மனஷ் பட்டாச்சார்ஜீ
(‘தி இந்து’ இதழின் நடுப்பக்கத்தில் 25-01-2016 அன்று என் மொழிபெயர்ப்பில் வெளியான கட்டுரை)
இருட்டில் கிடக்கிறது எதிர்காலம்
நல்லனவற்றின் சக்திகள் பலவீனமாக இருக்கின்றன.
வதைக்கப்படக்கூடிய (உன்) உடலை நீ அழித்தபோது இது
உனக்குத் தெள்ளத்தெளிவாகத் தெரிந்திருந்தது.
- பெர்டோல்ட் பிரெக்ட், அகதி டபிள்யூ.பி-யின் தற்கொலையைக் குறித்து’ என்ற கவிதையிலிருந்து…
ஜெர்மானிய யூதத் தத்துவவாதியும் விமர்சகருமான வால்டர் பெஞ்சமினைப் பற்றிய பெர்டோல்ட் பிரெக்டின் மேற்கண்ட வரிகள், எல்லைப் பகுதியில் இருந்த சோதனைச்சாவடிகளைத் தாண்டிப் போக முடியாத நிலை, நாஜிக்களிடம் தான் ஒப்படைக்கப்படும் அபாயம் இருப்பது குறித்த அச்சம் போன்றவை இருந்தாலும் பெஞ்சமினிடம் இருந்தது வெறும் தெளிவு மட்டுமல்ல; எதிர்காலம் குறித்த இருண்ட ஒரு தோற்றம்தான் பெஞ்சமினின் கண் முன்னே தெரிந்தது. இனவெறி பிடித்த ஒரு அரசு, அவரது நாட்டை ஆண்டுகொண்டிருந்ததும், நம்பிக்கை என்பது முற்றிலும் வறண்டுவிட்டிருந்ததும்தான் இந்தப் பார்வைக்குக் காரணம். ரஷ்யக் கவிஞர் விளாதிமிர் மாயகோவ்ஸ்கியின் கடைசிக் கவிதையில் வெளிப்படும் தெளிவும் நம்மை உறைய வைக்கக்கூடியது. தன்னைத் தானே சுட்டுக்கொண்டு தற்கொலை செய்துகொள்வதற்கு இரண்டு இரவுகளுக்கு முன்பு எழுதப்பட்ட கவிதை அது. அவரது கவிதைகளைப் பகிஷ்கரித்திருந்த ஸ்டாலினின் ஆட்சிக்கும் காதல் தோல்விக்கும் இடையில் அகப்பட்டுக்கொண்டதால்தான் இந்தத் தற்கொலை. ஜெர்மானியக் கவிஞர் பால் செலானின் முடிவும் இதைப் போன்றதுதான். ஆனால், ஒன்றுக்கும் மேற்பட்ட காரணங்கள். செலான் மீது சுமத்தப்பட்ட ‘படைப்புத் திருட்டு’ பழியும், அவர் எடுத்துக்கொண்டிருந்த மனநல சிகிச்சையும்தான் காரணங்கள். அதுமட்டுமல்ல, செனைன் நதிக்குள் குதிப்பதற்கு இரண்டு மாதங்களுக்கு முன்னால், ‘என்னைச் சுக்குநூறாகக் குணப்படுத்தினார்கள்’என்று அவர் எழுதியது, போருக்குப் பிந்தைய ஐரோப்பாவில் ஒரு யூதராக இருந்ததன் நிராதரவான நிலையையே என்று கருத வேண்டும்.
