Monday, April 18, 2016

இயற்கைக்கும் நமக்கும் இடையே ஒரு கேமரா! காட்டுயிர் ஒளிப்படக் கலைஞர் கல்யாண் வர்மா நேர்காணல்



ஆசை

('தி இந்து’ சித்திரை மலரில் (2016) வெளியான நேர்காணலின் முழு வடிவம் இது. இந்த நேர்காணலின் மிகவும் சுருக்கமான வடிவம் ‘தி இந்து’வின் ‘உயிர்மூச்சு’ இணைப்பிதழில் 16-04-2016 அன்று வெளியாகியிருக்கிறது)

இயற்கையிடமிருந்து நாம் பெறும் மகிழ்ச்சியை எல்லோரிடமும் பகிர்ந்துகொள்வதுதான் பேரானந்தம் என்று சொல்பவர் கல்யாண் வர்மா. இந்தியாவின் முக்கியமான காட்டுயிர் ஒளிப்படக் கலைஞர்களுள் ஒருவாராக இருந்தாலும் தனது அனைத்து ஒளிப்படங்களையும் ‘பொதுவுடைமை’ ஆக்கியவர் அவர். சென்னைக்கு வந்திருந்த கல்யாண் வர்மாவை சந்தித்துப் பேசியதிலிருந்து…  


யாஹூவில் ‘சிறந்த பணியாளர்’ விருது பெற்ற நீங்கள் காட்டுயிர் ஒளிப்படக் கலைஞராக ஆனது எப்படி?

சின்ன வயதிலிருந்து எனக்கு இயற்கை மீதும் காட்டுயிர் மீதும் ஈடுபாடு உண்டு. ஆனால், தென்னிந்தியக் குடும்பங்களைப் பற்றித்தான் உங்களுக்குத் தெரியுமே! அதெல்லாம் கூடாது, இன்ஜினியராகவோ டாக்டராகவோதான் நான் ஆக வேண்டும் என்பது எங்கள் குடும்பத்தில் விருப்பம். எனக்கும் கூட தொழில்நுட்பம் பிடித்தமான விஷயம்தான். இன்ஜினியரிங் படித்து முடித்துவிட்டு யாஹூவில் வேலைக்குச் சேர்ந்தேன். மூன்று ஆண்டுகள் அங்கே வேலை பார்த்தேன். ரொம்பவும் நேசித்துதான் அந்த வேலையைச் செய்தேன். ஒரு கட்டத்தில் வேறு நிறுவனத்துக்கு மாறலாம் என்ற எண்ணத்தில் அந்த வேலையை விட்டேன். வேறு வேலைக்குப் போவதற்கு முன் ஆறு மாதமோ ஒரு வருடமோ ஏதாவது காட்டுக்குப் போய், இயற்கைச் சூழலுடன் நன்றாகப் பழக வேண்டும் என்று நினைத்தேன். சிறு வயதிலிருந்தே அது எனது கனவு. கர்நாடகத்தின் பிலிகிரிரங்கனா மலைப் பகுதிக்குச் சென்றிருந்தேன். ஆரம்பத்தில் ஒரு ஆறு மாதத்தில் வந்துவிடலாம் என்றுதான் நினைத்தேன். ஆனால், வேலையை விட்டு 11 ஆண்டுகள் ஆகின்றன. இன்னும் நான் காட்டை விட்டு வெளியேறவில்லை.
இயற்கையுடன் திரிய ஆரம்பித்தவுடன் என்னால் வழக்கமான வாழ்க்கைக்கோ, வேறு வேலைக்கோ திரும்ப முடியவில்லை. எனக்கு இப்படி இருப்பதில்தான் சந்தோஷமே.

திருப்புமுனை என்று குறிப்பாக எதைச் சொல்வீர்கள்?


வேலையை விட்ட புதிதில் காட்டுயிர் துறையில் முழு நேரமாகச் செயல்படுவது குறித்து எனக்கு எந்த எண்ணமும் இல்லை. காட்டில் திரிய ஆரம்பித்த ஒரு மாதத்துக்குப் பிறகுதான் ‘இதுதான் என் வாழ்க்கை, வழக்கமான வாழ்க்கைக்கு என்னால் திரும்ப முடியாது’ என்று எனக்குத் தோன்றியது. எல்லாவற்றுக்கும் மேல் நான் மிகுந்த சந்தோஷத்தை உணர்ந்தேன். சுயதிருப்தி என்பது எல்லாவற்றையும் விட நமக்கு முக்கியமல்லவா! பெரிய பெரிய கார்ப்பரேட் நிறுவனங்களின் வேலை போன்ற விஷயங்களெல்லாம் இந்தச் சமூகம் நமக்கென்று கட்டமைத்த போலிக் கனவுகள்! திடீரென்று நாம் இறக்கப்போகிறோம் என்றால் ‘நாம் நல்ல வாழ்க்கையை, சந்தோஷமான வாழ்க்கையை வாழ்ந்திருக்கிறோம்’ என்ற உணர்வு இருக்க வேண்டுமல்லவா! அந்த சந்தோஷத்தை இயற்கையுடன் இருக்கும்போது நான் அடைந்தேன். இந்த உணர்வுதான் எனக்குத் திருப்புமுனை. எனது வாழ்க்கையில் இனி இப்படித்தான் இருக்க வேண்டும் என்று அப்போது முடிவெடுத்தேன்.

இந்தத் துறையில் நீங்கள் ஈடுபடுவதற்கு யாரிடமிருந்து தாக்கம் பெற்றீர்கள்?

வனஉயிர் ஒளிப்படக் கலைஞர்களைவிட சுற்றுச்சூழல் செயல்பாட்டாளர்களிடமிருந்துதான் எனக்கு நிறைய உத்வேகம் கிடைத்தது. குறிப்பாகச் சொல்ல வேண்டுமென்றால் ஜேன் கூடால்தான் எனக்கு நிறைய உந்துதலைத் தந்தார். எனக்கு நன்றாக நினைவிருக்கிறது. சிறுவயதில் தூர்தர்ஷனில் வாரம்தோறும் ஞாயிறு காலை நேரத்தில் நேஷனல் ஜியாகிரபி அலைவரிசை நிகழ்ச்சிகளை ஒளிபரப்புவார்கள். அதில் ஜேன் கூடாலின் காட்டுயிர்ப் பாதுகாப்புச் செயல்பாடுகளைப் பற்றித் தொடர்ந்து பார்ப்பேன். எப்படிப்பட்ட பெண்மணி அவர் என்ற வியப்பு எனக்கு ஏற்படும். பெரியவனாகும்போது இந்தத் துறையில் நுழைய வேண்டும் என்ற எண்ணத்தை அவர்தான் என்னுள் விதைத்தார். எனக்கு  ஒளிப்படக் கலை மீதும் ஆர்வம் இருந்தது. இயற்கையைப் பதிவுசெய்வதற்கான ஒரு ஊடகமாகவே  ஒளிப்படத்தை நான் பார்க்கிறேன். காட்டுயிர் நேசரா,  ஒளிப்படக்காரரா என்று கேட்டால் என்னை முதன்மையாகக் காட்டுயிர் நேசன் என்றுதான் சொல்லிக்கொள்வேன். இந்தியாவின் பரந்து விரிந்த இயற்கைப் பரப்பை நோக்கி என் கண்களை  ஒளிப்படக் கருவிதான் அகலமாகத் திறந்துவிட்டிருக்கிறது.

இயற்கைச் சூழல், காடுகள் என்று கற்பனை செய்துபார்ப்பது எளிது. ஆனால், அப்படிப்பட்ட சூழல்களில் வாழ்வது எந்த அந்த அளவுக்கு நடைமுறை சாத்தியம்? காடுகள், மலைகளில் திரிய ஆரம்பித்தபோது எந்தவகையிலான பிரச்சினைகளை சந்தித்தீர்கள்?

