Wednesday, June 10, 2015

மேகி: இரண்டு நிமிடப் பாடம்


தீரஜ் நய்யார்
('தி இந்து’ நாளிதழில் 07-06-2015 அன்று வெளியான மொழிபெயர்ப்புக் கட்டுரை இது. தமிழில்: ஆசை)

இந்தியாவின் அபிமான துரித உணவுகளில் ஒன்றின் புகழைத் தகர்த்திருக்கும் இந்த மேகி விவகாரம் என்பது பொருளியல் அறிஞர்களைப் பொறுத்தவரை மிகவும் விநோதமான ஒரு நிகழ்வு. சந்தையில் ஏற்பட்ட தோல்வியும் அரசாங்கத்தின் தோல்வியும் ஒரே சமயத்தில் நிகழ்ந்திருக்கிறது. இது போன்ற விஷயங்கள் நடக்கும்போது பெரிய அளவிலான பாதிப்பு என்பது, முற்றிலுமாகக் கைவிடப்பட்ட நுகர்வோருக்குத்தான். பரிந்துரைக்கப்பட்ட அளவுகோல்களை மீறியது மேகி மட்டுமல்ல என்பதுதான் உண்மை. இந்தியாவின் சந்தைப் பொருளாதாரம் இன்னும் வளர்ந்துவரும் நிலையில்தான் இருக்கிறது. இந்த நிலையில் ஒழுங்காற்று முறைகள் என்பவையே வெறும் பெயரளவில்தான். அப்படி இருந்தும், தனது கெட்ட நேரம் காரணமாக மேகி மாட்டிக்கொண்டிருக்கிறது. காரீயமும் மோனோசோடியம் குளுடாமேட்டும் அதிக அளவில் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டிருப்பதால் அதற்கு இந்த கதி.
நெஸ்லே என்ற பன்னாட்டு நிறுவனத்தால் தயாரிக்கப்படுவதுதான் மேகி. நெஸ்லேவின் உணவுத் தயாரிப்புகள் உலகெங்கும் உள்ள பெருவாரியான மக்களால் உட்கொள்ளப்படுகின்றன.
போட்டி மிகுந்த ஒரு சந்தையில் இந்த நிறுவனம் இயங்குகிறது. நூடுல்ஸ் சந்தையில் மேகிக்கு நிறைய போட்டியாளர்கள் இருக்கிறார்கள். இருந்தும் அதிக அளவில் அது விற்கப்படுவதற்குக் காரணம் நெஸ்லே நிறுவனத்தின் தயாரிப்பு என்றால் மிகவும் தரமாக இருக்கும் என்று நம்பப்படுவதால்தான். தனக்கிருக்கும் நற்பெயரை ஒரு தயாரிப்பு இழந்துவிட்டது என்றாலே அந்தத் தயாரிப்புக்கு மூடுவிழா நடத்தப்பட்டுவிட்டது என்றும் மக்கள் வேறு தயாரிப்புகளை நாட ஆரம்பித்துவிடுவார்கள் என்றும்தான் அர்த்தம். இந்தியாவில் (நெஸ்லேவுக்கு அப்படி ஆகாமல் போனாலும்) மேகிக்கு அப்படித்தான் ஆகும். நுகர்வோரால் அது குழிதோண்டிப் புதைக்கப்பட்டுவிடும். நெஸ்லே என்ன சொன்னாலும் சரி... கடைகளில் அதை மக்கள் ஒருபோதும் வாங்கப்போவதில்லை. போட்டி நிறைந்த சந்தையின் தாரக மந்திரத்தின்படி நெஸ்லே போன்ற ஒரு நிறுவனம் தொடர்ந்து தொழிலில் நீடித்திருப்பதற்காக இதுபோன்ற ஒரு சூழலைத் தவிர்ப்பதற்கான எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளத் தயங்காது, குறைந்தபட்சம் இந்தியாவிலாவது. ஆனால், நெஸ்லே வழுக்கி விழுந்துவிட்டது.

