Monday, October 5, 2015

இந்தியாவிலிருந்து உலகத்துக்கு...


ஆசை

(‘தி இந்து’ நாளிதழின் ‘கலைஞாயிறு’ பகுதியில் 04-10-2015 அன்று வெளியான கட்டுரை)

நந்தா, பரவசத்தில் திளைப்பவன் என்பது
உனது பெயரின் பொருள்
நந்தா, இந்த உடலைப் பார்,
நோயுற்றது, அழுக்குடம்பு, துர்மணம் வீசுவது.
எவ்வளவு கடுமையாக இருந்தாலும் பரவாயில்லை
எதைக் கொண்டேனும் பண்படுத்து
கூர்தீட்டு, கவனம்குவியச் செய்
இந்த மனதை.
திறந்த மனப்பான்மையை விதை,
ஒழியட்டும் எல்லா முன்தீர்மானங்களும்
அகங்காரத்தை வெற்றிகொண்டாலோ,
சலனமில்லா வாழ்வுனது.
- புத்த மதப் பெண் துறவிகளின் 'தெரிகாதா' கவிதை நூலிலிருந்து

இந்திய இலக்கியத்தின் மொழிபெயர்ப்பு வரலாற்றை ஒட்டுமொத்தமாகப் பார்த்தால் இந்தியா என்றால் சம்ஸ்கிருத இலக்கியம்தான் என்ற பிரமை ஏற்படும்படி பெரும்பாலும் சம்ஸ்கிருத இலக்கியங்களின் மொழிபெயர்ப்புதான். விட்டகுறை தொட்டகுறையாகத் தமிழ் போன்ற மொழிகளிலிருந்தும் மொழிபெயர்க்கப் பட்டிருக்கிறது.
இந்தியா என்பது ஒற்றை மொழியின், ஒற்றைக் கலாச்சாரத்தின் நாடு அல்ல. பல்வேறு வண்ணங்கள், பல்வேறு மொழிகளின் இலக்கியங்கள் எல்லாம் சேர்ந்ததுதான் அதன் கலாச்சாரப் பெருமை. அந்தக் கலாச்சாரப் பெருமையை உலகமெங்கும் எடுத்துச் செல்லும் மாபெரும் முயற்சியொன்று சமீபத்தில் தொடங்கப்பட்டிருக்கிறது.
இந்தியாவின் அனைத்து மொழிகளிலும் உள்ள செவ்வியல் இலக்கியங்களை ஆங்கிலத்துக்கு மொழிபெயர்க்கும் அமைப்பொன்றை நிறுவுவதற்காக இன்ஃபோஸிஸ் நிறுவனத்தின் தலைவர் நாராயண மூர்த்தியின் மகன் ரோஹன் மூர்த்தி 52 லட்சம் டாலர்களை (இந்திய மதிப்பில் ரூ. 33,91,38,540) ஹார்வர்டு பல்கலைக்கழகத்துக்கு வழங்கியிருக்கிறார். இந்த நிதியைக் கொண்டு 'மூர்த்தி கிளாஸிக்கல் லைப்ரரி ஆஃப் இந்தியா' (Murti Classical Library of India) என்ற அமைப்பு நிறுவப்பட்டிருக்கிறது. பிரபல இந்தியவியல் அறிஞர் ஷெல்டன் பொல்லாக், இதன் தலைமை பதிப்பாளராக நியமிக்கப்பட்டிருக்கிறார். பதிப்பாசிரியர் குழுவில் ஷெல்டன் பொல்லாக்குடன் ஹைடல்பெர்க் பல்கலைக்கழகத்தின் மோனிகா ஹார்ஸ்ட்மன், போஸ்டன் பல்கலைக்கழகத்தின் சுனில் ஷர்மா, ஜெருசலேம் ஹீஃப்ரூ பல்கலைக்கழகத்தின் டேவிட் ஷுல்மன் ஆகிய முக்கியமான இந்தியவியல் அறிஞர்கள் இருக்கிறார்கள்.