காடுகளில் தங்கும்போது பல்வேறு பிரச்சினைகள் இருக்கும்தான். ஆனால், நகரத்தில் போக்குவரத்து நெரிசலில் சிக்கித்தவிப்பதைவிட என்மேல் ரத்தம் உறிஞ்சும் அட்டைகள் 10 ஊர்வது மேல் என்றுதான் நான் சொல்வேன்.

எனக்கு உண்மையான பிரச்சினைகள் என்றால் சமூகத்திடமிருந்தும் என் குடும்பத்திடமிருந்தும்தான். வெற்றிகரமான எனது வேலையை விட்டுவிட்டு இந்தத் துறைக்கு வந்ததை என் குடும்பத்தினரால் ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை. எனக்கும் எனது முடிவைப் பற்றிய மனக்குழப்பம் இருந்தது. ஆனால், முழு மனதோடும் அர்ப்பணிப்போடும் நாம் ஒரு காரியத்தில் ஈடுபட்டால் எவ்வளவு காலமானாலும் வெற்றி என்பது நம்மை அடைந்தே தீரும் என்பதை நான் கண்டுகொண்டேன்.

ஆரம்பத்தில் இந்தத் துறையில் எப்படிப் பணம் சம்பாதிப்பது என்பது குறித்து எனக்கு எதுவும் தெரியவே இல்லை. கையில் இருந்ததும் கொஞ்சம் சேமிப்புதான். இந்தச் சூழலில் பொறுமைதான் எனக்கு பலன் கொடுத்தது. நான் எடுத்த  ஒளிப்படங்களைப் பத்திரிகைகளுக்கு அனுப்பினேன். ஒரு கட்டத்தில் அவை பிரசுரமாக ஆரம்பித்தன. கூடவே, காட்டுயிர் ஒளிப்படப் பயிலரங்குகளில் வகுப்பு எடுத்தேன். இது போன்ற சிறுசிறு செயல்பாடுகள் மூலம் கொஞ்சம் தாக்குப்பிடித்தேன். இரண்டு மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு பிபிசியில் ஒரு வாய்ப்பு கிடைத்தது, காட்டுயிர் ஆவணப்படங்கள் உருவாக்கும் வேலை. இப்படி ஒவ்வொரு வேலையாகச் செய்துகொண்டுதான் நான் தாக்குப்பிடித்துக்கொண்டிருக்கிறேன். ஒரு சமயத்தில் ஒரே ஒரு வேலையைச் செய்வதில்தான் எனக்கு விருப்பம். ஆனால், பிழைப்புக்காக ஒரே சமயத்தில் 5 வேலைகள் செய்ய வேண்டியிருக்கிறது. எனினும், இந்த வாழ்க்கையில் கிடைக்கும் சொகுசு வேறு எந்த வாழ்க்கையிலும் கிடைக்காது எனக்கு. சொகுசு என்பதன் மூலம் நாகரிக வாழ்க்கையின் சொகுசைப் பற்றி நான் சொல்லவில்லை. இயற்கையோடு வாழும் சொகுசுதான் அது.

காடுகள், மலைகளில் அலைந்துதிரிகிறீர்கள். உங்களுக்கேற்பட்ட மிகவும் அழகான அனுபவம், பயங்கரமான அனுபவம், வெற்றிகள், தோல்விகள் பற்றிப் பகிர்ந்துகொள்ளுங்களேன்.

புலியைப் படமெடுத்தது, சிங்கத்தைப் படமெடுத்தது என்பது போன்று குறிப்பிட்ட ஒரு விலங்குடன் ஏற்பட்ட அனுபவத்தை மட்டும் சொல்ல மாட்டேன். எனக்குக் கிடைத்த அழகான அனுபவங்களெல்லாம் தருணங்கள் என்பதைவிட நீண்ட அனுபவங்கள் என்றே சொல்ல வேண்டும்.

அப்போது இரண்டு மூன்று மாதங்களாகக் குரங்குகளைத் தொடர்ந்து படமெடுத்துக்கொண்டிருந்தேன். ஆரம்பத்தில், குரங்குகள் வந்து என்னைத் தாக்கின, பயமுறுத்தின. ஆனால், போகப்போக எனது நண்பர்களாகிவிட்டன. ஆனந்தத்தொல்லையாகும் அளவுக்கு என்னுடன் வந்து விளையாடின. என்  ஒளிப்படக் கருவிகளுடன் விளையாடின. விரட்டினால் கூட போகாது. தின்பண்டங்கள் ஏதும் அவற்றுக்கு நான் கொடுக்கவில்லை என்பதைக் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டும். இயற்கையாகத் திரியும் பிராணிகள் நம்மை நண்பர்களாகக் கருதி நம்முடன் பழகும்போது கிடைக்கும் உணர்வே அலாதியானது. அதுபோல்தான் வால்பாறையில் காட்டு யானை ஒன்றையும் அதன் குட்டியையும் நெருக்கமாகப் பின்தொடர்ந்து பல நாட்கள் படம் எடுத்துக்கொண்டிருந்தேன். ஒருமுறை எனக்கு 5 மீட்டர் தொலைவில் யானக் குட்டி நின்றுகொண்டிருந்தது. 10 மீட்டர் தொலைவில் அந்த யானை நின்றுகொண்டிருந்தது. யானை என்னைப் பொருட்படுத்தவில்லை. ஆனால், 100 மீட்டர் தொலைவில் ஒரு கும்பல் சத்தம் போட்டுக்கொண்டிருந்தது. கோபமடைந்த யானை அவர்களைத் துரத்தியது. ஆனால், அருகில் இருந்த என்னை ஒன்றும் செய்யவில்லை. இயற்கையை நாம் மதிக்கும்போது அதுவும் நம்மை மதிக்கும் என்பதை அப்போது உணர்ந்தேன். இயற்கை என்னையும் அதன் அங்கமாக ஏற்றுக்கொண்ட தருணங்களே எனக்கு அழகானவை.

பயம் ஏற்படுத்திய அனுபவங்கள் குறைவுதான். யானைகளுக்கு ரொம்பவும் நெருக்கமாகச் சென்றபோது அப்படி இருந்தது. இரண்டு மூன்று முறை புலிகளுக்கு அருகில் சென்றிருக்கிறேன். உள்ளூர ரொம்பவும் நடுக்கமாக இருந்தது. ஆனால், இப்படிப் பயந்ததெல்லாம் ஆரம்பத்தில்தான். இப்போது எனக்குப் பழகிவிட்டது. உண்மையைச் சொல்ல வேண்டுமென்றால் காடுகளைவிட நகரங்களில்தான் பாதுகாப்பின்மையை நான் உணர்கிறேன். வன உயிர்களின் இயல்புகளை நாம் புரிந்துகொண்டோமென்றால் காடுகள்தான் மிகவும் பாதுகாப்பான இடங்கள் என்பது நமக்குப் புரியும்.

காட்டுயிர் ஒளிப்படங்களைப் பொறுத்தவரை நிறைய பொறுமை தேவை. நாம் நினைத்த  ஒளிப்படங்கள் கிடைக்கலாம் கிடைக்காமலும் போகலாம். ஒருமுறை செந்நாய்களை ஒளிப்படம் எடுப்பதற்காக மூன்று வாரங்கள் காத்துக்கொண்டிருந்தேன். செந்நாய்கள் வருகின்றன, போகின்றன. சுறுசுறுப்பாக ஏதாவது செய்தால்  ஒளிப்படம் எடுக்கலாம் என்று காத்துக்கொண்டிர்ருந்தேன் ஒன்றும் நடக்கக் காணோம்.
ஒரு பக்கம் இப்படி என்றால் இன்னொரு பக்கம் எதிர்பாராத தருணங்கள், ஆச்சர்யங்களெல்லாம் இயற்கையில் வெளிப்படும். குஜராத்தில் ஒரு மாதம் தங்கி ஒளிப்படம் எடுக்கலாம் என்ற எண்ணத்தில் ஒரு முறை போனேன். நான் நினைத்த  ஒளிப்படங்கள் இரண்டே நாட்களில் எனக்குக் கிடைத்துவிட்டன.