இந்த உலகத்துக்கு ஒரு குறிப்பு
ஹைதராபாத் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ரோஹித் வெமுலா என்ற தலித் ஆய்வு மாணவர் தற்கொலை செய்துகொண்டபோதும் தனது நண்பர்களுக்கும் இந்த உலகத்துக்கும் ஓர் தற்கொலைக் குறிப்பை விட்டுச்சென்றிருக்கிறார். யாரையும் உலுக்கக்கூடிய குறிப்பு! சாதியால் செல்லரிக்கப்பட்டிருக்கும் இந்தியாவுக்கான பாடங்களை அந்தத் தற்கொலைக் குறிப்பு கொண்டிருக்கிறது. அவரது தற்கொலைக்குக் காரணமாக இருந்த சம்பவக் கோவைகள்தான் உண்மையில் வாழ்க்கை முழுவதும் அவரை அலைக்கழித்துக்கொண்டிருந்தன. இறுதியாகத்தான் தனது நண்பன் உமா மகேஸ்வரனின் அறையில் தன் வாழ்வை முடித்துக்கொள்ள ரோஹித் முடிவெடுத்தார். தனது ஆன்மாவுக்கும் உடலுக்கும் இடையே ஏற்பட்டுக்கொண்டிருக்கும் பெரிய இடைவெளி, தான் பெரிய மிருகமாக மாறிவிட்டது போன்ற உணர்வை ஏற்படுத்தியதாக அந்தக் கடிதத்தில் ரோஹித் சொல்கிறார். தனது ஆத்மா எதன்மீது தோய்ந்திருக்கிறது என்பதையும் மேற்கொண்டு சொல்கிறார் - கார்ல் சகானைப் போன்ற ஒரு அறிவியல் எழுத்தாளராக ஆவதில். ஆனால், அவரது உடலோ அரசியலில் சிக்கிக்கொண்டிருக்கிறது, அதாவது ஆன்மாவை அகற்றிவிட்டு வெறும் உடலாகத் தன்னை ஆக்கிய அரசியலில். உடலிலிருந்து ஆத்மாவைத் தனிமைப்படுத்துவதைத் தத்துவமாகக் கொண்டிருக்கும் அரசியல் என்பது அவருக்கானது அல்ல. மனிதர்கள் இயற்கையிலிருந்து வெகுதூரம் வந்துவிட்டார்கள் என்பதை அறிந்துகொள்ளாமல், அவர்களைத் தான் நேசித்ததாக அவர் புலம்புகிறார். தத்துவ மேதை ரூசோவுக்கு இருந்ததைப் போன்றதொரு தவிப்பு இது. தொழில்மயமானதற்குப் பிந்தைய காலகட்டத்தின் தவிப்பைப் போன்றது அது. தன்னைச் சுற்றிலும் ரோஹித் கண்டதெல்லாம் இரவல் பெற்ற உணர்வுகள், வலிந்து உருவாக்கப்பட்ட நேசம், சாயம்பூசப்பட்ட நம்பிக்கைகள், போலியான கலை போன்றவற்றைத்தான். தந்திர புத்திக்கு அவரது ஆன்மாவில் இடமில்லை என்பதைத்தான் அவரது தற்கொலைக் குறிப்பு நமக்குச் சுட்டிக்காட்டுகிறது. ஆனால், அரசியல், கலை போன்றவற்றைப் போல இயற்கையிலும் தந்திரத்துக்கென்று ஆத்மாவும் இடமும் ஒதுக்கப்பட்டிருக்கிறது. அதுதான் அவரது உடலிலிருந்து அவரது ஆன்மாவைப் பிய்த்தெறிந்திருக்கிறது. காயப்படாமல் நேசிப்பது என்பது கடினமாகிவிட்டது என்று ரோஹித் முடித்திருப்பதில் வியப்பொன்றும் இல்லை. இயற்கை, கலை, அரசியல் போன்றவற்றைப் போல அன்பும் ஒரு தந்திரமான விஷயம்தான். இதை அறிவியலால் மறுக்க முடியாது. இதுதான் அவருள் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தியது.
