ஆலிவர் சாக்ஸ்
(‘தி இந்து’ நாளிதழில் 06-06-2015 அன்று வெளியான மொழிபெயர்ப்புக் கட்டுரை இது. தமிழில்: ஆசை)
ஒரு மாதத்துக்கு முன்னால் நல்ல உடல்நிலையில்தான் இருந்தேன். சொல்லப்போனால், அருமையான உடல்நிலை. இந்த 81 வயதில் தினமும் ஒரு மைல் தூரம் என்ற அளவில் நீந்திக்கொண்டிருக்கிறேன். ஆனால், எனது அதிர்ஷ்டம் வற்றிப்போய்விட்டது, எனது கல்லீரலில் ‘மெட்டாஸ்டேஸிஸ்’ என்ற இரண்டாம் நிலைப் புற்றுக்கட்டிகள் நிறைய இருப்பதாகச் சில வாரங்களுக்கு முன்பு அறிந்தேன். (இந்த வகைப் புற்றுக்கட்டிகள் புற்றுநோய் இருக்கும் பாகத்திலிருந்து தொலைவாக உருவாகும் இயல்புடையவை).
9 ஆண்டுகளுக்கு முன்பு கண்களில் மிகவும் அரிதாக ஏற்படும் கட்டி ஒன்று எனக்கு உருவாகியிருப்பதைக் கண்டறிந்தார்கள். அந்தக் கட்டியின் பெயர் ஆக்யுலர் மெலனோமா. அந்தக் கட்டியை நீக்குவதற்காக எனக்கு அளிக்கப்பட்ட கதிரியக்கச் சிகிச்சையாலும் லேசர் சிகிச்சையாலும் எனது ஒரு பக்கக் கண்ணில் பார்வை இழப்பு ஏற்பட்டது. ஆக்யுலர் மெலனோமா கட்டிகள் வந்திருப்பவர்களில் 50 சதவீதத்தினருக்கு மெட்டாஸ்டேஸிஸ் ஏற்படுவதுண்டு. எனது நிலையைப் பொறுத்தவரை அப்படிப்பட்ட மெட்டாஸ்டேஸிஸ் உருவாவதற்கான வாய்ப்புகள் மிகவும் குறைவு. ஆனால், நானோ துரதிர்ஷ்டசாலிகளில் ஒருவனாக ஆகிவிட்டேன்.
நெருங்கும் மரணம்
முதல் தடவை கண்டுபிடிக்கப்பட்ட பிறகு எனக்கு 9 ஆண்டு வாழ்க்கை வழங்கப்பட்டிருந்திருக்கிறது. இந்த ஆண்டுகளில் நல்ல உடல்நலத்துடனும் படைப்புத் திறனுடனும் நான் இருந்ததுகுறித்து நன்றியுடன் நினைத்துப்பார்க்கிறேன். ஆனால், இப்போது நான் மரணத்தை எதிர்கொண்டிருக்கிறேன். எனது கல்லீரலில் மூன்றில் ஒரு பகுதியைப் புற்று ஆக்கிரமித்துக்கொண்டிருக்கிறது. இதன் வளர்ச்சியை மட்டுப்படுத்த முடிந்தாலும் தடுத்து நிறுத்துவது சாத்தியமில்லை.
ஆகவே, இன்னும் எனக்கு மிச்சமிருக்கும் மாதங்களை எப்படி வாழ்ந்து அனுபவிப்பது என்பது என் கையில்தான் இருக்கிறது. மிகவும் சிறப்பாகவும், ஆழமாகவும், என்னால் முடிந்த அளவில் படைப்பூக்கத்துடனும் வாழ வேண்டும் நான். இந்த விஷயத்தில் எனக்குப் பிடித்த தத்துவவாதிகளில் ஒருவரான டேவிட் ஹுயூமின் வார்த்தைகள்தான் எனக்கு ஊக்கமளிக்கின்றன. அவருக்கு 65 வயது ஆனபோது, தான் சீக்கிரம் இறந்துவிடப் போகிறோம் என்பது அவருக்குத் தெரிகிறது. அதற்கு பின் 1776-ம் ஆண்டின் ஏப்ரல் மாதத்தில் ஒரே நாளில் சிறிய சுயசரிதை ஒன்றை அவர் எழுதி முடித்தார். ‘எனது வாழ்க்கை’ என்று அதற்குப் பெயரிட்டார்.
