Tuesday, April 26, 2016

சாதியை ஒழிப்பது எப்படி?



சுஹாஸ் போர்க்கர்

(அம்பேத்கர் மாதத்தை முன்னிட்டு 'தி இந்து’ தமிழ் நாளிதழின் நடுப்பக்கத்தில் 25.04.2016 அன்று எனது மொழிபெயர்ப்பில் வெளியான கட்டுரையின் முழுவடிவம் இது.) 

பாபா சாஹேப் அம்பேத்கரின் பிறந்த நாளை ஐநா முதன்முறையாகக் கொண்டாடியிருக்கிறது. இதற்கு இந்திய அரசு துணைநின்றிருக்கிறது. அம்பேத்கரின் பிறந்த நாளுக்கு ஒரு நாள் முன்னதாக அவரது 125-வது பிறந்த நாளை . நாவின் தலைமையகத்தில்.நா.வுக்கான இந்திய நிரந்தரத் திட்டச்செயல்பாடுநிறுவனம் கொண்டாடியிருக்கிறது. இதன் ஒரு பகுதியாகநீடித்த வளர்ச்சி இலக்குகளை அடைவதற்காக சமத்துவமின்மையை எதிர்த்துப் போராடுதல்என்ற தலைப்பில் கருத்தரங்கும் நடைபெற்றிருக்கிறது. கோடிக்கணக்கான இந்தியர்களுக்கும், உலகெங்கும் சமத்துவத்துக்காகவும் சமூக நீதிக்காகவும் போராடுபவர்களுக்கும் உத்வேகமாகத் திகழ்பவர் இந்தியாவின் நாயகரான அம்பேத்கர் என்று அந்த அமைப்பின் குறிப்பு தெரிவிக்கிறது. “2030-க்குள் வறுமை, பட்டினி, சமூக-பொருளாதார சமத்துவமின்மை போன்றவற்றை ஒழிப்பது குறித்து .நா. உறுதி பூண்டிருக்கும்நீடித்த வளர்ச்சிக்கான இலக்குகளில் பாபாசாஹேபின்ஆழமான பார்வையின் சுவடுகளைக் காண முடியும்; இந்த நேரத்தில் எவ்வளவு பொருத்தமான விஷயம் இது!” என்கிறது அந்த அமைப்பு.
   

இதையும், சமீபத்தில் சிறுபான்மையினர் பிரச்சினைகள் குறித்து ஐநாவின் மனித உரிமைகள் ஆணையம் சார்பாக வெளியிடப்பட்ட  அறிக்கையையும், அந்த அறிக்கையைக் குறித்து இந்திய அரசு எழுப்பியிருக்கும் ஆட்சேபத்தையும் ஒப்பிட்டுப் பார்த்துக்கொள்ளுங்கள். இந்திய அரசியலமைப்பின் சிற்பியான அம்பேத்கர் நிச்சயம் இந்திய அரசின் ஆட்சேபம் குறித்து திருப்தி கொண்டிருக்க மாட்டார். இந்தியாவிலும் உலகெங்கிலும் உள்ள தலித் உரிமைச் செயல்பாட்டாளர்களும் அப்படித்தான் உணர்வார்கள்.

ஏட்டளவிலும் நடைமுறையும்

.நா. அரங்கில் சாதிப் பிரச்சினை குறித்துப் பேசுவதில் இந்தியாவுக்குள்ள எரிச்சலுக்கு சமீபத்திய உதாரணம் இது. .நா.வின் சிறப்புப் பிரதிநிதியான ரீட்டா ஈஸாக்-அந்தியாயெ வெளியிட்ட இந்த அறிக்கைபிறப்புஅடிப்படையிலான சாதிப் பாகுபாடுகள், தொழில்ரீதியிலான பாகுபாடுகள், தீண்டாமை நடைமுறைகள், வலுக்கட்டாயமான அகமண முறை போன்றவற்றைஉலகளாவிய நிகழ்வுஎன்றும், உலக அளவில் 25 கோடிக்கும் மேற்பட்டோரை இவை பாதித்திருக்கின்றன என்றும் குறிப்பிட்டிருக்கிறது. இதில் பெரும்பாலான எண்ணிக்கையிலானோர் இந்தியர்கள் என்றும், யேமன், ஜப்பான், மொரிஷியானா போன்ற நாட்டு மக்களும் பாதிப்படைந்திருக்கிறார்கள் என்றும் குறிப்பிட்டிருக்கிறது.  