விண்மீன்களை நோக்கிய தேடல்
தற்கொலைக் குறிப்பு அடுத்ததாக அரசியல் விவகாரங்களை நோக்கி நகர்கிறது. ரோஹித் ஒரு தலித். விண்மீன்களை நோக்கிய அவரது தேடலில் இந்த அடையாளம் குறுக்கே வருகிறது. நம்பவே முடியாததுபோல் இருக்கிறதல்லவா! ஆனால், இந்து மதத்தின் சாதிய அமைப்பு இன்னும் சில நூற்றாண்டுகளுக்கு முந்தைய காலகட்டத்திலேயே வாழ்ந்துகொண்டிருக்கிறது. தலித்தாக இருப்பது என்பது மட்டும்தான் ரோஹித் மீது ஆதிக்க சாதிகள் திணித்திருக்கும் மதிப்பீடு. இந்த மதிப்பீடு என்பது நிராகரிப்பு, அவமானம், காயப்படுத்துதல் ஆகியவற்றைக் கொண்டே அளவிடப்படுகிறது. இனவெறியைப் போன்றதுதான் சாதியமும். நாஜிக்களின் ஆட்சியின் கீழ் பால் செலான் எதிர்கொண்ட இனவெறிக்குச் சற்றும் குறைந்ததல்ல சாதியம். சொல்லப்போனால் அதைவிட அரக்கத்தனமானது சாதியம். சக மாணவர் ஒருவரைத் தாக்கியதாக ரோஹித் மீது குற்றச்சாட்டு வைக்கப்பட்டது. ஆனால் அது நிரூபிக்கப்படவில்லை. இந்தக் குற்றச்சாட்டை அடிப்படையாக வைத்து பல்கலைக்கழக நிர்வாகத்தால் ரோஹித் இடைநீக்கம் செய்யப்பட்டபோது, ஒட்டுமொத்த உலகமும் தன்னை நெருக்குவதைப் போன்றுதான் ரோஹித் உணர்ந்திருக்க வேண்டும். ‘சாதிய, தீவிரவாத, தேச விரோத’ என்றெல்லாம் மத்திய அமைச்சர் ஒருவர் ஒரு கடிதத்தில் குற்றம் சாட்டியிருந்தது அவரது இதயத்தைச் சுக்குநூறாக உடைத்திருக்கலாம். சாதிவெறியின் பலிகடாவான ஒரு தலித்தே எப்படிச் சாதிவெறியராக இருக்க முடியும்? சாதியம் என்ற பெயரில் அபத்தமான குற்றச்சாட்டுகளை வைத்துவிட முடிகிறதல்லவா! ரோஹித்தின் புத்திக்கூர்மை மிகுந்த மூளையால் இதை விளங்கிக்கொள்ள முடியவில்லை.
ஒரு ஓட்டு… ஒரு எண்… ஒரு பொருள்!
முசாபர்நகர் கலவரங்கள் குறித்த ஆவணப்படத்தை டெல்லிப் பல்கலைக்கழகத்தில் திரையிட விடாமல் ஒரு வலதுசாரி மாணவர் அமைப்பு தடுத்ததல்லவா! அதை எதிர்த்து நடைபெற்ற சிறிய போராட்டமொன்றில் ரோஹித் பங்கெடுத்துக்கொண்ட பிறகுதான் எல்லாமே ஆரம்பமாயிற்று. மதச் சிறுபான்மையினர் மீது நடத்தப் பட்ட கொடும் தாக்குதல்களைப் பற்றிய திரைப்படத்தை உலகின் மிகப் பெரிய ஜனநாயகம் என்று பீற்றிக்கொள் ளும் ஒரு நாட்டின் பல்கலைக்கழகத்தில் திரையிட முடியாதா? பெரும்பான்மையினரின் அட்டூழியத்துக்கு எதிராகப் போராடுவதற்கு அவருக்கு உரிமை உண்டுதானே! அதைத்தான் செய்தார். ஆனால், அந்த உரிமைக்கும் ஒரு விலை கொடுக்க வேண்டும். ஏனெனில், ஏட்டில் இருக்கும் ஜனநாயகத்துக்கும் நடைமுறையில் இருக்கும் ஜனநாயகத்துக்கும் சம்பந்தமே இருப்பதில்லையே! ரோஹித் தனது குறிப்பில் துல்லியமாகக் குறிப்பிட்டிருப்பது போல் ஒரு மனிதனின் மதிப்பு என்பது ஒரு ஓட்டாக, ஒரு எண்ணாக, ஒரு பொருளாகக் குறைக்கப்பட்டுவிட்டது. முதலாளித்துவ, சாதியப் பொருளாதாரங்களின் அடிப்படை யான தத்துவம் மக்களை எந்த நிலைக்குக் கீழிறக்கிவிட் டிருக்கிறது என்பது குறித்த தீர்க்கதரிசனமான கூற்றுதான் அது. ஜனநாயகமும் சாதியமும் ஒன்றுக்கொன்று திட்டமிட்ட குற்றங்களை நிகழ்த்தும் இந்த அபத்தமான விளையாட்டில், தான் ஒரு எண் என்று கணக்கிடப்படுவதையோ, தனது கழுத்தில் ஒரு அடையாள வில்லை அணிவதையோ ரோஹித் மறுத்துவிட்டார்.
