Friday, January 8, 2016

ஃபாரெவர்: தனிமையின் மீது படரும் தனிமை - சென்னை சர்வதேசத் திரைப்பட விழாவில் ஒரு உலா!


ஆசை

(ஜனவரி 6-ம் தேதி முதல் ஜனவரி 13 வரை சென்னையில் நடைபெறும் ‘சென்னை சர்வதேசத் திரைப்பட விழா’வில் நான் பார்த்த முதல் திரைப்படம் ‘ஃபாரெவர்’ பற்றி நான் எழுதிய கட்டுரை இது. ‘தி இந்து’ இணையதளத்தில் வெளியானது.)  

பேருந்து ஓட்டுநர்கள், ரயில் ஓட்டுநர்கள், திரையரங்கம் போன்ற இடங்களில்  டிக்கெட் கொடுப்பவர்கள் இவர்களெல்லாம் ஒரு நாளைக்கு எத்தனை பேரைப் பார்ப்பார்கள்? ஆயிரக் கணக்கான லட்சக் கணக்கான பேரை தினசரி பார்த்தாலும் உலகத்திலேயே தனிமையானவர்கள் அவர்கள். அவர்களை தினமும் கடந்துசெல்லும் மனிதர்களும் தனிமையானவர்கள்தான். இரண்டு தனிமைகளுக்கும் நடுவே ஒரு கண்ணாடித் திரை இருக்கும். இரண்டு தனிமைகளும் ஒன்றையொன்று குறுக்கிடாது. அவர் உலகத்தைப் பற்றி இவருக்குக் கவலை கிடையாது. இவர் உலகத்தைப் பற்றி அவருக்குக் கவலை கிடையாது. அந்தக் கண்ணாடித் திரையை சற்று விலக்கிப் பார்த்தால் எப்படியிருக்கும்! சென்னை சர்வதேசத் திரைப்பட விழாவில் இன்று திரையிடப்பட்ட ‘ஃபாரெவர்’ என்ற கிரேக்க மொழித் திரைப்படத்தின் மையமே இந்தத் தனிமைதான்.
நீண்ட பாதை போல் செல்லும் நதியில் தொடங்குகிறது படம். அதன் மேல் உள்ள ரயில் பாலத்தில் வரும் போகும் ரயில்கள். அப்புறம், மெட்ரோ ரயிலின் ஓட்டுநர் இடத்தின் கோணத்திலிருந்து அந்த ரயில் செல்லும் பாதை காட்சிப்படுத்தப்படுகிறது. அதற்குப் பிறகு ஓட்டுநர் முகம் தெரிகிறது. நடுவயதைக் கடந்த ஓட்டுநர். அவரது பெயர் கோஸ்தாஸ் என்று படத்தின் பிற்பகுதியில்தான் நமக்குத் தெரியவருகிறது. ஓட்டுநர் கேபினிலிருந்து கோஸ்தாஸின் பார்வை குறிப்பிட்ட ஒரு பெண் மேல் எப்போதும் படர்கிறது. நடுவயதுப் பெண். அவள் பெயர் அன்னா என்பதும் படத்தின் இறுதிப் பகுதியில்தான் தெரியவருகிறது. ரயில் நடைமேடை முடியும் இடத்தில், அதாவது ரயிலின் முன்பகுதிக்கு அருகில், அன்னா ஏறிக்கொள்கிறாள். ரயில் கடைசி நிறுத்தத்தில் நின்றதும் அன்னா இறங்கிச் செல்கிறாள். இறங்கிச் செல்லும் அன்னாவை கோஸ்தாஸ் பார்த்துக்கொண்டே இருக்கிறார். தனக்குக் கிடைத்த இடைவேளை நேரத்தில் காப்பி குடித்தவாறே துறைமுகப் பகுதியில் வேடிக்கை பார்க்கிறார் கோஸ்தாஸ். அப்போது துறைமுகத்தில் உள்ள ஒரு கேபினில் அன்னா டிக்கெட் கொடுத்துக்கொண்டிருப்பதைப் பார்க்கிறார் கோஸ்தாஸ். அப்புறம் அடிக்கடி அன்னாவைப் பின்தொடர்கிறார். வீடு வரையும் கூட இரண்டு முறை பின்தொடர்கிறார். அன்னாவிடம் தன்னை அறிமுகப்படுத்திக்கொண்டு, பேச முயலும்போது எரிச்சலுற்று, ‘போலீசைக் கூப்பிடுவேன்’ என்று சொல்லிவிட்டு அன்னா போய்விடுவாள். விடாமல் அன்னா பணிபுரியும் இடத்துக்கு எதிரே போய் நிற்கிறார் கோஸ்தாஸ். ஆரம்பத்தில் எரிச்சல் அடைந்தாலும் போகப் போக அவளுக்கும் ஒருவிதமான பற்றுதல் வந்துவிடுகிறது.  ‘என் பெயர் அன்னா’ என்று பேச ஆரம்பிக்கிறாள். அப்புறம் ரயிலில் இருவரும் எதிரெதிரே அமர்ந்து பேசிக்கொண்டே போகிறார்கள். தன்னை ஏன் பின்தொடர்கிறாய் என்று கேட்ட கேள்விக்கு கோஸ்தாஸ் பதில் சொல்ல ஆரம்பிக்கிறார். ‘ஒரு ஓட்டுநராக தினமும் எண்ணற்ற நபர்களைப் பார்க்கிறேன். அவர்கள் எங்கிருந்து வருகிறார்கள், எங்கே செல்கிறார்கள், என்ன செய்கிறார்கள் என்றெல்லாம் யோசித்துப் பார்ப்பேன். அப்படித்தான் உங்களையும் பார்க்க ஆரம்பித்தேன். நடைமேடையின் முனையில் ரயில் வந்து நிற்கும் இடத்தில்தான் நீங்கள் ஏறுவீர்கள். ஓட்டுநரின் அறைக்குப் பின்னால் அமர்ந்துகொள்வீர்காள் எப்போதும்’ என்று சொல்லிக்கொண்டிருக்கும்போது தன்னைப் பின்தொடர்வதற்கான காரணம் என்ன என்று அன்னா கேட்கிறார். ‘நான் உங்களைக் காதலிக்கிறேன்’ என்று ஓட்டுநர் சொல்கிறார். அப்போது ஒரு நிலையத்தில் ரயில் நிற்கிறது. ‘நான் எப்போதும் இறங்கும் இடம் வந்துவிட்டது’ என்று சொல்லிவிட்டு நிதானமாக எழுந்து கதவருகே அன்னா செல்கிறார். ‘‘ ‘எப்போதும்’ என்ற ஒன்று ஒருபோதும் இல்லை’ என்று சொல்லிவிட்டு இறங்கிச் சென்றுவிடுகிறாள். அன்னா போவதையே ஓட்டுநர் பார்த்துக்கொண்டிருக்கிறாள்.
இந்த சம்பவத்துக்குப் பிறகு அன்னாவால் ஓட்டுநரைப் பார்க்க முடியவில்லை. தான் டிக்கெட் கொடுக்கும் இடத்திலிருந்து தூரத்தில் அவளது கண்கள் ஓட்டுநரைத் தேடும்.  அன்னாவின் வீட்டு வாசலில் அன்னாவின் முகவரி எழுதப்பட்டு ஒரு பார்சல் கிடக்கிறது. எடுத்துப் பார்த்தால், அது ஒரு டேப் ரிக்கார்டர். அழுத்திக் கேட்கிறாள் அன்னா. கோஸ்தாஸின் குரல் கேட்கிறது. ‘முன்னொரு காலத்தில் இந்த ஊரில் நதிகள் இருந்தன. அந்த நதிகளெல்லாம் கடலில் ஓடிக் கலந்தன. நதிகளைப் பற்றி நிறைய கதைகளைச் சொன்னார்கள். அந்தக் கதைகளைச் சுமந்துகொண்டு நதிகள் ஓடின. இப்போது அவற்றைக் கேட்க யாருமில்லை. நதிகளுக்கு மேலே பாலங்கள் போடப்பட்டு அதில் எல்லோரும் நதிகளை விட வேகமாக ஓடிக்கொண்டிருக்கிறார்கள். யார் பேசுவதையும் கேட்க யாருக்கும் நேரமில்லை’ என்று சொல்லிக்கொண்டே வருகிறது அந்தக் குரல்.
கோஸ்தாஸை ரயில் நிலையத்தில் தேடுகிறாள் அன்னா. ரயில்கள் வருகின்றன, போகின்றன. கோஸ்தாஸைக் காணோம். ஒரு பெஞ்சில் உட்கார்கிறாள். எதிர்ப் பக்கத்தில் ஒரு மூலையிலிருந்து வருகிறார் கோஸ்தாஸ், மெல்லிய புன்னகையுடன். அன்னாவுக்கு எதிரில் வந்து நிற்கிறார் கோஸ்தாஸ். அன்னாவும் எழுந்து கோஸ்தாஸைப் பார்க்கிறாள். இடையில் இருக்கும் தண்டவாளம் காட்சியின் குவிமையமாகிறது. தண்டவாளம் மங்கலாக ஆகி ஆகி நடுவில் உள்ள தண்டவாளம் மட்டும் நீளமாகத் தெரிகிறது. அதுவும் மங்கிப்போக படம் முடிகிறது. நீண்டு ஓடிய கால்வாய் ஒன்றைத் தொடக்கக் காட்சியாகக் கொண்ட இந்தப் படம் நீண்டு ஓடும் தண்டவாளத்தில் முடிகிறது. நதிகளைப் பாதைகள் மாற்றீடு செய்துவிட்டன என்று சொல்வதைப் போல் இறுதிக் காட்சி அமைகிறது. அதை உறுதிப்படுத்துவதைப் போல கோஸ்தாஸ் டேப் ரிக்கார்டரில் பேசியதும் இருக்கிறது.
