Wednesday, June 10, 2015

இன்னமும் தொடரும் கண்காணிப்பு


எட்வர்டு ஸ்னோடன்
('தி இந்து’ நாளிதழில் 09-06-2015 அன்று வெளியான கட்டுரையின் முழு வடிவம் இது. தமிழில்: ஆசை)

இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு இதே தினத்தில் (04-06-2014 அன்று ‘தி நியூயார்க் டைம்ஸ்’ இதழில் வெளியான கட்டுரை இது) மூன்று பத்திரிகையாளர்களுடன் சேர்ந்து ஹாங்காங்கில் உள்ள ஒரு ஹோட்டல் அறையில் பதற்றத்துடன் இயங்கிக்கொண்டிருந்தேன். அமெரிக்காவில் கிட்டத்தட்ட ஒவ்வொரு தொலைபேசி அழைப்பையும் ‘தேசிய பாதுகாப்பு முகமை’ (என்.எஸ்.ஏ.) பதிவுசெய்த விவகாரம் வெளியே கசிந்ததை இந்த உலகம் எப்படி எதிர்கொள்ளப்போகிறது என்று காத்திருந்தோம். எந்தக் குற்றமும் செய்யாத அப்பாவிக் குடிமக்களை உலகமெங்கும் உள்ள ஜனநாயக அரசுகள் எப்படியெல்லாம் கண்காணித்துக்கொண்டிருந்தன என்பது தொடர்பான ஆவணங்களை அதற்குப் பிறகான நாட்களில் நானும் அந்தப் பத்திரிகையாளர்களும் வெளியிட்டோம்.
ஒருசில நாட்களுக்குள் அமெரிக்க அரசு முதல் உலகப் போர் காலத்திய உளவுச் சட்டங்களின் கீழ் என்மீது குற்றச்சாட்டுகளைச் சுமத்தியது. என்னுடன் இருந்த பத்திரிகையாளர்கள் நாடு திரும்பினால் அவர்கள் கைதுசெய்யப்படும் அபாயத்தையோ, நீதிமன்றத்தால் சம்மன் அனுப்பபடும் நிலையையோ எதிர்கொள்ள வேண்டிவரும் என்று அவர்களின் வழக்கறிஞர்கள் எச்சரித்தார்கள். எங்கள் முயற்சிகளையெல்லாம் அமெரிக்காவுக்கு எதிரானவை என்றும், தேச விரோதம் என்றும்கூட குற்றம்சாட்டுவதற்கு அரசியல்வாதிகளிடையே போட்டாபோட்டி நிலவியது.
இருந்தாலும், தனிப்பட்ட அளவில் சில சமயம் ஒரு கவலை ஏற்பட்டதுண்டு. எந்த விதப் பலனும் ஏற்படாமல் போய்விடக் கூடிய விஷயத்துக்காக நாங்கள் எங்கள் வாழ்க்கையைப் பணயம் வைக்கிறோமோ என்ற கவலைதான் அது. எங்கள் முயற்சிகளை மக்கள் அலட்சியப்படுத்திவிடுவார்களோ, வழக்கமான சந்தேகத்துடன் நடந்துகொள்வார்களோ என்றெல்லாம் பயந்தோம்.
ஆனால், எனது பயமெல்லாம் பொய்த்துப்போனதில் எனக்கு ஏற்பட்ட நன்றியுணர்ச்சிக்கு ஈடே கிடையாது.

