Wednesday, October 14, 2020

கொண்டலாத்தி: கண்சிமிட்டும் பறவைக் கணங்கள்


டி.என். ரஞ்சித்குமார்
அறியாமையோடு இயற்கையை நேசிக்கும் கண்கள் இயல்பான ஞானம் கொண்டுவிடுகின்றன. எவ்விதக் கற்பிதங்களின் சுவடுகளும் காட்சிகளை பகுத்தறிவுக்கு விளக்க வேண்டிய அவசியமற்ற ஒருமை நிலை சலனமற்றது. தன் மீது விழும் நிழல்களையும் பிம்பங்களையும் பிரயத்தனமின்றி தன்னியல்பாக தன் மேற்பரப்பில் பிரதிபலிக்கும் நீர்தேக்கம், தன் பிரதி உருவத்தை பிரதிபலித்துக் காட்டும் நீர்த்தேக்கத்தின் இருப்பின் பிரக்ஞையின்றியே தன் இருப்பை ஸ்திரப்படுத்திக் காட்டும் காட்சிப் பொருள், இவ்விரண்டுக்கும் இடையேயான சங்கேதப் பரிமாற்ற இடைவெளியில் நிலவும் ஆதிகால மௌனம். இந்த மௌனத்தின் அரவணைப்பில் தன்னைக் கரைத்து சாட்சியக் குரலை அவதானித்து இருபுற உரையாடல்களின் குளிர்மையையும் கதகதப்பையும் சொடுக்கில் உடைந்துவிடும் நீர்க்குமிழியைக் கைக்குக் கை மாற்றுவது போல் பத்திரமாக ஏந்தி நம் மனக்கரங்களில் ஒப்படைக்கிறது ஆசையின் கவிதை மொழி.
விதவிதமான பறவைகளைப் பற்றிய நுணுக்கமான அசைவுகளையும் அவற்றின் தனித்துவமான உருவ அமைப்புகளையும் மெச்சுக் கொட்டும் உள்ளப்பூரிப்பில் தொனிக்கும் ஆசையின் கவிதை மொழியின் வியப்பு காணாததைக் கண்டுவிட்ட அறிவியலாளனின் வியப்பு அல்ல, மாறாக தன்னைச் சுற்றி நிறைந்திருக்கும் இயற்கையின் பூரணத்தில் கரைந்து திளைக்கும் சிறுவனின் மனவியல்பும் எளிமையும் கூடிய பாந்தமான வியப்பு.
அறிந்துகொண்டதாக நம்பும் தன்மையில் உறைந்து விட்ட அலுப்பை சுக்கல் சுக்கலாக உடைத்து அறியாமை நோக்கி பின்னகர்த்துவது பெரிய சவால். புதிதாக என்ன இருக்கிறது என்று தேடும் மனதுக்கு கண்டுகொள்ளப்படாமல் இருப்பவற்றை தொட்டுக்காட்டும் கரங்கள், அறியாமையின் கண்கொண்டு பார்க்கும் போது காட்சிப்படும் அற்புதங்களை வரைந்து காட்டும் பயிற்சி பெற்றனவாக இருக்க வேண்டும். கொண்டலாத்தி அப்படியான கரங்களால் வரையப்பட்ட சித்திரங்கள் அடங்கிய கவிதைத் தொகுப்பு.
வெளியே அகமாகி, கண் சிமிட்டும் கணத்தில் இணைந்து துண்டித்துப் போன நிகழ்வின் அதிர்வலையை உருவாக்குகிறது, "தையல்சிட்டு பறந்து சென்ற பின்" என்ற கவிதை
//தையல்சிட்டின் கனம்தான்
இருக்கும்
இந்தக் கணம்
அதிர்ந்துகொண்டிருக்கிறது
அது
தையல்சிட்டு பறந்து சென்ற பின்
அதிரும்
இலைக்காம்புபோல//
ஒருமுறைக்கு மறுமுறை வாசிப்பில் வேறு வேறு கற்பனைகளைக் காட்டி இன்னதென்று வரையறுத்துக் கூற முடியாத ஆனந்தத் தத்தளிப்பில் அலையாட வைக்கிறது, "இந்தக் கணத்தின் நிறம் நீலம்" என்ற கவிதை
//தளும்பத் தளும்பப் பொங்கும் நீலம்
சிறகிலிருந்து நூலாய்ப் பிரியும்
ஒளியும் நனைய காற்றும் நனைய
பெய்யும் மழையின் பெயர் நீலம்
நுரைத்து நுரைத்து அலைகள் பாய்ந்து
தெறிக்கும் துளியில் ஒளியும் ஏறி
விரியும் வில்லில் தொடங்கும்
இந்த ஆற்றின் பெயர் நீலம்
கரையக் கரையப் பறந்து சென்று
முடியும் புள்ளியில் மூழ்கும் மீன்கொத்தி
அலைகள் தோன்றி அதிரும்
இந்தக் கணத்தின் நிறம் நீலம் //
