ஆசை
முதன்முதலில் ஊரிலிருந்து சென்னைக்கு வந்தபோது என்னை மலைக்கவைத்த, பயமுறுத்திய விஷயம் என்ன தெரியுமா? மக்கள் கூட்டம், வாகனங்கள், கட்டிடங்கள், கடைகள், கடைகளில் உள்ள பொருட்கள் என்று எதையெடுத்தாலும் மிதமிஞ்சிக் காணப்பட்ட நிலைதான். முதன்முதலில் சென்னைக்கு வந்து சட்டை, பேண்ட் எடுக்கப்போனபோது சரவணா ஸ்டோரைப் பார்த்து எனக்கு மயக்கமே வந்துவிட்டது. என்னுடைய அளவுக்கு நல்ல பேண்ட் வேண்டும் என்று கேட்டபோது வகைவகையாக என்னென்னவோ எடுத்துப் போட்டார்கள். ஊரில் இருந்தவரை எனக்குத் தெரிந்தது இரண்டுதான், ஒன்று சாதா பேண்ட். இன்னொன்று ஜீன்ஸ் பேண்ட். ஒரு பேண்ட் கேட்டதற்கு என் முன்னால் மலைபோல் குவித்துப் போட்டதும் எனக்கு எதை எடுப்பது என்று தெரியாமல் சங்கடத்துடன் நின்றேன்.
தப்பிப்பதற்கு ஒரே வழி எதையும் எடுக்காமல் வெளியேறிவிடுவதுதான். ஆனால், நாம் ‘ஒரு பேண்ட்…’ என்று வாயெடுத்ததும் கடையின் ஊழியர் துரிதரயில் வேகத்தில் செயல்பட்டு கண்முன்னே அத்தனை பேண்ட்டுகளை அடுக்கிப் போட்டாரே, அவர் என்ன நினைப்பாரோ, என்ன சொல்வாரோ என்ற குற்றவுணர்ச்சி ஏற்பட்டது. வாடிக்கையாளர்களின் குற்றவுணர்ச்சியை முதலீடாக எப்படி மாற்றுவது என்பதை அறிந்தவர்கள் கடைக்காரர்கள். “நீங்களாகப் பார்த்து எனக்குப் பொருத்தமாக ஏதாவது எடுத்துப் போடுங்களேன்” என்றால் ஒரு பத்து பேண்ட்டை எடுத்துப் போட்டார் ஊழியர். “ஒரு பேண்ட்டுதான் வேணும்” என்றதற்கு என்னை முறைத்ததுபோல் ஒரு பார்வையை வீசிவிட்டு ஒரு பேண்ட்டை எடுத்துப் போட்டார். அதை வாங்கிவிட்டு வேகவேகமாக வெளியேறிவிட்டேன். இதைவிட உணவகங்களில் இன்னும் சிக்கல். ஒவ்வொரு முறையும் ஏதாவது வித்தியாசமாகச் சாப்பிட ஆசைப்பட்டு உணவுப்பட்டியலை (மெனு) கேட்டு வாங்கிப் பார்த்தால் தோசை, இட்லி, சப்பாத்தி தவிர எதைப் பற்றியுமே தெரியாது. பலமுறை புரட்டிப்பார்த்துவிட்டு வேறு வழியில்லாமல் தோசையையோ இட்லியையோ சொல்வது பலமுறை நடந்திருக்கிறது. இந்த நெருக்கடியை நவீன வாழ்க்கையின் எல்லாத் தேர்வுகளிலும் நாம் வெவ்வேறு சூழல்களில் எதிர்கொண்டுதான் வருகிறோம். எதையெடுத்தாலும் மிகக் குறைவான வகைகள் கிடைத்துவந்த காலத்தைவிட எல்லாமே அளவுக்கதிகமான வகைகளில் கிடைக்கும் இந்தக் காலத்தில் நம் தெரிவுகள் (choices) மேம்பட்டிருக்கின்றனவா, நம் வாழ்க்கை மேம்பட்டிருக்கின்றனவா என்ற கேள்விகள் எழாமல் இல்லை.
என்னைப் போலவே ஜீன்ஸ் பேண்ட் வாங்கப்போய் எனக்கேற்பட்டது போன்ற அனுபவத்தை எதிர்கொண்ட பேரி ஷ்வாட்ஸ் என்ற அமெரிக்க உளவியலாளர் தனது அனுபவத்தை ஒரு புத்தகமாகவே எழுதிவிட்டார். ‘The Paradox of Choice: Why More Is Less’ என்பது அதன் தலைப்பு. அதாவது ‘தேர்ந்தெடுப்பதின் முரண்: அதிகம் என்பதை ஏன் குறைவு என்று கருதவேண்டும்’ என்று தமிழில் சொல்லிவிடலாம். கிட்டத்தட்ட தலைப்பே எல்லா விஷயங்களையும் சொல்லிவிடுகிறது. இதே விஷயத்தைப் பற்றிய அவர் நிகழ்த்திய டி.ஈ.டி. உரையும் (TED Talk) முக்கியமானது. நவீன வாழ்க்கை நம்மிடம் அளவுக்கதிகமாகத் திணித்துத் திக்குமுக்காடச் செய்கிறது என்கிறார் ஷ்வாட்ஸ். அவர் காட்டும் மேற்கத்திய உதாரணங்களை மனதில் கொண்டு நம் ஊரில் கடைகள் வளர்ச்சி பெற்ற விதத்தைப் பார்த்தாலே சுவாரசியமாக இருக்கும். தெருமுனை செட்டியார்க்கடை, தள்ளுவண்டி, மளிகைக் கடை, மார்க்கெட், சூப்பர் மார்க்கெட், டிப்பார்ட்மெண்டல் ஸ்டோர் என்று விரிவடைந்து இன்று சென்னையில் உள்ள எக்ஸ்பிரஸ் அவென்யூ, ஃபீனிக்ஸ் மால் என்று கடைகளின் வரலாறு அசுரத்தனமான பரிணாமத்தை அடைந்திருக்கிறது. அதேபோல் கைபேசியின் பரிணாமத்தையும் பார்க்கலாம். முப்பது ஆண்டுகளுக்கு முன்பு ஊருக்கு ஒன்றிரண்டு ‘லேண்ட்லைன்’ தொலைபேசிகள் இருந்தாலே அபூர்வம். அப்புறம் தெருவுக்கு ஒன்று என்ற இலக்கை எட்டிப்பிடித்த வேளையில் கைபேசிகள் வந்தன. வீட்டுக்கு ஒரு கைபேசி என்றதெல்லாம் பழைய காலம். குறைந்தபட்சம் இன்று ஒரு வீட்டில் மூன்று கைபேசியாவது இருக்கிறது. கைபேசிக்குள் சென்று பார்த்தால் இன்னும் மலைப்பு. ஆரம்பத்தில் பேசுவதற்கு மட்டும் இருந்த கைபேசி இன்று பேசுவதை இரண்டாம் பட்சமாக ஆக்கிவிட்டது. கைக்குள்ளே ஒரு குட்டிக் கணிப்பொறி, திரையரங்கம், மருத்துவர், ஆசிரியர், வழிகாட்டி, வெளிச்சம் காட்டி என்று ஆயிரக் கணக்கான அவதாரங்களை நாம் காண முடிகிறது. டாக்டர் ஷ்வாட்ஸ் எழுதிய புத்தகத்தில் உள்ள கேலிச்சித்திரத்தில் கைபேசி கடைக்குச் சென்று ஒரு பெண், “அதிகமாக எதுவும் செய்யாத கைபேசி ஏதாவது இருக்கிறதா?” என்று கேட்கிறாள். “அப்படி எந்தக் கைபேசியும் இல்லை” என்று கடைக்காரர் பதிலளிக்கிறார். ஆக, நம்மால் பயன்படுத்தவே முடியாத அளவுக்கு மிகுதியான அம்சங்களை நம்முடைய கைபேசி கொண்டிருக்கிறது. கைபேசி மட்டுமல்ல, நாம் பயன்படுத்தும் எந்தொரு நவீன சாதனத்தையும் இருபது, முப்பது ஆண்டுகளுக்கு முந்தைய அதன் ஆதி வடிவத்துடன் ஒப்பிட்டுப்பார்த்தால் இதையெல்லாம் வைத்துக்கொண்டு மனிதர்கள் என்னதான் செய்கிறார்கள் என்ற கேள்வியும் இயல்பாக எழும்.
நவீன முன்னேற்றங்கள் அள்ளித்தரும் வாய்ப்புகளைக் குறைசொல்லும் டாக்டர் ஷ்வாட்ஸ் ஒரு பழமைவாதியோ என்று நமக்குச் சந்தேகம் வரலாம். அப்படியல்ல! நாம் பெருமைப்படும் அந்த வாய்ப்புகளெல்லாம் யாரிடம் அள்ளிக் குவிக்கப்படுகின்றன, அதற்கான விலை என்ன என்பதையெல்லாம் கணக்கிலெடுத்துப் பார்க்க வேண்டும்.
இஸ்ரேலைச் சேர்ந்த புகழ்பெற்ற வரலாற்றாசிரியரும் எழுத்தாளருமான யுவால் நோவா ஹராரியின் இரண்டாவது புத்தகம் ‘ஹோமோ டீயஸ்’ விசித்திரமான ஒரு முரண்பாட்டைப் பேசுகிறது. “சாப்பாடு கிடைக்காமல் சாகும் மனிதர்களின் எண்ணிக்கையைவிட அதிகமாகச் சாப்பிடுவதால் சாகும் மனிதர்களின் எண்ணிக்கை வரலாற்றிலேயே முதன்முறையாக இப்போதுதான் அதிகம்” என்கிறார் ஹராரி. அபரிமிதம் என்பது நம்மைக் கொல்லும், அழிக்கும் என்பதற்கு நம் காலமே பெரும் சாட்சி.
அதிக வாய்ப்புகள், வகைகள் நம் கண் முன் இருந்தால் அது நம்மை உளவியல்ரீதியாக குழப்பத்தை ஏற்படுத்திப் பெரும்பாலும் மோசமானதையே தேர்ந்தெடுக்க வைத்துவிடும் என்கிறார் டாக்டர் ஷ்வாட்ஸ். தேர்ந்தெடுக்கும் தருணத்தில் நாம் குறிவைத்த பொருள் மற்ற எல்லாவற்றையும் விட சிறந்தது போன்ற எண்ணம் கண நேரம் ஏற்பட்டாலும் ‘நாம் தவறான ஒன்றைத் தேர்ந்தெடுத்துவிட்டோமோ’ என்ற குழப்பம் கொஞ்ச நேரத்தில் நமக்கு ஏற்பட்டுவிடும். அதற்கு முன்புவரை நாம் ஒதுக்கிய பொருட்களின் குறைகளும் நாம் தேர்ந்தெடுத்த பொருளின் நிறைகளும் மட்டுமே நம் கண்ணுக்குத் தெரிந்தன. தற்போதோ நாம் தேர்ந்தெடுத்த பொருளின் குறைகளும் நாம் ஒதுக்கிய அத்தனைப் பொருட்களின் நிறைகளும் மட்டுமே நம் கண்ணுக்குத் தெரிய ஆரம்பிக்கின்றன.
கூடவே, மனிதர்கள் தாங்கள் முடிவெடுப்பதைவிட மற்றவர்கள் முடிவெடுத்தால் நல்லது என்று பொறுப்பிலிருந்து நழுவிக்கொள்ள விரும்புபவர்கள் என்கிறார் டாக்டர் ஷ்வாட்ஸ். ஆனால், அடுத்தவர்கள் தங்களுக்காகத் தேர்ந்தெடுத்ததை அவர்கள் ஏற்றுக்கொள்வதும் இல்லை. குறைகூறிக்கொண்டே இருப்பார்கள். என்னவோ தாங்களாகத் தேர்ந்தெடுத்தால் இதைவிட நன்றாகத் தேர்ந்தெடுத்திருப்போம் என்பதுபோல் அங்கலாய்த்துக்கொள்வது அதிகம்.
முதலாளித்துவத்தின் கட்டுப்படுத்த முடியாத வளர்ச்சிக்கு இத்தனை வகைகள் இருப்பது அவசியம். அதையே எல்லா அரசுகளும் ஊக்குவிக்கின்றன என்கிறார் டாக்டர் ஷ்வாட்ஸ். ‘அதிகபட்ச மக்கள்நல அரசாக அமைய வேண்டும் என்றால் மக்களின் சுதந்திரத்தை விரிவுபடுத்த வேண்டும்; சுதந்திரத்தை விரிவுபடுத்த வேண்டுமென்றால் தெரிவுகளை விரிவுபடுத்த வேண்டும்; அதிக அளவிலான தெரிவுகள் என்றால் அதிக அளவிலான சுதந்திரம் என்று அர்த்தம்” என்பதை அரசுகள் தாரக மந்திரமாகக் கொண்டிருக்கின்றன. இந்த மந்திரம் முதலாளிகளுக்கும் பணக்காரர்களுக்கும்தான் உதவுமே தவிர சாதாரண ஏழை எளிய மக்களுக்கு இல்லை.
கொலம்பியா வணிகக் கல்லூரியின் பேராசிரியரான ஷீனா ஐயங்கார் வகைமைகளும் தெரிவுகளும் வணிகத்துக்கான உத்திகள்தான் என்கிறார். பார்வையற்றவரான ஷீனா நகச்சாயம் பூசிக்கொள்வதற்காக ஒரு அழகுநிலையம் செல்கிறார். இளஞ்சிவப்பு நிறத்தில் நகச்சாயம் பூசிக்கொள்ள வேண்டும் என்று கேட்கிறார் ஷீனா. ‘பேலட் ஸ்லிப்பர்’, ‘அடோரபிள்’ என்று இரண்டு வகைகள் இருக்கின்றன என்று அழகுநிலையப் பெண்கள் சொல்கிறார்கள். ‘இரண்டும் இளஞ்சிவப்புதானே என்ன வித்தியாசம்?’ என்று கேட்கிறார் ஷீனா. ‘பேலட் ஸ்லிப்பர் என்பது இளஞ்சிவப்பு நிறத்தின் மிகவும் அழகான வகை. இதையே பூசிக்கொள்ளுங்கள்’ என்கிறார் ஒரு பெண். இன்னொரு பெண்ணோ, ‘அடோரபிள் என்பது இளஞ்சிவப்பின் கவர்ச்சிகரமான வகை, இதையே பூசிக்கொள்ளுங்கள்’ என்கிறார். இரண்டுக்கும் இடையிலான வேறுபாட்டை ஆராய்ச்சி செய்வதற்காக அந்த நகச்சாயங்களை வாங்கிக்கொண்டு செல்கிறார் ஷீனா. அவற்றின் லேபிள்களை உரித்துவிட்டுப் பல்வேறு பெண்களை இரண்டில் ஒரு வகையைத் தேர்வுசெய்யச் சொல்கிறார். கணிசமான பெண்கள் என்ன சொன்னார்கள் தெரியுமா? “விளையாடுகிறீர்களா, இரண்டும் ஒரே வகைதான்” என்றார்கள்.
இது வகைவகையாய் இனம்பிரிக்கும் வணிக உலகின் தந்திரங்களையும் அதற்கு அடிமையான நம் மனதையும் வெளிச்சம்போட்டுக் காட்டிவிட்டதல்லவா ஷீனா ஐயங்காரின் ஆராய்ச்சி.
அமெரிக்கர்கள் நுணுக்கமான வேறுபாடுகளுக்கு உயிரையே கொடுப்பவர்கள். அதற்கு அவர்களுக்கு வசதி இருக்கிறது. பெரும்பாலான நாடுகளில் ஒன்றுக்கே வசதி இல்லாதபோது அமெரிக்கர்கள் ஆயிரம் வகைகளிலும் திருப்தி அடையாதவர்கள். அந்த மனநிலையை அவர்கள் உலகெங்கும் ஏற்றுமதி செய்கிறார்கள். ஆக, எவ்வளவு வசதி வந்தும், வகைவகையாய்ப் பொருட்கள் கிடைத்தும் அப்படியில்லாத கடந்த காலத்தைவிட நமக்கு வாழ்க்கையில் கூடுதல் நிம்மதியும் சந்தோஷமும் ஓய்வும் கிடைக்கவில்லை என்றால் என்ன அர்த்தம்?
“எல்லாம் மோசமாக இருந்த காலத்தில் எல்லாமே ஏன் இப்போதைவிட நன்றாக இருந்ததென்றால் அப்போதெல்லாம் மக்களை ஆச்சரியத்துக்கும் மலைப்புக்கும் உள்ளாக்கக்கூடிய அனுபவங்கள் சாத்தியமாக இருந்ததுதான் காரணம். இப்போது நம் எதிர்பார்ப்புகளெல்லாம் மிகவும் அதிகமாக இருப்பதால் ஆச்சரியத்துக்கும் மலைப்புக்கும் திருப்திக்கும் வாய்ப்பு இல்லாமல் போய்விட்டது. ஆகவே, மகிழ்ச்சிக்கான சாவி என்பது குறைந்தபட்ச எதிர்பார்ப்புதான்” என்கிறார் டாக்டர் ஷ்வாட்ஸ்.
அதிக அளவில் நம் முன்னே வாய்ப்புகள், தெரிவுகள் இருந்தால் நமது மூளையும் செயல்பாடுகளும் பக்கவாதம் வந்தவை போன்று ஆகிவிடும் என்கிறார் ஷ்வாட்ஸ். உலகில் நிலவும் அதீத ஏற்றத்தாழ்வுகளுக்கும் அதீதமான தெரிவுகளுக்கும் இடையில் நெருங்கிய தொடர்பு இருக்கிறது.
பணக்கார நாடுகளுக்கு அதிகம்தான் பிரச்சினை என்றால் ஏழை நாடுகளுக்கு குறைவுதான் பிரச்சினை. ஆகவே, செல்வம், வளம், வாய்ப்புகள், தெரிவுகள் போன்றவை அதிகம் உள்ள இடத்திலிருந்து அதிகம் இல்லாத இடங்களுக்குப் பகிர்ந்தளிக்கப்பட்டால் அதனால் பலனடைவது ஏழைகள் மட்டுமல்ல, பணக்காரர்களும்தான் என்கிறார் டாக்டர். ஏனெனில், “அதிகம் செலவுபிடிக்கக்கூடிய, சிக்கலான தெரிவுகள் நமக்கு எந்த விதத்திலும் உதவுவதில்லை நம்மை மிக மோசமான நிலைக்கு ஆளாக்கிவிடுகின்றன” என்கிறார் அவர்.
ஆகவே, அடுத்த முறை ஒரு டிபார்ட்மெண்டல் ஸ்டோரிலோ அமேஸானிலோ ஒரு பொருளை வாங்குவதற்கு முன்பு ஒரு கேள்வியை நாம் கேட்டுக்கொண்டால் போதும். “இந்தப் பொருளால் பிறரோ நானோ துன்பத்துக்கு உள்ளாவோமோ?” என்பதுதான் அந்தக் கேள்வி.
No comments:
Post a Comment