தம்பி
(புத்தாண்டு தினத்தன்று ‘தி இந்து’ நாளிதழின் ‘இந்து டாக்கீஸ்’ இணைப்பிதழில் வெளியான கட்டுரையின் முழு வடிவம் இது)
தமிழ்த் திரையுலகைப் பொறுத்தவரை இந்த ஆண்டின் வெற்றியாளர்களில்
முதல் இடம் சந்தேகமில்லாமல் நயன்தாராவுக்குத்தான்.
‘தனி ஒருவன், ‘மாயா’, ‘நானும் ரவுடி தான்’ என்று மூன்று வெற்றிப் படங்கள்! முதல் வரிசை கதாநாயகர்களோ இயக்குநர்களோ தயாரிப்பாளர்களோ அடைந்திராத வெற்றி இது.
நயன்தாராவின் வெற்றி இந்தத் திரைப்படங்களின் வெற்றிக்கு வெளியிலும் இருக்கிறது என்பதுதான் உண்மை. சமீபத்தில் சேலத்தில் ஒரு கடைத்திறப்புக்கு
நயன்தாரா சென்றபோது அவரைக் காண்பதற்குத் திரண்ட கூட்டத்தின் அளவுக்கு வேறு எந்தக் கதாநாயகிக்கும் திரண்டிருக்குமா என்பது சந்தேகமே. இவ்வளவு ஏன், முன்னணிக் கதாநாயகர்கள்கூட நயன்தாராவின் கால்ஷீட்டுக்காகத் தவம் கிடக்கிறார்கள். ஆண்களை மையமாகக் கொண்டு இயங்கிவரும் திரைப்பட உலகுக்கு இது கொஞ்சம் புதிதே.
தமிழில் ‘ஐயா’ திரைப்படத்தில் அறிமுகமாகி 11 ஆண்டுகளுக்குப் பிறகு வேறு எந்த கதாநாயகிக்கும் கிடைக்காத இடம் நயன்தாராவுக்குக் கிடைத்திருக்கிறது. இந்த 11 ஆண்டு காலகட்டத்தில் எத்தனையோ கதாநாயகர்கள் ஒன்றிரண்டு வெற்றிப் படங்களைக் கொடுத்துவிட்டு முன்னணிக் கதாநாயகர்கள் வரிசையில் இரண்டு மூன்று ஆண்டுகள் இருந்துவிட்டுக் காணாமல் போய்விட்டனர். ஆண் நடிகர்களின் கதையே இப்படியென்றால் நடிகைகளைப் பற்றிச் சொல்ல வேண்டாம். பெரும்பாலான நடிகைகள் இரண்டு மூன்று படங்கள் தாங்கினால் அதிகம். இத்தனைக்கும் மத்தியில் நயன்தாரா இன்று முதல் இடத்தில் இருக்கிறார்.
இதற்கு இதுதான் காரணம் என்று ஒரே ஒரு விஷயத்தை மட்டுமே சுட்டிக்காட்டிவிட முடியாது. நயன்தாராவின் வெற்றிக்குப் பல காரணங்கள் இருக்கின்றன. ஆனால், தமிழ் சினிமாவில் ஒரு நடிகை எந்தக் காரணங்களாலெல்லாம் பிரபலமாவாரோ அதில் பெரும்பாலான விஷயங்கள் நயன்தாராவிடம் இல்லை. ஹன்சிகா அளவுக்கு வெளிர் நிறம் கிடையாது; சிம்ரனைப் போல அசாதாரணமாக ஆடத் தெரியாது; சிம்ரன், குஷ்பு போன்ற நயன்தாராவுக்கு முந்தைய காலத்தின் நடிகைகளைப் போல நயன்தாரா கவர்ச்சி காட்டி நடித்ததும் எடுபடவில்லை (‘வில்லு’, ‘சத்யம்’ ஆகிய
படங்கள் உதாரணம்).
வழக்கமாக இந்த மூன்று விஷயங்களையும் ஒரு ‘முதன்மை’ நாயகியிடம் ஸ்ரீதேவியின் காலத்திலிருந்தே நம் தமிழ் சமூகம் எதிர்பார்த்து, அதைப் பூர்த்திசெய்பவர்களை அந்த ‘முதல்’ இடத்தில் வைத்திருக்கிறது. இதற்கு முற்றிலும் மாறான ஒருவர் நயன்தாரா என்பது தமிழ் சினிமாவில் ஒரு அதிசயமே.
ஒரு நடிகை சமூகத்தின் மனதில் ஆட்சி செய்ய வேண்டுமென்றால் முதலில் திரையுலகத்தினரின் மனதில் இடம்பிடிக்க வேண்டும். திரையுலகினர் திரும்பத் திரும்பச் சொல்லிக்கொண்டிருப்பது நயன்தாராவின் நல்ல மனதைப் பற்றித்தான்.