"காற்றுக்கொத்தி" "மழைக்கொத்தி" என்ற தலைப்புகளில் இடம்பெறும் இரண்டு கவிதைகள் ஒன்றுக்கொன்று தொடர்புடையவை. இரண்டிலும் வரும் பெண் முதலாவதில் அரூபமான ஒன்றை விளங்கியும் இரண்டாவதில் ஒன்றை விளக்கியும் மறைந்து போகிறாள்.
"முதல் தோசை" என்ற கவிதையில், அடுப்பைப் பற்ற வைத்ததும் உணவு கேட்டு வந்து அமர்கிறது காகம் ஒன்று. அதன் கரைதலில் ஒரு அதட்டல். வீட்டு உறுப்பினர்கள் பற்றிய எண்ணமேதுமில்லை அதற்கு. கவிதையின் முடிவு இவ்வாறு வருகிறது,
//காகமே
நீ உரிமையாய்க் கேட்கும்போது
திருட்டுப் பொருளைத்
திருப்பிக் கொடுப்பதுபோல்
தருகிறேன் உன்னிடம்
ஆற வைத்த
முதல் தோசையை //
அறியாமைக் குணம் வைக்கும் நம்பிக்கை கடவுளைக் குற்றவுணர்வுக்குள்ளாக்கும் தவிர்க்க முடியாத தருணத்தைப் பதிவு செய்கிறது "அந்தத் தவிட்டுக்குருவி இறந்துகொண்டிருந்தது" என்ற கவிதை.
தொகுப்பில் உள்ள பிற கவிதைகளின் இயல்புகளை இன்னும் ஒளியுடன் மெருகேற்றிக் காட்டுகிறது, "சிறியதின் இடம்" என்ற கவிதை. அதன் ஒரு பகுதியாக கீழ்க்கண்டவாறு வருகிறது.
//விதிகள் தெரியாததால்
இவ்வளவு இயல்பாக
விளையாடி
வெற்றிகொள்கிறது
சகலத்தையும்
அவ்வளவு
உறுதியோடும்
இறுமாப்போடும்
அசைவற்ற நம்பிக்கையோடும்
வீற்றிருக்கும்
பிரம்மாண்டங்களின்
அஸ்திவாரத்தைச்
சுமந்து திரிகின்றன
இவ்வுலகின் நுண்மைகள்
வெகு இயல்பாக//
அடையாளம் மற்றும் கணம் ஆகிய ஜாலங்களை மொழி கொண்டு நெய்கின்றன, "பெயர்களின் பயனின்மை", "அதே இடம்", "என் இடம்" ஆகிய கவிதைகள்.
தொகுப்பில் உள்ள அனைத்து கவிதைகளும் கவர்ந்தன என்றாலும் சர்ரியலச ஓவியம் போல மனதில் சித்திரமாகப் பதிந்த கவிதை, "பறவைகளின் வரைபடம்". சப்தங்களாலும் ஒளியாலும் ஒரு வரைபடத்தை உருவாக்கிக் கொண்டிருக்கிறாள் ஒருத்தி. வரைபடத்தின் நீள அகல உயர அளவைப் பொறுத்து வைக்கப்படும் வஸ்துக்கள் பேருண்மைகளாலும் பெருங்காதலாலும் பொதியப்பட்டு வரைபடத்தை நிரப்புகின்றன. தானே வரைபடத்தின் நிலமாக மாறுகிறாள்.
இத்தொகுப்பிலுள்ள "இந்தக் கணத்தின் நிறம் நீலம்" என்ற கவிதையின் வரிகள் யதேச்சையாக பதிவொன்றின் மூலம் கண்ணில் பட்டதும் அவை என் கற்பனைக்குள் உருண்டு திரண்டு உருவாக்கிய பரவசமான ஒளிக்கலவைகளே தொகுப்பின் மீதான ஈர்ப்பு வர முதல் அறிமுகத் தருணமாக அமைந்தது.

கவிதைகளில் என் வாசிப்பனுபவம் மிக மிகக் குறைவு என்ற போதும் ஆசையின் இத்தொகுப்பு கையாண்டிருக்கும் மொழியிலும் பேசியிருக்கும் அம்சங்களிலும் பாராட்டும் வரவேற்பும் பெறத்தக்கப் படைப்பு என்பதை மட்டும் மனநிறைவுடன் சொல்ல முடிகிறது.

(டி.என். ரஞ்சித்குமார், இளம் வாசகர், அவர் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் எழுதிய விமர்சனத்தை இங்கே பகிர்ந்துகொள்கிறேன்.)

புத்தக விவரங்கள்:

கொண்டலாத்தி
(கவிதைகள்)
ஆசை
2010
பக்கங்கள் : 64
கெட்டி அட்டைக்கட்டு
பறவைகளின் 31 வண்ணப் படங்கள்
ISBN 978-93-82394-27-3
விலை: ரூ. 180 
க்ரியா வெளியீடு
தொடர்புக்கு: 
+91-72999-05950 / +91- 9384057574

No comments:

Post a Comment