நிழலிலிருந்து விண்மீன்களை நோக்கி…
தனது விதியை நினைத்துப் பார்ப்பதற்கு இடையில், தனது உயிரைத் தன் கைகளாலேயே போக்கிக்கொள்வதென்று முடிவெடுத்த நிலையில், வதைபடக்கூடிய தனது உடலை அழிக்கக்கூடிய அந்த இறுதிச் செயலில்கூட மனிதன் மீதான தன் சொந்த வரையறையை விட்டுச்செல்கிறார் ரோஹித்: “நட்சத்திரத் துகள்களால் உருவான மகத்தான விஷயம். ஒவ்வொரு துறையிலும், ஆய்வுகளிலும் தெருக்களிலும் அரசியலிலும் மரணத்திலும் வாழ்விலும்.” தனக்கும் விண்மீன்களுக்கும் இடையே இடைவெளியை ஏற்படுத்தும் வகையில் தன்னிடம் இருக்கும் ‘அளவிடவியலாமை’யை எண்ணி வியக்கிறார். திரையிடலை நிறுத்தியதற்கு எதிர்ப்புத் தெரிவித்துப் போராடும்போதும் சரி, தனக்கும் தனது நண்பர்களுக்கும் கல்லூரியில் அநியாயமாக அளிக்கப்பட்ட தண்டனையை எதிர்க்கும்போதும் சரி, தனது அளவிட இயலாமையைத்தான் எங்கும் காண்கிறார். இறப்பின்போதுகூட தன்னால் ‘நட்சத்திரங்களை நோக்கிப் பயணிக்க’ முடியும் என்று நம்புகிறார். ஆனால், பூமியில் இருந்தபோது அவர் உணர்ந்ததென்ன? ‘நிழலிலிருந்து விண்மீன்களை நோக்கி’ என்ற மேற்கோள்தான் இதற்குப் பதில். ஒரு தலித்தின் நிழல் ஆதிக்க சாதியினர் மீது பட்டால் தீட்டு என்றும், தலித்தின் உடலும் தீட்டு என்றும் ஆதிக்க சாதிகளால் கருதப்படுகிறது. அப்படிப்பட்ட ஒரு நிழல்தான் விண்மீன்களுக்கு ஆசைப்படுகிறது. அளவிலிருந்து அளவின்மை நோக்கி, இருட்டிலிருந்து வெளிச்சத்தை நோக்கி.