விருதுகள், அங்கீகாரங்கள்…?

ஒரு கட்டத்துக்குப் பிறகு எனக்குத் தொடர்ச்சியான அங்கீகாரங்கள் கிடைக்க ஆரம்பித்தன. ‘சாங்சுவரி’ இதழ் கொடுத்த ‘ஆண்டின் சிறந்த  ஒளிப்படக் கலைஞர் விருது’, பிபிசியால் மூன்று ஆண்டுகளுக்கு முன்பு கொடுக்கப்பட்ட ‘ஆண்டின் சிறந்த  ஒளிப்படக் கலைஞர் விருது’ போன்றவை முக்கியமானவை.

ஆனால் இந்த அங்கீகாரங்களை விட எனக்கு முக்கியமான விஷயம் ஒன்று இருக்கிறது. அதுதான் மனதிருப்தி. சுற்றுச்சுழல் பாதுகாப்பு இயக்கங்கள், செயல்பாடுகள் பலவற்றுக்கு என்  ஒளிப்படங்களை நான் கொடுத்திருக்கிறேன். மிக முக்கியமான காரணங்களுக்குப் பயன்படுத்தப்பட்டு, நல்ல மாற்றத்துக்கு உதவியாகவும் நம்  ஒளிப்படங்கள் பயன்படுத்தப்படுகின்றன என்ற உணர்வுதான் இந்த அங்கீகாரங்களைவிட உயர்ந்தது.

இதுபற்றி ஒரு விஷயம் எனக்கு நினைவுக்கு வருகிறது. வால்பாறையில் வாகனங்களில் அடிபட்டு சிங்கவால் குரங்குகள் தொடர்ந்து இறப்பது குறித்து அங்குள்ள சுற்றுச்சூழல் பாதுகாவலர்கள்  நெடுஞ்சாலைத் துறையினரிடம் எத்தனையோ தடவை முறையிட்டும் அவர்கள் அதைக் கண்டுகொள்ளவில்லை. சிங்கவால் குரங்குகள் அடிபட்டுக் கிடப்பதை நான்  ஒளிப்படம் எடுத்திருந்தேன். அந்த ஒளிப்படங்களை நெடுஞ்சாலைத் துறை பொறியாளரிடம் காட்டியபோது அவர் மிகவும் அதிர்ந்துபோனார். அதன் விளைவாக மேலும் நிறைய வேகத்தடைகள், இதர பாதுகாப்பு நடவடிக்கைகள் போன்றவற்றுக்கு ஆணையிட்டார். இதுபோன்ற மாற்றங்கள்தான் அங்கீகாரங்களை விட அதிக மகிழ்ச்சியை எனக்குத் தருகின்றன.

நெறிமுறைகளைப் பின்பற்றி ஒளிப்படங்கள் எடுக்கும் மிகச்சிலரில் நீங்களும் ஒருவர் என்றறியப்படுகிறீர்கள். காட்டுயிர்  ஒளிப்படக் கலைஞர்கள் வழக்கமாகச் செய்யும் தவறுகள் என்ன? பின்பற்ற வேண்டிய நெறிகள் என்ன?

ஒரு ஐம்பது, அறுபது ஆண்டுகளுக்கு முன்பு துப்பாக்கியை எடுத்துக்கொண்டுபோய் நீங்கள் எத்தனை புலிகளை வேண்டுமானாலும் சுட்டு வேட்டையாடிவிட்டு வரலாம். அப்போது அது சட்டப்படி குற்றமில்லை. பிற்காலத்தில் சட்டம் வந்துவிட்டது. அதுபோல, இருபது ஆண்டுகளுக்கு முன்பு காட்டுயிர்  ஒளிப்படக் கலைஞர்கள் பலரும் பறவைகளின் கூடுகளை ஒளிப்படம் எடுப்பதற்காகப் போகும்போது நன்றாகத் தெரிய வேண்டும் என்பதற்காக கூடுகளைச் சுற்றியுள்ள கிளைகளை வெட்டிவிடுவார்கள். கூடு மறைவிடமாக இருந்தால்தான் பாதுகாப்பு என்று இடத்தைத் தேடிப்போய் பறவைகள் கூடுகட்டுகின்றன. அதுமட்டுமல்ல,  ஒளிப்படம் எடுத்த பிறகு கூடுகளை அழித்தும்விடுவார்கள். மற்ற  ஒளிப்படக்காரர்கள் யாரும் அங்கே வந்து  ஒளிப்படம் எடுத்துவிடக் கூடாது என்பதற்காக. நாம்  ஒளிப்படம் எடுக்கும் இயற்கைச் சூழலுக்கும் அங்குள்ள உயிர்களுக்கும் எந்த பாதிப்பும் ஏற்படுத்தக்கூடாது என்பது முக்கியமல்லவா!  ஒளிப்படம் நன்றாக வர வேண்டும் என்பதற்காக இயற்கையைச் சிதைத்துத்தான்  ஒளிப்படம் எடுக்க வேண்டுமா என்பதை யோசித்துப் பார்க்க வேண்டும். சமீப காலமாகத்தான் இது குறித்த விழிப்புணர்வு ஏற்பட்டிருக்கிறது என்றாலும் பெரும்பாலானோர் இந்த நெறிமுறைகளைப் பின்பற்றுவதில்லை என்பதுதான் துரதிர்ஷடவசமான உண்மை. இதில் நாம் செல்ல வேண்டிய தூரம் இன்னும் அதிகம்.

 ஒளிப்படக்காரர்கள் இயற்கையை வேண்டுமென்றே இடையூறு செய்வதில்லை என்றாலும் மறைமுகமாக நிறைய தீங்கு ஏற்படுத்திவிடுகிறார்கள். ஆந்தைகளை இரவில்தான்  ஒளிப்படம் எடுக்க முடியும். அப்படி எடுக்கும்போது ஃபிளாஷ் பயன்படுத்துவோம். ஆந்தைகளின் கண்கள் மிகவும் மென்மையானவை. அதிக முறை ஃபிளாஷ் விழுந்தால் அதற்குப் பிறகு பல மணி நேரங்களுக்கு ஆந்தைகளுக்குக் கண் தெரியாமல் போய்விடும். அவற்றால் வேட்டையாடவும் முடியாது. உயிருக்கும் ஆபத்து ஏற்படலாம். என்னைப் பொறுத்தவரை இரண்டு தடவைக்கு மேல் ஒரு ஆந்தையிடம் ஒரே இரவில் ஃபிளாஷ் பயன்படுத்த மாட்டேன். அதற்குள் நான் விரும்பிய படம் கிடைத்துவிட்டால் சரி. அப்படிக் கிடைக்கவில்லையென்றால், அந்த முயற்சியைக் கைவிட்டு வேறு விஷயத்தை நாடிச் சென்றுவிடுவேன். இப்படி ஒரு எல்லையை நான் பின்பற்றுகிறேன்.