“எனது மரணத்தை மிக வேகமாக எதிர்நோக்கிக் கொண்டிருக்கிறேன்… எனது உடல்நிலையில் கோளாறு இருந்தும் கொஞ்சமாகத்தான் எனக்கு வலித்தது. அதைவிடப் பெரிய ஆச்சர்யம் என்னவென்றால், எனது உடலில் மிக மோசமான நோய் இருந்தாலும், எனது உத்வேகம் ஒரு கணம்கூடத் தொய்வடைந்ததில்லை. எப்போதும் இருப்பது போன்ற அதே தீவிரத்தை எனது ஆய்வில் இப்போதும் கொண்டிருக்கிறேன். மற்றவர்களுடன் சேர்ந்து இருக்கும்போது பழைய குதூகலத்துடனே காணப்படுகிறேன்” என்று அவர் எழுதியிருக்கிறார்.
15 ஆண்டுகள் அதிகம்
80 வயதைக் கடந்து வாழ்வதற்கு நான் அதிர்ஷ்டம் செய்திருக்க வேண்டும். ஹ்யூமின் 65 வயதைத் தாண்டி எனக்கு அனுமதிக்கப்பட்டிருக்கும் 15 ஆண்டுகள் எனது பணி அடிப்படையிலும், அன்பின் அடிப்படையிலும் மகத்தானவை. இந்தக் காலகட்டத்தில் 5 புத்தகங்கள் எழுதி வெளியிட்டிருக்கிறேன். ஒரு சுயசரிதையை எழுதி முடித்திருக்கிறேன் (ஹ்யூமின் சிறிய சுயசரிதையைப் போலல்லாமல் சற்றே பெரியது). கிட்டத்தட்ட முடியும் தறுவாயில் இன்னும் பல புத்தகங்கள் இருக்கின்றன.
ஹ்யூமின் கட்டுரையில் ஒரு வரியில் வெளிப்பட்ட உண்மை என் முகத்தில் அறைந்தது: “நான் இப்போது இருப்பதை விடவும் அதிகமாக வாழ்க்கையிடமிருந்து விலகலோடு இருப்பதென்பது கடினம்.”
கடந்த சில நாட்களாக, எனது வாழ்க்கையை ஒரு உயரமான இடத்திலிருந்து பார்ப்பதுபோல் பார்க்க என்னால் முடிகிறது. வாழ்க்கையின் வெவ்வேறு அங்கங்களுக்கிடையேயான தொடர்புகளை மேலும் ஆழமான உணர்வுடன் பார்க்க முடிகிறது. எனது வாழ்க்கை முடிந்துவிட்டது என்பதல்ல இதன் அர்த்தம்.
மாறாக, மிகவும் உயிர்ப்போடு நான் இருப்பதாக உணர்கிறேன். இன்னும் மிச்சமிருக்கும் நேரத்தில் எனது நட்புகளை ஆழப்படுத்த வேண்டுமென்றும், நான் நேசிப்பவர்களுக்கு விடைகூற வேண்டுமென்றும், இன்னும் அதிகமாக எழுத வேண்டுமென்றும், உடலில் வலுவிருந்தால் பயணம் செய்ய வேண்டுமென்றும், அறிதலிலும் உணர்விலும் புதிய தளங்களை அடைய வேண்டும் என்றும் விரும்புகிறேன், நம்புகிறேன்.
துணிச்சலும் தெளிவும் வெளிப்படையான பேச்சும் அதற்கு அவசியம். இந்த உலகத்துடன் எனது கணக்கைச் சரிசெய்யும் முயற்சியும் அவசியம். இதற்கிடையே, கொஞ்சம் வேடிக்கைக்கும் நேரம் வேண்டும் (கொஞ்சம் மடத்தனமும்கூட வேண்டும்).
விலகல் மனப்பான்மை
தெளிவான குறிக்கோளும் பார்வையும் சட்டென்று எனக்குக் கிடைத்திருப்பதை உணர்கிறேன். முக்கியமற்ற விஷயங்கள் எதற்கும் எனக்கு நேரமில்லை. நான் என் மீது, என் காரியத்தின் மீது என்னுடைய நண்பர்கள் மீது கவனம் செலுத்த வேண்டும். ஒவ்வொரு இரவும் ‘செய்தி நேர’த்தை நான் இப்போதெல்லாம் பார்ப்பதில்லை. அரசியல் மீதோ புவிவெப்பமாதல்குறித்த விவாதங்கள் மீதோ கவனம் செலுத்துவதை நிறுத்திவிட்டேன்.