ரோஹித் கண்ட தெளிவு
இருந்தும், தனது பிறப்பே பெரும் இன்னல் என்று நமக்கு நினைவுறுத்துகிறார் ரோஹித்: அவரைப் போன்றவர்களுக்கெல்லாம் பிறப்பே ‘ஒரு சாபம்’. தனது பிறப்பை ‘உயிர்பறிக்கும் ஒரு விபத்து’எனக் காண்கிறார். “எனது குழந்தைப் பருவத்தின் தனிமையிலிருந்து நான் மீளவே இல்லை. யாராலும் பாராட்டப்படாத குழந்தை நான்.” இப்படியாக பிறப்பு, சாதி, தனிமை, யாராலும் பாராட்டப்படாத குழந்தை என்பதையெல்லாம் தாண்டி தனக்குள் இருந்த அளவிடற்கரிய தன்மையை அவர் அறிந்துகொண்டதில்தான் இருக்கிறது அவரது மகத்துவம். இதன்மூலம் பெஞ்சமினிடம் பிரெக்ட்டும், மாயகாவ்ஸ்கி, செலான் ஆகியோர் தங்களிடமும் கண்ட தெளிவை ரோஹித் வெளிப்படுத்துகிறார்.
வரலாற்றின் அரக்கத்தனத்தால் மிகவும் மோசமாகப் பாதிக்கப்பட்டிருப்பவர்களாகிய தலித் மக்கள், கருப்பினத்தவர்கள், வஞ்சிக்கப்படும் பெண்கள், தொழிலாளர்கள் ஆகியோரே உண்மையான ஒரு பிரபஞ்சத்தன்மையைத் தங்களிடம் கொண்டிருக்கிறார்கள். அவர்களுடைய போராட்டங்களின்போது அவர்களின் பிரபஞ்சத்தன்மை வெளிப்பட்டு நம்மை வசீகரிக்கிறது. அதிகாரத் தரப்பினரான வெள்ளை காலனியாதிக்கவாதிகள், ஆதிக்க சாதியினர் போன்றோர் தங்களிடம் இருப்பதாகக் கருதும் பிரபஞ்சத்தன்மை என்பது உண்மையில் பிரபஞ்சத்தன்மை அல்லாததும், சகிப்புத்தன்மையற்றதும், பாகுபாடு கொண்டதுமேயாகும். பிரபஞ்சத்தன்மை என்பது உலக வேதங்களிலல்ல, அந்த வேதங்களால் பாதிப்புக்குள்ளாகுபவர்களிடம்தான் இருக்கிறது. ரோஹித் தனது தற்கொலைக் குறிப்பில் யார் மீதும் பழிசுமத்தாததே வெறுப்பு விற்பனையாளர்களாக இருக்கும் தேசியவாதிகளுக்கும், சாதிவெறியர்களுக்கும் ஒரு பாடம்.
ஆகவே, ரோஹித்துதான் விண்மீன்களுக்கும் பிரபஞ்சத்துக்கும் இந்த உலகுக்கும் மனித ஆத்மாவுக்கும் உரிமை கோர முடியுமே ஒழிய, அவரது எதிர்ப்பாளர்களல்ல. ஏனெனில், அளவிட முடியாத கனவுகளையும் சாத்தியங் களையும் தான் கொண்டிருப்பது அவருக்குத்தான் தெரியும். மரணத்துக்குப் பிறகு விண்மீன்களுக்கிடையே இடம் கிடைக்க ரோஹித்துக்கு இருக்கும் தகுதியைக் கொஞ்சம்கூடக் கொண்டிராத நம்முடைய பொய்களையும் கேலிக்கூத்துகளையும் அம்பலப்படுத்திவிட்டுப் போய் விட்டார் ரோஹித், தனது மரணத்தால்.
- மனஷ் பட்டாச்சார்ஜீ, கவிஞர், மொழிபெயர்ப்பாளர், அரசியல் தத்துவ அறிஞர், புதுடெல்லி அம்பேத்கர் பல்கலைக்கழகத்தின் துணைப் பேராசிரியர்.
© ‘தி இந்து’ (ஆங்கிலம்).
-‘தி இந்து’ இணையதளத்தில் இந்தக் கட்டுரையைப் படிக்க: http://goo.gl/Z4OUN3
No comments:
Post a Comment