செவ்வியல் இலக்கியங்களே இலக்கு
அடுத்த 100 ஆண்டுகளில் 500 புத்தகங்கள் என்பது இந்த அமைப்பின் இலக்கு. ஆதி இலக்கியங்களிலிருந்து தொடங்கி, இந்திய இலக்கியத்தில் நவீனத்தின் சாயல் நுழைய ஆரம்பிக்காத கி.பி. 1800 வரை உருவான செவ்வியல் இலக்கியங்கள்தான் இவர்களின் எல்லை. இதன் முதல்முயற்சியாக ஐந்து புத்தகங்கள் இந்த ஆண்டின் தொடக்கத்தில் வெளியிடப்பட்டன. தொடக்க நூல்களில் எதுவுமே சமஸ்கிருத நூல் இல்லை என்பது கவனிக்கத் தக்கது. முதல் நூல், 18-ம் நூற்றாண்டின் முற்பகுதியைச் சேர்ந்த சூஃபி ஞானி பாபா புலே ஷாவின் சூஃபிப் பாடல்கள். தொடக்கக் கால பஞ்சாபி மொழி இலக்கியத்தின் சாதனைகளுள் ஒன்றாக இந்தப் பாடல்கள் கருதப்படுகின்றன. வாய்மொழியாகவே காலங்களைக் கடந்த வந்த இந்தப் பாடல்களுக்கு நிறைய மொழிபெயர்ப்புகள் இதுவரை வந்திருக்கின்றன. இரண்டாவதாக, அக்பரின் வரலாற்றைச் சொல்லும் அக்பர் நாமாவின் முதல் பாகம். அக்பரின் காலத்திலேயே பாரசீக மொழியில் அஃபுல் ஃபஸல் என்பவரால் எழுதப்பட்ட நூல். மூன்றாவதாக, புத்தரின் காலத்தைச் சேர்ந்த புத்த மதப் பெண் துறவிகளின் கவிதைகளான தெரிகாதா. பாலி மொழியில் எழுதப்பட்ட இந்தக் கவிதைகள்தான் பெண்களால் எழுதப்பட்டவற்றில் உலகிலேயே மிகவும் தொன்மையான கவிதைகள். தெரிகாதாவின் வயது சுமார் 2500 ஆண்டுகள். நான்காவது நூல், மனுவின் கதை (மனுசரித்திரமு). தெலுங்கு மொழியின் மகாகவிகளுள் ஒருவரான அல்லாசாணி பெத்தண்ணா எழுதிய காவியம். ஐந்தாவது, சுர் சாகர். 15-ம் நூற்றாண்டைச் சேர்ந்த இந்தி மொழிக் கவிஞர் சுர்தாஸ், கிருஷ்ணரைப் பற்றி எழுதிய பாடல்களின் பெரும் தொகுப்பு.

இந்தப் பதிப்புகளின் முக்கியமான அம்சங்கள் பல. முடிந்தவரை ஆதாரபூர்வமான பிரதிகளைக் கண்டெடுத்து அவற்றை ஒப்புநோக்கி சரியான மூலப் பிரதியைக் கொடுத்திருக் கிறார்கள். ஆம், ஒரு பக்கம் மூல மொழியிலேயே கொடுக்கப்பட்டிருக்கிறது. எதிர்ப் பக்கத்தில் மொழிபெயர்ப்பு. பிற்சேர்க்கையாக, பாடபேதங்கள், பிரதியில் உள்ள சில கலாச்சாரச் சொற்கள், மரபுத்தொடர்கள் குறித்த விளக்கங்கள் போன்றவை இடம்பெற்றிருக்கின்றன.

நம்பகத்தன்மையும் இலக்கிய நயமும்
புத்தகங்களின் தொடக்கத்தில் முன்னுரையும், அறிமுகமும் இடம்பெற்றிருக்கின்றன. நம்பகத் தன்மை, இலக்கிய நயம் இரண்டும் காப்பாற்றப் பட்டிருப்பது மொழிபெயர்ப்பின் சிறப்பம்சம். இது தவிர இன்னும் சில விஷயங்களையும் குறிப்பிட வேண்டும். இந்தப் பதிப்புகளுக்கென்று அந்தந்த மொழிகளில் பிரத்யேகமான எழுத்துருக்கள் (Fonts) உருவாக்கப்பட்டிருக்கின்றன. புத்தகத்தின் வடிவமைப்பிலும் ஒருசீர்தன்மை காணப்படுகிறது. வடிவமைப்புக்காகப் போட்டிகள் வைத்து அதில் வெற்றிபெற்ற வடிவமைப்பையே இதில் பயன்படுத்துகிறார்கள். எல்லாவற்றையும் விட முக்கியமான விஷயம் ஒரு சிறு அலமாரியையே அடைக்கக் கூடிய இந்த புத்தகங்கள் அனைத்தையும் சேர்த்தால் மொத்த விலையே ரூ.1,300 சொச்சம்தான். இந்த நூல் வரிசையில் தமிழ் உள்ளிட்ட மொழிகளிலிருந்தும் செவ்விலக்கிய நூல்கள் விரைவில் வரவிருக்கின்றன என்பது மகிழ்ச்சியான செய்தி!
 - நன்றி: தி இந்து
 ‘தி இந்து’ இணையதளத்தில் இந்தக் கட்டுரையைப் படிக்க: http://goo.gl/t5RjGc

1 comment:

  1. தமிழ்கூறும் நல்லுலகிற்கு ஒரு நல்ல செய்தி. இவ்வாறான முயற்சிகள் ஆங்காங்கே உள்ள இடைவெளிகளை நிரப்பி, பின்னாளில் பெரும் சாதனைக்கு வழிகோலும் என்பதே நிதர்சனம். நன்றி.

    ReplyDelete