சில அரிய வகை தவளைகளைப் படம்பிடிக்கும்போது சிலர் ஒரு விஷயத்தைச் செய்வார்கள். சேற்றுக்குள் ஒளிந்திருக்கும் தவளையை வெளியில் எடுத்து ஒரு கல்லிலோ இலையிலோ விட்டுப் படம் எடுப்பார்கள். தவளைகளின் தோல் மிகவும் மென்மையானது. அதைக் கையால் எடுக்கும்போது நம் கையிலுள்ள பாக்டீரியா தவளையிடம் தொற்றிக்கொள்ளும். அதுமட்டுமல்ல, அதன் தோல் எப்போதும் ஈரப்பதத்துடன் இருக்க வேண்டும். ஒரு தவளையை எடுத்து அதன் மேல் பலமுறை ஃபிளாஷ் அடிப்பதால் அதன் தோல் உலர்ந்துபோய்விடும். இப்படிச் சிலர் செய்வதை நான் பார்த்திருக்கிறேன்.  ஒளிப்படம் எடுத்துவிட்டு அவர்கள் போன சில மணி நேரங்களில் அந்தத் தவளைகள் இறந்துபோய்விடும்.

மானைப் புலி வேட்டையாடுவதை ஒளிப்படம் எடுப்பதற்காகப் பலரும் மிக நெருக்கமாகச் சென்றுவிடுவார்கள். இதனால், புலிக்கு கவனச் சிதறல் ஏற்பட்டு, மானும் தப்பி ஓடிவிடும். புலிக்கு இரையேதும் இல்லாமல் ஆகிவிடும்.

ஆகவே, சில விஷயங்களை நாம் தடுத்தாக வேண்டும்.
பறவைகளின் கூடுகளை ஒளிப்படம் எடுப்பதை இப்போது இந்தியா முழுவதும் உள்ள காட்டுயிர்த் துறையினர் ஏற்றுக்கொள்வதில்லை. கூடுகளை ஒளிப்படம் எடுப்பதன்மூலம் அந்தப் பறவைகளை நீங்கள் ஆபத்துக்குள்ளாக்குகிறீர்கள் என்று அர்த்தம். காடுகளுக்கு அருகில் இருக்கும் பல ரெசார்ட்டுகளில் ‘வன உலா’ அழைத்துச்செல்வார்கள். அப்படிச் செல்லும்போது யானைகளைக் கோபமூட்டித் துரத்தும்படிச் செய்து ஒளிப்படம் எடுப்பார்கள். யானைகளைத் தூண்டிவிட்டு எடுப்பது எப்படி நல்ல  ஒளிப்படமாகும். விலங்குகளும் இயற்கையும் அதனதன் போக்கில் இருக்கும்போது எடுக்கப்படும்  ஒளிப்படங்கள்தான் உண்மையில் அழகான  ஒளிப்படங்கள்.

விலங்குகளை மட்டுமல்ல தாவரங்களையும் அப்படித்தான் செய்கிறார்கள். ஒரு மரத்தின் மேலே உள்ள கிளையில் இருக்கும் ஒரு பூவை ஒளிப்படம் எடுப்பதற்காக அந்த மரத்துக்குக் கீழே முளைத்திருக்கும் அரிய செடிகொடிகளை மிதித்து நாசமாக்குவார்கள். அது ரொம்பவும் தப்பு.

இன்னொரு மோசமான விஷயம், இரைகளைப் போட்டு விலங்குகளைப் படம் எடுப்பது. உலகிலேயே அரிய விலங்குகளில் ஒன்று பனிச் சிறுத்தை. அதை ஒளிப்படம் எடுக்க வேண்டும் என்பதற்காக ஆடுகளை இரையாகப் போட்டுவிட்டுக் காத்திருப்பார்கள். பனிச்சிறுத்தை வரும் ஆட்டைத் தின்றுவிட்டுப் போய்விடும். அவர்களும்  ஒளிப்படம் எடுத்துவிட்டுப் போய்விடுவார்கள். அதற்குப் பிறகு ஆடுகளைத் தேடிக்கொண்டு பனிச்சிறுத்தைகள் கிராமங்களுக்குள் வேட்டையாட ஆரம்பிக்கும். பனிச்சிறுத்தையைக் கொல்வதற்காக ஆட்டுக்கு விஷம் கொடுத்துக் கொன்று பனிச்சிறுத்தைக்குப் போடுவார்கள். பாருங்கள், ஒரு ஒளிப்படக்காரர் ஏற்படுத்தும் விளைவை. ஆகவே, நாம் எது செய்தாலும் நீண்ட கால விளைவுகளைப் பற்றிய உணர்வுடன் செய்ய வேண்டும்.
 ஒளிப்படக்காரர்கள் கவனத்தில் கொள்ள வேண்டிய இன்னொரு அம்சம் உள்ளூர் மக்கள் மற்றும் வனவாழ் மக்கள் ஆகியோரின் கலாச்சாரம். நாம் பாட்டுக்குக் காட்டுக்குள் திரிந்துகொண்டு அங்குள்ள பழங்குடி மக்களுக்கு இடையூறு ஏற்படுத்திவிட்டு, அப்புறம் காடுகளில் விலங்கினம்தான் வசிக்க வேண்டும், மக்கள் வசிக்கக் கூடாது என்று வெளியில் வந்து பேசுவோம். அதனால் அந்த மண்ணுக்குச் சொந்தமான அந்த மக்கள் அங்கிருந்து வெளியேற்றப்படும் அபாயம் ஏற்படுகிறது. காட்டுயிர்ப் பாதுகாப்பு என்றால் அது காடுகளில் வசிக்கும் மக்களையும் உள்ளடக்கியதுதான் என்ற கவனம் ஒளிப்படக்காரர்களுக்கு அவசியம்.
 நெறிமுறைகளைப் பொறுத்தவரை நேற்று எது வழக்கத்தில் இருந்ததோ அது இன்று மாறலாம். இன்று வழக்கத்தில் இல்லாதது நாளை வழக்கத்துக்கு வரலாம். இப்படி மாறிவரும் நெறிமுறைகளைப் பற்றியும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.    

இதுபோன்ற விஷயங்களைப் பற்றியெல்லாம் காட்டுயிர் ஒளிப்படவியலாளர்களுக்குள் விவாதிப்பீர்களா?
இல்லை என்பதுதான் சங்கடமான உண்மை. நெறிமுறைகளைப் பற்றிப் பேசுவதில் பல  ஒளிப்படக்காரர்களுக்கும் ஏதோவொரு அசௌகரியம் இருக்கிறது. நான் ஒரு தவறு செய்துவிட்டேன் என்றால் அதை ஒப்புக்கொள்வதில் எனக்குப் பிரச்சினை இல்லை. ஆனால், பலரும் அப்படி இருப்பதில்லை. பத்து ஆண்டுகளுக்கு முன்னால் நானும் சில தவறுகளைச் செய்திருக்கிறேன். ஆனால், அவற்றை உணர்ந்துகொண்டு தற்போது என்னை மாற்றிக்கொண்டுவிட்டேன். ஒரு உண்மை என்னவென்றால் நெறிமுறைகளைப் பொறுத்தவரை எழுதப்பட்ட விதிகள் என்று ஏதும் இல்லை. அவரவர் தங்கள் உள்ளத்தால் உணர்ந்து பின்பற்ற வேண்டியவைதான் அவை. இந்த உணர்வு பலருக்கும் ஏற்படுவதில்லை.

நான்கைந்து ஆண்டுகளுக்கு முன்பு வால்பாறையில் உயரமான மரமொன்றில் இருவாட்சிப் பறவையின் கூடு ஒன்றைப் பார்த்தேன்.  ஒளிப்படம் எடுத்துக்கொண்டேன். ஆனால், அந்த ஒளிப்படத்தை எங்குள் பகிர்ந்துகொள்ளவில்லை. அந்தக் கூட்டுக்கு யாரும் இடையூறு ஏற்படுத்திவிடக் கூடாது அப்படி முடிவெடுத்தேன். ஆனால், தற்போது பலருக்கும் அந்தக் கூடு இருக்கும் இடம் தெரிந்துபோய் தொடர்ந்து ஒளிப்படம் எடுத்துக்கொண்டிருக்கிறார்கள். இந்த விஷயத்தில் என் முடிவைக் குறித்து நான் திருப்தி கொள்கிறேன்.