பட்டியல் இனத்தவருக்கு எதிரான குற்றங்கள் பெருகிக்கொண்டே வருவதைத் தெரிவித்துகுற்றப்பதிவுகளுக்கான இந்தியாவின் தேசிய ஆணையம்’ (என்.சி.ஆர்.பி) வெளியிட்ட தரவுகளை அவர் தனது அறிக்கையில் சுட்டிக்காட்டுகிறார். தலித்களுக்கு எதிரான வன்கொடுமை 2013- விட 2014-ல் 19% அதிகரித்திருப்பதாக அந்தத் தரவுகள் சொல்கின்றன. கையால் மலம் அள்ளுவதைச் சட்டம் தடுத்திருந்தாலும்உள்ளாட்சி அமைப்புகளும்   நகராட்சிகளும் கையால் மலமள்ளுவோரை நியமிப்பதன்மூலம் அரசே அந்தச் செயல்பாட்டுக்கு அங்கீகாரம் கொடுத்திருக்கிறது என்று அறிக்கை சுட்டிக்காட்டுகிறது.                

முன்னதாக, ‘இனவெறிக்கு எதிரான சர்வதேச மாநாடு’ 2001-ல் டர்பனில் நடைபெற்றபோது, இனவெறிப் பட்டியலில் சாதியையும் சேர்க்க வேண்டும் என்று இந்திய தன்னார்வ அமைப்புகள் முயற்சி செய்தன. இந்திய அரசோ அதைக் கடுமையாக எதிர்த்தது. தலித் மற்றும் ஆதிவாசி அமைப்புகளுக்கான தேசிய கூட்டமைப்பின் தலைவர் அஷோக் பாரதி சமீபத்தில் ஒரு இணைய இதழில் இப்படிக் குறிப்பிட்டிருந்தார்: “ஒட்டுமொத்த அரசும் ஒருவித உயர்சாதி மனப்பான்மையால் பீடிக்கப்பட்டிருக்கிறது, தங்களின் குற்றவுணர்ச்சியின் பலிகடாக்களாக அவர்களே ஆகியிருக்கிறார்கள். ஆகவே, அவர்களின் தவறுகளை மறைக்கவே முயல்வார்கள்.” இந்திய அரசு தலித் மக்களுக்கு ஆதரவாக இருக்கிறது என்றால், “கடந்த 25 ஆண்டுகளில் ஏன் ஆயிரக் கணக்கான வன்கொடுமைகள் நிகழ்ந்திருக்கின்றன?” என்றும் அவர் கேட்கிறார்.

இனவெறி, இனப் பாகுபாடு, பிற நாட்டார் மீதான வெறுப்பு மற்றும் இது தொடர்பான சகிப்பின்மை போன்றவற்றின் சமகால வடிவங்கள் குறித்துதி ஹக்நகரத்தில் .நா. சார்பாக ஒரு மாநாடு 2006-ல் நடந்தது. இந்த விவகாரங்கள் தொடர்பான .நா.வின் சிறப்புப் பிரதிநிதி துது தியனாமனித உரிமைகளும் தலித் பெண்களின் கண்ணியமும்என்ற கருத்தரங்கில் பேசியதிலிருந்து இந்தியா பாடம் கற்றுக்கொள்ள வேண்டும். “சட்டத்தைக் கடந்தும் நீங்கள் பார்த்தாக வேண்டும். அடையாளங்கள் குறித்த கருத்தாக்கம் நோக்கிச் செல்ல வேண்டும். இந்திய அடையாளம் என்பது பல நூற்றாண்டு காலமாக எப்படிக் கட்டமைக்கப்பட்டிருக்கிறது என்பதைப் பார்க்க வேண்டும். பாகுபாட்டின் எல்லா வடிவங்களின் வேர்களையும் வரலாற்றிலும் சித்தாந்தங்களிலும் காண முடியும். பாகுபாடு என்பது இயற்கையானது, அதாவது இயற்கையின் ஒரு பகுதி, ஆகவே அதை நாம் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று நம்மை நம்ப வைப்பதுதான் இனவெறியாளர்களும், பாகுபடுத்தும் சமூகத்தினரும் கைக்கொண்டுள்ள உத்தி. அவர்களின் சித்தாந்த ஆயுதம் அதுதான்; அதில் எந்த வித உண்மையும் இல்லை. பாகுபாடு என்பது அண்டவெளியிலிருந்து வரவில்லை. ஆகவே, சாதிரீதியிலான பாகுபாட்டை வீழ்த்துவதற்காக அதன் வேர்களைக் கண்டறிந்து, வேரோடு பிடுங்கி எறிய வேண்டும். பாகுபாட்டின் கலாச்சாரத்தையும் மனப்போக்கையும் கட்டமைத்துக்கொண்டிருக்கும் இந்த விஷயத்தை அழித்தொழிப்பதற்கான அறம்சார்ந்த, அறிவுபூர்வமான இந்த வழிமுறையைக் கைக்கொள்ளுங்கள்என்று துது பேசியிருந்தார்.   