ஒபாமாவின் இரட்டை நாக்கு
இரண்டு ஆண்டுகள் ஆகிவிட்டன. எவ்வளவோ மாற்றங்கள் ஏற்பட்டிருக்கின்றன. ஒரே ஒரு மாதத்தில், என்.எஸ்.ஏவின் தொலைபேசி ஒட்டுக்கேட்புத் திட்டம் சட்டவிரோதமானது என்று நீதிமன்றம் தீர்ப்பளித்தது, நாடாளுமன்றமும் அந்தத் திட்டத்தைக் கைவிட்டது. இந்தத் திட்டத்தால் ஒரு பயங்கரவாதத் தாக்குதலைக் கூடத் தடுத்து நிறுத்த முடியவில்லை என்பதை வெள்ளை மாளிகையால் நியமிக்கப்பட்ட மேற்பார்வை ஆணையத்தின் விசாரணை கண்டறிந்தது. முன்பொருமுறை இந்தத் திட்டத்தை நியாயப்படுத்திப் பேசியதுடன், அதன் ரகசியங்கள் அம்பலமானதை விமர்சித்தும் பேசிய அதிபர் ஒபாமாகூட இப்போது அந்தத் திட்டத்தை இழுத்து மூட உத்தரவிட்டார்.
விழிப்புணர்வு பெற்ற மக்களின் சக்தி இதுதான்.
தேசப்பற்று சட்டத்தின் கீழ் தனிப்பட்ட தொலைபேசி அழைப்புகளைப் பெருந்திரளாகக் கண்காணித்ததை முடிவுக்குக் கொண்டுவந்தது குடிமக்கள் அனைவரது உரிமைக்கும் கிடைத்த வெற்றியே. அதே நேரத்தில், உலகளாவிய விழிப்புணர்வில் ஏற்பட்டிருக்கும் மாற்றத்தின் சமீபத்திய விளைவுதான் இது. 2003-லிருந்து ஐரோப்பாவின் பல நாடுகளில் இது போன்ற சட்டங்களும் செயல்பாடுகளும் சட்டத்துக்குப் புறம்பானவை என்று அறிவிக்கப்பட்டிருக்கின்றன. இதுபோன்ற வருங்கால செயல்பாடுகள் மீது புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருக்கின்றன. பெருந்திரள் கண்காணிப்பு என்பது அப்பட்டமான மனித உரிமைகள் மீறல் என்று ஐ.நா. அறிவித்திருக்கிறது. லத்தீன் அமெரிக்காவில், பிரேசில் மக்களின் முயற்சியால் மார்கோ சிவில் என்ற இணைய சுதந்திரத்துக்கான மசோதா நிறைவேறியிருப்பதையும் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டும். அரசாங்கத்தின் மீறல்களைச் சரிசெய்வதில், விழிப்புணர்வு பெற்ற குடிமக்களின் முக்கியப் பங்கை அங்கீகரிக்கும் விதத்தில் விசிலூதிகளைப் பாதுகாக்கும் புதிய சட்டங்களைக் கொண்டுவர வேண்டும் என்று ஐரோப்பிய மன்றமும் வலியுறுத்தியுள்ளது.
புதிய முன்னேற்றங்கள்
சட்டத்தின் எல்லைகளுக்கு அப்பாற்பட்டுப் பார்த்தால், இன்னும் அதிக முன்னேற்றம் ஏற்பட்டிருக்கிறது. நம்மை எப்போதும் சூழ்ந்திருக்கும் கருவிகளின் பாதுகாப்பை வலுவாக மாற்றியமைப்பதற்காகவும், இணையத்தின் பாதுகாப்பை அதிகரிக்கவும் தொழில்நுட்ப வல்லுநர்களெல்லாம் இடையறாது பாடுபட்டிருக்கிறார்கள். அரசாங்கங்கள் பெருந்திரள் கண்காணிப்பு மேற்கொள்வதற்கு ஏதுவாக முக்கியமான கட்டமைப்புகளில் காணப்பட்ட ரகசிய ஓட்டைகள் கண்டுபிடிக்கப்பட்டுத் திருத்தப்பட்டிருக்கின்றன. கணினித் தரவுகளை சங்கேதமாக்குதல் உள்ளிட்ட அடிப்படையான பாதுகாப்பு நடைமுறைகள் முன்பெல்லாம் தேவையற்றவையாகக் கருதப்பட்டன. ஆனால், ஆப்பிள் போன்ற நிறுவனங்கள்கூட இப்போது அந்த வழிமுறைகளைத் தனது தயாரிப்புகளில் வழங்குகின்றன. உங்கள் தொலைபேசி திருட்டுப்போனால்கூட உங்கள் அந்தரங்கம் பாதுகாக்கப்படுவதை இந்த வழிமுறைகள் உறுதிசெய்கின்றன. இதுபோன்ற கட்டமைப்பு சார்ந்த தொழில்நுட்ப மாறுதல்கள் அடிப்படையான அந்தரங்கப் பாதுகாப்பை நாடுகள் கடந்தும் வழங்கும், ரஷ்யர்கள் மீது தற்போது சுமத்தப்பட்டிருக்கும் ‘அந்தரங்கத்துக்கு எதிரான சட்டங்கள்’ போன்றவற்றிலிருந்து மக்களைப் பாதுகாக்கும்.