ஒளிப்படம் என்பது நமக்கு வெளியில் உள்ள ஒரு விஷயம் என்றாலும் அது ஒரு கலையாக நம் அகத்துடன் தொடர்புடைய விஷயம் என்றும் நான் நினைக்கிறேன். நமக்கு உண்மையாக இல்லாமல் நாம் நல்ல ஒளிப்படத்தை எடுக்க முடியாது. நாம்  ஒளிப்படம் எடுக்கும் விலங்கு, பறவை, பூச்சிகள் போன்றவற்றின் மீது மதிப்பு இல்லாமல் எடுக்கப்படும் ஒளிப்படம் நல்ல காட்டுயிர் ஒளிப்படமாக இருக்கவே முடியாது. 

இன்றைய காட்டுயிர் ஒளிப்படக் கலைஞர்கள் எதிர்கொள்ளும் சவால்கள் என்னென்ன?

நான் இந்தத் துறைக்குள் நுழையும்போது எனக்கு வழிகாட்டுவதற்கு நிறைய பேர் இல்லை. யாரும் தங்களுக்குத் தெரிந்ததைப் பகிர்ந்துகொள்ள மாட்டார்கள். நாம்  ஒளிப்படம் எடுக்க நினைக்கும் வன உயிர்கள் எந்தெந்த இடங்களில் இருக்கின்றன என்பதைப் பற்றி விவரமாக நமக்குத் தெரியாது. தேடிப்பிடித்துப் போக வேண்டும். ஆனால், இப்போது அப்படி இல்லை. எல்லா விவரங்களும் இணையத்தில் கிடைக்கின்றன. கைபேசி உள்ள அனைவரும்  ஒளிப்படம் எடுக்கலாம். இதனால் தொழில்முறையில் காட்டுயிர் ஒளிப்படக் கலைஞர்களுக்குத் தொழில்முறையில் பெரும் பாதிப்பு ஏற்பட்டாலும் ஜனநாயகக் கண்ணோட்டத்தில் பார்த்தால் ஆரோக்கியமானதே. எல்லோருக்கும் காட்டுயிர் மீது ஆர்வம் ஏற்பட இந்த மாற்றம் காரணமாக இருந்திருக்கிறது.

வருமானம் இப்போது பிரச்சினைதான். அப்போது காட்டுயிர் ஒளிப்படக் கலைஞராக நன்றாகச் சம்பாதிக்க முடியும். பிரபல பத்திரிகைகளுக்குப் படங்களைக் கொடுத்தால் நல்ல வருமானம் கிடைக்கும். இப்போது காட்டுயிர் ஒளிப்படங்கள் இணையத்தில் எளிதாகக் கிடைப்பதால் தொழில் முறையில் காட்டுயிர் ஒளிப்படக்காரராக இருப்பது சிரமம். பயிற்சி வகுப்புகள், ஆவணப்படங்கள் என்றெல்லாம் செய்துகொண்டுதான் காட்டுயிர் ஒளிப்படங்களை எடுக்க முடிகிறது.

இதையெல்லாம் தாண்டியும் செயல்படத்தான் வேண்டியிருக்கிறது. இன்று பலரும் விலங்குகளின் முழு உருவப் படங்களை எடுப்பதில்தான் ஆர்வம் செலுத்துகின்றனர். அது வெறுமனே நன்றாக இருக்கும் அவ்வளவுதான். காட்டுயிர் ஒளிப்படங்களில் சுற்றுச்சூழல் பாதுகாப்பும் ஒரு நோக்கமாக இருக்க வேண்டும். புலியை ஒளிப்படம் எடுக்க வேண்டுமென்றால் அதன் வாழிடம் எந்த அளவுக்கு அழிக்கப்பட்டிருக்கிறது, திருட்டு வேட்டையாளர்கள் என்னவெல்லாம் செய்கிறார்கள் என்பதையெல்லாம் சேர்த்துதான் நான்  ஒளிப்படம் எடுப்பேன். வெறுமனே அழகுக்காக எடுப்பதில்லை.

ட்ரோன் ஒளிப்படங்களுக்குத் தடை இருக்கிறதல்லவா? ட்ரோன் மூலம் ஒளிப்படங்கள் எடுப்பது சரியா? அப்படி எடுக்கப்படும் ஒளிப்படங்கள் நம்முடையவை என்று சொல்லிக்கொள்ள முடியுமா?

காட்டுயிர் ஒளிப்படங்களைப் பொறுத்தவரை ட்ரோன்கள் வரப்பிரசாதம் என்றுதான் சொல்ல வேண்டும். ஏனென்றால்  ஒளிப்படங்களுக்காக ஹெலிகாட்பர்களைப் பயன்படுத்துவது என்பது மிகவும் செலவுபிடிக்கக்கூடிய விஷயம். ட்ரோன்களின் வரவால் ஆகாயத்திலிருந்து  ஒளிப்படம் பிடிப்பது செலவு பிடிக்காத, எளிதான விஷயமாக ஆகிவிட்டது. இந்தியாவின் காட்டுயிர்ப் பரப்புகளின் விஸ்தாரத்தையும் அழகையும் ட்ரோன்  ஒளிப்படங்களின் மூலம் மிகவும் உணர முடிகிறது. சுற்றுச்சூழலுக்குச் சேதம் ஏற்படுத்தாமல் படம்பிடிப்பது இதன் சாதகமான அம்சம். அதே நேரத்தில், பாதுகாப்புக் காரணங்களை முன்னிட்டுப் பொது இடங்களில் ட்ரோன்களைப் பயன்படுத்துவதற்கு அரசு தடைவிதித்திருக்கிறது. என்னிடமும் ட்ரோன் இருக்கிறது. தனியார் இடங்களில் மட்டும் அதைப் பயன்படுத்தி ஒளிப்படங்கள் எடுப்பேன். நம் கையில் வைத்து நாம் எடுக்கும்  ஒளிப்படங்கள் அளவுக்கு இதில் ஆத்மார்த்தமான உணர்வு கிடைக்காது என்றால் மேலிருந்து  ஒளிப்படங்கள் எடுப்பதற்கு மிகவும் பயன்படுபவை ட்ரோன்கள். சில சமயம், ட்ரோனை பருந்து போன்ற பறவைகள் ஏதோ இரைப்பறவை என்று நினைத்துக் கொத்த வரும். ஏதோ புதுவித இரைகொல்லிப் பறவையோ என்று காகங்கள் சூழ்ந்துகொண்டு துரத்துவதும் உண்டு. அதேபோல் யானைகளைப் படம்பிடிக்கவும் ட்ரோன் பயன்படுத்தக் கூடாது. அந்தச் சத்தத்தைக் கேட்டு ஓடிவிடும். அவற்றிடமிருந்து ட்ரோனைக் காப்பாற்றுவதற்கு அவசர அவசரமாகத் தரையிறக்கிவிடுவேன். சரியாகக் கையாளவில்லையென்றால் கீழே விழுந்து உடைந்துவிடும் அபாயமும் இருக்கிறது.

ட்ரோன்கள் பெருமளவு சாத்தியத்தை நமக்குத் தருகின்றன. ஸ்பைடர்மேன் படத்தில் ஒரு வசனம் வரும் ‘பெரும் சக்தி என்பது நமக்குப் பெரும் பொறுப்பையும் சேர்த்தே கொண்டுவரும்’. ஆகவே, ட்ரோன்களைப் பயன்படுத்தும்போதும் இதை நினைவில் கொள்ள வேண்டும்.

