ஆசை
பத்தொன்பதாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் ஸ்பெயினின் மல்லோர்க்காவில் உள்ள பியர்ன் என்ற மலைக்கிராமத்து பிரபுத்துவக் குடும்பத்தின் கதையைச் சொல்லும் நாவல் இது. பியர்னில் உள்ள பிரபுத்துவக் குடும்பத்தின் தலைவர் டான் டோனியும் அவரது மனைவி டோனா மரியா அந்தோனியாவும் ஒரே நாளில் அடுத்தடுத்து மர்மமான முறையில் இறந்துபோவதிலிருந்து கதை தொடங்குகிறது. அவர்கள் இறந்த பின் அவர்களுடைய வாழ்க்கையை அவர்களின் குடும்பப் பாதிரியாரும் நடுத்தர வயதினருமான டான் ஜோன் தனது நண்பர் ஒருவருக்குக் கடிதத்தின் வழியாகச் சொல்வதுபோல் அதை அமைக்கப்பட்டிருக்கிறது. டான் டோனியுடன் தனக்கிருந்த இருபதாண்டுகளுக்கும் மேற்பட்ட உறவில் தான் கண்டவற்றையும் டான் டோனி எழுதிய ‘நினைவுகள்’ என்ற நூலின் கைப்பிரதியில் தெரிந்துகொண்டவற்றையும் கொண்டு டான் ஜோன் அவர்களின் கதையைச் சொல்கிறார். மரபில் மூழ்கியிருக்கும் பியர்ன் கிராமத்தில் புதுமை விரும்பியான டான் டோனி ஒரு சூனியக்காரராகப் பார்க்கப்பட்டுவருகிறார். தானே ஒரு பிரபுவாக இருந்தாலும் அடுத்து வரும் காலம் சோஷலிஸத்தின் காலமாகத்தான் இருக்கும் என்று டான் டோனி உணர்கிறார். டான் டோனி இறந்த பின் வரும் சொர்க்கத்தின்மேல் கவனம் செலுத்தாமல் மண்ணுலகின் சொர்க்கத்தின்மீதுதான் கவனம் செலுத்துகிறார். அதற்கான அடையாளங்களுள் ஒன்றுதான் தன்னுடைய உறவினரான 18 வயது க்ஸிமாவுடன் அவர் பாரீஸுக்குச் சென்று இவ்வுலக இன்பங்களில் திளைத்தது, மறுபடியும் ஒருமுறை பாரீஸுக்கு வந்து பலூனில் பறந்தது போன்ற சாகசங்கள் எல்லாம். கதைசொல்லியும் பாதிரியாருமான டான் ஜோனின் கருத்துப்படி டான் டோனி மிகவும் நல்லவராக இருந்தாலும் சில பாவங்களைச் செய்திருக்கிறார். எனினும், இறக்கும் தறுவாயில்கூட டான் டோனி பாவ மன்னிப்பு கோரவில்லை. அவருக்கான பாவ மன்னிப்பு அவர் எழுதிய ‘நினைவுகள்’ நூல்தான்.
மொழிபெயர்ப்பாளர் கூறியிருப்பதுபோல் இந்த நாவல் தமிழில் மொழிபெயர்ப்பதற்கு சவாலானதுதான் என்றாலும் அவ்வளவு சவால் இல்லாத இடங்களிலும் கூட அவர் சறுக்கியிருக்கிறார். Pagan, paganism என்ற வார்த்தைகளை ‘சமயச்சார்புக்குப் பெரிதும் அப்பாற்பட்ட’, ‘சமயத்துக்குப் புறம்பான’, ‘சமயவுணர்வுக்கு எதிரான’, ‘சமய வெறுப்பு’, ‘அஞ்ஞானம்’ என்றரீதியிலேயே பல இடங்களில் மொழிபெயர்த்திருக்கிறார். விவிலிய மொழியில் ‘புறவினத்தார்’, புறமதத்தார்’ (அதாவது கிறித்தவம் உள்ளிட்ட பெரு மதங்களுக்கு வெளியில் உள்ள மதத்தினர்) என்று மொழிபெயர்த்திருக்கலாம். ஓரிரு இடங்களில் ‘Palaces’ என்ற சொல்லை ‘அரண்மனைகள்’ என்பதற்குப் பதிலாக ‘இடங்கள்’ என்றே மொழிபெயர்த்திருக்கிறார். ‘Intelligible’ என்ற சொல் ‘புரியக்கூடிய’ என்பதற்குப் பதிலாக நேரெதிராக ‘பூடகமான’ என்று மொழிபெயர்க்கப்பட்டிருக்கிறது. ‘For Don Toni art was a little like children, who cannot be conceived following a method, but only in the careless joy and intimacy of the night’ என்ற வரியானது ‘டான் டோனிக்கு, கலை என்பது குழந்தைகள் போலச் சிறியது. அவர்கள் ஒரு பாணியைப் பின்பற்ற இயலாதவர்கள். இரவின் அந்தரங்கத்துக்கும், பொறுப்பற்ற ஆனந்தத்துக்கும் மட்டுமே விழைகிறவர்கள்’ என்று மொழிபெயர்க்கப்பட்டிருக்கிறது. மேற்கண்ட ஆங்கில வரியின் அர்த்தம் இதுதான்: ‘டான் டோனியைப் பொறுத்தவரை கலையானது கொஞ்சம் குழந்தைகளைப் போன்றது, குறிப்பிட்ட வழிமுறையென்று எதையும் பின்பற்றி குழந்தைகளை உருவாக்க முடியாது, கவலையற்ற ஆனந்தத்திலும் இரவு தரும் நெருக்கத்தாலும் மட்டுமே அவர்களை உருவாக்க முடியும்.’