பின்வாசல் முறைகள்
அமெரிக்காவின் உரிமைகளுக்கான சட்டத்தில் குறிப்பிடப்பட்டிருக்கும் சுதந்திரச் செயல்பாடுகளுக்கு அடித்தளமே அந்தரங்கத்துக்கான உரிமைதான். நாம் நீண்ட தொலைவு வந்துவிட்டாலும் அந்தரங்கத்துக்கான உரிமை மீதான அச்சுறுத்தல் இன்னும் தொடர்ந்துகொண்டுதான் இருக்கிறது. உலக அளவில் முன்னணியில் இருக்கும் இணையச் சேவை நிறுவனங்கள் என்.எஸ்.ஏவின் பெருந்திரள் கண்காணிப்புத் திட்டத்தோடு சேர்ந்து செயல்பட்டிருக்கின்றன. வாடிக்கையாளர்களுக்காக அல்லாமல் வாடிக்கையாளர்களுக்கு எதிராகச் செயல்பட வேண்டுமென்று உலகெங்கும் உள்ள தொழில்நுட்ப நிறுவனங்களை அந்தந்த நாடுகளின் அரசாங்கங்கள் வற்புறுத்துகின்றன. கைபேசிகளின் இருப்பிடம் குறித்த பதிவுகளெல்லாம் பல கோடிக் கணக்கில் இன்னமும் இடைமறிக்கப்படுகின்றன; இதனால் பாதிக்கப்படுபவர்கள் குற்றவாளிகளா அப்பாவிகளா என்ற கவலையே இல்லாமல் இது செய்யப்படுகிறது. ‘பின்வாசல்’ முறைகள் மூலம் இணையத்தின் அடிப்படைப் பாதுகாப்பை அமெரிக்க அரசு வேண்டுமென்றே பலவீனப்படுத்துவதாகத் தெரியவந்திருக்கிறது. இதன் மூலம் நம் அனைவருடைய அந்தரங்க வாழ்க்கையும் திறந்த புத்தகங்களாக ஆக்கப்படுகின்றன. சாதாரண இணையப் பயனாளிகளின் நாட்டங்கள், தனிப்பட்ட ஈடுபாடுகள், பங்கேற்புகள் போன்றவை குறித்த ‘தரவைப் பற்றிய தரவுகள்’ (மெட்டாடேட்டா) வரலாற்றில் முன்னெப்போதும் இல்லாத அளவில் இடைமறிக்கப்படுகின்றன, கண்காணிக்கப்படுகின்றன: இந்தக் கட்டுரையை நீங்கள் படிப்பதையும் அமெரிக்க அரசு கண்காணித்துக்கொண்டிருக்கும்.
நமக்குப் புரியாத வகையிலா…
ஆஸ்திரேலியா, கனடா, பிரான்ஸ் போன்ற நாடுகளில் உள்ள இணைய உளவு நிபுணர்களெல்லாம் இணைய ஊடுருவல் கண்காணிப்பைச் செய்திருக்கிறார்கள். இவற்றால் எந்த தாக்குதலையும் தடுக்க முடிந்ததில்லை என்பதுதான் உண்மை. “நம்மால் படிக்க முடியாத வகையில் மக்கள் தங்களுக்கிடையில் கருத்துப் பரிமாற்றம் செய்வதை நாம் அனுமதிக்கத்தான் வேண்டுமா?” என்று சமீபத்தில் இங்கிலாந்து பிரதமர் டேவிட் கேமரான் கேள்வி எழுப்பியுள்ளார். கூடிய விரைவில் அதற்கான் பதிலை அவரே கண்டுபிடித்துவிட்டார், இப்படிப் பிரகடனப்படுத்துகிறார்: “நாமெல்லாம் அமைதியான, சகிப்புத்தன்மை மிக்க ஒரு சமூகமாகத்தான் வெகு காலமாக இருந்துவந்திருக்கிறோம், சட்டத்தை மதிக்கும் வரை உங்களை நாங்கள் தொந்தரவு செய்வதேயில்லை என்று நமது குடிமக்களிடம் சொல்லியிருக்கிறோம்.”
இந்த ஆயிரமாண்டு தொடங்கும்போது,
வளர்ச்சியடைந்த ஜனநாயக நாடுகளில் வெளிப்படையான சமூகம் என்ற கருத்தாக்கத்தைக் காப்பாற்றுவதற்காகத் தங்களின் தலைவர்களுக்கு எதிராகப் போராட வேண்டியிருக்கும் என்பதைக் குடிமக்களில் அநேகமாக யாருமே நினைத்துப்பார்த்திருக்க மாட்டார்கள். எனினும் அதிகாரத்தின் சமன்பாடுகள் இடம்மாற ஆரம்பித்துவிட்டன. பயங்கரவாதத்துக்குப் பிந்தைய தலைமுறையை நாம் இப்போது பார்த்துக்கொண்டிருக்கிறோம்; ஒரே ஒரு துயரச் சம்பவத்தை மட்டும் அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்படும் குறுகலான கண்ணோட்டத்தை இந்தத் தலைமுறையினர் உதறித்தள்ளிவிடுவார்கள்.

செப்டம்பர் 11, 2001-ல் இரட்டைக் கோபுரத் தாக்குதலுக்குப் பின்பு முதன்முறையாக ஒன்றை நாம் கண்ணுறுகிறோம். பதில் நடவடிக்கை, அச்சம் ஆகியவற்றுக்குப் பதிலாக மீள்தன்மை, காரண அறிவு ஆகியவற்றைத் தேர்ந்தெடுக்கும் அரசியல் உருப்பெற்றுவருகிறது. நீதிமன்றத்தில் கிடைக்கும் ஒவ்வொரு வெற்றியிலும், சட்டத்தில் மேற்கொள்ளப்படும் ஒவ்வொரு திருத்தத்திலும், அச்சத்தைவிட தகவல்கள்தான் பயனுள்ளவை என்பதை நாம் படம்பிடித்துக் காட்டுகிறோம். ஒரு உரிமையின் மதிப்பு என்பது அந்த உரிமை எதை மறைக்கிறது என்பதில் அல்ல, அது எதைப் பாதுகாக்கிறது என்பதில்தான் இருக்கிறது என்பதை ஒரு சமூகமாக நாம் மறுபடியும் கண்டுபிடிக்கிறோம்.
  • எட்வர்டு ஸ்னோடன், சிஐஏவின் முன்னாள் அதிகாரி, என்.எஸ்.ஏவின் முன்னாள் ஒப்பந்த ஊழியர், என்.எஸ்.ஏவின் பெருந்திரள் கண்காணிப்பு விவகாரத்தை அம்பலப்படுத்தியதால் கைது நடவடிக்கையிலிருந்து தப்பிப்பதற்காக ரஷ்யாவில் தற்காலிகமாக அரசியல் அடைக்கலம் புகுந்திருக்கிறார்.

    C ‘தி நியூயார்க் டைம்ஸ்’, தமிழில்: ஆசை  
  •  நன்றி:  ‘தி இந்து’
  • ‘தி இந்து’ நாளிதழின் இணையதளத்தில் இந்தக் கட்டுரையின் சற்று சுருக்கமான வடிவத்தைப் படிக்க: 

    இன்னமும் தொடரும் கண்காணிப்பு

     

No comments:

Post a Comment