இந்திய அரசு விதித்திருக்கும் ஒழுங்காற்று நெறிமுறை களெல்லாம் பலவீனமானவை என்பதாலேயே கடுமையான அளவுகோல்களைப் பின்பற்றுவது குறித்து நெஸ்லே கவலைப் படாமல் இருந்திருக்குமோ? ‘இந்திய உணவு தரக்கட்டுப்பாட்டு ஆணையம்’ உணவுத் தயாரிப்புகளுக்கு அனுமதி வழங்குவதற்கு முன் பரிசோதித்து எப்போதாவது பார்த்திருக்கிறதா? அந்த ஆணையம் தொடர்ந்து பரிசோதனைகளை மேற்கொண்டிருந் திருக்குமென்றால் நெஸ்லேவும் மற்ற நிறுவனங்களும் நிச்சயம் கூடுதல் எச்சரிக்கையோடு இருந்திருக்கும். ஆக, அரசின் கட்டுப்பாட்டில் இயங்கும் ‘உணவு தரக்கட்டுப்பாட்டு ஆணைய’த்தைச் சேர்ந்த தரக்கட்டுப்பாட்டாளர்கள் தங்கள் பணியைச் செய்யத் தவறியிருப்பது தெளிவு.
மேகி விளம்பரங்களில் நடித்த பிரபலங்களின் மீது பெரும் பாலானோரின் கோபம் திரும்பியிருக்கிறது. அதற்குப் பதிலாக ‘இந்திய உணவு தரக்கட்டுப்பாட்டு ஆணைய’த்தின் மீதே கோபம் திரும்பியிருக்க வேண்டும். எனினும், ‘ஆரோக்கிய உணவு’ என்ற பெயரில் பிரபலங்கள் இந்தத் தயாரிப்பைப் பிரபலப்படுத்தாமல் இருந்திருக்கலாம். ஆனால், இந்தத் தயாரிப்பில் காரீயமும் மோனோசோடியம் குளுடாமேட்டும் அதிக அளவில் இருப்பது குறித்து அவர்கள் அறிந்திருப்பதற்கு வழி யேதும் இல்லை. ‘இந்திய உணவு தரக் கட்டுப்பாட்டு ஆணைய’த் தின் சொல்லைத்தான் (சரியாகச் சொல்வதென்றால் அதன் அனுமதியைத்தான்) அவர்கள் நம்பியிருந்திருக்கக் கூடும்.
மேகி விவகாரத்துக்கும் முன்னதாகவே ‘இந்திய உணவு தரக் கட்டுப்பாட்டு ஆணையம்’ குறித்து நாமெல்லாம் கவலைப்பட்டிருக்க வேண்டும். அரசிடமிருந்து சற்று இடைவெளியில் இயங்கும்போதுதான் தரக்கட்டுப்பாட்டாளர்கள் நன்றாகச் செயல்படுவார்கள். ‘இந்திய உணவு தரக் கட்டுப்பாட்டு ஆணையம்’ சுகாதாரம் மற்றும் குடும்ப நலத் துறைக்குக் கீழே இயங்குகிறது. எந்த அரசின் கீழும் அது திறம்பட இயங்கியதேயில்லை. முறைப்படி பார்த்தால், ‘இந்திய உணவு தரக் கட்டுப்பாட்டு ஆணையம்’ போன்ற ஒரு அமைப்புக்கு, அதுவும் துறைசார்ந்த நிபுணத்துவத்துடன் தொடர்புடைய அந்த அமைப்புக்கு ஒரு நிபுணர்தான் (விஞ்ஞானி என்றால் இன்னும் சிறப்பு) தலைமை வகிக்க வேண்டும். அதற்குப் பதிலாக, ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரிகள்தான் எப்போதும் தலைமை வகித்திருக்கிறார்கள். பெரும்பாலும், சுகாதாரத் துறை அமைச்சகத்துக்கு வேண்டியவர்களுக்குப் பணி ஓய்வுக்குப் பிறகுப் பரிசாக வழங்கப்படும் அலங்காரப் பதவியாகிவிட்டது இது.
இந்த ஆணையத்தின் செயல்பாடுகள் குறித்துக் கவலைகொள்வதற்கு மேலும் காரணம் இருக்கிறது. சில மாதங்களுக்கு முன்பும்கூட இந்த ஆணையம் செய்திகளில் அடிபட்டது. இறக்குமதி செய்யப்பட்ட பொருட்களைப் பெருமளவில் முடக்கிவைத்திருந்தது, ‘முறையாக’ லேபிள்கள் ஒட்டப்பட்டிருக்கவில்லை என்று காரணம் சொல்லப்பட்டது (ஒருவேளை இவர்களைவிட மேம்பட்ட தரக்கட்டுப்பாட்டாளர்களால் லேபிள் இடப்பட்டிருக்கலாம்!).