ஒரு எழுத்தாளரைப் பற்றிச் சொல்லும்போது ‘எந்நேரமும் பிறருக்காகவே வாழ்ந்தார்’ என்று மொழிபெயர்க்கப்பட்டிருக்கிறது. ஆங்கிலத்தில் இது ‘…always lived off’ என்று இருக்கிறது; இது ’…எப்போதும் பிறரை அண்டி வாழ்ந்தார்’ என்றல்லவா இருக்க வேண்டும். அடுத்ததாக, ‘அவர் எப்போதுமே ஒரு புரவலராக இருந்தார்’ என்று வருகிறது; ஆங்கிலத்தில் ‘He always had a benefactor’ என்று இருக்கிறது; சரியாகச் சொல்ல வேண்டுமானால், ‘அவருக்கு எப்போதுமே ஒரு புரவலர் இருந்தார்’. ‘Dog-cart’ என்பது ‘நாய்கள் இழுக்கும் சிறிய வண்டி’ என்பதாக மொழிபெயர்க்கப்பட்டிருக்கிறது. அது ஒருவகையான குதிரை வண்டிதான். அதேபோல் ‘Ark of the Covenant’ என்றால் கவனென்ட் பெட்டகம்தான், ‘கவனென்ட் கப்பல்’ அல்ல. ’Will never amount to much’ என்றால் ‘இவ்வளவு வேண்டியிருக்காது அவர்களுக்கு’ என்பது அர்த்தமல்ல; ‘அவர்கள் தேற மாட்டார்கள்’ என்பதுதான் அர்த்தம். ‘Thrush’ என்பது ‘அறுக்கப்பட்ட கதிர்த்தாள்கள்’ அல்ல ஒரு பறவைதான். ஆங்கில மூலத்தில் ‘டைஃபஸ்’ ஆக இருந்தது தமிழில் ‘டைஃபாய்’டாக மாறியிருக்கிறது. ’Immoral’ (ஒழுக்கக்கேடான) என்பது ‘அழிவற்ற’ என்று மொழிபெயர்க்கப்பட்டிருக்கிறது (immortal என்ற சொல்லுடன் இதைப் போட்டுக் குழப்பிக்கொண்டதால் இருக்கலாம்). ‘Heresy’ என்ற சொல் பல இடங்களில் செவிவழிச் செய்தியாகவும், புரளியாகவும், கேட்பார் சொல்லாகவும் மொழிபெயர்க்கப்பட்டிருக்கிறது; இதற்கு ‘மதநிந்தனை’ என்று பொருள் (hearsay என்ற சொல்லைப்போல் இருந்ததால் இந்தக் குழப்பம் ஏற்படிருக்கலாம்.) ‘Habit’ என்ற சொல் ஒரு இடத்தில் (பக்கம்-89) ‘பழக்கம்’ என்று மொழிபெயர்க்கப்பட்டிருக்கிறது; இந்த இடத்தில் அது துறவிகள் அங்கியைக் குறிக்கிறது. ’Unwholesome’ என்றால் ‘முழுமையற்ற’ என்று பொருள் அல்ல; ‘ஆரோக்கியமற்ற’ என்றே பொருள். Patron-saint என்பது சுவீகாரப் புனிதர், புரவலப் புனிதர், காவற்புனிதர் என்று பலவகைகளில் மொழிபெயர்க்கப்பட்டிருக்கிறது. Such a distortion of history என்ற வரி மொழிபெயர்க்கப்படவில்லை. சில இடங்களில் வாக்கியம் ஒரு இடத்திலிருந்து வேறு இடத்துக்குச் சென்றிருக்கிறது. இன்னும் சொல்லிக்கொண்டே போகலாம்.
எந்த ஒரு மொழிபெயர்ப்பும் முழுமையானதல்ல என்பது உண்மைதான். இந்த நூலின் தமிழ் மொழிபெயர்ப்பாளர் தன்னை மீறியும் பிழைகள் நுழைந்திருக்கலாமோ என்ற கவலையை நேர்மையாக வெளிப்படுத்தவே செய்திருக்கிறார். நம் கேள்வியெல்லாம் புத்தகத்தை வெளியிட்ட பதிப்பாளரின் பங்கு என்ன என்பதுதான். ஆர்வத்தால் மொழிபெயர்ப்புகளை வெளியிடும் சிறிய பதிப்பாளர்கள் என்றால் நாம் கண்டுகொள்ளத் தேவையில்லைதான். ஆனால், மொழிபெயர்ப்புக்கென்று நிதியுதவி பெறும் பெரிய பதிப்பகம் தான் வெளியிடும் நூலின் மீது மேலதிக அக்கறை கொண்டிருக்க வேண்டும் என்று பிறர் எதிர்பார்ப்பது தவறல்ல. அதுவும் இலக்கிய நூல்களை வெற்றிகரமான வணிகமாக ஆக்கலாம் என்று நிரூபித்திருக்கும் ஒரு பதிப்பகத்தில் ‘எடிட்டர்’ யாரும் இல்லையா என்பது ஆச்சரியமளிக்கிறது. இனியாவது தம் மொழிபெயர்ப்புகள் மீது பதிப்பகங்கள் கூடுதல் அக்கறை செலுத்துவார்கள் என்று நம்புவோம்.
பொம்மை அறை
லோரன்ஸ் வில்லலோங்கா
(ஆங்கிலம் வழி தமிழில்: யுவன் சந்திரசேகர்)
வெளியீடு: காலச்சுவடு பதிப்பகம்,
நாகர்கோவில்.
விலை: ரூ. 295
(‘இந்து தமிழ்’ நாளிதழில் 15-08-2020 அன்று வெளியான நூல் விமர்சனம்)
No comments:
Post a Comment