ஒட்டுமொத்தமாக, தனிமையைப் பற்றிய படம்தான் ‘ஃபாரவர்’. கோஸ்தாஸின் தனிமை, அன்னாவின் தனிமை, நகரின் தனிமை. ஒரு தனிமையில் இன்னொரு தனிமை குறுக்கிடும்போது என்ன நிகழ்கிறது என்பதுதான் படம்.   இரண்டு பேருமே தனிமையில் வாழ்பவர்கள். ஆனால், அவர்களின் கடந்த கால வாழ்க்கை பற்றி எந்தத் தகவலும் படத்தில் கிடையாது. வெகுநேரம் வரை மவுனப் படமோ என்று நினைக்கும் வகையில் வசனங்களற்று நிதானமாகப் போய்க்கொண்டிருக்கிறது படம். ரயில், துறைமுகம், ஓட்டுநர் வீடு, சாலையிலிருந்து தெரியும் கதாநாயகியின் பால்கனி, ரயில் நிலையத்திலிருந்து இறங்கிக் கதாநாயகி தன் வீட்டுக்குச் செல்லும் வழி. இவ்வளவுதான் படத்தில் இடம்பெறும் இடங்கள். இரண்டே பாத்திரங்கள்தான். இவர்களைத் தவிர, ஒரு நிமிடத்துக்கும் குறைவாக இடம்பெறும் டாக்டர் பாத்திரம், தூரத்தில் தெரியும் ஒன்றிரண்டு மனிதர்கள் அவ்வளவுதான். ஆக, பயமுறுத்தும் தனிமை! அழகான, பழமையான நகரமாக இருந்தாலும் அதுவும் தனிமையில் இருக்கிறது. அதன் கதையைக் கேட்கவும் யாருமில்லை.
பிரமாதமான படம் என்று பாராட்டுமளவுக்கு இல்லையென்றாலும் அழகான படம். நிதானமான படம். முழுக்க காட்சிகளால் நகரும் படம். பாத்திரங்கள் உணரும் தனிமை நிதானமான காட்சிகள் மூலம் நமக்கும் தொற்றிக்கொண்டுவிடுகிறது. அப்படி இல்லாமல் போயிருந்தால் அலுப்பூட்டும் படமாக ஆகியிருக்கும். படத்தின் இன்னொரு முக்கியமான விஷயம் மிகக் குறைவான இதன் வசனங்கள்தான். படம் ஆரம்பித்து 20 நிமிடங்களுக்கு ஒரு டாக்டர் பேசுவதுதான் படத்தின் முதல் வசனம். ஒட்டுமொத்த படத்தின் வசனத்தையும் அநேகமாக இரண்டு பக்கங்களுக்குள் அடக்கிவிடலாம்.
படத்தில் அடிக்கடி ஒரு காட்சி இடம்பெறும். அதிகாலையிலோ, அந்தியிலோ தனது பால்கனியில் வந்து நின்று அன்னா டீ குடித்தபடி, புகைப்பிடிக்கும் காட்சி. தூரத்தில் இருந்து பார்ப்பவர்களுக்கு அது ரம்யமான சூழல் போன்று தெரிந்தாலும் அன்னாவின் தனிமையைச் சித்தரிக்கும் காட்சி அது. இந்தப் படமும் அதுபோன்ற ரம்யமான உணர்வைத் தரும்போது தனிமை குறித்த அச்சத்தையும் நமக்குள் ஏற்படுத்திவிடுகிறது. தனிமையின் மீது படரும் தனிமையைப் பற்றி சொன்ன அழகான படம் ‘ஃபாரெவர்’.
- நன்றி: ‘தி இந்து’ இணையதளம்
 ‘தி இந்து’ இணையதளத்தில் இந்தக் கட்டுரையைப் படிக்க: http://goo.gl/rD7Cn3

No comments:

Post a Comment