இந்தியா சுதந்திரமடைந்து 68 ஆண்டுகள் ஆனாலும் நம்பவே முடியாத அளவுக்குச் சமூகப் பாகுபாடுகளையும், ரத்தத்தை உறையவைக்கும் வன்கொடுமைகளையும் நாடெங்கும் தலித் மக்களும் ஆதிவாசிகளும் எதிர்கொள்வது இன்னமும் தொடர்கிறது. ‘பயன்பாடுசார் பொருளாதார ஆய்வுக்கான தேசிய ஆணையமும் அமெரிக்காவின் மேரிலாண்ட் பல்கலைக்கழகமும் ஒரு ஆய்வை நடத்தியது. அதில் நான்கில் ஒரு இந்தியர் தனது வீட்டில் ஏதாவது ஒரு வடிவத்தில் தீண்டாமையைக் கடைப்பிடிப்பதாக ஒப்புக்கொண்டிருக்கிறார். இந்தியாவின் அனைத்து மதங்களையும் சாதிகளையும் சேர்ந்தவர்களும் - முஸ்லிம்கள், கிறித்தவர்கள், பட்டியல் இனத்தவர், சீர்மரபினர் போன்றோர் உட்பட - தாங்கள் தீண்டாமையை ஏதொவொரு வடிவத்தில் கடைப்பிடிப்பதாக ஒப்புக்கொண்டிருக்கிறார்கள் என்றுஇந்திய மனித மேம்பாட்டு ஆய்வு’ (2011-2012) தெரிவிக்கிறது. ஆகவே, வெறும் அடையாளபூர்வமான செயல்பாடு மட்டுமே போதாது. சாதியப் பாகுபாடு என்ற நூற்றாண்டுகள் பழமையான, மனிதத்தன்மையற்ற சுமையை இந்தியா ஒட்டுமொத்தமாக உதறித்தள்ள வேண்டிய தருணம் இது. இந்தியா மறைப்பதற்கென்று ஏதும் அதனிடம் இருக்கக் கூடாது, யதார்த்தத்தை, அது எப்படி இருக்கிறதோ அப்படியே பார்த்து, அதில் உள்ள பிரச்சினைகளை நேருக்கு நேர் எதிர்கொள்ள வேண்டும்.

மாற்றத்தை நோக்கி
சாதியற்ற தேசம் என்ற இலக்கை நோக்கி இந்தியா செல்ல வேண்டுமென்றால் சமூக, கலாச்சார மாற்றம் ஒன்று ஏற்பட வேண்டும். அது இந்தியா முழுவதையும், அனைவரையும் உள்ளடக்கியதாக இருக்க வேண்டும். இதற்கான பாதையை அம்பேத்கர் நமக்கு இப்படிக் காட்டியிருக்கிறார்: “எந்தத் திசையில் வேண்டுமானாலும் பாருங்கள்! சாதி என்ற அரக்கன் உங்களுக்குக் குறுக்கே பாதையை மறைத்துக்கொண்டு இருப்பான். அந்த அரக்கனைக் கொன்றழிக்காமல் உங்களால் அரசியல் சீர்திருத்தத்தையோ பொருளாதாரச் சீர்திருத்தத்தையோ அடைய முடியாது.”