முன்னணி ஹீரோ ஒருவரின் படத்தில் நடிப்பதற்காக நயன்தாராவிடம் போய் கால்ஷீட் கேட்டிருக்கிறார்கள். அவர் அப்போது வேறு ஒரு படத்துக்கு ஒப்புக்கொண்டுவிட்டதால், அவரிடம் தேதிகள் இல்லாததால் மறுத்திருக்கிறார். நயன்தாரா ஒப்புக்கொண்டிருப்பது ஒரு சாதாரண ஹீரோவிடம்தானே, அவரைக் கழற்றிவிட்டு முன்னணி ஹீரோவின் படத்தில் நடிக்க ஒப்புக்கொள்ளும்படி வற்புறுத்தியிருக்கிறார்கள் அவரிடம். பிழைக்கத் தெரிந்த எந்த நடிகையும் முன்னணி நடிகரோடு நடிப்பதையே விரும்பியிருப்பார்கள். ஆனால், நயன்தாரா, தனக்கு வாக்குதான் முக்கியம், ஹீரோக்கள் அல்ல. ஆகவே, இவ்வளவு ஈகோ கொண்ட அந்த முன்னணி ஹீரோவுடன் நடிக்கவே மாட்டேன் என்று சொல்லிவிட்டு இன்றுவரை அதைக் கடைப்பிடிக்கிறார்.
‘நண்பேன்டா’ படப்பிடிப்பின்போது லைட்மேனின் உதவியாளர் மயங்கி விழுந்தபோது மேக்கப் போட்டுக்கொண்டிருந்த நயன்தாரா விழுந்தடித்து ஓடிப்போய் முதல் ஆளாக அந்த உதவியாளருக்கு முதலுதவி செய்திருக்கிறார். அந்த உதவியாளரின் கால்களைத் தேய்த்துவிட்டு சுயநினைவுக்கு வரச்செய்து அவரை மருத்துவமனைக்கு நயன்தாரா அனுப்பிவைத்தார். மற்ற எல்லோரும் வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தார்கள்.
சக இதழாளர் இசக்கிமுத்து சொன்ன தகவல் இது. ஒரு பேட்டிக்காக நயன்தாராவைத் தொடர்புகொள்ள திரைத்துறை நண்பர் ஒருவர் மூலம் இசக்கிமுத்து முயன்றிருக்கிறார். ‘தனிப்பட்ட விஷயங்களைக் கேட்கக் கூடாது’ என்று சொல்லிவிட்டு அந்த நண்பர் நயன்தாராவிடமும் தொலைபேசி பேட்டிக்கு அனுமதி வாங்கிவிட்டார். பிறகு பேட்டிக்காக இசக்கிமுத்து தொலைபேசியில் அழைத்தபோது நயன்தாரா எடுத்துப் பேசியிருக்கிறார். ‘வணக்கம் இசக்கிமுத்து எப்படி இருக்கீங்க?, வீட்ல அம்மா அப்பால்லாம் நல்லா இருக்காங்களா? கல்யாணம் ஆயிட்டுதா? திருமண வாழ்க்கை எப்படி இருக்கு?’ இப்படியெல்லாம் குசலம் விசாரித்துவிட்டுதான் பேட்டிக்கே சென்றிருக்கிறார். நண்பர் இசக்கிமுத்துவின் பல வருட இதழாளர் அனுபவத்தில் எத்தனையோ நடிகர், நடிகையரைப் பேட்டி எடுத்திருக்கிறார். யாரும் அவரை மதித்து இப்படியெல்லாம் பரிவுடன் பேசியதில்லை. நெகிழ்ந்துபோய்விட்டார் அவர். பேட்டி நல்ல முறையில் அமைந்தது நயன்தாராவுக்குப் பிடித்துப்போய்விட்டது. நண்பர் ஊருக்குச் சென்றிருக்கும்போது நயன்தாராவிடமிருந்து தொலைபேசியில் அழைப்பு வந்திருக்கிறது, ‘ நான் நயன்தாரா பேசுறேன்’ என்று குரல் கேட்டிருக்கிறது. நண்பர் நம்பவில்லை. ‘நீங்க என்னைப் பேட்டி எடுத்தீங்கள்ல’ என்றெல்லாம் எடுத்துச் சொல்லி நம்பிக்கை ஏற்படுத்திவிட்டு அப்புறம் சொல்லியிருக்கிறார், ‘பேட்டி நல்லா இருந்தது. உங்களை மாதிரி நண்பர்களையெல்லாம் சந்தித்துப் பேசலாம்’ என்றுதான் அழைத்தேன் என்றிருக்கிறார்.