ட்ரோன்கள் மட்டுமல்ல, ஃபோட்டோஷாப் பயன்படுத்துவதிலும்தான். ஃபோட்டோஷாப்பைக் கொண்டு பலரும் தங்கள்  ஒளிப்படங்களில் நிறைய மாற்றங்களைச் செய்கிறார்கள். பிரகாசம், நிற அடர்த்தி போன்றவற்றில் மெருகூட்ட மட்டுமே நான் ஃபோட்டோஷாப்பைப் பயன்படுத்துகிறேன். சிலர் இரண்டு பறவைகளைத் தனித்தனியாக ஒளிப்படம் எடுப்பார்கள். ஃபோட்டோஷாப்பின் மூலம் அந்த இரண்டு பறவைகளையும் பக்கத்தில் பக்கத்தில் உட்காரவைத்து ஒரே  ஒளிப்படம் என்று வெளியிடுவார்கள். மிகவும் மோசமான செயல் இது.

மறைப்பதற்கும் ஃபோட்டோஷாப்பைப் பயன்படுத்துவார்கள். பருந்து போன்ற பறவைகளை ஒளிப்படம் எடுப்பதற்காக ஒரு காரியத்தைசெய்வார்கள். தூண்டில் நரம்பில் பாம்பைக் கட்டிப்போட்டுவிடுவார்கள். பாம்பால் எங்கும் நகர முடியாது. அந்தப் பாம்பைத் தூக்கிக்கொண்டுபோக பருந்து வரும். பாம்புடன் பறக்கும் பருந்தை ஒளிப்படம் எடுப்பார்கள். ஃபோட்டோஷாப் மூலமாக தூண்டில் நரம்பை அழித்துவிடுவார்கள். பார்க்க அட்டகாசமாகத்தான் இருக்கும். ஆனால், எவ்வளவு பெரிய மோசடி இது!

உயிர்ப்பன்மையைக் காப்பதில் காட்டுயிர் ஒளிப்படக்காரர்களின் பங்கு என்ன?

நிறைய இடங்களுக்குப் பயணம் செய்வதால் எங்களுக்கு நிறைய பொறுப்புகள் இருக்கின்றன. பொதுமக்களில் பலருக்கும் உயிரினங்களின் பெயர்கள் தெரிவதில்லை. பறவைகளின் பெயர்களைச் சொல்லச்சொன்னால் காக்கா, குருவி, புறா என்று ஆறேழு பறவைகளைத் தாண்டி பலருக்கும் பெயர் தெரிவதில்லை. மத்தியப் பிரதேசத்தில் ஒரு கிராமத்து ஆளிடம் கேளை ஆட்டின் (Barking Deer) படத்தைக் காட்டி அதன் பெயர் தெரியுமா என்று கேட்டேன். கங்காரு என்று சொன்னார். இந்தியாவில் ஏது கங்காரு என்று கேட்டால் டிஸ்கவரி சேனலில் பார்த்திருப்பதாகச் சொன்னார். டிஸ்கவரி முதலான சேனல்களில் பெரும்பாலும் மேலை நாடுகளின் காடுகளையும் விலங்குகளையும் காட்டுவதால் அவையெல்லாம் நம் நாட்டில் இருப்பவை என்ற எண்ணம் நம் மக்களிடம் ஏற்பட்டுவிட்டது. இந்த இடத்தில்தான் என்னைப் போன்றவர்களின் பங்கு இருக்கிறது. இந்தியாவின் இயற்கைச் சூழல், காட்டுயிர் போன்றவற்றை நாங்கள் ஆவணப்படுத்தி அவற்றைப் பற்றிய விழிப்புணர்வை மக்களிடையே எடுத்துச்செல்ல வேண்டும்.

ஒரு இயற்கைப் பரப்பின் பூர்வகுடி மக்களிடம் இயற்கையைக் குறித்த இயல்பான அறிவு இருக்கும். அந்த அறிவுகூட தற்போது மறைந்துவருகிறது என்பது வருத்தமான விஷயம். கர்நாடகத்தின் பிலிகிரிரங்கனா மலைப் பகுதியில் வசிக்கும் சோளகர் இன மக்கள் கருங்கழுகு (Black Eagle) என்ற பறவைக்கு
‘கான கத்தலே’ என்ற பெயரை வத்திருக்கிறார்கள். ‘காட்டின் இருட்டு’ என்று அதற்கு அர்த்தம். எவ்வளவு அழகான பெயர்! இதுபோல் 70-க்கும் மேற்பட்ட பறவையினங்களுக்குத் தனித்துவமான, அழகான பெயர்களை வைத்திருக்கிறார்கள்.

எங்களைப் போன்றவர்கள் சுற்றுச்சூழல் பாதுகாப்பு போன்றவற்றுடன் உயிரினங்களைப் பற்றிய உள்ளூர் ஞானம் போன்றவற்றையும் திரட்ட வேண்டும். ஒன்றைப் பற்றித் தெரிந்திருந்தால்தான் அதன்மீது உண்மையான அக்கறை ஏற்படும் என்பார்கள். ஒரு பறவையின் உள்ளூர்ப் பெயர் தெரியாமல் அதை ஒளிப்படம் எடுப்பதோ அதைப் பாதுகாக்க முயல்வதோ அந்த அளவுக்குப் பயன் தராது.

ஒரு வகையில் கவிஞர்களும்  ஒளிப்படக்காரர்களும் ஒன்று. இருவரும் தங்கள் ஊடகத்தின் மூலமாகத் தருணங்களைப் பிடித்துவைக்கிறார்கள். உங்கள்  ஒளிப்பட வாழ்க்கைப் பயணத்தில் அதுபோன்ற கவித்துவமான தருணங்கள் எவை?

