Wednesday, March 11, 2020

நீரை அடைத்த வரலாறு!

படம்: வினிதா கோவிந்தராஜன்

ஆசை
(இந்து தமிழ் நாளிதழில் இன்று [11-03-20] அன்று வெளியான என் கட்டுரை)

சமீபத்தில் நடந்த தண்ணீர் கேன் நிறுவனங்களின் வேலைநிறுத்தத்தால் பொதுமக்கள் மிகவும் சிரமத்துக்குள்ளானார்கள். குடிதண்ணீர் கிடைக்கப்பெறுதல் என்பது அடிப்படையான உரிமை. அதில் எந்த பாதிப்பும் ஏற்படக் கூடாது. ரூ.35-க்கு முன்பு விற்கப்பட்ட ஒரு கேன் தண்ணீர் வேலைநிறுத்தத்தின்போது ரூ.70 வரை விற்கப்பட்டது. தமிழகமெங்கும் 1,700 அடைக்கப்பட்ட தண்ணீர் உற்பத்தி நிறுவனங்கள் இந்த வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டன. உரிமம் பெறாமல் நிலத்தடி நீரை எடுக்கிறார்கள் என்ற குற்றச்சாட்டின் பேரில் சென்னை உயர் நீதிமன்றத்தின் உத்தரவுப்படி தமிழகமெங்கும் 500-க்கும் மேற்பட்ட நிறுவனங்களுக்கு சீல் வைக்கப்பட்டதன் விளைவுதான் இந்த வேலை நிறுத்தம். மாநிலமெங்கும் உள்ள அடைக்கப்பட்ட தண்ணீர் நிறுவனங்களைக் கண்காணிக்க ஒவ்வொரு மாவட்டத்துக்கும் இரண்டு வழக்கறிஞர்களை நியமிக்க வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது. தற்போது சீல் வைக்கப்பட்டிருக்கும் நிறுவனங்கள் தங்களின் உரிமத்தைப் புதுப்பித்துக்கொள்ளவும் புதிதாக உரிமம் பெறவும் நீதிமன்றம் உத்தரவிட்டிருப்பதை அடுத்து வேலைநிறுத்தம் நிறுத்திக்கொள்ளப்பட்டது. இந்த விவகாரம் நாம் அலட்சியமாக கடந்துசெல்லும் ஒரு முக்கியமான பிரச்சினையை நம் கவனத்துக்கு எடுத்து வருகிறது: நாம் குடிக்கும் தண்ணீர் எந்த அளவுக்குப் பாதுகாப்பானது? நம்முடைய அரசு எந்த அளவுக்கு இதற்கு முக்கியத்துவம் கொடுக்கிறது?


ஒரு இருபது ஆண்டுகளுக்கு முன்பென்றால் சிறு நகரங்களிலும் கிராமப்புறங்களிலும் தண்ணீர் தவித்தால் எந்த வீட்டிலும் வாங்கிக் குடிக்கலாம். பெரும்பாலும் அது கிணற்று நீராகத்தான் இருக்கும். ஆனால், தற்போது யார் வீட்டுக்குச் சென்றாலும் தண்ணீர் கொடுத்துவிடுவார்களோ என்று அஞ்ச வேண்டியிருக்கிறது. அந்த அளவுக்கு நிலத்தடி நீர் மாசுபட்டிருக்கிறது. நிலத்தடி நீர்மட்டம் குறைந்தது, நீர் மாசடைந்தது போன்ற காரணங்கள்தான் மக்களை அடைக்கப்பட்ட தண்ணீரை நாடவைத்தது. தற்போது சிறுநகரங்களில்கூட அடைக்கப்பட்ட தண்ணீர் கேன்கள் வந்துவிட்டன.