இதெல்லாம் ஒரு சில துளிகள் அவ்வளவே! இன்னும் எவ்வளவோ இருக்கின்றன. இதுபோன்ற விஷயங்களால்தான் திரைத்துறையில் உள்ள பலருக்கும் ‘நம்ம படத்துல நயன்தாரா’ இருக்கணும்’ என்ற எண்ணம் ஏற்படுகிறது. திரைத் தொழிலாளர்களும் இதுபோன்ற கலைஞர்களுடன் பணிபுரிவதை விரும்புகிறார்கள். நயன்தாரா போன்ற கலைஞர்களை ஒரு தொன்மமாக ஆக்குவது அவருடன் பணிபுரியும் கலைஞர்கள், தொழிலாளர்கள் எல்லோரும்தான். இதுபோன்ற கதைகள் சமகாலத்தில் திரையுலகத்தில் அஜித் குமாரைப் பற்றி மட்டுமே சொல்லப்படுவதுண்டு. திரையுலகில் முதலிடம் பிடிக்காமல் ஒருவர் மக்கள் மனதில் முதலிடம் பிடிக்க முடியாது என்பதற்கு நயன்தாரா ஒரு எடுத்துக்காட்டு.
அடுத்தது, தொடர்ந்து ஏதோ ஒரு விதத்தில் மக்கள் மத்தியில் நயன்தாரா உலவிக்கொண்டிருக்கிறார். அவருடைய தனிப்பட்ட வாழ்க்கையைப் பற்றிய கிசுகிசுக்கள் இந்த 10 ஆண்டுகளில் ஏராளம். இதெல்லாம் சேர்ந்து ஒரு விரக்தி பிம்பம் அவருக்கு ஏற்பட்டிருக்கிறது. அவரது சிரிப்பு, வசீகரம் எல்லாவற்றுக்கும்
பின்னால் ஒரு சோகம் இருப்பதுபோன்ற தோற்றம், அவரது வசீகரத்துக்கு ஒரு மர்மத்தையும், மேலும் அழகையும் கொடுக்கிறது. நண்பர் ஒருவர் என்னிடம் பேசிக்கொண்டே நடந்துவந்துகொண்டிருந்தபோது நயன்தாராவின் படம் போட்ட ஒரு பத்திரிக்கை சுவரொட்டியைப் பார்த்துவிட்டு அப்படியே ஒரு நிமிடம் நின்றுவிட்டார்.
‘அவங்கள்ட்ட மர்மமான வசீகரம் ஒண்ணு இருக்குது’ என்றார்.
அவர் சொன்ன மர்ம வசீகரம் ‘மாயா’ திரைப்படத்தில் முழுமையாக வெளிப்பட்டிருக்கிறது. வெவ்வேறு ஹீரோக்களுடன் இரண்டு ஹிட்டுகளை இந்த ஆண்டில் கொடுத்திருக்கும்
நயன்தாரா தனி ஒருவராய்க் கொடுத்திருக்கும் ஹிட்தான் ‘மாயா’. ‘அப்ஸரா’ பாத்திரத்திலும் திரையில் காட்டப்படாத ’மாயா’ பாத்திரத்திலும் நடித்திருக்கும் நயன்தாராவின் திறமை முழுமையாகப் பயன்படுத்தப்பட்டிருப்பது இந்தப் படத்தில்தான். புகைப்படத்தில் கவுனுடன் காட்டப்படும் ‘மாயா’ நயன்தாராதான் அவருடைய ஒட்டுமொத்தத் திரைவாழ்க்கையிலேயே மிகவும் அழகானவர். மர்ம வசீகரத்தின் முழு வடிவம் இந்த ‘மாயா’தான்
இந்த மர்ம வசீகரம் என்பது மக்கள் தங்கள் விருப்பத்துக்கேற்ப உருவாக்கிக்கொண்ட கற்பனையாகக்கூட இருக்கலாம். ஆனால், அது பெரிதாகி பெரிதாகி நயன்தாரா மீது ஒரு வழிபாட்டுணர்வை மக்கள் மத்தியில் ஏற்படுத்தியிருக்கிறது. நயன்தாரா இன்று நயன்தாராவைவிடப் பெரிதாக வளர்ந்து நிற்கிறார். பெருந்திரளாய்த் திரண்ட சேலம் மக்கள் கூட்டத்திலிருந்து
அசந்துபோய் நின்ற நண்பர் வரை இது நிரூபணமாகிறது.
குறுகிய திரை ஆயுட்காலத்தைக் கொண்ட நடிகைகள் மத்தியில் தனது திரை வாழ்க்கையின் 11-வது ஆண்டில் மேலும் மேலும் உயர்ந்துகொண்டே போகிறார் நயன்தாரா. அவரது திறமை, அர்ப்பணிப்பு, எல்லோராலும் போற்றப்படும்
அவரது நல்ல உள்ளம், அந்த ‘மர்ம வசீகரம்’ எல்லாம் மற்றவர்களால் எட்டிப்பிடிக்க முடியாத உச்சத்தை நோக்கி அவரைக் கொண்டுபோகின்றன. இரண்டாம் இடத்தில் யாருமில்லாத ‘தனி ஒரு’ உச்சம்! அந்த உச்சத்துக்கு நயன்தாராவுக்கு மிக முக்கியமான ஒரு ஆண்டு 2015.
- நன்றி: ‘தி இந்து’
- ‘தி இந்து’ இணையதளத்தில் இந்தக் கட்டுரையின் சுருக்கமான வடிவத்தைப் படித்துப் பார்க்க: http://goo.gl/wLyohI
No comments:
Post a Comment