ஒரு தருணத்தைப் பற்றி நிச்சயமாக நான் சொல்லியாக வேண்டும். அது 2007-ம் ஆண்டு. கேரளத்தின் எரவிக்குளம் தேசியப் பூங்காவில் ஒரு இடத்தில் இரண்டு மாதங்கள் நான் தங்கி இருந்தேன். மிக மிகத் தனிமையான இடம் அது. இரண்டு நாட்களுக்கு ஒரு முறை ஒரு அம்மா வந்து சமைத்துக்கொடுத்துவிட்டுப் போவார்கள். மற்றபடி சுற்றிலும் இருபது கிலோமீட்டருக்கு ஒரு மனித உயிர்கூட கிடையாது. டி.வி., செல்போன், மின்சாரம், வாகனங்கள் ஏதும் கிடையாது. எனது கேமரா பேட்டரிக்கு சார்ஜ் ஏற்றுவதற்காக மட்டும் சோலார் சார்ஜர் ஒன்று வைத்திருந்தேன். இரண்டு மாதங்களுக்கு இந்த உலகத்துடன் முற்றிலுமாகத் துண்டிக்கப்பட்டு இருந்தேன். சமையல்கார அம்மா வந்துவிட்டுப்போனார் என்றால் 20 கிலோமீட்டருக்கு யாரும் இருக்க மாட்டார்கள். ஆகவே, நான் தங்கியிருந்த சிறு குடிலிருந்து ஆடை ஏதுமின்றிப் புறப்பட்டு மலையேறச் செல்வேன். புல்வெளிகளில் நடப்பேன். சோலா புல்வெளிகள் விரிந்து கிடக்கும். அந்தக் காட்சிக்குள் நடப்பது அவ்வளவு ஆனந்தமாக இருக்கும். இப்படி எல்லாவற்றிலும் துண்டிக்கப்பட்டு இருக்கும்போது தனிமையுணர்வு நம்மை வாட்டி வதைக்கும் இல்லையா? ஆனால், நான் அங்கே ஒரு வித ஆன்மிக உணர்வை அடைந்தேன். ஏனென்றால், அங்கே நமக்கு எதுவும் தேவைப்படவில்லை. அதைச் செய், இதைச் செய் என்று இந்தச் சமூகம் நமக்கு விதிக்கும் கட்டுப்பாடுகள் ஏதும் அங்கு இல்லை. மனித உள்ளுணர்வு வழிநடத்த நம் பாட்டுக்கும் நாம் போய்க்கொண்டிருக்கலாம். இயற்கையோடு கிட்டத்தட்ட இரண்டறக் கலந்துவிட்ட அந்தத் தருணத்தில் இந்த உலகில் எதுவுமே எனக்குத் தேவையாக இருக்கவில்லை. செல்வத்தை நாம் எதைக் கொண்டு அளவிடுவோம்? ஆனால், என்னைப் பொறுத்தவரை இந்த உலகிலேயே மிகப் பெரிய பணக்காரனாக அப்போது உணர்ந்தேன். யாரைவிடவும் பணக்காரனாக என்னை அன்று உணர்ந்தேன். நான் நினைத்ததை, எனக்குப் பிடித்ததை செய்துகொண்டு, இயற்கையுடனும் என்னுடனும் நான் இருந்துகொண்டு, வனத்தில் திரிந்தபடி இருந்தது அற்புதமான உணர்வு. இயற்கை மட்டுமே அப்படிப்பட்ட உணர்வைத் தர முடியும். இது போன்ற காரணங்களால்தான் என்னால் இந்த வாழ்க்கையை விட்டு விட்டு யாஹூ வாழ்க்கைக்குத் திரும்ப முடியவில்லை.

காட்டுயிர் ஒளிப்படக் கலையைப் பற்றிய உங்கள் விவரிப்பு என்ன?

கவிதையைப் போலத்தான்  ஒளிப்படமும். நீங்கள் ஒரு உணர்வை அனுபவிக்கிறீர்கள். அந்த உணர்வை அடுத்தவர்களிடமும் பகிர்ந்துகொள்ள வேண்டும் என்று கவிதை எழுதுகிறீர்கள். அதேபோல், இயற்கையைப் பார்க்கும்போது எனக்குள்ளும் ஆனந்தம் ஏற்படுகிறது.  ஒளிப்படம் எடுப்பதன் வழியாக அந்த ஆனந்தத்தை மற்றவர்களிடமும் பகிர்ந்துகொள்கிறேன். நான் உணர்ந்த ஆனந்தத்தை மற்றவர்கள் எந்த அளவுக்கு உணர்வார்கள் என்று சொல்ல முடியாது. துளி உணர்ந்தாலும் மகிழ்ச்சியே. இப்படி,  ஒளிப்படங்களைப் பார்த்துவிட்டு இயற்கையின் மீது ஈடுபாடு கொண்டு, இயற்கை உலகில் சஞ்சரிப்பதற்கு மற்றவர்களுக்கு உந்துதல் கொடுத்தால் அதுவே என்  ஒளிப்படத்துக்கு வெற்றி.

தங்கள்  ஒளிப்படங்களை எல்லோரும் இலவசமாகப் பயன்படுத்தும் விதத்தில் நீங்கள் ‘பொதுப்பயன்பாட்டுக்கான படைப்பு’களாக (Creative Commons) ஆக்கியிருக்கிறீர்கள் அல்லவா? காட்டுயிர் ஒளிப்படத்தைத் தொழிலாகக் கொண்ட ஒருவர் இப்படிச் செய்வதால் தன் வருமானத்தை இழக்க மாட்டாரா?

சிறு வயதில் நானும் என் நண்பர்களும் ஒரு பழக்கத்தைக் கொண்டிருந்தோம். நான் ஒரு புத்தகத்தைப் படித்தேன் என்றால் படித்து முடித்துவிட்டு அதை ஒரு நண்பனிடம் தந்துவிடுவேன். அவன் வேறொரு புத்தகத்தைப் படித்தான் என்றால் எனக்குத் தருவான். நாமே எல்லாவற்றையும் வைத்துக்கொள்வதில் என்ன இருக்கிறது. பகிர்ந்துகொள்வதுதான் சந்தோஷம். என்  ஒளிப்படங்களை ‘பொதுப்பயன்பாட்டுக்கான படைப்பு’களாக ஆக்கியதன் பின்னும் இந்த நோக்கம்தான் இருக்கிறது.

பிலிகிரிரங்கனா மலைப் பகுதியில் படம் எடுக்க ஆரம்பித்த நாட்களிலிருந்து நான் எனது எல்லா ஒளிப்படங்களையும் எல்லோருடனும் பகிர்ந்துகொள்ளவே ஆசைப்பட்டிருக்கிறேன். இயற்கையில் நீங்கள் ஒன்றை உணர்கிறீர்கள். அதை ஒளிப்படம் எடுக்கிறீர்கள். எடுத்துவிட்டு நீங்களே வைத்துக்கொள்வதில் என்ன இருக்கிறது. நீங்கள் உணர்ந்த, கண்ட அற்புதங்களை மற்றவர்களிடம் பகிர்ந்துகொள்வதுதான் பெரிய சந்தோஷமே.

ஒருமுறை முன்பின் தெரியாத ஒருவரிடமிருந்து எனக்கு ஒரு மின்னஞ்சல் வந்தது. எனது  ஒளிப்படம் ஒன்றை அவர் தனது கணிப்பொறித் திரையில் வால்பேப்பராக வைக்க ஆசைப்பட்டிருக்கிறார். அந்த ஒளிப்படத்தின் துல்லியமான வடிவத்தை என்னிடம் கேட்டுதான் அந்த மின்னஞ்சலை அனுப்பினார். எனக்கு ரொம்பவும் சந்தோஷம். தாரளமாக எடுத்துக்கொள்ளுங்கள். எனது  ஒளிப்படங்கள் எல்லாவற்றையும் எல்லோருமே பயன்படுத்துங்கள் என்று சொல்லி அவருக்கு துல்லியம் அதிகமுள்ள  ஒளிப்படத்தை அனுப்பிவைத்தேன். அங்கீகாரங்களைப் பற்றி நாம் பேசினோமல்லவா. நான் காட்டுயிர் ஒளிப்படத் துறையில் நுழைந்து ஒரு வருடம் இருக்கும் அப்போது. ‘அற்புதமான இயற்கைக் காட்சிகள்’ என்று அப்போதெல்லாம் நிறைய பேர் மின்னஞ்சல்கள் அனுப்புவார்கள். ஒருத்தருக்கு அனுப்ப அவர் இன்னொருத்தருக்கு அனுப்ப இப்படியாக நூற்றுக்கணக்கான பேருக்கு அந்த மின்னஞ்சல்கள் அனுப்பப்படும். அப்படித்தான் ஒரு முறை எனக்கு வந்த மின்னஞ்சலைப் பார்த்தால் அதிலுள்ள  ஒளிப்படங்களில் மூன்று நான் எடுத்தது. அன்று நான் அழுதேவிட்டேன். நம்  ஒளிப்படங்கள் நன்றாக இருப்பதால்தான் இத்தனை பேர் பகிர்ந்துகொண்டு ரசிக்கிறார்கள் என்றும் இப்படிப் பகிர்ந்துகொள்வதற்கு இன்னொரு முக்கியக் காரணம் அந்த ஒளிப்படங்கள் பகிர்ந்துகொள்வதற்கு ஏதுவாக எளிதில் கிடைப்பதுதான் என்று எனக்குத் தோன்றியது. இதுபோன்ற விஷயங்களைத்தான் நான் உண்மையான அங்கீகாரமாக நினைக்கிறேன். அதனால்தான் எனது  ஒளிப்படப் படைப்புகளை நான் பொதுவில் வைக்கிறேன்.    