அந்தக் கால இன்ஸ்பெக்டர் ராஜ்ஜியத்தையே ‘இந்திய உணவு தரக் கட்டுப்பாட்டு ஆணைய’த்தின் இதுபோன்ற செயல்பாடுகள் நினைவுறுத்துகின்றன. இதற்கு பதிலாக இந்தியாவில் தயாரிக்கப்படும் உணவுப் பொருட்களில் உள்ள பிரச்சினைகளைக் கண்டுபிடிப்பதில் அவர்கள் கவனம் செலுத்தியிருக்க வேண்டாமா? மேகி போன்ற பரவலாக வாங்கப்படும் ஒரு உணவுப் பொருள் விவகாரத்தில் ‘இந்திய உணவு தரக் கட்டுப்பாட்டு ஆணைய’த்துக்கு ஏற்பட்டிருக்கும் மிக மோசமான தோல்வி இந்தியாவையே உலுக்க வேண்டும். நுகர்வோர் நலன்களைப் பாதுகாப்பதை நோக்கமாகக் கொள்ளும் நிர்வாக மற்றும் தரக்கட்டுப்பாட்டுக் கட்டமைப்புகளில் அடிப்படையான சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்படுவதற்கான கூக்குரலாக இது அமைய வேண்டும். இதைத் தவிர வேறு வழியே இல்லை.
இந்தியாவில் உள்ள தரக்கட்டுப்பாட்டாளர்களில் ஏதோ கொஞ்சம் வெற்றிகரமாக இயங்கிக்கொண்டிருப்பவர்கள் என்றால் சுயேச்சையான அமைப்பினர்தான். இவர்களில் கணிசமானோர் நல்ல நிபுணர்கள். சர்வதேசத் தர அளவுகோல்களை அடிப்படையாகக் கொண்டு இயங்குபவர்கள். ‘செபி’யும் ‘இந்திய வியாபாரப் போட்டிகள் ஆணைய’மும் இது போன்ற விஷயங்களில் குறிப்பிடத் தக்க அளவில் பணியாற்றியிருக்கிறார்கள். சர்வதேச அளவுகோல்களுக்கு இணங்க நடந்துவருவதால்தான் அவர்களால் இது சாத்தியமாகிறது. ‘முன்பேர வர்த்தகக் கட்டுப்பாட்டு ஆணைய’மும் ‘பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு கட்டுப்பாட்டு ஆணைய’மும் மோசமாகச் செயல்படுவதற்குக் காரணம் சர்வதேச அளவுகோல்களை அவை சரியாகப் பின்பற்றவில்லை என்பதுதான்.
பங்குச்சந்தை, வியாபாரப் போட்டிகள், தொலைத்தொடர்பு, விமானப் போக்குவரத்து போன்றவற்றில் பின்பற்றப்படும் தரமும் கடுமையான அளவுகோல்களும் உணவுப் பாதுகாப்பிலும் பின்பற்ற வேண்டிய தருணம் இது. சந்தைப் பொருளாதாரத்தின் எந்தத் திசையிலும் நுகர்வோருக்குப் பாதுகாப்பு வேண்டுமென்றாலும், உணவு என்பது மிகவும் அடிப்படையானது. ஏனெனில், அது உடல்நலத்தோடு தொடர்புடையது, வாழ்வா சாவா பிரச்சினை. மேகியின் வீழ்ச்சியினால் ஆக்கபூர்வமான மாற்றங்கள் ஏதும் ஏற்படுமென்று நம்புவோம். உணவுப் பாதுகாப்புக்கான புதுச் சட்டம் கொண்டுவரப்படுவதும், சுதந்திரமான, புதிய, நிபுணர்களைக் கொண்ட கட்டுப்பாட்டு ஆணையம் அமைவதும் என்பது அந்த மாற்றங்களாக இருக்க வேண்டும்.
-தீரஜ் நய்யார், பொருளாதார அறிஞர்.
நன்றி: ‘தி இந்து’
 ‘தி இந்து’ இணையதளத்தில் இந்தக் கட்டுரையைப் படிக்க: 

மேகி: இரண்டு நிமிடப் பாடம்



No comments:

Post a Comment