இது அலட்சியமல்ல, விலகல் மனப்பான்மை - மத்தியக் கிழக்கைப் பற்றியும், புவிவெப்பமாதல் பற்றியும், அதிகரித்துக்கொண்டிருக்கும் ஏற்றத்தாழ்வைப் பற்றியும் நான் இன்னமும் கவலைப்படத்தான் செய்கிறேன். ஆனால், எனக்கும் இவற்றுக்கும் இனிமேல் எந்தத் தொடர்பும் இல்லை. இவையெல்லாம் எதிர்காலத் தலைமுறைக்கு உரியவை. திறமையான இளைஞர்களைப் பார்க்கும்போது எனக்கு மிகுந்த குதூகலம் ஏற்படுகிறது. எனது புற்றுக்கட்டிகளைக் கண்டறிந்த இளைஞர்களும் அவர்களில் ஒருவர். பொறுப்பானவர்களின் கையில் எதிர்காலம் இருப்பதாக நம்புகிறேன்.
கடந்த 10 ஆண்டுகளாக எனது சமகாலத் தவர்களின் மரணங்களை நான் தீவிரமாகக் கவனித்துக்கொண்டே வருகிறேன். எனது தலைமுறை வெளியேறிக்கொண்டிருக்கிறது. ஒவ்வொரு மரணத்தையும் திடீர் விலகலாகவே நான் உணர்கிறேன். அதாவது, என்னிடமிருந்து ஒரு பகுதி நீக்கப்படுவதைப் போல நான் உணர்கிறேன். நாம் போய்விட்டால் நம்மைப் போல வேறு யாரும் இருக்க மாட்டார்கள். அதுமட்டுமல்ல, யாரைப் போலவும் யாரும் ஒருபோதும் இருக்க மாட்டார்கள். மனிதர்கள் இறக்கும்போது விட்டுச்செல்லும் இடைவெளிகளை ஒருபோதும் நிரப்பவே முடியாது. ஏனெனில், ஒவ்வொரு மனிதரும் தனித்துவமிக்க ஆளுமையாக இருப்பதென்பது, அவரவர் பாதையை அவரவர் கண்டறிய வேண்டும் என்பது, அவரவர் வாழ்க்கையை அவரவர் வாழ்வது, அவரவர் மரணத்தை அவரவரே சந்திப்பது இதுதான் விதி - அதாவது மரபியல் விதி, நரம்பியல் விதி.
எனக்குப் பயமே இல்லையென்று என்னால் நடிக்க முடியாது. ஆனால், எனது மனதை அதிகமாக நிறைத்திருப்பது நன்றியுணர்ச்சியே. நான் நேசித்திருக்கிறேன், நேசிக்கப்பட்டிருக்கிறேன்; எனக்கு அளிக்கப்பட்டது நிறைய, அதற்கு ஈடாக நானும் ஏதோ திருப்பிக்கொடுத்திருக்கிறேன்; நிறைய வாசித்திருக்கிறேன், பயணித்திருக்கிறேன், சிந்தித்திருக்கிறேன், எழுதியிருக்கிறேன். இந்த உலகத்துடன் உறவு கொண்டிருந்திருக்கிறேன், எழுத்தாளர்களுக்கும் வாசகர்களுக்குமான பிரத்தியேக உறவு அது.
எல்லாவற்றுக்கும் மேலாக நான் ஒரு உணர்வு ஜீவி, சிந்திக்கும் விலங்கு. இதெல்லாம் இந்த அழகான கிரகத்தில் எனக்கு நிகழ்ந்திருக்கிறது என்பதே மாபெரும் வரமும் சாகசமும்!
- ஆலிவர் சாக்ஸ், நரம்பியல் துறையில் புகழ்பெற்ற நிபுணர், ‘தி மேன் ஹூ மிஸ்டூக் ஹிஸ் வைஃப் ஃபார் எ ஹேட்’ போன்ற பிரபலமான புத்தகங்களை எழுதியவர்.
© ‘தி நியூயார்க் டைம்ஸ்’, தமிழில்: ஆசை
© ‘தி நியூயார்க் டைம்ஸ்’, தமிழில்: ஆசை
நன்றி: ‘தி இந்து’
‘தி இந்து’ இணையதளத்தில் இந்தக் கட்டுரையைப் படிக்க:
No comments:
Post a Comment