விக்கிபீடியாவுக்குத் தொடர்ந்து  ஒளிப்படங்களை நான் பங்களித்துவருகிறேன். இந்தியக் காட்டுயிர் தொடர்பான பெரும்பாலான விக்கிபீடியா கட்டுரைகளில் என் படங்கள் இருக்கும். என் படங்களைப் பொதுவில் வைத்ததால் எனக்கு நிறைய அனுகூலங்களும் அற்புதமான அனுபவங்களும் ஏற்பட்டன. இலவசமாக நான் இணையத்தில் கொடுத்திருந்தாலும் சிலர் என்  ஒளிப்படங்களை அவர்களின் புத்தகங்களிலோ மற்றவற்றிலோ பயன்படுத்தும்போது எனக்கு காசோலை அனுப்பிவைப்பார்கள். நான்தான் இலவசமாக வைத்திருக்கிறேனே அப்புறம் ஏன் எனக்குப் பணம் அனுப்புகிறீர்கள் என்று கேட்டேன். அதற்கு அவர்கள், “ஒளிப்படங்களுக்குக் கொடுப்பதற்கென்று ஒரு பட்ஜெட் எங்களுக்கு ஒதுக்கப்பட்டிருக்கிறது. இலவசமாக ஒளிப்படங்களைப் பகிர்ந்துகொண்ட உங்கள் பண்பு எங்களைக் கவர்ந்தது. ஆகவே, உங்களுக்குப் பணம் அனுப்பினோம்” என்றார்கள்.   

’ஸ்னேக்ஸ் ஆன் எ ப்ளேன்’ என்ற ஹாலிவுட் படம் பார்த்திருக்கிறீர்களா? அந்தப் படத்துக்கான டிவிடியின் அட்டைக்காக அவர்கள் இணையத்தில் பாம்பின்  ஒளிப்படங்களைத் தேடியிருக்கிறார்கள். நான் எடுத்த பாம்பு ஒளிப்படமொன்று நல்ல துல்லியத்துடன் கிடைக்க அதைப் பயன்படுத்திக்கொண்டார்கள். என் பெயரையும் குறிப்பிட்டிருந்தார்கள். டிவிடி வந்து மூன்று மாதம் கழித்து அவர்களிடமிருந்து எனக்கு ஒரு கடிதமும் காசோலையும் வந்திருந்தது. உங்கள் படத்தைப் பயன்படுத்த நாங்கள் பணம் கொடுக்கத் தேவை இல்லைதான். எனினும், இப்படி இலவசமாகப் பகிர்ந்துகொள்ளும் உங்கள் குணத்துக்காக நாங்கள் உங்களுக்கு சன்மானம் அனுப்ப விரும்பினோம். அதனால் இந்த 400 டாலருக்கான காசோலையைப் பெற்றுக்கொள்ளவும்’ என்று இருந்தது. அதேபோல் நார்வேயில் உள்ள இசைக்குழு ஒன்று காட்டுயிர்களை அடிப்படையாகக் கொண்டு ஒரு வீடியோ பாடலை உருவாக்க நினைத்தார்கள். அதற்காக ஒளிப்படங்களை இணையத்தில் தேடியிருக்கிறார்கள். பத்து ஆண்டுகளுக்கு முன்னால் இப்போது இருக்கும் அளவுக்கு ஒளிப்படங்கள் இணையத்தில் கிடைக்காது. ஆனால், அப்போதே நான் என்னுடைய  ஒளிப்படங்கள் அனைத்தையும் இணையத்தில் ஏற்றியிருந்தேன். அவர்கள் எடுத்த வீடியோ முழுவதும் என் படங்களைப் பயன்படுத்தியிருந்தார்கள். கிட்டத்தட்ட என்  ஒளிப்படங்களின் ஸ்லைடு ஷோதான் அந்த வீடியோ. எனக்கு ரொம்பவும் சந்தோஷமாக இருந்தது. 

எல்லாவற்றுக்கும் உச்சம் பிபிசியிடமிருந்து வந்த அழைப்புதான். 2007-ல் பிபிசியில் தவளைகளைப் பற்றிய ஆவணப்படம் எடுக்கும் முயற்சியில் ஈடுபட்டார்கள். அப்போது ‘கருநீலத் தவளை’ தவளையின் படத்தை இணையத்தில் தேடிப்பார்த்திருக்கிறார்கள். கிடைத்த ஒரே ஒரு ஒளிப்படம் என்னுடையது. விக்கிபீடியாவில் நான் பகிர்ந்துகொண்ட  ஒளிப்படம். வால்பாறையில் நான் எடுத்தது. அதைப் பார்த்துவிட்டு அவர்கள் எனக்கு மின்னஞ்சல் அனுப்பினார்கள்: “கருநீலத் தவளைக்கென்று இணையத்தில் கிடைக்கும் ஒரே ஒரு  ஒளிப்படத்தை நீங்கள்தான் எடுத்திருக்கிறீர்கள். இந்தத் தவளையை எங்கே பார்க்கலாம் என்பதில் எங்களுக்கு உதவிசெய்ய முடியுமா” என்று கேட்டார்கள். இப்படித்தான் பிபிசிக்காக வேலை செய்யும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. இணையத்தில் எனது ஒளிப்படங்களையெல்லாம் இலவசமாகப் பகிர்ந்துகொண்டதால்தான் எனக்கு இதுபோன்ற வாய்ப்புகள் கிடைத்தன. எனது துறையில் நான் வெற்றிகரமாக இயங்குவதற்கும் இதுதான் காரணம்.

எதற்காக இதையெல்லாம் சொல்கிறேன் என்றால் 
நமது  ஒளிப்படங்களை இலவசமாகக் கொடுத்தாலும் கொடுக்காவிட்டாலும் பலரும் தெரியாமல் அவற்றைப் பயன்படுத்ததான் செய்வார்கள். ஆனால், நம் உழைப்பின் அருமையை உணரக் கூடியவர்கள் நமக்குக் கண்டிப்பாக மதிப்பளிப்பார்கள்.    

இறுதியாக ஒரு கேள்வி. இயற்கையுடன் இருக்கும்போது கேமராவெல்லாம் ஒரு இடையூறுதானே?

உங்களுடன் 100 சதவீதம் உடன்படுகிறேன். பெரும்பாலான சமயங்களில் நான் கேமராவை மறந்து இயற்கையில் திளைத்துக்கொண்டுதான் இருப்பேன். தவற விடக் கூடாத தருணங்களில் மட்டும்தான் கேமராவைக் கையில் எடுப்பேன். மற்ற நேரங்களில் எனக்குப் பக்கத்திலேயே வைத்திருப்பேன். காட்டுயிர் ஒளிப்படக்காரராக இருப்பதற்கு,  ஒளிப்படம் எடுப்பதற்கும் இயற்கையை ரசிப்பதற்கும் இடையே ஒரு சமரசத்தை மேற்கொண்டாக வேண்டும்
 - நன்றி!; ‘தி இந்து’, ‘தி இந்து’ இணையதளத்தில் இந்தப் பேட்டியின் சுருக்கமான வடிவத்தைப் படிக்க: http://goo.gl/mLYey0

கல்யாண் வர்மாவின் புகழ்பெற்ற ஒளிப்படங்களில் சில இங்கே:







கல்யாண் வர்மாவின் இணையதளம்: http://kalyanvarma.net/

No comments:

Post a Comment