உண்மையில் இன்றைய தலித் அரசியல் பார்வை என்பது சமூகத்தில் மிகவும் ஒடுக்கப்பட்டவர்கள், சுரண்டப்பட்டவர்கள், சாதி அமைப்பின் விளிம்புநிலையில் உள்ளவர்கள் போன்றோரை மட்டும் உள்ளடக்கியது அல்ல; பிராமண மேலாதிக்கத்தை எதிர்த்து 1970-களிலும் 1980-களிலும் போராடிய பிற்படுத்தப்பட்ட சாதிகள், ஆதிவாசிகள் போன்றோரையும் உள்ளடக்கியதுதான். இன்றைய தலித் அரசியல் சித்தாந்தம் என்பது பகுஜன் சமாஜ் கட்சியின் உரைவீச்சுகளையும், குடியரசுக் கட்சியின் பிரிவுகளையும், காங்கிரஸ், பாஜக, சமாஜ்வாதி கட்சி, ஐக்கிய ஜனதா தளம் போன்றவற்றின் அடையாள தலித் ஆதரவையும், ஏன் தாழ்த்தப்பட்ட சாதியினர் சார்ந்த மாவோயிஸ்டு இயக்கங்களையும் தாண்டிச் சென்றுவிட்டது. குஜராத்தின்மகளிர் சுயவேலைவாய்ப்பு சங்கம் (எஸ்..டபிள்யூ.),  மத்திய பிரதேசத்தின்நர்மதாவைக் காப்பாற்றுவதற்கான இயக்கம்’ (என்.பி.), ராஜஸ்தானின்மஸ்தூர் கிஸான் சக்தி சங்கதன்அமைப்பு போன்றவையெல்லாம் சேர்ந்து இன்று தலித் அரசியல் பார்வையை மிகவும் விரிபடுத்தியிருக்கின்றன.         

அம்பேத்கரைஇந்து சீர்திருத்தவாதிஎன்று தழுவிக்கொள்ளும் முயற்சிகள் அவற்றின் உள்முரண்பாடுகள் காரணமாக வெற்றிபெறாது என்பதை ரோஹித் வெமுலாவின் தற்கொலை அம்பலப்படுத்திவிட்டது. இந்துத்துவத்தின் பிராமணிய மேலாதிக்கத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் .பி.வி.பி அமைப்புக்கு எதிராக ஹைதராபாத் மத்திய பல்கலைக்கழகத்தின் அம்பேத்கர் மாணவர் அமைப்பு எழுப்பிய சவால் தலித் அரசியல் பார்வையை அடிப்படையாகக் கொண்டதே.

சமூக, கலாச்சார மாற்றத்துடன் பொருளாதார மாற்றுவழியையும் ஒருங்கிணைப்பதென்பது இப்போது மிகவும் முக்கியமான ஒன்று. விதியோடு நாம் செய்துகொண்ட ஒப்பந்தம் இன்னும் நீண்டுகொண்டே போகட்டும். ஆனால், சத்தியத்தின் இந்தத் தருணத்தை நாம் கைக்கொள்வோம். கடந்த 68 ஆண்டுகளாகக் காப்பாற்றப்படாமல் இருந்த நமது உறுதிமொழி ஒன்றுக்கு நாம் இப்போது உயிர்கொடுப்போம்; இந்தியாவின் ஆதிவாசிகள், தலித் மக்கள், விளிம்பு நிலையினர், ஏழை மக்கள் ஆகிய சமூகத்தின் கடைக்கோடி ஆண்களுக்கும் பெண்களுக்கும் வாழ்வதற்கான வழியை ஏற்படுத்திக்கொடுத்து, உண்மையிலேயே அவர்களுக்கு உரியவற்றை அவர்களுக்கு அளிப்போம். இந்திய மக்களுக்கு முன்னால் உள்ள சவால் இதுதான்.     

- சுஹாஸ் போர்க்கர், சிட்டிஸன்ஸ் ஃபர்ஸ்ட் டிவியின் எடிட்டர், மாற்று வழிமுறைகளுக்கான அமைப்பொன்றின் ஒருங்கிணைப்பாளர். C ‘தி இந்து’ (ஆங்கிலம்), சுருக்கமாகத் தமிழில்: ஆசை
 -'தி இந்து’ இணையதளத்தில் இந்தக் கட்டுரையின் சுருக்கமான வடிவத்தைப் படிக்க: http://goo.gl/rFxaVb

No comments:

Post a Comment