முறைசாராத் தொழில்
அடைக்கப்பட்ட தண்ணீர் வணிகம் இந்தியாவில் பெருமளவில் வளர்ந்திருந்தாலும் இன்னும் அதை முறையான தொழில் என்று சொல்வதற்கில்லை. ஆனால், உலக அளவில் இது முறை சார்ந்த தொழிலாக உருவெடுத்திருக்கிறது. 2019-ல் அடைக்கப்பட்ட தண்ணீர் வர்த்தகம் உலக அளவில் 20.26லட்சம் கோடியாக இருந்தது. 2020-ல் இந்த வணிகம் 22.11 லட்சம் கோடியாக இருக்குமென்று எதிர்பார்க்கப்படுகிறது. 2021-ல் 25.79 லட்சம் கோடியாக இருக்குமென்று கணிக்கப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும் 10,000 கோடி லிட்டர் என்ற அளவில் அடைக்கப்பட்ட நீரின் விற்பனை அதிகரித்துக்கொண்டிருக்கிறது. குளிர் பானங்களின் விற்பனையைக் குடிநீர் விற்பனை ஏற்கெனவே பின்னுக்குத் தள்ளியிருக்கிறது.  உலகிலுள்ள ஒவ்வொரு மனிதரும் ஒரு ஆண்டில் தண்ணீருக்குச் செலவிட்ட தொகை 2017-ல் ரூ. 2,380. இதுவே, 2021-ல் ரூ. 3,338-ஆக இருக்குமென்று எதிர்பார்க்கப்படுகிறது. 2017-ல் செய்த ஆய்வின் படி ஆசிய-பசிபிக் பகுதியில்தான் அடைக்கப்பட்ட குடிநீர் அதிகம் நுகரப்படுகிறது. உலக அளவிலான நுகர்வில் இது 42% ஆகும். சீனா, இந்தியா என்ற உலகின் அதிக மக்கள்தொகை கொண்ட இரு நாடுகள் இருக்கும் பிரதேசம் இது. அதிக மக்கள்தொகையும் வறுமையும் சுகாதாரமின்மையும் பின்னிப்பிணைந்தவை. ஆகவே, இந்தப் பிரதேசங்களில் அடைக்கப்பட்ட தண்ணீர் வணிகம் சூடுபறக்கிறது. அடைக்கப்பட்ட தண்ணீர் நுகர்வில் இரண்டாவதாக இருப்பவை வட, தென் அமெரிக்க கண்டங்கள்.

அடைக்கப்பட்ட நீரை மக்கள் நாடுவதற்குப் பிரதான காரணம் நிலத்தடி நீர் வெகுவாகக் குறைந்ததும், கிடைக்கும் நீர் குடிக்கும் தன்மையில் இல்லாததும்தான். உள்ளூரில் மட்டுமல்ல உலக அளவிலும் இந்தப் பிரச்சினை விஸ்வரூபமெடுத்துவருகிறது. இதனால் உலகில் நீர் இல்லை என்று அர்த்தம் இல்லை. பல கோடி ஆண்டுகளாக புவியில் இருக்கும் நீரின் அளவில் பெரிதும் மாற்றம் இல்லை. ஆனால், தற்போது மக்கள்தொகை அதிகரித்திருக்கிறது; நீரின் தொழிற்துறை பயன்பாடும் அதிகரித்திருக்கிறது; நீரின் இருப்பிடத்திலும் மாற்றம் ஏற்பட்டிருக்கிறது. பயன்படுத்தப்படும் நீர் ஏதாவது ஒரு சுழற்சியில் மீண்டும் புவிக்கே வந்து சேரும். அதே அளவில் நீர் இருந்தாலும் பகிர்மானம் அதிகமாக இருப்பதால் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. புவியின் பரப்பில் 70% நீரால் சூழப்பட்டிருந்தாலும் இதில் நன்னீரின் பங்கு வெறும் 2.5%-தான். இதில் பெருமளவிலான நீர் துருவப் பகுதிகளில் பனிப்பாறைகளாகவும் பனியாறுகளாகவும் உறைந்து கிடக்கிறது. ஆக, இந்த நன்னீரில் மக்களின் பயன்பாட்டுக்குக் கிடைப்பது 0.007%தான். இந்த நீரும் குடிப்பதற்கு முழுமையாக உகந்தததாக இருப்பதில்லை என்பதுதான் பெருந்துயரம்.

நீர் கொண்டுவரும் நோய்கள்
உலகெங்கும் 200 கோடி மக்கள் தூய்மையற்ற தண்ணீரைத்தான் குடித்துக்கொண்டிருக்கிறார்கள். தொழிற்சாலைக் கழிவுகள் மட்டுமன்றி, பாக்டீரியா, வைரஸ் போன்றவை கலப்பதால் நீர் மாசடைகிறது. கூடவே, மனிதர்களின், விலங்குகளின் கழிவுகளும் குடிநீரில் கலந்துவிடுகின்றன. இதனால் தண்ணீர் மூலம் பரவும் நோய்கள் ஏற்படுகின்றன. டைஃபாய்டு காய்ச்சல், வயிற்றுப்போக்கு, காலரா, ஈ.கோலை பாக்டீரியா தொற்று, ஹெப்படைட்டஸ்-ஏ போன்றவை அவற்றுள் சில. உலக அளவில் 8.3 லட்சம்பேர் வயிற்றுப்போக்கால் ஆண்டுதோறும் மரணமடைகிறார்கள். இவர்களில் 5 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கை சுமார் 3 லட்சம். சுத்தமான நீரை அருந்தினால் தேவையற்ற இறப்புகளைத் தடுத்து நிறுத்த முடியும். ஆனால், ஏழ்மை, போர்கள், சுற்றுச்சூழல் சீர்கேடு, வறட்சி போன்றவற்றின் காரணமாக கணிசமான மக்களுக்கு சுத்தமான குடிநீர் கிடைப்பதில்லை. இதற்கிடையேதான் குடிநீர் வணிகம் தழைத்துக்கொண்டிருக்கிறது.

