந்தொற்றுக்கு முன்பே கடந்த இரண்டு தசாப்தங்களுக்கும் மேலாக உலகம் எதிர்கொண்டுவரும் மற்றுமொரு பிரச்சினை சுற்றுச்சூழல் சீர்கேடு. புவிவெப்பமாதல், பருவநிலை மாற்றம் என்று உலகம் முழுவதும் பெரும் பாதிப்பு ஏற்பட்டுவருகிறது. இவற்றின் பாதிப்பை அனைத்துத் தரப்பினரும் அனுபவித்துவந்தாலும் ஏழை மக்கள், விளிம்பு நிலையில் உள்ளோர்தான் அதிக பாதிப்புக்குள்ளாகிறார்கள். செல்வந்தர்களின் நுகர்வுக்கும் தவறுகளுக்கும் ஏழை எளிய மக்கள் பலியாகிக்கொண்டிருக்கிறார்கள். இதற்கும் காந்தி மருந்து தந்திருக்கிறார். ‘இந்த புவிக்கோள் நமது அனைவரின் ஆசையையெல்லாம் பூர்த்தி செய்யுமளவுக்குத்தான் வளங்களைக் கொண்டிருக்கிறதே தவிர, நமது அனைவரின் பேராசையையும் பூர்த்திசெய்யுமளவுக்கல்ல’ என்று கூறியிருப்பது ‘சிறியதே அழகு, கொஞ்சமே நல்லது’ என்ற வாழ்க்கை முறைக்கான வித்தினைக் கொண்டிருக்கிறது. இதற்கான முன்னுதாரணமாக அவரே வாழ்ந்திருக்கிறார். அசுரத் தொழில்நுட்ப வளர்ச்சிகளையும் அதீத உற்பத்தியையும் கண்டு அவர் அச்சம் தெரிவித்தபோது பிற்போக்கானவர் என்று எள்ளிநகையாடப்பட்டார். இன்று புவிவெப்பமாதலும் பருவநிலை மாற்றமும் மனித குலத்தின், இயற்கையின் சீரழிவுக்குக் கட்டியம் கூறி நிற்கும்போது முன்னோடி சுற்றுச்சூழலியலாளராக காந்தி கொண்டாடப்பட்டுவருகிறார். இந்தப் புவியின் வளங்களில் பெரும்பாலானவை புதுப்பிக்கத் தக்கவையல்ல எனும்போது நம் தேவைகளையும் நுகர்வையும் சுருக்கிக்கொள்வதற்கு காந்தியம் நமக்கு வழிகாட்டுகிறது.

உலகெங்கும் அச்சுறுத்திவரும் இன்னொரு பிரச்சினை பல நாடுகளிலும் எழுச்சி பெற்றுவரும் தேசியவாதம். ஒரு நாடு இன்னொரு நாட்டால் ஒடுக்கப்படும்போது எழும் தேசியவாத உணர்வு தவறானது அல்ல. இதற்கு இந்தியாவை ஒரு உதாரணமாகக் கூறலாம். பிரிட்டனின் காலனியாதிக்கத்துக்கு இந்தியா உட்படுத்தப்பட்டபோது அதிலிருந்து வெளியே வர இந்தியர்களின் தேசியவாத உணர்வைத் தட்டி எழுப்புவது அவசியம் என்று காந்தி உணர்ந்தார். அதுவே, விடுதலைப் போராட்டத்தை வழிநடத்தியது. அவருடைய தேசியவாதம் எல்லோரையும் ஒன்றிணைத்த தேசியமாக இருந்தது; எந்தத் தரப்பையும் விலக்கிவைக்கும் தேசியவாதமாக இல்லை. ஆனால், இன்று உலகில் பல நாடுகளிலும் மறுஎழுச்சி பெற்றுவரும் தேசியவாதமானது பிற இனங்களுக்கு, மதங்களுக்கு, மொழிகளுக்கு, நிறத்தினருக்கு, புலம்பெயர்ந்தவர்களுக்கு எதிரானதாகவும் அவர்களை விலக்கிவைப்பதாகவும் இருக்கிறது; தன்னலத்தை நோக்கி இந்த உலகத்தைத் தள்ளிவிடுவதாக இருக்கிறது அவர்களின் தேசியவாதம். குறிப்பாக, இந்தியாவில் அப்படிப்பட்டதொரு தேசியவாதத்தை ஆளும் பாஜக அரசு முன்னெடுத்துவருவது மிகவும் ஆபத்தானது. இந்தியா தன் குறுகிய கண்ணோட்டத்தால் அல்ல, விசாலமான கண்ணோட்டத்தாலேயே உலகுக்கே பல விதங்களில் வழிகாட்டியாகத் திகழ்ந்துவந்திருக்கிறது. அதை மோடி குறுகலான பார்வை கொண்டதாக ஆக்கிவருகிறார் என்பதையே கடந்த ஆறு ஆண்டுகளாக மறுஎழுச்சி பெற்றுவரும் தேசியவாதம் உணர்த்துகிறது. உலகம் அப்படியெல்லாம் தன்னலத்தோடு இயங்கிவிட முடியாது என்பதை கரோனா பெருந்தொற்று நமக்குத் தற்போது உணர்த்திவருகிறது. ஆகவே, தீவிர தேசிய நிலைப்பாட்டை உலக நாடுகளும் அந்நாடுகளின் தலைவர்களும் மக்களும் மறுபரிசீலனை செய்துகொள்ள வேண்டும். காந்தியின் ஓருலகத்தை நோக்கிய லட்சியத்தையே நாம் சுவீகரித்துக்கொள்ள வேண்டும்.
  

1 comment: