Wednesday, February 28, 2024

ஒரு ஸ்கிரீன்ஷாட் போதிமரத்தின் நிழலில்...



ஒரு ஸ்க்ரீன்ஷாட் விடியல்
ஆம்
அதை அப்படித்தான்
சொல்ல வேண்டும்

ஒன்றிரண்டு உயிர்நண்பர்களின்
பதற்றமும்
அதைத் தொடர்ந்து
அதைவிட நெருக்கம் குறைந்த
நண்பர்களின் மௌனமும்
காலையிலிருந்து
அழைத்துக்கொண்டிருக்கின்றன

தெரிந்தவர்கள்
தெரியாதவர்கள் என்று
எங்கிருந்தெல்லாமோ புறப்பட்டு
அடித்துக்கொண்டிருந்தார்கள்
நண்பன்தான் சொன்னான்
நான் தொடக்கத்திலேயே
தூரப் போய்விட்டேன்

ஒன்றிரண்டு ஆதரவுக் குரல்களும்
எழுந்ததாய்ச் சொன்னான்
தனியே அவர்களை அழைத்து
வேண்டாமென்று சொல்லிவிட்டேன்

இனி நான்
எல்லாவற்றையும்
முதலிலிருந்து
தொடங்க வேண்டும்
என்று நண்பன் சொன்னான்

ஆனால்
அதற்கு ஒரு வாரமாவது ஆகும்
இதையும்
நண்பன்தான் சொன்னான்

இரண்டாவது நாள்
அதிகாலையில்
பக்கத்துக் கடையில்
டீ சாப்பிடப் போனேன்

வாக்கிங் போய்விட்டு வந்த ஒருவர்
எனக்கருகே
கையில் வடையுடன்
வந்து உட்கார்ந்து
கைபேசியை நோண்ட
ஆரம்பித்தார்

வடையை ஒரு கடியும்
கடித்துக்கொண்டார்
சூடு அதிலிருந்து
பிரிந்தது
அதிகாலையுடன்
கலந்ததைக் கண்டேன்

இப்போது
பழக்க வெறுமையில்
அவர் கைபேசியை
எட்டிப்பார்த்துவிட்டேன்

யாருடைய பதிவிலோ இருந்த
எனது ஸ்கிரீன்ஷாட்தான் அது
அதனைப் பெரிதுபடுத்திப்
பார்த்துக்கொண்டிருந்தார்

எட்டிப்பார்த்தபோது
அந்த வாசகங்கள்
முழுமையாய்
என்னுடையவை 
ஆகியிருந்தன

இந்த டீக்கு
நான் நன்றி சொல்ல
வேண்டும்

அவ்வளவு
அமைதியுடன்
எழுந்துவிட்டேன்
      -ஆசை


குறிப்பு: இந்தக் கவிதைக்குப் பயன்படுத்தியிருக்கும் படங்கள் சித்தரிப்பு நோக்கத்துக்காகப் பயன்படுத்தியவை. யாருடைய மனதையும் புண்படுத்தினால் மன்னிக்கவும்!

No comments:

Post a Comment