சென்னையின் தாகம்
மாநகராட்சிகளிலும் நகராட்சிகளிலும் வழங்கப்படும் தண்ணீரின் தரம் குறித்து மக்களுக்கு அச்சம் இருக்கிறது. இந்த அச்சத்தைதான் அடைக்கப்பட்ட தண்ணீர் விற்பனையாளர்கள் பயன்படுத்திக்கொண்டிருக்கிறார்கள். சென்னையில் மட்டும் ஒரு நாளைக்கு 10 லட்சம் தண்ணீர் கேன்கள் விநியோகிக்கப்படுகின்றன. நான்கு பேரைக் கொண்ட ஒரு குடும்பத்துக்கு வாரம் குறைந்தபட்சம் நான்கு தண்ணீர் கேன்கள் தேவைப்படுகின்றன. சென்னையின் குடிநீர்த் தேவையை ஈடுகட்ட சென்னையிலும் காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்டங்களிலும் சுமார் 250-க்கும் மேற்பட்ட அடைக்கப்பட்ட தண்ணீரை உற்பத்தி செய்யும் நிறுவனங்கள் இயங்கிக்கொண்டிருக்கின்றன. இவ்வளவு நிறுவனங்கள் இருந்தாலும் இவற்றை முறையான கண்காணிப்புக்கு அரசு உட்படுத்துவதில்லை. இவற்றில் கணிசமானவை உரிமம் பெறாமலோ உரிமத்தைப் புதிப்பிக்காமலோ நடத்தப்படுபவை என்று சென்னை உயர் நீதிமன்றம் கூறுகிறது.

சுத்தமான குடிநீர் வேண்டும் என்றுதான் மக்கள் இந்த அடைக்கப்பட்ட தண்ணீரை நாடுகிறார்கள். இவற்றில் எத்தனை நிறுவனங்கள் தரக்கட்டுப்பாட்டைப் பின்பற்றுகின்றன என்பது கேள்விக்குறியே. நாம் அருந்தும் தண்ணீர் நல்ல தண்ணீர்தான் என்ற நம்பிக்கையில் மக்கள் தண்ணீர் அருந்திகொண்டிருக்கிறார்கள். இந்த அடைக்கப்பட்ட தண்ணீர் கேன்கள் பலவற்றைப் பார்த்தாலே அவற்றை சுத்தம் செய்கிறார்களா என்ற சந்தேகம் வருகிறது. எதிர்திசை சவ்வூடு பரவல் முறையில் (Reverse Osmosis) சுத்திகரிக்கப்படும் இந்த தண்ணீரில் ‘முழுவதும் கரைந்துள்ள திண்மங்கள்’ (Total Dissolved Solids) 500 புள்ளிகளுக்குக் குறைந்துவிடக் கூடாது. ஆனால், பல தண்ணீர் கேன்களை சோதனையிட்டதில் இந்தத் திண்மங்கள் 175 புள்ளிகள் வரை இருக்கின்றன. இது உடல்நலத்தில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தக் கூடியது.

சுத்தமான காற்று, சுத்தமான வாழிடம் போலவே சுத்தமான குடிநீரை வழங்குவதும் அரசாங்கத்தின் கடமை. நிலத்தடி நீர் ஏன் குடிக்கத் தகுதியற்றுப்போனது என்று பதில் சொல்லக் கடமைப்பட்டது அரசு. நிலத்தடி நீராதாரம் குன்றிவிட்ட நிலையில் மக்கள் விலை கொடுத்து வாங்கும் கேன் தண்ணீரின் தரத்தையேனும் அரசு உறுதிப்படுத்த வேண்டும்.

1 comment:

  1. பெரும்பாலான நிறுவனங்கள் லாப நோக்கையே கொண்டுள்ளன. தரத்தை அல்ல. அவர்கள் தாமாக முன்வந்து தரத்திற்கும் முக்கியத்துவம் கொடுக்க முயல வேண்டும்.

    ReplyDelete